Tuesday, 4 December 2012

சோல்ஜர் @ சொறிநாய்சொறிநாயைப் பிடித்து
“சோல்ஜர்” எனப் பெயர் வைத்து
கறியோடு சோறும்
வெறியேற அபினும்
குழைத்துண்ணக் கொடுத்து
வடக்கே போ என்றான்
வேட்டைக்கு

காவாலி சோல்ஜர்
கடைசித் தெருதாண்டி
முக்கி முணகி
மோப்பம் பிடித்தபடி
கால்தூக்கி
எல்லை வரைகின்றான்
என் வீட்டுச் சுவரில்

அடித்து விரட்ட
ஆளில்லா வீடொன்றில்
நாநீட்ட
தாகம் தணித்தவளின்
கைநக்கி
கோரைப்பல் தெரியச்
சிரித்தான்

வேட்டை நாயில்லா
வீடொன்றாய்ப் பார்த்து
கோழி இரண்டையும் -தென்னங்
குலை நான்கையும்
தேசியச் சொத்தாக்கினான்

சிதறுண்ட கால்கொண்ட
சிறுபுலியின் கதவுடைத்து
பெண்மையை அரசுடைமையாக்கினான்

காலம் பொறுமையாய்
காத்திருக்கிறது
காலம் வருவதற்காய்

Monday, 26 November 2012

முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் “அழகிய ராட்சசி”முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் “அழகிய ராட்சசி”
                                                                                    -- மன்னார் அமுதன்


தோழர் முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் கவிதைகளை ஒரே இருப்பில் வாசித்து முடித்துவிட்டேன். தன் உணர்வுகளுக்கு எழுத்துக்களால் உருக்கொடுத்து வாசகர் உள்ளங்களில் உலாவவிட்டுள்ளார்.  சுரேஷ்குமார் தன் கவிப்பயணத்தைக் காலம் காலமாய்க் கவிதைகள் போற்றும் காதலைத் தொட்டுத் தொடங்குகின்றார். தன்னை ஆட்கொண்ட ஒரு தேவைதயைப் பற்றி சிறிதும் பெரிதுமாய் ஒன்றைத் தலைப்பின் கீழ் பாடியுள்ளர். காலம் தோறும் பருவம் மாறாது பூக்கும் பூ காதல். அது காய்த்தும் பின் கனிந்தும் பல தனிமரங்களை பெருந்தோப்பாக்கி விடுகிறது.

நின்று கதைப்பதற்கு நேரமற்ற இன்றைய நவீன யுகத்தில் காதல் அரிதான ஒன்றாகிவிட்டது. பொருளாதாரத் தேடலில் குடும்ப உறவுகளையே தொலைத்து நிற்கும் தோழர்களுக்கு மத்தியில் உற்ற துணைக்கு முன்னுரிமை அளித்து காதல் கவிதைகளை வார்த்துள்ளார் கவிஞர்.  பெரும்பாலான எழுத்தாளர்கள் முதலில் எழுதத் தொடங்குவது கவிதையைத் தான்... காதலைத் தான்... காலம் போற்றும் காதலைக் கருவாய்க் கொண்டு “அழகிய இராட்சசி” எனும் இந்நூலை உருவாக்கியிருக்கிறார் கவிஞர். அடிப்படையில் ஒரு மனிதனிடம் அழகியல் சிந்தனைகளையும், கற்பனைகளையும் உருவாக்கி அவனைக் கவிஞனாக்குவது காதல் தான். காதல் வந்த பின் உலகமே அழகாகிவிடுகிறது. 

ஒருவரின் மீது வைத்திருக்கும் காதலை எழுத்தின் மூலமோ, வார்த்தைகளின் மூலமோ கூறிவிட வேண்டும். இதயங்களுக்கிடையே பகிரப்படாத எத்தனையோ காதல்கள் இன்றும் ஏக்கப் பெருமூச்சுகளோடே சுற்றித் திரிகின்றன. பகிரப்படாத அன்பு பெறுமதியற்றதாகி விடுகின்றது. ஒருவரை எவ்வளவு நேசிக்கின்றோம் என்பதை அடிக்கடி செயல்களின் மூலம் அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கவேண்டும். அவ்வாறு உணர்த்தப் பிரயத்தனப்படும், ஒரு பகிரப்பட்ட ஒரு காதலின் தொகுப்பாகவே கவிஞர் சுரேஷ்குமாரின் அழகிய இராட்சசியை நான் பார்க்கிறேன்.

மிக எளிய நடையில், அனைவருக்கும் விளங்கும் வகையில் ““சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை” என்ற பாரதியின் வாக்கிக்கேற்ப கவிதைகளைப் படைத்துள்ளார் சுரேஷ்குமார். 

“கவிதை என்பது உணர்ச்சியின் உதிரப் பெருக்கு. தன்னுள் பெருக்கெடுத்த உணர்வுகளைத், தான் நன்றாக அனுபவித்து, அதனை உட்கொண்டு பிரசவிப்பவன் தான் கவிஞன். கவிதை என்பதுஆற்றல் வாய்ந்த உணர்ச்சிகளின் ஒட்டுமொத்தச் சிதறல்கள். சலனமற்ற நெஞ்சின் அமைதியில் உண்டாகும் உணர்ச்சிகளின் கொப்பளிப்புகள்” என்பான் ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த். சுரேஷ்குமாரின் உள்ளத்து உணர்வுகள் கவிதையாக இந்நூலில் உருவெடுத்துள்ளது. யதார்த்தமான உவமைகளைக் கையாண்டு கவிதைகளுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார். நான் ரசித்த அவருடைய கவிதைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்.


“அரிசி மண்ணெண்ணெய் 
வாங்க வரிசையில்
முண்டியடிக்கும் ஜனங்களைப் போலவே
முண்டியடித்து நிற்கின்றன
என் கனவுகள்”

‘கண்ணாடியைப் பார்த்து 
உன்னழகை சரிசெய்து கொள்கிறாய்
அனைவரும்
உன்னைப் பார்த்து
தங்களின் அழகை
சரிசெய்து கொள்கின்றனர்”

அழகு என்பது எங்கு உள்ளது என்பது இன்றுவரை சர்ச்சைக்குரிய கேள்வியாகவே உள்ளது. அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களில் தான் உள்ளது என்பதை நாம் அறிந்திருந்தாலும், மற்றொருவர் பார்த்து தம்மைத் திருத்திக் கொள்ளும் வகையில்

‘என் கன்னக்குழிகளில் 
ஊற்றி வைத்திருக்கின்றேன்
நீ கொடுத்த முத்தத்தின்
ஈரத்தை”

தேநீர் அருந்திய
கோப்பையை எறிந்துவிடாதே
இதழ்கள் பட்ட 
கோப்பையின்
ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது
நம் காதல்


காதலில் வென்றவர்கள் சாதனை படைக்கிறார்கள். காதலில் தோற்றவர்கள் சரித்திரம் படைக்கிறார்கள் என்பார்கள். காதல் எவரையும் வீழ விடுவதில்லை. பணத்தை மாத்திரமே தேடும் இன்றைய சமுதாயத்தில் அன்புதான் பெரிய பொக்கிஷம் என்பதை நினைவு படுத்துவதற்காக வெளியிடப்படும் இந்நூலோடு, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டு இன்னும் பல நூல்களைப் படைத்து கவியுலகில் அழியாத சுவடுகளை கவிஞர் முனைவென்றி நா.சுரேஷ்குமார் பதிக்க வேண்டுமெனெ மனமாற வாழ்த்துகின்றேன்.

