Thursday 15 December 2011

பனங்காய் பணியாரமும் நம்மூர் பெண்களும்!

ஈழவயலோடு உங்கள் இதயங்களை இணைத்திருக்கும் அன்பு உறவுகளே! அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்!
"எல்லோரும் இன்றைக்கு பனங்காய் பணியாரம் சாப்பிடுவோமா?"
பனை என்றதுமே உடனடியாக ஞாபகத்துக்கு வருவது இரண்டு. ஒன்று பனங்கள்ளு. அடுத்தது பனங்காய் பணியாரம். இரண்டுமே யாழ்ப்பாணத்தில் பிரபலம். "கள்ளு குடித்தால் போதை வரும்!" என்பார்கள். ஆனால் எங்கள் அம்மம்மாக்கள் சுடும் பனங்காய் பணியாரத்தை சாப்பிட்டாலும் ஒரு போதை வரும். ஆனால் இந்த போதை குடித்துவிட்டு மெய்மறந்து அடுத்தவனை அடிக்கும் போதையல்ல. ஒரு முறை சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும் போதை.

எத்தனை வலிய கோபங்களை கூட தன் இனிய சுவையின் ஈர்ப்பால் போக்கிவிடும் ஆற்றல் கொண்டது இந்த பனங்காய் பணியாரம். உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். எங்கள் மாமாவுக்கும் அம்மம்மாவிற்கும் அடிக்கடி சண்டை வரும். மாமா கோபித்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வராமல் குஞ்சியம்மா வீட்டிற்கு போய்விடுவார். அம்மம்மா அடுத்தநாளே என்னிடம் ஒரு பனங்காய் பணியார பார்சலை தந்து "மாமாவிடம் கொண்டுபோய் குடுத்திட்டுவாடா குட்டி” என்று என்னைஅனுப்பிவிடுவார். சிறிதுநேரத்தில் தானும் கொஞ்சம் பனங்காய் பணியாரத்தை எடுத்துக்கொண்டு குஞ்சியம்மா வீட்டிற்கு போவார். திரும்பி வரும்போது கூடவே மாமாவும் வருவார். அப்படி ஒரு மகிமை பனங்காய் பணியாரத்துக்கு.


சுவை என்பதையும் தாண்டி உறவுகளின் வலுவுக்கு ஒரு ஊன்றுகோலாக எமது பிரதேசங்களில் பனங்காய் பணியாரம் இருந்துள்ளது. பனம்பழ சீசன்களில் நாம் யாருடைய வீட்டிற்காவது விருந்தினராக சென்றால், இப்போதுபோல பிஸ்கட்டும், கேக்கும் கொண்டுசெல்வதில்லை. இந்த இரண்டினதும் இடத்தை பனங்காய் பணியாரம் நிரப்பியிருக்கும். அந்தளவிற்கு பனங்காய் பணியாரம் எம் பிரதேசங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.


பனங்காய்பணியாரம் சுடுவதில் நம்மூர் பெண்கள் கில்லாடிகள். பனம்பழத்தின் சுவையும் அவர்களின் கைப்பக்குவமும் சேர்ந்து பணியாரமாக வரும்போது அதன் சுவையே தனி. எங்கள் வீட்டில் பனங்காய் பணியாரம் சுடுவது அம்மம்மாதான். அவருக்குத்தான் அதன் கஷ்டம் புரியும். ஆனால் அந்த பணியாரம் சுடுவதற்கு பின்னால் எங்களின் (சிறுவர்களின்) கடின உழைப்பு இருக்கிறது என்பதுதான் சுவையானது.


சும்மா இருந்துவிட்டு அம்மம்மா பணியாரம் சுட்டுத்தர சாப்பிடும் சுவையை விட ஆரம்பத்திலிருந்தே அதற்காக கஷ்டப்பட்டு அம்மம்மா சுடச்சுட சூடு ஆறுமுன்பே எடுத்து வாயில் வைக்கும்போது ஏற்படும் சுவையும், பரவசமும், பத்து மாதம் காத்திருந்து ஒரு குழந்தையை காணும் தாயின் பரவசத்திற்கு ஒப்பானது.

