Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, 29 May 2012

நான் தான் விண்ணாணம் விநாசியப்பு வந்திருக்கேன்!

எல்லோருக்கும் வணக்கம், எல்லோரும் எப்படிச் சுவமாய் இருக்கிறீங்களே? சுகமில்லை என்று மட்டும் சொல்லிப் போடாதேங்கோ என்ன? சுவமில்லை, சுகமில்லை என்றால் அர்த்தம் ரெண்டு விதத்தில வந்திடும் பாருங்கோ. ஒன்று சுகவீனமாய் இருக்கிறதையும், உடல் நலக் குறைவால் அவதிப்படுவதையும் சுகமில்லை என்று என்ர குஞ்சியப்பு காலத்தில இருந்து ஈழத்தில சொல்லுவீனம் கண்டியளே. சுகமில்லை அல்லது சுவமில்லை என்றால் அர்த்தம் இன்னோர் மாதிரியும் வந்து கொள்ளும். ஊரில குழூக் குறியாக பொம்பிளையளின் மாதவிடாய் காலத்தையும் சுகமில்லை என்று தான் சொல்லுவீனம் பாருங்கோ. 
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், வாங்கோ பதிவுக்குள் போய் பந்திக்குள் உட்காருவோம். 

Wednesday, 28 March 2012

துகிலுரியப்பட்ட கட்டங்களும், வீதிகளும் கோரத்தின் எச்சங்களாய்..

இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
2010ஆம் ஆண்டு ஏ-9 நெடுஞ்சாலை மீண்டும் திறந்த சில மாதங்களின் பின்னர் வன்னியூடான எனது பயணத்தின் சில அனுபவங்கள் கவிதை வடிவில்,
கண்ணுக்கெட்டிய தூரம்
வரையில்
கால அரக்கனின்
நினைவுச் சின்னங்கள்..
துகிலுரியப்பட்ட
வீடுகள்
கட்டடங்கள் எச்சங்களாய்...!!
களி மண் சகதியால்
குளிப்பாட்டப்பட்ட வடலிகள்..!

Saturday, 28 January 2012

வாங்கைய்யா வாழைக்குலை பழுக்கப் போடுவம்!

இணையத்தினூடே இவ் இடம் வந்து ஈழவயலில் இளைப்பாற வந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள், 
செயற்கையான இராசயனப் பசளைகள் மூலம் உருவாக்கப்படும் காய் கறி வகைகளை விட; இயற்கைப் பசளை மூலம் உருவாக்கப்படும் காய் கறிகள் தான் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது நீண்ட காலம் வாழுகின்ற ஆயுளைக் கொடுக்கும் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் வெளிப்பாடு. இதனை நன்கு உணர்ந்த எம் முன்னோர்கள் தம் வீட்டில் சின்னதாக ஒரு வீட்டுத் தோட்டம் வைத்து,தமக்கு வேண்டிய காய் கறிகளை பெற்றுக் கொண்டார்கள். சந்தைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் வியாபார நோக்கில் இராசயனப் பதார்த்தங்களின் மூலம் பயிரிடப்பட்டவையாக இருக்கும். 

Tuesday, 24 January 2012

விளையாடும் போது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்த ஒருவர்!

பல வருடங்களுக்கு முன்பு வன்னியில் ஆணைவிழுந்தான் என்னும் ஊரில் ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் சிலர் மாலை வேளையில் பாடசாலை மைதானத்தில் பூப்பந்தாட்டம்(பட்மிட்டன்) விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பூப்பந்தாட்டம் விளையாடுவதற்குரிய மட்டை(ரக்கெட்) கூட அவர்களிடம் இல்லை. பனை மட்டையை மெல்லியதாக சீவி எடுத்து அதை பூப்பந்தாட்டத்துக்குரிய மட்டையாக பயன் படுத்தி பூப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தனர் அந்த மாணவர்கள். அந்த விளையாட்டு மைதானத்தில் மறு புறம் இளைஞர்கள் சிலர் கால்பந்தாட்டம் ஆடிக் கொண்டு இருந்தனர். இன்னும் ஒரு புறம் சிலர் கைப்பந்தாட்டம்(வாலி போல்)ஆடிக் கொண்டு இருந்தனர். மாலை வேளையில் களைகட்டி இருந்தது அந்த மைதானம்.

Thursday, 19 January 2012

பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகமும், கட்டுடல் மேனிகளும்!