#அழகிய ராட்சசி கவிதை நூலிற்கு எழுதிய முன்னுரையிலிருந்து 

Wednesday, 14 November 2012

தேவதைகளின் மொழி


பல்லிகளைக் காட்டி
 “ஊ.. ஊ..”

பறவைகளைக் காட்டி
 “கீ.. கீ.”

அடிக்கவோ
பிடிக்கவோ போனால்
 “அப்பா ஹூ ஹூ”

வாலாட்டி நாநீட்டி
விளையாடி மறைகின்றன
பல்லிகள்

நாளை வருமாறு
சொல்லி அனுப்புகிறாள்
பறவைகளை

தேவதைகளின் மொழியறிய
நாயைக் காட்டி
 “தோ... தோ...” என்றேன்

சிரித்து மறுத்து
  “நா....ய்..ய்” என்கிறாள்
திக்கித்திக்கி

-- மன்னார் அமுதன்

Wednesday, 7 November 2012

மூத்த மகன்


நான்
யாராய் இருந்திருப்பேன்
அக்காவின் உலகில்


பொட்டிட்டும் பூவைத்தும்
அழகு பார்த்தவள்


தெருச்சண்டைகளில்
எனக்காய் வாதிட்டவள்


பாவாடை மடிப்புகளில்
எனைப் பாதுகாத்து
அப்பாவின் பிரம்படிகளை
அவளே வாங்கியவள்


பந்திகளில் முந்தி
எனக்காய்
பலகாரம் சேமித்தவள்


கட்டிக் கொள்பவனை
எனக்கும் பிடிக்கவேண்டுமென
மீசை வைக்கச் சொன்னவள்


அவள் உலகில்
யார் யாராகவோ
நான்


யாருடைய உலகிலும்
தம்பியாக முடியாமல்
மூத்த மகன்
                             -- மன்னார் அமுதன்

Monday, 16 July 2012

யாழ்ப்பாணக் காலாசாரத்தில் நிலைத்து நிற்கும் ஆடிப்பிறப்பு.


யாழ்ப்பாண மக்களின் தனித்துவமான கலாசாரங்கள் பல உள்ளன. அதில் மிக முக்கியமானதும் தனித்துவமானதும் ஆடிப்பிறப்பே ஆகும். 
ஆடிப்பிறப்பினை கொண்டாடும் ஒரு சமுதாயமாக யாழ்ப்பாண மக்கள் உள்ளனர். இந்த அளவுக்கு ஆடிமாதத்தின் சிறப்பு பண்டைய யாழ்ப்பாணத்து மூத்த குடியினரால் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் சிறப்பான அம்சமும், பெருமைப்படவேண்டிய அம்சமும் என்னவென்றால், பண்டைய காலங்களில் இருந்து இன்றுவரை யாழ்ப்பாண மக்கள் தமது பாரம்பரியங்களையும், சம்பிரதாயங்களையும், இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் கைவிடாது கைக்கொண்டுவருவதே ஆகும்.
தமிழ்நாட்டு தமிழர்கள் கூட ஆடிமாதம் வந்துவிட்டால் பெரும்பாலும் அம்பாள் கோவில்களில் கூழ் ஊற்றல் என்ற சடங்கினை செய்துவருகின்றனர் எனினும் யாழ்ப்பாண மக்களைப்போல தமிழில் ஆடிமாதம் முதலாம் நாளில் தமக்கே உரிய வகையில் அந்த நாள் மட்டும் சமைக்கும் இனிப்பு கூழ்பற்றி அவர்கள் அறியமாட்டார்கள். ரி பண்டைய யாழ்ப்பாணத்து ஆதிக்குடியினர் ஏன் ஒரு மாதத்தின் தொடக்க நாளினை இப்படி கொண்டாடுகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றதுதான். ஆனால் எந்த சமய சம்பிரதாய நூல்களிலோ அல்லது மத அனுஸ்டானங்களிலோ இந்த ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் என்பது பற்றிய எந்த ஒரு தகவலும் தரப்படவில்லை. அப்படி இருக்க யாழ்ப்பாணத்து மக்கள் ஏதோ ஒரு காரணத்தை மையமாக வைத்தே இந்த ஆடிமாத முதல் தேதியில் ஆடிப்பிறப்பினை கொண்டாட முற்பட்டுள்ளனர்.சரி நாம் அறிந்த வகையில் ஆடிமாதத்தின் சிறப்பினை எடுத்துப்பார்த்தால், ஆடிக்காற்றுக்கு அம்மியும் பறக்கும் என்ற பழமொழிகளுக்கேற்ப, யாழ்ப்பாணத்தின் மீது தென்மேல் பருவக்காற்று பலமாக வீசும் காலம் இது, யாழ்ப்பாணத்தை நோக்கி தெற்கில் இருந்து வடக்காக காற்று வீசும். இந்தக்காலத்திலேதான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் முதல் வர்ண வர்ணமாக, வித விதமான வகையில் பல பட்டங்களை கட்டி வானில் பறக்கவிட்ட மகிழ்வார்கள். 
அதேபோல பண்டைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஆடி மாதத்தில்த்தான் பெரும்பாலும் கார்னிவேல்கள், வானவேடிக்கை விழாக்கள், களியாட்ட விழாக்கள் எல்லாம் நடந்ததாக பல மூதாதையர்களின் கதைவழியாக நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.


அடுத்ததாக 12 மாதங்களை கொண்ட ஒரு ஆண்டில் முதல்பாக அரையாண்டு முடிவடைந்து அடுத்த பாகம் தொடங்கும் நாள் ஆடி முதலாம் நாள் என்றபடியால் இந்த நாளையும் கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டிக்கலாம் எனக்கருதப்படுகின்றது.
அதாவது தை மாதம் முதலாம் நாள் எவ்வாறு தைப்பொங்கல் என கொண்டாடி பொங்கல் செய்து படைத்து கொண்டாடுகின்றார்களோ அதேபோல, ஆடி மாதம் முதலாம் நாளினையும் கொண்டாட அவர்கள் தலைப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க முதல் பாக ஆண்டு தேவர்களுக்குரியதென்றும், அடுத்த பாதி ஆண்டு பிதிர்களுக்கு உரியதென்றும் கூறப்படும் ஒரு ஐதீகமும் இருப்பதன் காரணத்தினால், இனிப்பான கூழும், கொழுக்கட்டையினையும் சமைத்து பிதிர்களுக்கு படைத்தனர் எனவும் ஒரு கருத்து நிலவி வருகின்றது.