பனங்காய் சீசன் ஆரம்பித்து நொங்கு விழ ஆரம்பித்ததுமே பனங்காய் பணியாரத்தின் மீதான எங்களின் மோகமும் ஆரம்பித்துவிடும். தாத்தா சீவித்தந்த நொங்கை விரலை விட்டு நோண்டிக்கொண்டே ”அம்மம்மா பனங்காய் பணியாரம் சுடுவோமா?” என்று ஆர்வக்கோளாறால் கேட்போம். அம்மம்மா சிரித்துக்கொண்டே “ இரு ராசா…இப்பதானே நொங்கு விழுந்திருக்கு.. கொஞ்ச காலத்தில பழுத்திடும்.. அதுக்குபிறகு சுடுவம்…” என்று சொல்லுவா.


அந்த நாளில் இருந்து பனங்காய்பணியாரம் சாப்பிடுவதற்கு நாட்களை எண்ணிக்கொண்டே பொழுதை போக்குவோம். எண்ணம்,சிந்தனைகள் யாவும் எப்போதும் பனங்காய்பணியாரத்தை பற்றியதாகவே இருக்கும். சொந்த காணிக்குள் பனைமரம் இருந்தால் பிரச்சினை இல்லை. பொதுக் காணிகளுக்குள் இருக்கும் மரத்தின் பழங்களை பொறுக்குவதில் சிறுவர்களுக்குள் பெரிய போராட்டமே நடக்கும். பனம்பழம் விழுந்தால் யார் எடுப்பது என்ற சண்டையில் புழுதிமண் உடம்பில் ஒட்ட, விழுந்து புரண்டு, இறுதியில் பனம்பழம் நசுங்கிப்போய் வீசி எறிந்துவிட்டு போன நாட்களும் உண்டு. எங்கள் காணிக்குள் பனைமரம் நிண்டாலும் நாங்களும் போட்டியில் பொதுக்காணியில் பனம்பழம் பொறுக்கப்போய் சண்டைபிடித்திருக்கிறோம்.


ஓவ்வொரு நாளும் காலையும் மாலையும் பனைமரத்தடிக்கு ஓடிச்சென்று பனம்பழம் விழுந்திருக்கா என்று பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் வருவோம். ஒவ்வொரு நாளும் நாம் ஏமாந்து வருவதை பார்த்து இரக்கப்பட்டு பனைமரமே பழத்தை ஒருநாள் கீழே போடும். மனமெல்லாம் பூரித்துப்போக சந்தோசம் தாங்கமுடியாமல் விழுந்த பழத்தை எடுத்துக்கொண்டே அம்மம்மாவிடம் ஓடுவோம்.
அதை வாங்கி வைத்துக்கொண்டே “எட ராசன்… அந்த செல்வக்குமார் பெடிய ஒருக்கா வரச்சொல்லிவிடு” என்று மாமாவுக்கு சொல்லுவா. செல்வக்குமார் எங்கள் ஊரில் மரமேறும் தொழிலாளி.அவர் வந்து பழம் முழுவதையும் பிடுங்கி போட்டுவிட்டு போய்விடுவார். அன்றைக்கு ரியூசனுக்கு கட் அடித்துவிட்டு அம்மம்மாவுடன் கூட இருந்து பனங்காய் பணியாரம் சுடும் வேலைகளை ஆரம்பித்துவிடுவோம்.


அம்மம்மா ஒவ்வொரு பழமாக சுட்டுத்தர, அவற்றின் தோலை உரித்து, சாற்றை பிழிந்து சட்டிக்குள் விடுவோம். எல்லாம் பிழிந்து முடிந்ததும் கடைசியாக இருக்கும் பழத்தினை இரண்டாக பிரித்து எங்களிடம் சாப்பிட தந்துவிட்டு அம்மம்மா பணியாரம் சுட ஆரம்பித்துவிடுவார். பனம் பழத்தை சுவைத்துக்கொண்டே அம்மம்மா பணியாரம் சுடுவதை பார்த்துக்கொண்டிருப்போம்.
கோதுமை மாவுடன் பனம்பழ சாற்றையும் கலந்து பிசைந்து எண்ணையில் போட்டதும், சிறிது நேரத்தில் பணியாரம் பொரிந்து பொன்நிறமாக வரும். அப்போது எழும் வாசனை நாவில் எச்சில் வரவைக்கும். பொறுமை எல்லை கடந்துபோக அம்மம்மா திட்ட திட்ட, அகப்பையை எடுத்து சட்டிக்குள் விட்டு பணியாரத்தை எடுக்க, இவ்வளவு நேரமும் பார்த்துக் கொண்டிருந்த அம்மா தடியை எடுத்துக்கொண்டு அடிக்கவருவா. எடுத்த பணியாரத்தையும் கொண்டு ஓடிப்போய் வீட்டு கோடிக்குள்ள நிண்டு ஊதி ஊதி சாப்பிடும் போது வரும் சுவை இருக்கே…. சும்மா இருந்து சாப்பிடும் போது அதெல்லாம் தெரியாது.

