Monday, 26 December 2011

வானத்தில் பறக்கும் வடமராட்சி வேலிகள்!!

இணையத்தினூடே ஈழவயலினூடு இணைந்திருக்கும் அன்பு உறவுகளே,
வணக்கம்,
யாழ்ப்பாண சாம்ராஜ்ஜியத்தின் மிக முக்கிய கட்டமைப்பு பிரதேசங்களாகக் காணப்பட்ட இடங்களில் வடமராட்சியும் ஒன்றாகும். பல வரலாற்று முக்கியத்துவங்களைக் கொண்டுள்ள இப் பிரதேசமானது இன்றும் அதன் பெயரைக் கேட்டாலே அகில உலகெங்கும் வாழ்வோரும் விழி நிமிர்த்திப் பார்க்கும் வண்ணம் தன்னகத்தே சிறப்பினைக் கொண்டுள்ளது.இங்கே பருவக் காற்றானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீச ஆரம்பித்தாலே போதும். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான் அதிலும் தைமாதம் தொடங்கினாலே போதும் இலங்கை வான்படை உலங்குவானூர்திகளே எமது வான்பரப்புக்குள் உள் நுழைய அஞ்சுவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா?இங்கு பட்டக் காலம் ஆரம்பித்து விடும். (இந்தியாவில் இதை காற்றாடி என்பார்கள்). சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இதற்கு இறங்கி விடுவார்கள்.
இங்கு விடப்படும் பட்டங்களின வகைகளின் பெயரைக் கேட்டால் உங்களுக்குச் சில வேளை சிரிப்பு வரலாம். உதாரணத்திற்கு பிராந்து/ பிராந்தன் (பருந்து), கொக்கு, வௌவால், பாராத்தை,படலம்/ படலன், வட்டாக்கொடி,தாட்டான்,பாம்புப் பட்டம்/ பாம்பன் பட்டம், மீன் பட்டம், மணிக் கூட்டுப் பட்டம், பெட்டிப் பட்டம், சாணை, எட்டு மூலைப் பட்டம், ஆள் பட்டம்,  என பட்டங்களின் வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அது மட்டமல்ல பட்டத்திற்கு பயன்படும் நூல் வகைகளும் பலவாறு வித்தியாசப்படும். உதாரணத்திற்கு தையல் நூலில் இருந்து தங்கூசி நூல்,நைலோன் நூல்,கொர்லோன் நூல்/ ஈர்க்குப் பிரி இழை, என பல்வேறு பட்ட நூல்களைப்பயன்படுத்துவார்கள். தென்னோலை ஈர்க்கில் இருந்தும் மூங்கில், கமுகு (பாக்கு மரம்) மற்றும் பனை மட்டை போன்றவற்றிலிருந்தும் எடுக்கப்படும் பொருட்களே பட்டம் கட்டுமானத்திற்குப் பயன்படுகிறது.

அத்துடன் பயன்படுத்தும் அத்தனை துண்டங்களிலும் அளவுப் பிரமாணம் இருக்க வேண்டும். பட்டங்கள் கட்டுவதும் கிட்டத்தட்ட விமானப் பொறியியல் போல மிக நுணுக்கமாக கட்ட வேண்டியிருக்கும். இவையெல்லாம் பட்டம் பற்றிய செய் முறைகள் மட்டுமே. அதற்கான பொருட்களைப் பெறுவதானால் அது பெரும் பாடாகும். ஈர்க்குத் தேவையானால் களவாகத் தான் தென்னை மரங்களில் ஏறி ஓலை வெட்ட வேண்டும். எத்தனை நாளைக்குத் தான் வீட்டு விளக்குமாறில் இருந்து களவாக முறித்துத் தப்புவது.
மூங்கில் வெட்டுவதானால் பொலிஸ் அனுமதி வேண்டும். அதை களவாக வெட்டுவதற்காக வீட்டுக்காரனை ஏமாற்றி போதாத குறைக்கு பொலிசையும் ஏமாற்றி கொண்டு வந்து பிளந்து காய வைத்து எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அதை விட மிகவும் சிரமமானது கமுகம் தடி பெறுவது. அதற்காக ஒரு பாக்கு மரத்தை வெட்ட வேண்டியிருக்கும். ஆனால் வெட்டப் பட்ட மரத்தை காய வைத்து எடுப்பதென்றால் அடுத்த தைப்பொங்கல் வந்துவிடும். அதனால் ஒரு பெரும் திட்டத்தை கையாளுவோம். திருவெம்பாவைக் காலங்களில் யாருடைய வேலிகளில் கமுகம் தடி இருக்கிறதோ அவரது வீட்டின் முன்னால் காலை 3 மணிக்கே எமது சங்கூதல், சேமக்கலம் அடித்தல் ஆரம்பமாகும்.