எது எப்படியோ உற்று நோக்கினால் யாழ்ப்பாணத்தில் ஆடிமாதம் என்பது ஒரு மகிழ்ச்சியானதான மாதமாகவே இருக்கும் ஏனெனில் காற்றில் பட்டங்கள் விடுவதும், யாழ்ப்பாணத்தின் மக்கள் விழா எனக்கருதக்கூடிய நல்லார் கந்தசுவாமி கோவில் பேருட்சவம் இந்த மாதம் முழுமையாக இடம்பெறுவதாலும், இதன்காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளி இடங்களுக்கு சென்றவர்கள் அனைவரும் ஒன்று கூடும் காலமாக இருப்பதால் நவீன காலத்தில்க்கூட இந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு மகிழ்வான காலரமாகவே தெரிகின்றன.
ஒரு காலத்தில் ஆடிப்பிறப்பு எப்படி கொண்டாடப்பட்டது என்பதும். அதன் முதல்நாளே நாளைய ஆடிப்பிறப்பு பற்றி சிறுவர்கள் கொள்ளும் சந்தோசத்தையும் மையமாக வைத்து நவாலியூர். சோமந்தரப்புலவர் என்ற யாழ்ப்பாணத்து சிறந்த புலவர் ஒருவர் பாடியுள்ள பாடலில் இருந்து தெரியவருகின்றது. இதிலிருந்து ஒரு காலத்தில் ஆடிப்பிறப்பிற்கு யாழ்ப்பாணத்தில் விடுமுறை விடப்பட்டுள்ள வரலாறும் புலப்படுகின்றது.
சரி அந்தப்பாடலை இந்த நாளில் மீட்டிப்பார்ப்பது சிறப்பாக இருக்கும்…


ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை 
ஆனந்த மானந்தம் தோழர்களே! 
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் 
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! 

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் 
பச்சை அரிசி இடித்துத் தௌ;ளி, 
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல 
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, 

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே 
வேலூரில் சக்கரையுங்கலந்து, 
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி 
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. 

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி 
வெல்லக் கலவையை உள்ளே இட்டு 
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே 
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! 

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி 
போட்டு மாவுண்டை பயறுமிட்டு 
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் 
மணக்க மணக வாயூறிடுமே 

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே 
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து 
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை 
ஆடிப் பாடிப்பும் படைப்போமே 

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே 
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு 
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க 
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே 

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல 
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் 
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக் 
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே 

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை 
ஆனந்த மானந்தந் தோழர்களே 
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் 
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! 


என அந்தப்பாடல் வரிகள் அமைந்துள்ளது. இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால் அடிப்பிறப்புக்கு கூழ் எப்படி ஆக்குவது என்ற ரெசிப்பியையும் புலவர் பாடலிலேயே தெரிவிததுள்ளதான்.
எனவே யாழ்ப்பாண மக்கள் ஆடிப்பிறப்புக்கு வழங்கியிருந்த முக்கித்துவம் இந்தப்பாடலில் இந்து புலனாகியிருக்கும்.
இன்று கடந்தகால மூன்று தசாப்த யுத்தத்தின் காரணமாக பல்வேறு நாடுகளுக்கும் கூடிழந்த குருவிகளாக சிதறிப்போய் வௌ;வேறு நாடுகளின் கூடுகளில்அடைக்கலம் புகுந்துள்ள புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் தாம் எங்கெல்லாம் இக்கின்றார்களோ அங்கும் தமது கலாசாரங்களை மறக்காமல் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தை பேணிவழர்ப்பதற்கு உலகத்தமிழினமே எழுந்து நின்று ஒரு சபாஸ் போடலாம்.நல்லது நண்பர்களே இன்றைய நாளுக்கு பொருத்தமான இந்த பதிவு உங்கள் அனைவருக்கும் இந்த நாளில் மகிழ்வான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தோசமே. 
நன்றி அன்புகளுடன்
ஜனா

Tuesday, 29 May 2012

நான் தான் விண்ணாணம் விநாசியப்பு வந்திருக்கேன்!

எல்லோருக்கும் வணக்கம், எல்லோரும் எப்படிச் சுவமாய் இருக்கிறீங்களே? சுகமில்லை என்று மட்டும் சொல்லிப் போடாதேங்கோ என்ன? சுவமில்லை, சுகமில்லை என்றால் அர்த்தம் ரெண்டு விதத்தில வந்திடும் பாருங்கோ. ஒன்று சுகவீனமாய் இருக்கிறதையும், உடல் நலக் குறைவால் அவதிப்படுவதையும் சுகமில்லை என்று என்ர குஞ்சியப்பு காலத்தில இருந்து ஈழத்தில சொல்லுவீனம் கண்டியளே. சுகமில்லை அல்லது சுவமில்லை என்றால் அர்த்தம் இன்னோர் மாதிரியும் வந்து கொள்ளும். ஊரில குழூக் குறியாக பொம்பிளையளின் மாதவிடாய் காலத்தையும் சுகமில்லை என்று தான் சொல்லுவீனம் பாருங்கோ. 
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், வாங்கோ பதிவுக்குள் போய் பந்திக்குள் உட்காருவோம். 

Tuesday, 1 May 2012

விற்போரும் வாங்குவோரும் : மருதனார்மடம் பொதுச்சந்தை


இணையத்தினூடே ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனைவருடனும் இணைந்து தொழிலாளர் தினத்தில் (மே தினம்) உழைக்கும் வர்க்கத்தின் கரங்களைப் பலப்படுத்துவோம். ஒவ்வொரு மனிதனுமே ஏதோ ஒரு வகையில் உழைப்பாளியாக இருக்க வேண்டும். அப்படியானால் தான் வீட்டுக்கும், நாட்டுக்கும் பயன். 
“அண்ணே! கிள்ளிப் பாக்க வேண்டிய அவசியம் இல்ல, பால் வெண்டிக்காய்.. பார்த்தாலே தெரியுது. யோசிக்காம வாங்குங்க…”
“வெய்யில் வெளிச்சத்தில வடிவா பாருங்க.. கீரைல எந்த மஞ்சலும் அடிக்கல..”
“தம்பி கத்தரிக்காய் கிலோ நூறு. இண்டைக்கு இதை விட மலிவா நீங்க இங்கை எங்கையும் வாங்க மாட்டீங்க. சூத்தை இல்லாத கத்தரிக்காய்..”


இது போன்ற பல குரல்கள் மருதனார்மடம் சந்தையின் பல திக்குகளிலும் இருந்து எழுந்து கொண்டிருந்தது. காலை நேர வியாபாரம் சூடுபிடித்திருந்தது. விற்போரும் வாங்குவோரும் மும்மரமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். 