கால ஓட்டத்தில் இப்போது இதெல்லாம் கிடைப்பது அரிதாகி விட்டது. அவ்வப் போது பனங்காய் பணியாரம் சாப்பிட வாய்ப்பு கிடைத்தாலும் முன்பு போல் சொந்தங்களுடன் சண்டை பிடித்து, பின்னர் ஒன்று சேர்ந்து சாப்பிடும் சுகமும்,சுவையும் கிடைப்பதில்லை.

அரும்பதங்கள்/ சொல்விளக்கம்
* குஞ்சியம்மா - அம்மாவின் கடைசி தங்கையை ”குஞ்சியம்மா” என்று அழைப்பார்கள்
* நொங்கு - நுங்கு
* சீசன் - பருவகாலம்
* கோடிக்குள்ள - வீட்டின் பின்புறம், கொல்லைப்புறம்

படங்கள் உதவி : கூகிள்

20 comments:

Anonymous said... Best Blogger Tips

பனங்காய் பணியாரமே பச்சை கொழும்பு வெத்திலயே உன் பார்வை கொஞ்சம் பத்தலே....) அவ்வுளூ சுவை.

குட்டிப்பையன் said... Best Blogger Tips

இதை படிக்கும் போது நாக்கில் எச்சில் ஊறுது மதுரன் பனங்காப்பணியாரம் என்ன ஒரு சுவை.....மீண்டும் பனங்காய் பணியாரம் மீதான ஆவலைத்தூண்டிவிட்டீர்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

ஆகா.... ஆகா... ரொம்ப நன்னா இருக்கும் போல...

சுதா SJ said... Best Blogger Tips

மது ஒரு பணங்காய் பனியார பாசல் அனுப்பிவிடுங்கோவன் ப்ளீஸ் :)

நான் இதுவரை உதை சாப்பிடாதே இல்லை என்பது வருத்தமான விடயம் :(

ஆகுலன் said... Best Blogger Tips

அண்ணே வாய் எல்லாம் ஊறுது..உங்களுக்கு என்ன காலம் வரும்போது சாப்பிடுவீங்க.. இங்க இருந்து கொண்டு ஒன்டுமே பண்ண முடியாது...பேனியில் அடைத்து விற்கிறார்கள் கனடாவில் ..என்ன கொடுமை......

ஆகுலன் said... Best Blogger Tips

துஷ்யந்தன் said...
மது ஒரு பணங்காய் பனியார பாசல் அனுப்பிவிடுங்கோவன் ப்ளீஸ் :)

நான் இதுவரை உதை சாப்பிடாதே இல்லை என்பது வருத்தமான விடயம் :(////

அண்ணே என்ன சொல்லுறீங்க நெடுங்கேணி அக்காட கேட்டிருக்கலாம் தான.......

காட்டான் said... Best Blogger Tips

நான் அனுபவித்த அனுபவிக்க இன்னும் ஆசைப்படும் விடயத்தை நீயும் அனுபவித்திருக்கின்றாய் என்னும்போது எவ்வளவு சந்தோஷமாய் இருக்கின்றது.. 

நன்றி மதுரன் எனக்கு மீண்டும் எனது ஆச்சியை(அம்மம்மாவை) ஞாபகப்படுத்தியதற்கு..!!))))

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் மதுரன்,
நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க. நான் கூட முன்னைய காலங்களில் பனைக்கு கீழே போய் கால் வலிக்க நின்றிருக்கிறேன்,
நல்ல வாசனையும், நல்ல சுவையும் கொடுக்கக் கூடியது பனங்காய் பணியாரம்! மீண்டும் நாவில் எச்சில் ஊற வைத்து விட்டீங்க.