ஆனால் அவர்கள் எழும்பி விட்டுப் படுத்துவிடுவார்கள். மீண்டும் ஒரு 4 மணி போல வந்து அடிப்போம்.ஆனால் இம் முறை ஆட்களை திசை திருப்புவதற்காக வேறு சங்கும் வேறு சேமக்கலமும் அடிப்போம். இது 3 நாள் தொடரும் 4 ம் நாள் 3 மணிக்கு ஊத மாட்டோம் அந்த அன்று அவர்கள் வேலி வெறிச்சோடிவிடும். எம்மைக் கேட்டால் நாங்கள் இன்று உங்கள் வீட்டுப் பக்கம் வரவில்லை என்போம். அதன் பின் 4 மணிக்கு ஊதுபவர்கள் யாரேன தேடுதல் ஆரம்பமாகும். அந்த நாளன்று பிற்பகல் அவர்களது வேலி வானத்தில் நிற்கும். ஹே...ஹே..

இப்போது அநேக வீடுகள் மதில்களாகி விட்டதால் அதிகளவானோர் பனை மட்டைகளையே நாடுகின்றோம். இந்த இரவு நேரத்தில் கூட விசைத் தடிகளை (விண் கூவுதல்) ஏந்திக் கொண்டு காது கிழிக்கும் ஓசையுடன் மட்டுமல்லாது மின் குமிழ்களையும் தாங்கிக் கொண்டு பட்டங்கள் வானை அலங்கரித்திருக்கிறது. எனது பட்டத்தையும் கண்காணிக்க வேண்டும் அதனால் சென்று வருகிறேன் நண்பர்களே.

நன்றி,
வணக்கம்.

21 comments:

Jana said... Best Blogger Tips

பட்டம் விடும் காலங்கள் அற்புதமானவை. வர்ணமாயமான பல பட்டங்கள் வானில் பறந்தாலே சிறுவர்களின் நெஞ்சில் குதூகலங்கள்தான். வடமாராட்சி பிரதேசங்களில் இந்த நாட்களில் பட்டம் விடுவதை எம் இடப்பெயர்வுக்காலங்களான 1995ஆம் ஆண்டுகளில் கண்டுள்ளேன்.
அனால் எமது பிரதேசங்களில் வடகீழ் பருவக்காற்றுக்காலங்களில் ஆடி மாதத்திலேயே பட்டங்களை விடுவோம்.
விண் கூவும் பட்டங்கள், இரவில் ஒளிரும் பட்டங்கள் என அருமை..
நன்றாக உயரத்திற்கு பட்டத்தை நாம் ஏற்றிக்கொண்டிருக்கும்போது எங்கே பட்டத்தின் இழுவை பார்ப்போம் என வாங்கி நூலில் சுண்ணாம்பை தடவிவிட்டுப்போகும் குசும்புக்கார நண்பர்களும் உண்டு.

பட்டம் விடுவதிலும், பல நுண் அறிவு விடயங்கள் உண்டாம், எற்றமச்சை, இழுவை மச்சை, சம முச்சை என்று பலவற்றை சொல்வார்கள். அதேபோல முச்சை சரியாக இல்லாவிடின் வண்டி வைத்தல், அப்படி இப்படி நிறைய...
உச்ச வெய்யிலில் மொட்டை மாடியில் நின்று பட்டம்விட்டு அடிவாங்கிய அனுபவங்களும் நிறைய உண்டு.

அரிவரியிலேயே பட்டம்விடுவோம் பட்டம் விடுவோம் பாலா ஓடிவா... என்று பாடித்திரிந்தவர்கள் அல்லவா நாங்கள்.
பகிர்வுக்கு நன்றி மதிசுதா...

சாய் பிரசாத் said... Best Blogger Tips

திருவம்பாவை காலத்து கமூகம் சிலாகை அறுப்பது வீர விளையாட்டாகும்.. பெரும் திட்டமே தீட்டியிருக்கிறோம். அது ஒரு காலம்..
கமூகம் சிலாகைக்கு மாற்றீடாக வந்த பனைமட்டை, மூங்கில் போன்றவற்றில் விசை செய்தாலும் கமூகம் சிலாகையின் ஒலியே தனி யோலிதான்

ஹேமா said... Best Blogger Tips

மதி...திருவெம்பாக் காலத்தில இப்பிடியெல்லாம் நடக்குமா.இப்போ திருவெம்பாக் காலம்தானே.ஊருக்குப் போன் பண்ணிக் கவனமா இருக்கச் சொல்லவேணும்.மதிபோல ஆட்கள் வருவினெமெண்டு !

துரைடேனியல் said... Best Blogger Tips

En Ilamai kaalam enakku ninaivil vanthu vittathu. Pattangal vidum anupavangal enakku miga athigam. Pakirvukku Nanri!