அன்றாடச்சமையலுக்கு அருகில் உள்ள கடைகளிலேயே மரக்கறிகளை வாங்கிக் கொள்வோம். ஏதாவது கோயில் பொங்கல்கள் மற்றும் விசேடங்களுக்கு மட்டும் இப்படி சந்தை செல்வது எனது வழக்கம். இன்றும் ஒரு பொங்கல் இருந்ததால் சந்தைக்குச் சென்றேன். இன்று மே தினம் என்பதால் வழமையாக சாதாரணமாக பார்க்கும் விவசாயிகள், விற்பனையாளர்கள் எல்லாம் ‘உழைப்பாளர்களாக’ தெரிந்தார்கள். என்ன பண்ணுறது, ஆசிரியர் தினம் வந்தால் தானே படிப்பிக்கிற ஆசிரியர்களை பல மாணவர்களுக்கு தெரியுது..
நுழையும் போதே விவசாயி ஒருவர் “பசளை போட்டு தண்ணி விடுறது நாங்க, காசு பிடுங்கறது அவங்க..” என கவலையுடன் கூறிக்கொண்டு சென்றார். அதாவது உற்பத்தி செய்யும் மரக்கறிவகைளை சந்தை விற்பனையாளர்களுக்கு கொடுக்க வரும்போது இடையில் இருக்கும் தரகர்கள். வரி அறவிடுவோர், சந்தைவிலையைத் தீர்மானிப்போர் போன்றோர் தங்களுக்கு லாபம் வைப்பதால் உண்மையாக வியர்வை சிந்தி உழைத்து தங்கள் விளைச்சல்களை விற்க வரும் விவசாயிகளுக்கு பெரும்கவலை தான். 
சைக்கிள் பார்க்கில் சைக்கிளை நிறுத்திவிட்டு உட்சென்றேன். சந்தையில் எல்லா மரக்கறிகளும் கிடைக்கும். ஆனால் ஒரே வியாபாரியிடம் கிடைக்காது. எப்படியும் பெரிய தாள் (500 அல்லது 1000) ஒன்றுடன் தான் சந்தை செல்வது. காலையில் அதை மாற்றுவது கடினம். இதனால் சந்தையில் ஒரு ரவுண்டு வந்து ‘நான் வாங்க வேண்டிய மரக்கறிகளில் அதிகம் யாரிடம் உள்ளது’ என பார்த்துவிட்டு அங்கே தரித்துவிடுவேன். சில மரக்கறிகள் அவர் கடையை விட வேறு கடைகளில் மலிவாக இருந்தாலும் காசை மாற்ற வேண்டும் என்பதற்காக அங்கேயே வாங்குவது. 
சந்தைக்குப் போகும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ‘இராசவள்ளி’ கிழங்கை வாங்கத் தவற மாட்டேன். எனக்கு ‘இராசவள்ளி களி’ அவ்வளவு விருப்பம். இதை வாங்குவதற்குத் தான் மினைக்கட்டு சந்தை செல்வதாகவும் வைத்துக் கொள்ளலாம்.
ருதனார்மடம் சந்தை யாழ் - வலிகாமம் வலயத்தின் முக்கியமான கேந்திர நிலையம் ஒன்றில் அமைந்துள்ளது. இணுவில், உடுவில், கோண்டாவில் உள்ளிட்ட பல கிராம விவசாயிகளுக்கும் இது ஒரு விற்பனைக் கூடமாக திகழ்கின்றது. போதியளவு இடவசதி இருக்கின்றது. ஆனால் உரிய வகையில் விற்பனைக் கூடங்கள் இல்லை என்பது வியாபாரிகள், நுகர்வோர் ஆகியோரின் குறைபாடாக உள்ளதை அவதானிக்க முடிந்தது. ஏற்கனவே இச்சந்தையின் குத்தகைக்கு பிரதேச சபை அதிகளவான பணத்தை அறவிட்டும் சந்தையின் அபிவிருத்தி பற்றி சிந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. மழைகாலங்களில் வெள்ள நீர் தேங்குவதாகவும் குறிப்பிடுகிறார்கள். 

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கொழும்பின் நாரஹேன்பிட்ட – கிரிமண்டல மாவத்தையில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் போல் யாழ் - மருதனார்மடம் சந்தைப்பகுதியையும் அபிவிருத்தி செய்ய முடியும். இதற்கு அரசாங்க அபிவிருத்தி திட்டங்களின் கீழ் விரைவில் நடவடிக்கை எடுத்தால் இப்பகுதி விவசாயிகளும், நுகர்வோரும் பயனடைவார்கள். 

Wednesday, 11 April 2012

நான் வளர்த்த பச்சைகிளி

இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் இனிய வணக்கங்கள்.

தாயகத்திலும் இங்கு என்ரை வீட்டிலும் கிளிப்பிள்ளை பெத்தம்மா பச்சைக்கிளி என்று பல பெயர்களும் சொல்லி ஆசையாக கிளி வளர்த்தனான். அவற்றின் அழகில் மயங்கியிருந்த ஞாபகம் வந்தது. அதுதான் இந்தப்பதிவு.


கிளி அழகானது. கிளி பேசுவது இனிமை. இப்பொழுதும் நான் என்ரை வீட்டில் என்ரை வீட்டில் செல்லம்மா, மகள், மருமகள் என்று மூன்று அழகான பேசும் கிளிகளை ஆசை ஆசையாக வளர்க்கிறன் ஆனால் இப்ப நான் சொல்லவாறது இந்த கிளிகளைபற்றி இல்லை. எங்கட தாயகத்தில் வாழும் பச்சைக்கிளிகளைப்பற்றி.


பாவம் இந்த கிளிகள் இவற்றின் அழகும், இனிமையாக பேசும் திறமையுமே இவற்றிற்கு எதிரியாகிபோனது. தாயகத்தில் பலவீடுகளிலும் செல்லப்பிராணியாக கூண்டில் அடைக்கப்பட்டு விட்டன.கூறிய ஒரு விடயத்தையே திரும்பத்திரும்ப அதேபோல சொல்லிக்கொண்டு இருப்பவர்களை கிளிப்பிள்ளைபோல பேசுகிறான் என்றும், நீண்டு வளைந்த மூக்கு உடையவர்களை கிளிமூக்கன் என்றும் கூறுவது எங்கள் கிராமங்களில் வழமை.ஈழத்தில் சாதாரண பச்சைக்கிளி, கழுத்தில் மாலை கட்டியதுபோல சிவப்புநிறத்தில் ஒரு வட்டக்கோட்டுடன் காணப்படும் கிளி என இரண்டு வகை கிளிகள் மட்டுமே காணப்பட்டாலும் அமேசன் காடுகள் தென்னாபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா என உலகின் பல பாகங்களிலும்மாக 75 இற்கு மேற்பட்ட கிளி இனத்தை சேர்ந்த பறவைகள் வாழ்கின்றன.கிளிகள் மாம்பழம் நெற்கதிர், மிளகாய்ப்பழம், பயற்றங்காய் போன்றவற்றை விரும்பி உண்ணும்.ஊரிலுள்ள தோட்டங்களில் மிளகாய் செடி பயிரிடப்படும் காலங்களில்லும் மாம்பழம் காய்த்து பழுக்கும் காலங்களிலும் சிறு சிறு கூட்டம் கூட்டமாக வந்து மிளகாய் பழங்களையும் மாம்பழங்களையும் ஒரு வழிபண்ணிவிடும். இதனால் தோட்டக்காரர்களுக்கு இவற்றை பிடிக்காது.இவை பெரும்பாலும் தென்னை, பனை போன்ற மரங்களில் காணப்படும் பொந்துகளில் வாழும்.
கிராமங்களில் தாய்மார்கள்
பச்சை கிளியே வா வா வா
பாலும் சூறும் உண்ண வா
என்று பாடிக்கொண்டு தமது குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது வழமை.
எமது நாட்டு கிளிகள் இலங்கை முத்திரையிலும் இடம் பிடித்துக் கொண்டுவிட்டன.

