Monday 27 February 2012

ஊர்ப்பெயர்களின் பின்னால் உள்ள சுவாரசியங்கள்

இணையத்தினூடே ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் மீண்டும் ஒருமுறை இந்தக் குந்தவையின் வணக்கங்கள்.

நான் ஈழவயலுக்காக எழுதிய இரண்டு பதிவுகள் ‘சமையல் பதிவுகள்’ ஆகிவிட்டன. இந்தமுறை எப்படியாவது அதனைத் தவிர்க்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். நிறைவேற்றியும் விட்டேன். இனி குந்தவையை எவரும் ‘சமையல்காரி’ என அழைக்க மாட்டார்கள்.

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பெயர் உண்டு. இந்தப் பெயர்களைப் பலரும் பல விதமாக வைத்துக் கொள்வார்கள். வெளிநாடுகளில் எல்லாம் குழந்தை பிறந்த மறுகணமே பெயர் வைப்பார்கள். அங்குள்ள எம்மவர்கள் கூட குழந்தை பிறந்த அந்நாளிலேயே பெயர் வைத்துவிடுவார்கள். ஆனால் எங்கள் ஊர்களில் அப்படியல்ல. குழந்தை பிறந்து ஐந்து முதல் 15 நாட்கள் வரையில் பெயர் வைப்பதற்காக எடுத்துக் கொள்வார்கள்.

காரணம் குழந்தை பிறந்த நேரத்தை சாத்திரியாரிடம் கொடுத்து அக்குழந்தைக்குரிய குறிப்பை வரைய வேண்டும். அதற்கேற்றால்போல் நாள், நேரம், நட்சத்திரம் எல்லாவற்றையும் பார்த்துத் தான் பெயர் வைப்பார்கள். பிறந்த எண்ணுக்குத் தகுந்ததாக பெயர் வைக்காவிட்டால் அந்த நபரின் வாழ்க்கையே திசைமாறிப்போய்விடும் என்பதனை ஜோதிடர்கள் அடித்துக்கூறுகிறார்கள்.

இதேபோல ஊர்கள் அல்லது தெருக்களுக்கு குறித்த அந்தப் பெயர்கள் எப்படி ஏற்பட்டன என்பதனை அறியும் போது சுவாரசியமாக இருக்கும். சிலவேளைகளில் அது உண்மையாகவும் இருக்கலாம். பொய்த்தும் போகலாம்.
ஆட்சியாளர்களின் பெயரை ஊர்களுக்கு வைக்கும் மரபு பண்டைய காலத்தில் இருந்தே இருந்தது. இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள ‘சங்கிலித்தோப்பு’ சங்கிலியனின் நினைவாக இருக்கின்றது. அதேபோல கொழும்பில் டெரிங்டன், மெயிட்லண்ட் என ஆங்கிலேய தளபதிகளின் பெயர்களில் இன்றும் சில இடங்கள் அழைக்கப்படுகின்றன. 1995ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தின் பல வீதிகள் விடுதலைப்போராட்ட வீரர்களின் பெயரால் அழைக்கப்பட்டன.

குறித்த பிரதேசத்தில் இருக்கும் அல்லது முன்னர் இருந்த குலங்களின் அடிப்படையில் அவ்வூருக்கு பெயர் ஏற்பட்டிருக்கும். உதாரணமாக வண்ணான்காடு, அம்பட்டர்தெரு, புன்னாலைக்கட்டுவன் என அமையும்.

யாழ்ப்பாணத்தில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உதாரணம். இது இன்றும் இளையவர்களுக்கு சொல்லப்படுகின்ற ஒரு விடயம். குப்பிளான் என்ற ஊரின் காரணப்பெயர் வரக் காரணம் என்ன?

பல வருடங்களுக்கு முன்னர் தற்போது குப்பிளான் என அழைக்கப்படும் பகுதிக்கு வந்த ஆங்கிலேயர் அங்கு மக்களின் விவசாயச் செய்கையைப் பார்த்து பாராட்டினர். அதிகளவான அவ்வூர் வாசிகள் மரவள்ளிச் செய்கையில் ஈடுபட்டிருந்தனர். மரவள்ளி விளைச்சலைப் பெற்ற பின்னர் வெட்டிய மரவள்ளித் தண்டுகளை சுவரோரமாக சரித்து அழகாக அடிக்கி வைத்திருந்தனர். இதைப்பார்த்த வெள்ளையன் ஒருவன் மக்களிடம் ‘குட் ப்ளான்’ என பாராட்டினானாம். இந்தக் ‘குட் ப்ளானே பிற்காலத்தில் மருவி குப்பிளான்’ ஆகியதாக சொல்வார்கள்.
இதேபோல ‘வில்’ என்ற எச்சத்தில் முடிவடையும் ஊர்ப்பெயர்கள் சில இருக்கின்றன. இணுவில், கோண்டாவில், கொக்குவில், நந்தாவில் போன்ற பெயர்கள் எப்படி ஏற்பட்டன என்பதற்கு சுவாரசியமான ஒரு கதையைச் சொல்லுவார்கள். நிச்சயம் இது கட்டுக்கதையாக தான் இருக்கும். ஆனாலும் ஏற்கக் கூடியதாக இருக்கின்றது.