மதுமதி said... Best Blogger Tips

பட்டம் விட்ட இளமைக் காலங்களை நினைவில் கொண்டு வரும் இந்த பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்..

அன்போடு அழைக்கிறேன்..

அழுகை அழ ஆரம்பிக்கிறது

சந்ரு said... Best Blogger Tips

இன்று பட்டம் விடுவது அரிதாகிவிட்டது. என்னுடைய சிறு வயது ஞாபகங்களை மீட்டிப் பார்க்க வைத்தது இப்பதிவு முன்னர் மாலை நேரமானால் பட்டங்களுடன் கடற்கரைக்கு சென்று விடுவோம். நூற்றுக் கணக்கான சிறுவர்கள் ஒன்று கூடிவிடுவோம். இன்று ஒருவர்கூட பட்டம் விடுவதில்லை.

ஆகுலன் said... Best Blogger Tips

அண்ணே பறக்காத பட்டத்தை இழுத்து கொண்டு ஓடின நாட்கள் எல்லாம் ஜாபகம் வருகுது....

எனக்கு இந்த வேலி மேட்டர் தெரியாம போச்சே...

காட்டான் said... Best Blogger Tips

அட திருவெம்பா சேமக்கலமும் சங்கும் இப்படி எல்லாம் உதவி இருக்கா.. நாங்க வடிவான பொட்டைகள் வீட்டில்தான் சங்கையும் சேமக்கலத்தையும் தூக்கி அடிப்போம்..!!

காட்டான் said... Best Blogger Tips

எட்டு மூலை பட்டத்தை பழைய சைக்கிள் டியூப்பில் விண் கட்டி அரை பனை உயரத்தில் சாக்கை சுத்தி அதில் பட்டத்தை நூலை கட்டி போட்டு அடுத்த நாள்தான் வந்து பாப்போம்.

இரவு முழுவதும் விண் கூவுவதை ரசித்த நாட்கள் மீண்டும் வராதா?

பழசை ஞாபகப்படுத்தி விட்டீங்க....!!
நன்றி தம்பி ...!!!

கந்தசாமி. said... Best Blogger Tips

பட்டம் கட்டுவதும் ,பட்டம் விடுவதும் ஒரு கலை பாஸ்;)

சமச்சீர் ,முச்சு கட்டுதல், வால் வைத்தல் என்று.. இதில் ஒன்று பிழைத்தாலும் அம்புட்டு தான்!

கந்தசாமி. said... Best Blogger Tips

///அத்துடன் பயன்படுத்தும் அத்தனை துண்டங்களிலும் அளவுப் பிரமாணம் இருக்க வேண்டும். பட்டங்கள் கட்டுவதும் கிட்டத்தட்ட விமானப் பொறியியல் போல மிக நுணுக்கமாக கட்ட வேண்டியிருக்கும். /// நிச்சயமாக...

அத்துடன் ஆடி மாதங்களிலே பனைகளிலும்,மின்சார கம்பங்கள் ,வயர்களிலும் அறுந்து தொங்கி நிற்கும் பட்டங்களுக்கு பின்னால் பல சிறுவர்களின் கண்ணீரும் உண்டு ஹாஹா..)

துஷ்யந்தன் said... Best Blogger Tips

ஆஹா.... பட்டம் விட்ட நினைவுகளை கிளரிட்டீன்களே பாஸ்.. அவ்வ

எனக்கு அந்த அனுபவம் பத்து வயசுக்கு முன்புதான் அதன் பின் கிடைக்கவில்லை.

பிரான்சில் (பாரிஸ்) எல்லாம் பட்டம் விட ஒத்துக்க மாட்டாங்கப்பா... :(((

குட்டிப்பையன் said... Best Blogger Tips

ஹா.ஹா.ஹா.ஹா. பழய ஞாபகங்களை மீண்டும் ஞாபகப்படுத்திட்டிங்க பட்டம் விட்டு பக்கத்து வீட்டு பெட்டையை நோட்டம் விட்டு பல்பு வாங்கிய அனுபவம் எல்லாம் குட்டிபையனுக்கு நிறைய இருக்கு பாஸ்.ஹி.ஹி.ஹி.ஹி