இது ஜேர்மனியில் நாங்கள் கொஞ்சக்காலத்துக்குமுன் கொஞ்சிக் கொஞ்சி பாசமாக வளர்த்த கிளி. எனது தோளில் உட்கார்ந்து இருக்கும்போது எடுத்த படம். சென்ற வருடம் எமது வீட்டிற்கு புதிதாக வர்ணம் பூசும்போது வர்ணக்கலவையிலுள்ள இரசாயன பொருட்களின் மணத்தை சுவாசித்ததில் இந்த கிளி அநியாயமாக இறந்துவிட்டது இன்றும் மறக்கமுடியாத எங்கவீட்டின் சோகங்களில் ஒன்று.


இளையராஜாவை உச்சங்களிற்கு அழைத்து செல்ல அத்திவாரமிட்ட இந்த அன்னக்கிளி உன்னை தேடுதேயையும் மீண்டும் ஒரு தடவை கேட்டு ரசிப்போமே
மீண்டும் மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கும்வரை நேசமுடன் விடை பெறுவது,
அம்பலத்தார்

Wednesday, 4 April 2012

என்று தீரும் இந்த சாதி வெறி??

இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
நூற்றாண்டுகள் கடந்தாலும்
கழியாத
கலையாத
சாதிவெறி..

"சாதிகள் இல்லையடி பாப்பா"
சாதி வெறி பிடித்தோர்க்கு
கேட்புலன் இல்லையடி
அன்றிலிருந்தே!

மாற்றமென்னும் மருந்து
வேறெங்கும்
இல்லை
மனதில் வேண்டும்!!

மனதுள்ளோர்
மாறியிருப்பார்
மாற்றியிருப்பார் என்றோ!

சிலரைத்தவிர
முக்கால்வாசிப்பேர்
மடையர்களாக..கோர்ட் சூட் அணிந்த
கனவான் போர்வையில்
பலவான்கள்!!

மதிவண்ணன் வரிகளைப் போல்,
"எல்லாமும் சாத்தியம்
தானெனினும்
எதையும் செய்யப்போவதில்லை
நான்..
என்னை கீழாகவும் உன்னை
மேலாகவும் காட்ட..
எனக்கு பூட்டிய இழி முகத்தை
மட்டுமல்லாது
நீயநிந்துகொண்ட உயர்
முகத்தையும்
கிழித்துக்கொண்டிருப்பது தவிர!!"

சாதிகள் ஒழியட்டும்
சாதி வெறி அடங்கட்டும்
மனங்களே மனிதர்களே
நாளை உங்கள் கைகளில்!


மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
மைந்தன் சிவா.

Monday, 2 April 2012

ஈழமும்,கிராமப்புற வாழ்வும்!

நகர மயமாக்கல் என்பது கிராம புறங்களை சிறிது சிறிதாக ஆட்க்கொண்டு வந்தாலும், மறுபுறம் அக்கரைப் பச்சை என்பது போல நகர் புறத்தை நோக்கி சில பல காரணங்களால் கிராமங்கள் ஓட்டம் பிடித்தாலும், இந்த கிராமப்புற வாழ்க்கை என்பது சொர்க்கத்திலும் கிடைக்காத ஒன்று தான்; இதை கிராமப்புற வாழ்க்கையில் இருந்து நகர்ப்புறம் ஒன்றுக்கு இடம்பெயர்ந்த ஒருவனால் நன்றாகவே உணர்ந்து கொள்ளக்கூடியதாக  இருக்கும்.

காற்றையும் வழி மறித்து நிற்கும் வானுயர்ந்த கட்டடங்கள், எந்நேரமுமே எம்மை வெறுப்பேற்றும் வாகன இரைச்சல், துன்பம் ஒன்று வரும் போது உணரப்படும் தனிமை, விடுமுறைகளின் போது எம் உணர்வுகளை கூட பகிர்ந்து கொள்ள முடியா வண்ணம் இடை வெளி நிரப்பி நிற்கும் இலத்திரனியல் சாதனங்கள் என்று ஒரு வட்டத்துக்குள்ளே வாழ்க்கை சுழலுவது போல நகர் புற வாழ்க்கை எண்ணத் தோன்றும்.

பணம், வசதியான வீடு, சிறந்த வாழ்க்கை தரம் என்று நகர் புறங்களிலே என்ன தான் சௌகரியம் இருந்தாலும் கிராம புற வாழ்வில் தனி இன்பம் இருப்பதை மறுக்க முடியாது.

அவ்வளவு எளிதில் நோய் நொடிகளை அண்ட விடாத சுத்தமான காற்று, மிக சிறந்த ஓவியங்களை கண் முன்னே விரித்து நிற்கும் இயற்கை, சந்தோசங்களில் மட்டுமில்லாது நம் துயர்களிலும் பங்கு போடும் உறவுகளுக்கிடையிலான அன்னியோன்யம், நடை போட வயல் வெளி, நண்பர்களுடன் உறவாட நாற்சந்தி, வருடமொரு முறை ஊர் கூட ஒரு கோவில் என்று  கிராம புற வாழ்வு என்பது முற்றிலும் வித்தியாசமானது.
 
        
ஈழத்தை பொறுத்த வரை மிக பெரும்பான்மையான தமிழர்கள் கிராம புற வாழ்க்கையில் வாழ்பவர்கள் /வாழ்ந்தவர்கள் தான். அத்துடன் ஈழத்திலே தன்னிகரற்ற, பல்வேறு இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்ட கிராம புறங்கள் பரந்து விரிந்து காணப்படுகிறது.  இங்குள்ள கிராமப்புறங்கள் பெரிதும் விவசாயத்தை நம்பி உள்ளது.

நெற்பயிர்  செய்கையில் இருந்து மரக்கறி உற்பத்தி, தென்னை செய்கை, புகையிலை உற்பத்தி, பழவகை உற்பத்தி  என்று கிராமத்துக்கு கிராமம் மக்கள் விவசாயத்தை நேசித்தார்கள். அத்துடன் விவசாயத்துக்கான நீர் என்பது ஈழ மக்களுக்கு ஒரு கொடையாக கிடைத்த ஒன்று என்று சொல்லலாம். குளமாக இருந்தாலும் சரி கிணறாக இருந்தாலும்  சரி அவ்வளவு எளித்தில் வற்றி போகாதவை.

இவை போக ஈழ மக்களுக்கு பனை மரம் என்பது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்து வருகிறது. "கற்பகதரு" என்று அழைப்பதற்கேற்ப இதால் மக்கள் பெறும் நன்மைகள் மிக ஏராளம். படுப்பதற்கு பாயில் இருந்து சீனி தட்டுப்பாடான காலப்பகுதிகளில் தேநீர் குடிக்க கருப்பட்டியாக கூட மக்களுக்கு பயன்பட்டது. ஈழத்தை பொறுத்தவரை 'பனைமரம் ஈழ மக்களின் நண்பன்' என்று சொன்னாலும் மிகை இல்லை.