இணையத்தில் ஈழத்து நினைவுகளைச் சுமந்து வரும் ஈழவயலைப் படிக்க வந்திருக்கும் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்;
ஈழவயலில் எனது முதற்பதிவு இது.
ஏற்கெனவே "வரோ" அவர்கள் எழுதிய கோயில்த்திருவிழாக்களும் சைட் அடிக்கப்படும் பெண்டுகளும் என்ற பதிவின் அடுத்த பாகமாகக் கூட நீங்கள் இந்தப் பதிவைப் பார்க்கலாம். கலாச்சார காவலர்கள் யாராச்சும் அவசரக்குடுக்கை தனமாக பதிவினை முழுமையாகப் படிக்காது, போர்க் கொடி தூக்குவதனை விடுத்து, கொஞ்சம் நிதானமாக இப் பதிவில் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதனை ஆராய்ந்து பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா? திருவிழாக்களில் இளையோர் பட்டாளத்தின் திருவிளையாடல்களைப் பற்றிய பல விடயங்களை வரோ அவர்கள் தனது பதிவில் பொதுவாக கூறியிருந்தார். இப் பதிவினூடாக சில அனுபவப் பகிர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து களமிறங்குகிறேன்.

Sunday, 15 January 2012

கரடியோட சண்டைபோட்ட அப்பு - அதிர்ச்சியூட்டும் அந்த நாள் அனுபவம்!


எனது ஆச்சியிடம் கதை கேட்பதற்கு அந்தக் காலத்தில் எனக்கு அலாதி பிரியம். எந்த ஒருவிடயத்தை விளக்கவும் அவரிடம் எதாவது ஒரு கதை இருக்கும். சமைக்கும்போது வீட்டுவேலைகள் செய்யும்போது தோட்டவேலைகள் செய்யும்போது என எப்பொழுதும் யாரவது ஒருவருக்கு ஏதாவது ஒரு கதை சொல்லிக்கொண்டே இருப்பார்.


ஆச்சிக்கு எப்படி இவ்வளவு கதைகள் தெரியுமென சிறு வயதில் நானும், நண்பர்களும், சித்தி பையனும், மச்சாளும் பலதடவைகள் வியந்திருப்போம்.

Sunday, 8 January 2012

ஆமத்துறூ வெட்டும் அந்த நாள் நினைவுகளும்!

வாழும் காலத்தில் வண்ணத் தமிழ் மொழியால் இணையத்தில் வலம் வரும் ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் குழை போடும் காட்டானின் இனிய வணக்கம்;
நேற்று குடும்பத்தோட லாச்சப்பலுக்கு போனேன்.நாங்கள் அங்கு போகும்போது கன வேலைகளை ஒரே நேரத்தில செய்திடுவம். மனிசி சிலோன் மரக்கறிகள் வாங்க ஒரு பக்கம் கிளம்பினால், நானும் பிள்ளைகளும் ஊருக்கு காசனுப்பிட்டு அப்பிடியே மூணு பேரும் முடி வெட்ட கிளம்பிடுவம் . ஏனோ தெரியல! ஊரில ஒரே கடையில மயிர் வெட்டியது போல இங்கேயும் நான் அப்படிதான். கல்யாணம் கட்ட போகேக்க கூட நான் வழமையா போகும்   அந்த கடைக்குத்தான் போய் என் மொட்டைய மறைக்கிற மாதிரி முடி வெட்ட சென்றிருக்கேன். 

Wednesday, 4 January 2012

ஈழ தேசத்தில் கான ஸ்வரமிசைத்த நாதஸ்வர வித்துவான்!

ஈழ வயலோடு இணைந்திருக்கும் அன்புச் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்,
அரிவரி தொடங்கி, கைதேய மண் மீது அகரம் எழுதத் தொடங்கிய காலங்களிற்கு முன்பாகவே இசை என்னும் நாத வெள்ளம் மனதிற்குள் புகுந்து விடுகின்றது. கருவினில் இருக்கும்போதே இசையை இரசிக்கும் பண்பு வந்துவிடுவதாக விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். நேர்தியான கருத்துக்கள் இசையுடன் கரைந்து வரும் போது, என் இயல்புகள் அத்தனையையும் தொலைத்து விட்டு, காதின் கீழ் உள்ள பகுதியில் இருந்து மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகம் பாய சிலிர்துப் போய் கண்ணீர் சொரிந்து அந்த இசையுடன் இலயித்த சம்பவங்கள் பல உள்ளன.

Monday, 2 January 2012

கிளிநொச்சியில் கோடைக்கு குளிர்ச்சியூட்டிய காமதேனு!