theepika said... Best Blogger Tips

பட்டங்கள்..
ஒரு பருவத்தின் நினைவுகள்.
கணினி விளையாட்டுக்களுக்குள் தம்மை மூழ்கடித்துவிடுகின்ற இன்றைய இளம் நாற்றுக்களுக்கு பட்டம் விடுவதில் இருக்கிற ஆனந்தம் பற்றி தெரிவதில்லை. பட்ட்ம் பறக்கிற போது நூலின் ஆரம்பத்தில் ஒரு இலையை கொழுவி விட்டால் அது பட்டம் வரை சென்றடைகிற ஆச்சரியத்தை அனுபவித்து பார்த்தவர்களுக்கு தெரியும். விண் கட்டிற நுட்பமும்.அதன் ஒலியும் அற்புதமான கண்டுபிடிப்பு. பட்டங்கள் மட்டுமே பறக்கிற வானம் எத்தனை அழகு. வானப்பெண்ணுக்கு அலங்கரித்தது போல இருக்கும் வைகாசி வானம். பட்டத்துக்கு மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறை மக்கள் புகைக்கூடுகளுக்கும் பெயர் பெற்றவர்கள். பட்டங்கள் பெற்றவர்கள் கூட பட்டம் விட்டு மகிழ்கிற காட்சிகள் அலாதியானவை. பட்டங்கள் பற்றிய நினைவுகளை மீள புதுப்பித்ததில் மகிழ்ச்சி.

தீபிகா.

என்னைத்தேடி..ஹர்ஷன் said... Best Blogger Tips

பட்டத்தில் விண் கட்டி இரவு முழுவதும் கூவவிட்டு... ஊர் முழுவதும் என்ர பட்டம் தான் விண் கூவுது என்டு கத்தியபடி ஓடுவது.... என்ன ஒரு அனுபவம்... நகர வாழ்க்கையில் இந்த சுகம் எங்கே கிடைக்கும்....

இன்று என் பதிவு;;; கிரிக்கெட் மொக்கைஸ்..::.. 2

மைந்தன் சிவா said... Best Blogger Tips

ஹிஹி அருமையான பதிவு மதி சுதா...
நான் கூட பதினோராம் ஆண்டு படிக்கும் வரையில் பட்டம் கட்டி ஏற்றி வந்தவன் தான்.
ஆனால் எட்டுமூலை பட்டம் தான் அதிகபட்சமாய் கட்டியதுண்டு..

Kiruthikan Kumarasamy said... Best Blogger Tips

மயிலிட்டி என்று ஒரு பட்டம் இருந்தது. மூன்று ஈர்க்குகள்/சலாகைகள் மூலம் கட்டலாம். இரண்டை X வடிவில் வைத்து குறுக்காக ஒன்றை வைத்து மூலைகளை நூலோடி இணைத்துக் கட்டுவது. தையல் நூல் அல்லது ஈர்க்கு நைலோன் அல்லது ஈரிழை நைலோனில் பறக்கவிட மூன்று ஈர்க்குகளையும் ஒரு Lunchsheet paper ஐயும் வைத்துக்கட்டக்கூடிய பட்டம் மயிலிட்டி. தொடுத்துப்பட்டம் விடும்போது முதலில் மற்றவர்களை இழுத்துக்கொண்டு ஏற ஏற்ற பட்டம். குறைவான கீழ்க்காற்றிலேயே ஏற்றிவிடலாம். மேற்காற்று பிடித்தால் இலேசில் அயர்ந்து விழமாட்டாது இந்த ‘லஞ்சீத்’ மயிலிட்டி. பெரிய சைஸ் மயிலிட்டிகளை பட்டத்தாளால் ஒட்டுவதுண்டு.

வௌவால் பட்டத்தை வாலாக்கொடி என்றும் மொட்டைக்கோழி என்றும்கூட அழைப்பார்கள்

KANA VARO said... Best Blogger Tips

தரம் மூன்று தமிழ் புத்தகத்தின் முதல் பாடத்தையும், எட்டு மூலை பட்டத்தையும் மறக்க முடியுமா?

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் மச்சி,
பட்டம் விடுதல் தொடர்பாக அருமையாக நினைவுகளை மீட்டியிருக்கிறாய்.
எங்கள் ஊரில் உள்ள பெருசுகள் பட்டம் விடுதலைக் கொடி விடுதல் என்று சிறப்பித்து அழைப்பார்கள்.

ஹே...ஹே..

அப்புறம் மாட்டுத் தாள் பேப்பரையும், கூப்பன் மா பசையினையும் மறக்கவா முடியும்?

வடலியூரான் said... Best Blogger Tips

நன்றாக இருந்ததௌ ப்ட்டம் பற்றிய பகிர்வு. பார்க்கப்போனால் நீங்களும் எனக்குப் பக்கத்திலை தான் இருக்கிறியள் போல கிடக்குது.நான் முன்னர் எழுதிய பட்டப் பதிவு, படித்துப் பாருங்கள்

http://vadaliyooraan.blogspot.com/2009/12/blog-post_11.html

sangar said... Best Blogger Tips

பட்டம் தொடர்பான பதிவுக்கு நன்றிகள், இப்போதெல்லாம் வடமராட்சியில் பட்டம் விடுவது குறைந்து வருகிறது.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!