முன்பொரு காலத்தில் அரசனும், அவனது தோழனும் குதிரையில் வேட்டைக்குப் புறப்பட்டார்களாம். வழியில் ஓரிடத்தில் கொக்கு ஒன்றை அரசன் அவதானித்தானாம். உடனே நண்பனிடம் கொக்கு ஒன்று பறந்து கொண்டிருக்கின்றது வில்லைத் தா வேட்டையாடலாம் எனக் கூறினானாம். வேகமாக குதிரையில் வந்து கொண்டிருந்ததால் நண்பனிடம் இருந்த வில்லைப் பறிப்பதற்காக நண்பனின் பெயரைச் சொல்லி நந்தா வில்லைத் தா என கோரினானாம். அவர்கள் வேகத்தில் வில்லைப் பெற முடியவில்லை. சிறிது நேரத்தின் பின் கொஞ்சம் கோபமாக கொண்டா வில்என அரசன் கத்தினானாம். இருந்தும் கொக்கை வேகமாக கலைத்ததால் வில்லை பெற இயலவில்லை. அதற்குள் கொக்கும் மறைந்து விட்டது. சோர்வுடன் இனி வில் வேண்டாம் என கூறினானாம்.

நண்பர்களே! மேலே பந்தியில் “...” அடையாளத்தில் காட்டப்பட்டிருக்கும் பெயர்களை சரியாக படியுங்கள். அதுவே மருவி கொக்குவில், நந்தாவில், கோண்டாவில், இணுவில் என மாறியதாக கூறுவார்கள். இந்த நான்கு ஊர்களும் அருகருகே இருக்கின்றன. வேகமாக குதிரையில் பயணித்த இருவரும் குறிப்பிட்ட நேரங்களில் அவ்விடங்களில் பயணித்திருக்க சந்தர்ப்பம் இருக்கின்றது.
பலரையும் புருவத்தை உயர்த்திப் பார்க்க வைக்கும் ஒரு பெயர் கொண்ட இடம் உடுவில் பிரதேசத்தில் இருக்கின்றது. அது தான் லவ் லேன். முன்பெல்லாம் அந்த வீதியில் ஒரே காதலர்கள் நடமாட்டமாம். அதற்காகவே அந்தப்பெயர் வைத்தார்களாம். நானும் பல தடவை அந்த வீதியால் போய் வந்திருக்கின்றேன். மருந்துக்கு கூட காதலர்களைக் காண முடியவில்லை. இதற்காகவேனும் நான் யாரையாவது காதலித்து அவ்விடத்துக்கு அழைத்துச் சென்று கடலை போட வேண்டும். யார் அந்த மகராசன்?

இதேபோல உங்கள் ஊர்களுக்கான பெயர் வரவதற்கும் பல சுவாரசியமான காரணங்கள் இருக்கும். அவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அரும்பதங்கள்

சாத்திரியார் : சோதிடர்

மீண்டும் மற்றுமொரு பதிவுடன் சந்திக்கும் வரை,
அன்புச் சினேகிதி,
குந்தவை

19 comments:

அம்பலத்தார் said... Best Blogger Tips

ஊர் பேருங்க பின்னாடி இம்புட்டு சமாச்சாரங்கள் இருக்கா? தேடிப்பிடித்து பதிவிட்டதற்கு நன்றியம்மா குந்தவை.

அம்பலத்தார் said... Best Blogger Tips

அட்டில்கூடத்தைவிட்டு இந்தமாதிரி விடயங்களுக்கு மாறினதுகூட குப்பிளான் சீ சீ good plan தான் keep it up.

