Monday, 26 March 2012

நாதம் அடங்கிய ‘வானொலிக்குயில்’ ராஜேஸ்வரி சண்முகம்!

இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அணைவருக்கும் அன்பு வணக்கங்கள்,
மண்ணில் மனிதர்களாக பிறக்கும் எல்லோரும் ‘மாணிக்கங்கள்’ ஆகிவிடுவதில்லை. மனிதரில் மாணிக்கமாக திகழ்ந்த ஒருவரைப் பற்றித்தான் இப்பதிவில் கதைக்கப் போகின்றேன்.

தமிழ் வானொலித்துறை என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ‘இலங்கை வானொலி’. அதேபோல் தமிழ் அறிவிப்பாளர்கள் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர்கள் பி.எச்.அப்துல் ஹமீட் மற்றும் ராஜேஸ்வரி சண்முகம் என்றால் மிகையில்லை. (1980களுக்கு பின்னர் பிறந்த என் போன்றவர்களுக்கு என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். நாங்கள் இலங்கை வானொலியின் ஆரம்ப கால அறிவிப்பாளர்கள் பலரின் குரல்களைக் கேட்கவில்லை)

இலங்கையில் தமிழ்த் திரைப்படத்துறை அவ்வளவு வளர்ச்சி பெறாததால் எங்களுக்கு ஹீரோ, ஹீரோயின் என நடிகர்கள், நடிகைகள் யாரும் இருக்கவில்லை. எங்கள் ஹீரோக்களும், ஹீரோயின்களும் வானொலி அறிவிப்பாளர்கள் தான். அந்தளவு வானொலி மோகம் எங்களிடையே ஆக்கிரமித்திருக்கின்றது. அந்தவகையில், அரை நூற்றாண்டுக்கு மேலாக லட்சக்கணக்கான தமிழ் வானொலி ரசிகர்களின் நெஞ்சில் ஹீரோயினாக மின்னிய நட்சத்திரம் ஒன்று இன்று அணைந்திருக்கின்றது. அவர் வேறு யாருமல்ல, ‘வானொலிக்குயில்’ என அன்பாக பலராலும் அழைக்கப்படும் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள்.

இவரது பெயர் - புகழ் இலங்கையில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலும், கடல்கடந்து வாழும் தமிழர்களிடமும் மிகவும் பரீட்சையமானது. சாவின் விழிம்பில் இருந்த ஒருவர் இவரின் குரலைக்கேட்க ஆசைப்பட்டார் என வரலாறு சொல்கிறது. அத்தகைய பெருமையைப் பெற்ற ஒருவரை இன்று நாம் இழந்து நிற்கின்றோம். இந்த இழப்பு தமிழ் வானொலி வரலாற்றில் ஈடுகட்ட முடியாத ஒரு இழப்பாகும்.

திருமதி ராஜேஸ்வரி சண்முகம் சிறு அறிமுகம்
இவர் 1950களில் இலங்கை வானொலியில் காலடி எடுத்து வைத்தார். அன்றைய நாளில் இலங்கை வானொலியின் நாடகத்தயாரிப்பாளராக இருந்த ச.சண்முகம் இவரது நாடகம் ஒன்றைப் பார்த்து, அவரது நடிப்புத்திறனை வியந்து வானொலி நாடகத்துறைக்கு அழைத்து வந்தார். வானொலி நாடகத்துறை வித்தியாசமானது. அங்கு குரல் மட்டும் நடிக்க வேண்டும். அதையும் ராஜேஸ்வரி அம்மையார் சிறப்பாகச் செய்தார்.

பிறகு படிப்படியாக அறிவிப்பாளராக உயர்ந்தார். தற்காலிக அறிவிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட இவர் பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளரானார். தனது அயராத உழைப்பினாலும், தனிப்பட்ட திறமையாலும் ஒலிபரப்புத்துறையில் தனக்கென தனியிடமொன்றை பெற்றுக்கொண்டார். பல அறிவிப்பாளர்களுக்கு ‘ரோல் மாடலாக’ திகழ்ந்தார். பல ரசிகர்களின் நெஞ்சில் ‘வீடு’ கட்டி உட்கார்ந்து கொண்டார்.

இவரது கணவர் சி.சண்முகமும் இலங்கை வானொலியின் ஓர் அறிவிப்பாளர் ஆவார். தனது துறையிலேயே கணவரும் வாய்க்கப்பெற்றது தான் பல உயரங்களை ஊடகத்துறையில் தொடுவதற்கு உந்துசக்தியாக திகழ்ந்ததாக பல பேட்டிகளில் ராஜேஸ்வரி அம்மையார் கூறியிருக்கின்றார். இவரது பிள்ளைகளான சந்திரமோகன், சந்திரகாந்தன் இருவருமே சமகாலத்தில் வானொலி அறிவிப்பாளர்களாக கடமையாற்றியிருக்கிறார்கள். மகள் வசந்தி, வானொலி – மேடை நாடகங்களில் நடித்தவர்.

இவர் விருதுகள், பாராட்டுக்களுக்கு அப்பாற்பட்டவர். இவருக்கு கிடைத்த விருதுகளுக்கும், பட்டங்களுக்கும், பாராட்டுப்பத்திரங்களுக்கும் ஒரு அளவே இல்லை. இறக்கும் வரை விருது பெற்றுக் கொண்டேயிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
தகவல் உதவி விக்கிப்பீடியா

தென்னிந்தியாவில் இவரின் புகழ்

எங்களைப் போலவே தென்னிந்திய தமிழ் மக்களும் இவரது குரலைக்கேட்டுத்தான் வளர்ந்தவர்கள். இலங்கையைப் போலவே மிகவும் தெளிவான ஒலியுடன் இலங்கை வானொலியை தமிழ்நாட்டிலும் கேட்டுவந்தார்கள். ராஜேஸ்வரி சண்முகம் என்ற அறிவிப்பாளினி அவர்கள் உயிருடன் கலந்து விட்ட ஒருவர்.