ஈழ வயலின் இன்றைய பதிவினைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் குட்டிப் பையனின் இந் நேர வணக்கங்கள்;
ஈழத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈழவரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற நகரமாக விளங்குவது தான் கிளிநொச்சி. கிளிநொச்சி என்றதும் ஞாபகத்துக்கு வரும் விடயங்களில் காமதேனுவும் ஒன்று.
இவ் இடம் முதன்மைச் சாலை கிளிநொச்சி யின் பழைய தோற்றம்- அந்தோ தொலைவில் தெரியும் தண்ணீர் தாங்கி இன்று இல்லை! ஈழ வரலாற்றில் இந்த தண்ணீர் தாங்கிக்கும் உயிர் இருப்பின் கண்ணீர் கலந்த பல கதைகளைப் பேசும்!

Friday, 30 December 2011

உன்(ண்)னானைச் சொல்லுறேன்! உவள் சிவப்பியைத் தான் கட்டுவேன்!

ஈழவயலோடு இன்பத் தமிழ் மொழியூடாக இணைந்திருக்கும் அன்புத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் விண்ணாணம் விநாசியாரின் வணக்கம், 
என்ன தான் இருந்தாலும் பாருங்கோ. வயசான கிழடுகளுக்கு அந்த நாள் ஞாபகங்களை மீட்டிப் பார்க்கும் போது கிடைக்கிற சுகம் மாதிரி ஏதும் வருமேங்கோ? தமிழர்களின் பண்பாட்டில் லுக்கு விடுறதுக்கும், எனக்கென்று ஒருத்தியை பள்ளிக் கூடத்தில படிக்கும் போது புக்குப் (Booking) பண்ணி வைக்கிறதுக்கும் நாங்கள் எப்பனும் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஆறாங் கிளாஸ் படிக்கும் போதே நிரூபிக்கத் தொடங்கிடுவம் பாருங்கோ.  என்னோட வாழ்க்கையில வந்து போன சிவப்பியளைப் பற்றி நான் சொல்லத் தொடங்கினால் உங்களுக்கே அலுப்படிக்கத் தொடங்கும் பாருங்கோ. 

Tuesday, 27 December 2011

பனம் பழமும் பசுமையான நினைவுகளும்!

ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்களே,
வணக்கம்,
உங்கள் ஈழ வயலில் மீண்டும் ஒரு பனங்காய் பதிவு:
"பனம் பழம்"என்றவுடன் உங்கள் அனைவரின் நாவிலும் எச்சில் ஊறுகிறதா?வாழ்க்கையில் ஒரு தடவையேனும் பனம்பழத்தை ரசித்திருந்தால் கட்டாயமாக எச்சில் ஊறி இருக்கும்."எட்டாக்கனி புளிக்கும்" என்பார்கள்.உண்மையில் நகரவாசிகளாகிவிட்ட எங்களுக்கு பனம் பழம் எட்டாக்கனி தான். ஆனால் புளிப்பு அல்லது ஒரு விதமான இனிப்பு மற்றும் கசப்பு சுவைகளின் கலவை தான் இந்த பனம்பழம். பனைமரம் இல்லாத ஊர்களைக் காணக் கிடைப்பது அரிது இலங்கையின் வட கிழக்கில்.
Borassus ake-assii MS 1315.JPG

Monday, 26 December 2011

வானத்தில் பறக்கும் வடமராட்சி வேலிகள்!!

இணையத்தினூடே ஈழவயலினூடு இணைந்திருக்கும் அன்பு உறவுகளே,
வணக்கம்,
யாழ்ப்பாண சாம்ராஜ்ஜியத்தின் மிக முக்கிய கட்டமைப்பு பிரதேசங்களாகக் காணப்பட்ட இடங்களில் வடமராட்சியும் ஒன்றாகும். பல வரலாற்று முக்கியத்துவங்களைக் கொண்டுள்ள இப் பிரதேசமானது இன்றும் அதன் பெயரைக் கேட்டாலே அகில உலகெங்கும் வாழ்வோரும் விழி நிமிர்த்திப் பார்க்கும் வண்ணம் தன்னகத்தே சிறப்பினைக் கொண்டுள்ளது.இங்கே பருவக் காற்றானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீச ஆரம்பித்தாலே போதும். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான் அதிலும் தைமாதம் தொடங்கினாலே போதும் இலங்கை வான்படை உலங்குவானூர்திகளே எமது வான்பரப்புக்குள் உள் நுழைய அஞ்சுவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா?இங்கு பட்டக் காலம் ஆரம்பித்து விடும். (இந்தியாவில் இதை காற்றாடி என்பார்கள்). சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இதற்கு இறங்கி விடுவார்கள்.