சிறிமாவின் காலத்தில் மூடிய பொருளாதார கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும், அதன் பின் நாட்டிலே  'கடுமையான காலப்பகுதி' நிலவிய போதும் கூட தன்னிறைவு பொருளாதாரத்தில் மக்கள்  தம் வாழ்க்கையை ஓட்டிச் சென்ற சிறப்பும் மேற்படி  கிராமப்புறங்களிடம் உண்டு. உதாரணமாக இயற்கையாகவே வீடுகளிலும் வயல் நிலங்களிலும் கிடைக்கும் முருங்கை இல்லை, முருங்கை காய், அகத்தி இலை, தூதுவளை இலை, குறிஞ்சா இலை  போன்றனவே எம் ஒருநாள் உணவுக்கான தேவையை போக்கக்கூடியனவாக இருந்தது.

இந்த விவசாயம், வயல்வெளி என்று சொல்லும் போது கண்முன்னே விரியும் காட்சிகள் என்றுமே பசுமையானவை. அன்று பாடசாலைக்கு செல்லும் இளைஞன் அதிகாலையில் எழுந்து வயல்வெளிக்கு சென்று விவசாய நடவடிக்கைகளில் தன் அப்பாவுக்கு ஒத்தாசை செய்த பின்னரே பள்ளி செல்வான். இது ஒருவிதத்தில் அந்த இளைஞனுக்கு தேக பயிற்சியாகவும் அமைந்துவிடுகிறது.
       
சிறு வயசில் பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர்கள் காலை காட்சி என்ற தலைப்பில் ஏதாவது சொல்லி தருவார்களே.. ஒரு கிராம புறத்தில் வாழ்பவனால் தான் இதை முழுமையாக உணர்ந்து அனுபவித்திருக்க முடியும்.

அதிகாலை வேளையில் எழுந்து தன் ஊரில் உள்ள வயல் வெளி பக்கம் செல்பவன் உணர்வுகள் எவ்வாறு இருக்கும்?


காலை பொழுது ஒன்றில்
வயல் வரப்பு ஊடான
ஒரு பயணம்,
மனதை இதமாக்கும்
இனம் புரியாத அமைதி,
புலர்ந்த பொழுது
மீண்டும் மலர்வதை கண்டு
கானமிசைத்த படி
வானத்தை வட்டமிடும்
பறவைகள் கூட்டம்,
பயிர்களை தழுவி வந்து
உடலை வருடும் மெல்லிய காற்று,
சூரிய கதிர்பட்டு
வானவில் நிறங்களை காட்டி நிற்கும்
புல் நுனி மேல் படர்ந்த
பனித்துளிகள்,
உழவன் கை பிடியில் கலப்பை, அதில்
பூட்டிய காளைகள் அசைந்து நடக்க
அதற்க்கேற்றா போல் தாளம் போடும்
கழுத்தில் கட்டிய சலங்கை ஓசை,
கிணற்றில் இருந்து
வரப்பு ஊடாக இறைக்கும் நீரில்
உரிமை எடுத்து
நீந்தி மகிழும் காக்கை கூட்டம்,
அருகிலுள்ள
ஆலய மணி ஓசையுடன் மந்திர ஒலியும்
காற்றில் தவழ்ந்து வந்து
காதுகளில் தஞ்சமாகும்...,
இத்தனையும் கண்டு உணர
என்ன தவம் செய்ய வேண்டும்...!


மீண்டும் மற்றுமோர் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, விடை பெற்றுக் கொள்வது,
அன்புடன்,
சி.பவன்.

Saturday, 31 March 2012

சொந்தமாக கூட வரும் அந்த மாதிரி வார்த்தைகள்!

உறவுகள் அனைவரையும் மற்றுமோர் பதிவின் வாயிலாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி!

பேச்சு மொழி வழக்கு என்பது ஒரு மனிதனை, அவனது கலாச்சார விழுமியம் சார்ந்த நிலையினூடாக ஏனைய மனிதர்களோடு வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது. இவ் வகையில் இலங்கைத் தமிழர்களுக்கே உரிய தனித்துவமான வட்டார மொழி வழக்கு எனும் வகையினுள் இடம் பெறும் ஒரு சில சொற்பதங்களைப் பற்றிய அலசல் தான் இப் பதிவு!

Thursday, 29 March 2012

எம் தாய் மொழி டமில் ..?

இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
எந்த ஒரு மனிதனும் தன் தாய் அரவணைப்பிலே இருக்க, வளரவே விரும்புவான்.ஆனால் இது தமிழர்கள் விடயத்தில் முரண்படுவது ஏன்!  இன்று அநேக தமிழர்கள் தன் "தாய்" மொழியை விடுத்து மாற்றான் மொழியை அரவணைக்கிறார்கள். அதையே அதிகமாக பேச விரும்புகிறார்கள்.அப்படி பேசுவதன் மூலம் தன்னை அருகில் இருப்பவர்களை விட சற்று உயர்த்தி காட்ட முற்படுகிறார்கள்!  

Wednesday, 28 March 2012

துகிலுரியப்பட்ட கட்டங்களும், வீதிகளும் கோரத்தின் எச்சங்களாய்..

இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
2010ஆம் ஆண்டு ஏ-9 நெடுஞ்சாலை மீண்டும் திறந்த சில மாதங்களின் பின்னர் வன்னியூடான எனது பயணத்தின் சில அனுபவங்கள் கவிதை வடிவில்,
கண்ணுக்கெட்டிய தூரம்
வரையில்
கால அரக்கனின்
நினைவுச் சின்னங்கள்..
துகிலுரியப்பட்ட
வீடுகள்
கட்டடங்கள் எச்சங்களாய்...!!
களி மண் சகதியால்
குளிப்பாட்டப்பட்ட வடலிகள்..!

Tuesday, 27 March 2012

பால் குடித்து பீதியை கிளப்பிய பிள்ளையார் - ஓர் அலசல்!

இணையத்தினூடாக, ஈழவயலோடு இணைந்திருக்க வரும் அத்தனை சொந்தங்களுக்கும் அன்பான வணக்கங்கள்.
1995 ம்  வருடம் என்று நினைக்கிறேன் அப்பொழுது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்திருந்த இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வெற்றி மேல் வெற்றிக் குவித்துக் கொண்டிருந்த ஒரு காலக்கட்டம். எனக்கு 13 வயதளவில் தான் இருக்கும். கிரிக்கெட் வெறி தலைக்கேறியிருந்த சமயம் யாரேனும் நான் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கையில் சனலை மாத்தினார்கள் என்றால் தொலைந்தார்கள். இப்படி இருக்கும் போதுதான் கிரிக்கெட் காய்ச்சலை இலகுவாய் புறந்தள்ளிய அந்த சம்பவம் நடைபெற்றது.

Monday, 26 March 2012

நாதம் அடங்கிய ‘வானொலிக்குயில்’ ராஜேஸ்வரி சண்முகம்!

இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அணைவருக்கும் அன்பு வணக்கங்கள்,
மண்ணில் மனிதர்களாக பிறக்கும் எல்லோரும் ‘மாணிக்கங்கள்’ ஆகிவிடுவதில்லை. மனிதரில் மாணிக்கமாக திகழ்ந்த ஒருவரைப் பற்றித்தான் இப்பதிவில் கதைக்கப் போகின்றேன்.

Saturday, 24 March 2012

ஹல் ஹல்லோ! உல் உங்களுக்கு, சொல் சொல்ல தெல் தெரியுமோ?

புல் புதிதா சில் சில பல் பாசை நல் நாங்கள் பல் படிப்போம்! வல் வாருங்கள்!
இணையத்தினூடாக, ஈழவயலோடு இணைந்திருக்க ஓடி வரும் அத்தனை சொந்தங்களுக்கும் அன்பான இனிய தமிழ் வணக்கங்கள்;

ஒவ்வோர் இனத்தினதும் அடையாளமாக மொழி இருக்கின்றது என்பதை யாராலும் மறுத்துரைக்க முடியாது.இராணுவங்களும், போராட்ட அமைப்புக்களும் தமது இரகசியங்களைப் பாதுகாப்பதற்காக,சங்கேத பாசைகளை நடை முறையில் வைத்திருக்கிறார்கள். ஈழத்தில் பலருக்கும் அறிமுகமான ஓர் பாசையினை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் இணையில்லா மகிழ்ச்சியடைகின்றேன். 

Wednesday, 21 March 2012

மெல்லத் தமிழ் இனி (அச்)சாகும்!

இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முதலில் வெளிவந்தது "தொல்காப்பியம் எனும் தமிழ் நூல்" . தமிழ் மொழியின் சான்றினை நிரூபிப்பதற்கு தமிழர்களின் கையில் கிடைத்துள்ள நூல் அதுவே.இது ஒரு இலக்கண நூல் என்பதனால் இதற்கு முன்னரே பல தமிழ் இலக்கிய நூல்கள் வெளிவந்திருக்கலாம் என எண்ணத்தோன்றுவதிலும் எந்தவித பிழையோ அல்லது மெருகூட்டலோ இருந்துவிடுவதற்கு இடமில்லை. இதனால்த்தான் தமிழின் தொன்மை பற்றி எழுதவிளைந்த தமிழர்கள் "மனித இனம் வேட்டையாடித்திரிந்த கற்கால நாகரிகம், மற்றும் அவர்கள் ஆற்றுவெளியினை அடைந்து நிலத்தை அடிப்படையாகக்கொண்டு வாழ முனைந்த (மந்தை மேய்த்தல், விவசாயம்) காலங்களுக்கு முற்பட்ட தொன்மையினை குறிப்பதற்காக "கல்தோன்றா, மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்" என கூறிக்கொண்டனர்.

Sunday, 18 March 2012

செத்தவீட்டில் சந்தோசப்படலாமா?

இணையத்தினூடே ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் மீண்டும் இந்தக் குந்தவையின் அன்பு வணக்கங்கள்!

Saturday, 17 March 2012

அட்ராசக்கை - அடிசக்கை - அம்மன் கோயில் புக்கை - ஐயோ வெக்கை!

உலகின் பழமையான மொழிகளுக்குள்ளே தமிழ் மொழியும் ஒன்றாக இருப்பது அனைவரும் அறிந்த விடயம். எம் தாய் மொழியில் எழுதுகின்ற அளவிற்கு,பேசுகின்ற அளவிற்கு அதேயளவு புலமைச் செழிப்போடு பிற மொழிகளில் எழுத முடியாது என்பது யதார்த்தம். இதற்கான காரணம் தமிழ் எமக்குத் தாய் மொழியாக இருப்பதாகும்.  இத் தமிழானது பேச்சு வழக்கு, உச்சரிப்பு அடிப்படையில் பல்வேறு பிரதேசங்களுக்கு ஏற்றாற் போல வெவ்வேறு உச்சரிப்பு அல்லது ஒலிக் குறிப்புக்களைப் பெற்றுக் கொள்ளும். அந்த வகையில் எமது தமிழின் கிராமத்துப் பேச்சு வழக்கு சொற்கள் பலவற்றிற்குச் சரியான விளக்கமிருக்காது. ஆனால் அந்தச் சொற்களைச் சரியான நேரத்தில், சரியான இடத்தில் இடம், பொருள் ஏவல் பார்த்து உச்சரிப்போம். அத்தகைய ஓர் சொல் வகைக்குள் அடங்குவது தான் இந்த ‘அடி சக்கை! அம்மன் கோவில் புக்கை! எனும் வாக்கியமாகும்.

Thursday, 15 March 2012

தமிழ்(?) படிக்கலாம்!

இணையத்தினூடே ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வணக்கங்கள்!
தாய்மொழி தவிர்ந்த பிற மொழிகள் தெரியாமல் சில இடங்களில் படுகின்ற அவஸ்தை இருக்கே… அப்பப்பா! அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இன்னொருவர் பேசுவதை விளங்கிக் கொள்ளாமல் திருட்டு முழியுடன் திரு திருவென ’சோளக்காட்டு’ பொம்மை மாதிரி தலையாட்டி அசடு வழியும் போது எங்களை நினைக்கவே எங்களுக்கு வெறுப்பாக இருக்கும். தென்னிலங்கையில் (குறிப்பாக கொழும்பு) சிங்களம் தெரியாமல்  படுகின்ற அவஸ்தையும், ஆங்கிலம் தெரிஞ்சிருந்தும் வெளிநாடுகளில் பல்வேறு நாட்டவர்கள் பேசும் ஆங்கிலம் புரியாமல் மூளையைக் கசக்குவதும் செம காமடியாக இருக்கும்.

Tuesday, 6 March 2012

அறிவிப்பின் சிகரங்கள் (இருவர்….)


தமிழ் மொழியில் ஒலி ஊடகத்தின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, நிகழ்ச்சிகள் வழங்குவதிலும், நிகழ்ச்சிகளின் தரத்திலும், குறிப்பாக தென்னிந்திய திரைப்படப்பாடல்கள், திரைப்படங்களுக்கு முதன்முதலில் ஒரு முகவரியினை தந்த ஊடகமாக இலங்கை வானொலியினையே கூறிக்கொள்ளவேண்டும்.


இன்றைய தமிழ் ஒலி, மற்றும் ஒளி ஒலி ஊடகங்களில் இடம்பெறும் சகல நிகழ்ச்சிகளையும் எடுத்துக்கொண்டால் அவற்றின் அத்திவாரமாக இலங்கை வானொலியின் அன்றைய நிகழ்ச்சிகளே உள்ளன என்றே முடிவாகக்கூறிக்கொள்ளலாம். இதை எவரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.இலங்கை என்ற வட்டத்தினை உடைத்து தென்னிந்தியாவிலேயே அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்றுகூடவைத்தவர்கள் இலங்கை வானொலியின் தயாரிப்பாளர்கள், மற்றும் அறிவிப்பாளர்களே. தமிழ்நாட்டில் 35 வயதினை தற்போது கடந்தவர்கள் எவரை கேட்டாலும் இலங்கை வானொலியினூடான தமது அனுபவங்களை மிக ஆர்வமாக பேசுகின்றார்கள். இலங்கை நேயர்களைவிட பல அரிய நிகழ்ச்சிகள், நாடகங்கள், தாளலயங்களை ஒலிப்பதிவு செய்து இன்றும் பொக்கிசங்களாக பாதுகாத்துவருகின்றனர்.