இவரை ‘ராணி’ சஞ்சிகை 1983ஆம் ஆண்டு பேட்டி கண்டிருந்தது. அதை உங்களுக்காக தட்டச்சிடுகிறேன்.

“சிறந்த அறிவிப்பாளர் என்று பாராட்டுப்பெற்றவர் ராஜேஸ்வரி சண்முகம். தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிறந்த ராஜேஸ்வரி சிறு வயதிலேயே இலங்கைக்கு போய்விட்டார். அங்கு நாடக நடிகையாக முதலில் அறிமுகமானார். கடந்த 10ஆண்டுகளாக இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக கடமையாற்றுகிறார். கணவர் சண்முகமும் நாடகத்துறையில் உள்ளவர். 

ஒரு படம் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டபோது, இதுவரை எந்தப் பத்திரிகையிலும் என்படம் வந்ததில்லை என்று ராஜேஸ்வரி சண்முகம் மறுத்தார். என் குரலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கின்றது. என் குரலைப் பாராட்டுகிறார்கள். அந்த அளவிற்கு என்னைப் பாராட்டுவார்களா? என் குரலுக்கு வயது இல்லை என்று சிரித்துக்கொண்டே படம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார்.”
ராணி 17.4.83
யாழ்ப்பாணத்தில் தமது பேரப்பிள்ளைகளை பார்க்க சென்றிருந்த போது, திடீரென நோய்வாய்ப்பட்ட ராஜேஸ்வரி சண்முகம், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில், தனது 72வது வயதில் காலமானார். 72ஆவது வயதிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஓர் அறிவிப்பாளராக, வானொலி நாடக நடிகையாக இருந்திருக்கின்றார் என்பதை உங்களால் நம்பமுடிகின்றதா? அம்மாவை நேரில் பார்த்த நான் சொல்கின்றேன் நம்புங்கள், அம்மாவின் வயது தான் 72, அவரது மனமோ 22 வயது. அவரை ஒத்த வயதினர் நடக்கவே தள்ளாடும் போது ராஜேஸ்வரி அம்மா பம்பரம் போல சுழன்றுகொண்டிருப்பார். அவரது மறைவை யாராலும் ஜீரணிக்க முடியாதுள்ளது. 

அவரது பூதவுடல் கொழும்புக்கு எடுத்துவரப்பட்டு, ஜெயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று (25.03.2012) காலை 09.30 முதல் 11 மணி வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், இ.ஒ.கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க, தமிழ்ச்சேவை பணிப்பாளர் கணபதிபிள்ளை, சிரேஷ்ட அறிவிப்பாளர்களான பி,எச்.அப்துல் ஹமீத், எம்.எச்.விஸ்வநாதன், முன்னாள் தமிழ் சேவை பணிப்பாளர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன், மறைந்த இராஜேஸ்வரின் சண்முகத்தின் புதல்வர் உட்பட அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இ.ஒ.கூட்டுத்தாபன ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர். 

பின்னர் மதியம் கொழும்பு கலாபவனத்தில் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள், ஈழத்துக் கலைஞர்கள், வானொலிக்குயிலின் ரசிகர்கள் என ஏராளம் மக்கள் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர். மாலை பொரளை, கனத்தை இந்து மயானத்தில் பல்லாயிரக்கணக்கான வானொலி நேயர்கள், அபிமானிகள், அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமானோரின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில், அன்னாரது பூதவுடல், அக்கினியுடன் சங்கமமாகியது.

பாரதியார், விவேகானந்தர் போன்ற சான்றோர் வாழ்ந்த காலத்தில் நான் வாழவில்லையே என நினைத்து கவலைப்பட்டதுண்டு. ஆனால், ராஜேஸ்வரி அம்மாவுடைய காலத்தில் வாழ்ந்திருக்கின்றேனே! அதுவும் அவர்கூட வேலை செய்யும் ஒரு பாக்கியமும் சிறிது காலம் கிடைத்ததே! இந்த பாக்கியத்தை ஏழேழு ஜென்மத்துக்கும் நினைத்துப்பார்த்து மகிழ்வேன். நான் அவருடன் பழகியது ஒரு வருடங்கள் மட்டுமே. ராஜேஸ்வரி அம்மையாரிடம்  பயிலக்கிடைத்து, பழகக்கிடைத்தது நான் செய்த பாக்கியமே! அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.


மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
KANA VARO

3 comments:

ஸ்ரீராம். said... Best Blogger Tips

மிக வருத்தமாக இருக்கிறது. இதே வலைப் பக்கத்தில் சமீபத்தில்தான் இவர் உள்ளிட்ட எங்கள் அபிமான அறிவிப்பாளர்களை நினைவு கூர்ந்த பதிவில் பின்னூட்டமிட்டேன். எங்கள் இதயபூர்வமான அஞ்சலிகள்.

ஹேமா said... Best Blogger Tips

இதுதான் வாழ்வு என்று மூளை பக்குவம் சொன்னாலும் ஏற்கமறுக்கிறது மனம்.தமிழ்த்தாய்க்கு மலர்தூவிய என் அஞ்சலிகள் !

மகேந்திரன் said... Best Blogger Tips

காந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்..
தன் குரலால் தமிழ் மக்களை கட்டிப்போட்டவர்..

அன்னாரின் ஆத்மா
இறைவனடியில் இளைப்பாரட்டும்..
என் மனமார்ந்த அஞ்சலிகள்.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!