யாழ்ப்பாண மக்களின் தனித்துவமான கலாசாரங்கள் பல உள்ளன. அதில் மிக முக்கியமானதும் தனித்துவமானதும் ஆடிப்பிறப்பே ஆகும்.
ஆடிப்பிறப்பினை கொண்டாடும் ஒரு சமுதாயமாக யாழ்ப்பாண மக்கள் உள்ளனர். இந்த அளவுக்கு ஆடிமாதத்தின் சிறப்பு பண்டைய யாழ்ப்பாணத்து மூத்த குடியினரால் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் சிறப்பான அம்சமும், பெருமைப்படவேண்டிய அம்சமும் என்னவென்றால், பண்டைய காலங்களில் இருந்து இன்றுவரை யாழ்ப்பாண மக்கள் தமது பாரம்பரியங்களையும், சம்பிரதாயங்களையும், இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் கைவிடாது கைக்கொண்டுவருவதே ஆகும்.
தமிழ்நாட்டு தமிழர்கள் கூட ஆடிமாதம் வந்துவிட்டால் பெரும்பாலும் அம்பாள் கோவில்களில் கூழ் ஊற்றல் என்ற சடங்கினை செய்துவருகின்றனர் எனினும் யாழ்ப்பாண மக்களைப்போல தமிழில் ஆடிமாதம் முதலாம் நாளில் தமக்கே உரிய வகையில் அந்த நாள் மட்டும் சமைக்கும் இனிப்பு கூழ்பற்றி அவர்கள் அறியமாட்டார்கள்.
ச ரி பண்டைய யாழ்ப்பாணத்து ஆதிக்குடியினர் ஏன் ஒரு மாதத்தின் தொடக்க நாளினை இப்படி கொண்டாடுகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றதுதான். ஆனால் எந்த சமய சம்பிரதாய நூல்களிலோ அல்லது மத அனுஸ்டானங்களிலோ இந்த ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் என்பது பற்றிய எந்த ஒரு தகவலும் தரப்படவில்லை. அப்படி இருக்க யாழ்ப்பாணத்து மக்கள் ஏதோ ஒரு காரணத்தை மையமாக வைத்தே இந்த ஆடிமாத முதல் தேதியில் ஆடிப்பிறப்பினை கொண்டாட முற்பட்டுள்ளனர்.
சரி நாம் அறிந்த வகையில் ஆடிமாதத்தின் சிறப்பினை எடுத்துப்பார்த்தால், ஆடிக்காற்றுக்கு அம்மியும் பறக்கும் என்ற பழமொழிகளுக்கேற்ப, யாழ்ப்பாணத்தின் மீது தென்மேல் பருவக்காற்று பலமாக வீசும் காலம் இது, யாழ்ப்பாணத்தை நோக்கி தெற்கில் இருந்து வடக்காக காற்று வீசும். இந்தக்காலத்திலேதான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் முதல் வர்ண வர்ணமாக, வித விதமான வகையில் பல பட்டங்களை கட்டி வானில் பறக்கவிட்ட மகிழ்வார்கள்.
அதேபோல பண்டைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஆடி மாதத்தில்த்தான் பெரும்பாலும் கார்னிவேல்கள், வானவேடிக்கை விழாக்கள், களியாட்ட விழாக்கள் எல்லாம் நடந்ததாக பல மூதாதையர்களின் கதைவழியாக நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
அடுத்ததாக 12 மாதங்களை கொண்ட ஒரு ஆண்டில் முதல்பாக அரையாண்டு முடிவடைந்து அடுத்த பாகம் தொடங்கும் நாள் ஆடி முதலாம் நாள் என்றபடியால் இந்த நாளையும் கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டிக்கலாம் எனக்கருதப்படுகின்றது.
அதாவது தை மாதம் முதலாம் நாள் எவ்வாறு தைப்பொங்கல் என கொண்டாடி பொங்கல் செய்து படைத்து கொண்டாடுகின்றார்களோ அதேபோல, ஆடி மாதம் முதலாம் நாளினையும் கொண்டாட அவர்கள் தலைப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க முதல் பாக ஆண்டு தேவர்களுக்குரியதென்றும், அடுத்த பாதி ஆண்டு பிதிர்களுக்கு உரியதென்றும் கூறப்படும் ஒரு ஐதீகமும் இருப்பதன் காரணத்தினால், இனிப்பான கூழும், கொழுக்கட்டையினையும் சமைத்து பிதிர்களுக்கு படைத்தனர் எனவும் ஒரு கருத்து நிலவி வருகின்றது.
எது எப்படியோ உற்று நோக்கினால் யாழ்ப்பாணத்தில் ஆடிமாதம் என்பது ஒரு மகிழ்ச்சியானதான மாதமாகவே இருக்கும் ஏனெனில் காற்றில் பட்டங்கள் விடுவதும், யாழ்ப்பாணத்தின் மக்கள் விழா எனக்கருதக்கூடிய நல்லார் கந்தசுவாமி கோவில் பேருட்சவம் இந்த மாதம் முழுமையாக இடம்பெறுவதாலும், இதன்காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளி இடங்களுக்கு சென்றவர்கள் அனைவரும் ஒன்று கூடும் காலமாக இருப்பதால் நவீன காலத்தில்க்கூட இந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு மகிழ்வான காலரமாகவே தெரிகின்றன.
ஒரு காலத்தில் ஆடிப்பிறப்பு எப்படி கொண்டாடப்பட்டது என்பதும். அதன் முதல்நாளே நாளைய ஆடிப்பிறப்பு பற்றி சிறுவர்கள் கொள்ளும் சந்தோசத்தையும் மையமாக வைத்து நவாலியூர். சோமந்தரப்புலவர் என்ற யாழ்ப்பாணத்து சிறந்த புலவர் ஒருவர் பாடியுள்ள பாடலில் இருந்து தெரியவருகின்றது. இதிலிருந்து ஒரு காலத்தில் ஆடிப்பிறப்பிற்கு யாழ்ப்பாணத்தில் விடுமுறை விடப்பட்டுள்ள வரலாறும் புலப்படுகின்றது.
சரி அந்தப்பாடலை இந்த நாளில் மீட்டிப்பார்ப்பது சிறப்பாக இருக்கும்…
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தௌ;ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
என அந்தப்பாடல் வரிகள் அமைந்துள்ளது. இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால் அடிப்பிறப்புக்கு கூழ் எப்படி ஆக்குவது என்ற ரெசிப்பியையும் புலவர் பாடலிலேயே தெரிவிததுள்ளதான்.
எனவே யாழ்ப்பாண மக்கள் ஆடிப்பிறப்புக்கு வழங்கியிருந்த முக்கித்துவம் இந்தப்பாடலில் இந்து புலனாகியிருக்கும்.
இன்று கடந்தகால மூன்று தசாப்த யுத்தத்தின் காரணமாக பல்வேறு நாடுகளுக்கும் கூடிழந்த குருவிகளாக சிதறிப்போய் வௌ;வேறு நாடுகளின் கூடுகளில்அடைக்கலம் புகுந்துள்ள புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் தாம் எங்கெல்லாம் இக்கின்றார்களோ அங்கும் தமது கலாசாரங்களை மறக்காமல் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தை பேணிவழர்ப்பதற்கு உலகத்தமிழினமே எழுந்து நின்று ஒரு சபாஸ் போடலாம்.
நல்லது நண்பர்களே இன்றைய நாளுக்கு பொருத்தமான இந்த பதிவு உங்கள் அனைவருக்கும் இந்த நாளில் மகிழ்வான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தோசமே.
நன்றி அன்புகளுடன்
ஜனா
|