Sunday, 25 December 2011

தமிழினம் உண்மையிலேயே உயர்ந்த இனமா? - ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

ஈழவயலின் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது இனிய நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

மது தமிழினம் உலகத்தில் தலை சிறந்த இனமா? என்று நான் அடிக்கடி என்னுள் கேள்வி கேட்பதுண்டு! சில சமயங்களில் நாம் உயர்ந்த இனமாகவும், சில சமயங்களில் ஏதோ சில காரணங்களால் நாம் பின் நிற்பதாகவும் தோன்றுகிறது! இதுகுறித்து உங்களுடன் கலந்துரையாடினால் தான் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்! 

Thursday, 22 December 2011

திருட்டு மாங்காயும், வெ(சு)ருட்டல் நினைவுகளும்!

ஈழவயலில் இணைந்திருக்கும் ஐயா, அம்மா, தம்பிங்க, தங்கைங்க மற்றும் அனைவருக்கும் இந்தக் காட்டானோட வணக்கமுங்க! 
சிறுவயதில் செய்யும் குழப்படிகள் எங்களுக்கு அந்த நேரத்தில் பெற்றோரிடம் கண்டிப்பும், தண்டனையும் பெற்று தந்தாலும் பிற் காலத்தில் அச் சம்பவங்களை நினைக்கும்போது வரும் இனம்புரியாத சந்தோசத்திற்காகவே 'இன்னும் அதிக குளப்படிகள் செய்திருக்கலாமோ!' என்று எண்ணிப் பார்க்க வைக்கும் இயல்பு கொண்டவை. இவையெல்லாம் எவ்வளவு உண்மைன்னு அனுபவித்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன் கேளுங்கள். வீட்டை சுத்தி மாமரமும் விளாத்தி, இலந்தை, நாவல் போன்ற மரங்கள் இருந்தாலும். அடுத்தவன் தோட்டத்துக்குள் வேலி பாய்ஞ்சு அங்கே புடுங்கி தின்பதில் இருக்கும் சுவாரசியம் வேறு எதிலும் கிடைப்பதில்லை..தனியாக பி(பு)லத்துக்கு வரும் மத்தியான நேர கிளி போல போவதைக் காட்டிலும் நண்பர்களோடு சேர்ந்து திருட்டு மாங்காய் அடிப்பதில் இருக்கும் சுகமே அலாதிதான் போங்கள்..!!

மார்கழியின் மகிழ்ச்சியும் சுமணா அக்காவின் கைப்பக்குவமும்!

வணக்கம் உறவுகளே; ஈழவயலில் இது எனது முதற் பதிவு என்பதால் சுமாராய் இருந்தாலும் சூப்பர் என சொல்லிவிடுங்கள் ப்ளீஸ்... ஹே..ஹே..

எமது சமய பண்பாட்டு கலாச்சார முறைமைகள் எமக்கு பல வகையான விடயங்களை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சிறுவர் முதல் முதியவர் வரை தங்கள் கஷ்டம் துன்பங்களை மறந்து ஒரு சந்தோஷ, களியாட்டமாக மனங்களை மாற்றுவதற்கு இந்த பண்டிகைகள் மிகவும் முக்கியமானவை. தேவையானவையும் கூட. அந்த பண்டிகைகள் சமயம் சார்ந்ததாகவோ அல்லது கலாச்சாரம் சார்ந்ததாகவோ அல்லது எங்கள் தமிழ் பண்பாடு சார்ந்ததாகவோ இருக்கலாம். இந்த பண்டிகைகளுக்காக நாம் செலவு செய்யும் பணம் தொடங்கி நேரம், சந்தோசம் வரை அனைத்தும் அதிகம். இந்த பண்டிகைகளிலே ஒரு விசேடத்துவம் இருக்கிறது பாருங்கள். பண்டிகை என்றதும் இரண்டு கருத்தியல் விடயங்கள் எங்கள் மனங்களில் வரும். ஒன்று பண்டிகைக்குரிய சம்பிரதாயங்கள்,அடுத்தது கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு விடயங்கள். நம்மவர்கள் எல்லாம் இந்தப் பண்டிகைகளில் கேளிக்கைகளுக்கும் பொழுது போக்குகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இந்த சம்பிரதாயங்களிற்கு கொடுப்பது குறைவு. 

Tuesday, 20 December 2011

சொல்லுக்குச் சுதி சேர்த்த வில்லுப் பாட்டு!