K said... Best Blogger Tips

நேற்றே கருத்திட்டிருக்கவேண்டும்! மிஸ் பண்ணிட்டேன்! மிக மிக அழகாக வர்ணனை ரீதியில் செல்லும் நேர்த்தியான பதிவு! பனங்காய் பணியாரம் சாப்பிடுவது போலவே ஒரு உணர்வு!

மதுரனின் வர்ணிக்கும் + விபரிக்கும் பாங்கு வித்தியாசமாக உள்ளது! வாழ்த்துக்கள்!

ஹி ஹி ஹி ஹி இப்ப ஆசையா இருக்கு! பனங்காய்ப்பணியாரம் சாப்பிடவும் + பனங்கொட்டை சூப்பவும்!

ம.தி.சுதா said... Best Blogger Tips

மது அருமையாகப் பகிர்ந்துள்ளாய்... பணியாரம் என்றால் முதல் நாள் சுட்டவுடன் என்ன கசப்புக் கசக்கும் ஆனால் அதைக் கூட விடாமல் ஒரு கட்டுக் கட்டுவோமே...

ஹேமா said... Best Blogger Tips

வாயூறுது....ஒண்டும் சொல்ல வரேல்ல !

Yoga.S. said... Best Blogger Tips

பனங்கள்ளு மூண்டு போத்தில் குடிச்சாலும் சூப்பராயிருக்கும்!பனங்காய்ப்பணி யாரம்...............ம்..ம்...ம்.......!பி(ப)னாட்டு இன்னும் நல்லாயிருக்கும்!கயர் இல்லாத பனம்பழத்தை தேடி...........ம்....ம்...ம்.....!!!!!!

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

மதுரன் பதிவு அருமை. பழைய ஊர் ஞாபகங்களை தட்டிப்போனது உங்கள் பதிவு.. பனங்காய் பணியாரத்திட்காய் நாம் அடிபட்ட கதை பர்கர் (Burger) காய் வரியில் நிற்பவர்களுக்கு எங்கு புரியப் போகிறது.. இப்பவே வாய் ஊறுதே..

பராசக்தி said... Best Blogger Tips

பதிவு தொடங்கிய போது தட்டு நிறைய இருந்த பணியாரம் போகப்போக குறைந்து கொண்டு போனதில், பதிவு முடியும் தறுவாயில் வெறும் தட்டும் படமாய் இடம்பெறும் என்று எதிபார்த்தேன்

N.H. Narasimma Prasad said... Best Blogger Tips

இப்படி ஒரு பணியாரம் இருப்பதே எனக்கு நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி.

Unknown said... Best Blogger Tips

பனங்காய் பணியாரம் என்றதுமே எனக்கு வாயில் உமிழ்நீர் ஊறியது, படத்தைப் பார்த்து இரை மீட்ட வேண்டிய காலமிது!

அம்மம்மா பனங்காய் பணியாரம் செய்யும் முறையையும் சேர்த்து இருக்கலாமே!

//கோதுமை மாவுடன் பனம்பழ சாற்றையும் கலந்து பிசைந்து எண்ணையில் போட்டதும், சிறிது நேரத்தில் பணியாரம் பொரிந்து பொன்நிறமாக வரும். அப்போது எழும் வாசனை நாவில் எச்சில் வரவைக்கும்.// அப்படியானால் சீனி தேவையில்லையா?

Unknown said... Best Blogger Tips

பனங்காய் பணியாரமும் பனையும் எங்கள் வாழ்விலிருந்து பிரிக்க முடியாதவை. வாழ்துக்கள்

KANA VARO said... Best Blogger Tips

அப்படியானால் சீனி தேவையில்லையா?//

பனம் பழமே இனிப்புத் தானே! அதனால் தேவையில்லை சீனி. ஆனாலும் சிறிது கசக்கத்தான் செய்யும். அதீத இனிப்பு விருப்பமுடையோர் சீனி சேர்க்கலாம்.

sangar said... Best Blogger Tips

பனங்காய் பணியாரம் பற்றி பதிவிட்டமைக்கு நன்றிகள். உலகெங்கும் உள்ள ஒவ்வொரு யாழ்ப்பாணத்தவனும் கண்டிப்பாக இதைச் சுவைத்திருப்பான்

நிலாமதி said... Best Blogger Tips

பனங்காப்பணியாரம் என்ன ஒரு சுவை.....மீண்டும் பனங்காய் பணியாரம் மீதான ஆவலைத்தூண்டிவிட்டீர்கள்

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!