அம்பலத்தார் said... Best Blogger Tips

முன்னாடி தெரியாமல்போச்சே. செல்லம்மாவை சைட் அடிக்கிறகாலத்திலை உந்த Love Lane இருக்கிறது தெரிஞ்சிருந்தால் அடிக்கடி அந்தப்பக்கம் வந்திருப்பம்.

மகேந்திரன் said... Best Blogger Tips

காரணமின்றி காரியமில்லை..
என்பது சரிதான்..
பெயர்க்காரணங்கள் அத்தனையும்
மனதில் நின்றது சகோதரி.

ஆகுலன் said... Best Blogger Tips

கனக்க ஊர் பேருக்கு வித்தியாசமான விளக்கங்கள் ..உள்ளது..

தகவலுக்கு நன்றி..நானும் இப்படி பலது கேள்விபட்டு இருக்குறேன்....

பால கணேஷ் said... Best Blogger Tips

ஊர்ப் பெயர்களின் பின்னால் இப்படி சுவாரஸ்யமான காரணங்களும் இருக்கிறதா... ஆச்சரியம்தான். நல்லதொரு பகிர்வு.

Mathuran said... Best Blogger Tips

வணக்கம் குந்தவை அக்கா

அருமையான ஒரு பதிவு.. லவ் லேன் பற்றி மட்டும் அறிந்திருக்கிறேன்.. மற்றும்படி எல்லாமே புதியவையாக இருக்கின்றன.

KANA VARO said... Best Blogger Tips

இணையில் - இணுவில், இந்த ஊருக்கு நிகரான ஒரு ஊர் கிடையாது எனும் பொருள்பட இணையில் என்ற பெயரை வைத்தாக கூறப்படுகின்றது. இதுவே தற்போது மருவி இணுவிலாகியது. இந்த விளக்கம் யாழ்ப்பாண வைபவ மாலை எனும் நூலில் உண்டு. எங்கள் ஊருக்கு இப்படியொரு விளக்கமா? பதிவுக்கு நன்றி..

சுதா SJ said... Best Blogger Tips

குந்துவை அக்காவுக்கு வாழ்த்துக்கள் :)

சுதா SJ said... Best Blogger Tips

சாரிப்பா குந்தவை அக்காவுக்கு என்று வரணும் :)

K said... Best Blogger Tips

அருமையான சுவையான பதிவு! சத்தியமா இனி குந்தவையை சமையல்காரின்னு சொல்ல மாட்டோம்! ஓகே வா?

K said... Best Blogger Tips
This comment has been removed by the author.
ந.குணபாலன் said... Best Blogger Tips

ஊர்ப் பெயர்களை பற்றி அறிய வேண்டுமாயின் tamilnet.com என்ற இணையத்தளத்திற்கு சென்று பாருங்கள். ஆராய்ந்து விளக்கம் தருகிறார்கள்.குப்புழான் ஊரின் பெயர்க்காரணத்தை tamilnet.com/art.html?catid=98&artid=30289 என்ற சுட்டியைத் தட்டுங்கள்.

ந.குணபாலன் said... Best Blogger Tips
This comment has been removed by the author.
பராசக்தி said... Best Blogger Tips

பருத்தித்துறையின் துறை முகத்தில் இறக்குமதியான கோதுமைமாவில் பக்குவமாக தயாரிக்கப்பட்ட பிட்டை சாப்பிட்ட ஆங்கிலேயர் "fine pittu" என்றார்களாம், அதுவே மருவி "Point Pedro" ஆகியதாம். வேறு காரணம் இருந்தால் தெரிந்துகொள்ள ஆசை!

ந.குணபாலன் said... Best Blogger Tips

சரியான விளக்கத்தை அறிய விருப்பமோ? A Dutch sailor, Pedro, when travelling along the coast of the country found this city to be the Northern-most point and this gave rise to the name, Point Pedro.
ஆதாரம்:en.wikipedia.org/wiki/Point_Pedro என்ற சுட்டியைப் பாருங்கள்.

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் குந்தவி/குந்தவை?////நான் யாரையாவது காதலித்து அவ்விடத்துக்கு அழைத்துச் சென்று கடலை போட வேண்டும். யார் அந்த மகராசன்?/////நான் பிரீயாத்தான் இருக்கிறன்,ஹி!ஹி!ஹி!

vimalanperali said... Best Blogger Tips

சுவாரஸ்யம் மிகுந்த பதிவு.நல்ல மீட்டல்,நன்றாக இருந்தது,நன்றி. வணக்கம்/

பராசக்தி said... Best Blogger Tips

@ந.குணபாலன்
நன்றி ந. குணபாலன் அவர்களே,

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!