ஈழ வயலினைத் தரிசிக்க வந்திருக்கும் தமிழ் இதயங்களுக்கு இனிய வணக்கம்!
வில்லுப் பாட்டு என்பது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் தானே! எம் பால்ய காலத்தில் பள்ளியில் படிக்கையில், கோவில் திருவிழாக்களில், பொது நிகழ்வுகளில் இந்த வில்லுப் பாட்டினைக் கண்டு ரசித்திருக்கும். ஏன் நாங்களும் சில வேளை வில்லில் சுதி சேர்த்துப் பாடியிருப்போம் அல்லவா? வில்லுப் பாட்டு என்பது எவ்வாறு ஆரம்பிக்கும் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் சின்ன ஒரு நினைவு மீட்டலுக்காய் இவ்வாறு தான் ஆரம்பிக்கும் எனக் கூறிக் கொள்கின்றேன்.
தந்தனத் தோம் என்று சொல்லியே..
வில்லினை (வில்லிசை) பாட வந்தருள்வாய் கணபதியே..!
வரம் தந்தருள்வாய் கணபதியே!(கணபதியை விரும்பின மாதிரி நீங்கள் ஸ்ருதி மாற்றிப் பாடிக் கொள்ளவும் முடியும்)!

கோயில் திருவிழாக்களும் சைட் அடிக்கப்படும் பெண்டுகளும்!

இணையத்தில் இறக்கை விரித்து பறந்து கொண்டிருக்கும் ஈழவயலில் அடியேன் எழுதும் முதல் பதிவு இது. ஈழ வயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்!
”சைட் அடிக்கப்படும் பெண்டுகள்” என்ற தலைப்பில் எழுதப்படும் இப் பதிவிலுள்ள விடயங்களானது பல ஆண்களின் பார்வையில் உள்ள விடயங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ”சைட் அடிக்கும் பெண்டுகள்” எனவும் இதனை எழுதலாம். ஏன்னா, "அவங்க சைட் அடிக்கிறதும், நம்மளை மறைந்திருந்து பார்க்கிறதும்" எங்களுக்குத் தானே தெரியும்! ஹி..ஹி....

Monday, 19 December 2011

சிங்கிணி நோனாவும் ஆத்தாடி பாவாடையும்...!

ணக்கம் உறவுகளே! அனைவரும் நலம் தானே!
எமது குழந்தைப் பருவத்தை யாராலும் மறக்க முடியுமா? இல்லைத் தானே! நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம் செய்த குறும்புகள் எவையுமே என்றுமே எம் மனதை விட்டு அகலாது! அது போல, நாம் உடுத்திய உடைகள், பழகிய நண்பர்கள், பாடிய பாடல்கள் என்று எவையுமே மறக்க முடியாதவை! இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வது நாம் சிறிய வயதில் பாடித் திரிந்த பாடல்கள் பற்றி!

Sunday, 18 December 2011

கொப்பரையும் கொம்மாவையும் விட்டு கோதை நீ ஓடி வாடி!

கனகரின் கோப்பிறேசன்
கால் போத்தல் சாராயம்
மப்பேறியதும் மனதில்
அளவற்ற மகிழ்ச்சியூட்ட
மச்சான்ர குறைச் சுருட்டு!
மாலையில் கனிவூட்டும்
வடிசாலை பனங் கள்ளு
இவை யாவும் இருந்தாலும்
இணையில்லா இன்பம் தரும்
இளஞ் சிரிப்பு குமுதினியை போல்
என் இளமைக்கு ஈடாகுமா?

Thursday, 15 December 2011

பனங்காய் பணியாரமும் நம்மூர் பெண்களும்!

ஈழவயலோடு உங்கள் இதயங்களை இணைத்திருக்கும் அன்பு உறவுகளே! அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்!
"எல்லோரும் இன்றைக்கு பனங்காய் பணியாரம் சாப்பிடுவோமா?"
பனை என்றதுமே உடனடியாக ஞாபகத்துக்கு வருவது இரண்டு. ஒன்று பனங்கள்ளு. அடுத்தது பனங்காய் பணியாரம். இரண்டுமே யாழ்ப்பாணத்தில் பிரபலம். "கள்ளு குடித்தால் போதை வரும்!" என்பார்கள். ஆனால் எங்கள் அம்மம்மாக்கள் சுடும் பனங்காய் பணியாரத்தை சாப்பிட்டாலும் ஒரு போதை வரும். ஆனால் இந்த போதை குடித்துவிட்டு மெய்மறந்து அடுத்தவனை அடிக்கும் போதையல்ல. ஒரு முறை சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும் போதை.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!