Monday, 27 February 2012

ஊர்ப்பெயர்களின் பின்னால் உள்ள சுவாரசியங்கள்

இணையத்தினூடே ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் மீண்டும் ஒருமுறை இந்தக் குந்தவையின் வணக்கங்கள்.

நான் ஈழவயலுக்காக எழுதிய இரண்டு பதிவுகள் ‘சமையல் பதிவுகள்’ ஆகிவிட்டன. இந்தமுறை எப்படியாவது அதனைத் தவிர்க்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். நிறைவேற்றியும் விட்டேன். இனி குந்தவையை எவரும் ‘சமையல்காரி’ என அழைக்க மாட்டார்கள்.

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பெயர் உண்டு. இந்தப் பெயர்களைப் பலரும் பல விதமாக வைத்துக் கொள்வார்கள். வெளிநாடுகளில் எல்லாம் குழந்தை பிறந்த மறுகணமே பெயர் வைப்பார்கள். அங்குள்ள எம்மவர்கள் கூட குழந்தை பிறந்த அந்நாளிலேயே பெயர் வைத்துவிடுவார்கள். ஆனால் எங்கள் ஊர்களில் அப்படியல்ல. குழந்தை பிறந்து ஐந்து முதல் 15 நாட்கள் வரையில் பெயர் வைப்பதற்காக எடுத்துக் கொள்வார்கள்.

Sunday, 12 February 2012

நம்மவூரு கிளித்தட்டு / தாச்சிப்போட்டி / யாடு

இணையவெளியூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

கிரிக்கட், கால்பந்து போல யாவருக்கும் பொதுவான விளையாட்டுக்கள் அல்லாமல் தமிழர்கள் மட்டுமே விளையாடும் பல விறுவிறுப்பான விளையாட்டுக்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் விளையாடும் பல பாரம்பரிய விளையாட்டுக்கள் இருக்கின்றன. அவையனைத்தையும் ஆராய்ந்து பார்த்தோமானால் நிச்சயம் அவை எமது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்வைத் தருபவையாகத்தான் இருக்கும்.

Friday, 3 February 2012

சுதந்திரம் ... கம்பிகளுக்குப் பின்னால்


காவல் இல்லாத தோட்டங்களை
சுதந்திரமாக மேய்கின்றன
கட்டாக்காலிகள்

கொண்டாட்டமும், களிப்புமாய்
அவைகள்
காணிக்காரனின் சுதந்திரமோ
கம்பிகளுக்குப் பின்னால்

கிழக்குச் சமவெளிகள்
திகட்டிவிட்டதால்
வடக்கில் வாய் நீள்கிறது

கடைவாயூறும்
கட்டாக்காலிகளைக்
கட்டி வைக்கவோ
கல்லால் அடிக்கவோ விடாமல்
காவல் காக்கிறது இறையான்மை

ஊரான் தோட்டத்தில்
மேயும் கட்டாக்காலிகள்
காணிப் பகிர்வையும்
காவல்காரனையும்
விரும்புவதில்லை

தெற்கிலும்
தென்கிழக்கிலும்
கட்டாக்காலிகள்
கால் வைப்பதில்லை

வாலை நீட்டினால் கூட
வேட்டையாடி விடுகின்றன
சிங்கங்கள்
                 
                          ஆக்கம்: -- மன்னார் அமுதன்

Saturday, 28 January 2012

வாங்கைய்யா வாழைக்குலை பழுக்கப் போடுவம்!

இணையத்தினூடே இவ் இடம் வந்து ஈழவயலில் இளைப்பாற வந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள், 
செயற்கையான இராசயனப் பசளைகள் மூலம் உருவாக்கப்படும் காய் கறி வகைகளை விட; இயற்கைப் பசளை மூலம் உருவாக்கப்படும் காய் கறிகள் தான் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது நீண்ட காலம் வாழுகின்ற ஆயுளைக் கொடுக்கும் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் வெளிப்பாடு. இதனை நன்கு உணர்ந்த எம் முன்னோர்கள் தம் வீட்டில் சின்னதாக ஒரு வீட்டுத் தோட்டம் வைத்து,தமக்கு வேண்டிய காய் கறிகளை பெற்றுக் கொண்டார்கள். சந்தைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் வியாபார நோக்கில் இராசயனப் பதார்த்தங்களின் மூலம் பயிரிடப்பட்டவையாக இருக்கும். 

Thursday, 26 January 2012

பால் ரொட்டியும், பாட்டி தந்த அடியும்!

இணையத்தினூடே ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் எல்லோருக்கும் அன்பு வணக்கம்! மீண்டும் மற்றுமொரு பதிவினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

”சமையல் பதிவுகளை எழுதுவதில் விரும்பமே இல்லை” என முதல் பதிவில் பீற்றியவள் மீண்டும் ஒரு சமையல் பதிவு எழுதுகிறாளே என நீங்கள் நினைக்கக்கூடும். ”அப்பப்ப தொட்டுக்க ஊறுகாய் போல..” எமது ஈழத்தின் வாழ்வியலோடு கலந்து விட்ட சில உணவுப் பண்டங்கள் பற்றிய விடயங்களை ஈழவயலுக்காக பகிர்ந்து கொள்ளுங்கள் என சில சொந்தங்கள் கேட்டதால் இதனை எழுதுகின்றேன். சமையலையும் தாண்டி இந்தப் பதிவில் தமிழர்களின் விசேட தினங்களில் பண்ணப்படும் (செய்யப்படும்) முக்கியமான ஒரு பலகார வகை பற்றி குறிப்பிடப் போகின்றேன். இது அவ்வளவு ருசியானதொரு பண்டமல்ல. ஆனால் கட்டாயம் இருக்க வேண்டிய பண்டம்.

Tuesday, 24 January 2012

விளையாடும் போது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்த ஒருவர்!

பல வருடங்களுக்கு முன்பு வன்னியில் ஆணைவிழுந்தான் என்னும் ஊரில் ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் சிலர் மாலை வேளையில் பாடசாலை மைதானத்தில் பூப்பந்தாட்டம்(பட்மிட்டன்) விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பூப்பந்தாட்டம் விளையாடுவதற்குரிய மட்டை(ரக்கெட்) கூட அவர்களிடம் இல்லை. பனை மட்டையை மெல்லியதாக சீவி எடுத்து அதை பூப்பந்தாட்டத்துக்குரிய மட்டையாக பயன் படுத்தி பூப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தனர் அந்த மாணவர்கள். அந்த விளையாட்டு மைதானத்தில் மறு புறம் இளைஞர்கள் சிலர் கால்பந்தாட்டம் ஆடிக் கொண்டு இருந்தனர். இன்னும் ஒரு புறம் சிலர் கைப்பந்தாட்டம்(வாலி போல்)ஆடிக் கொண்டு இருந்தனர். மாலை வேளையில் களைகட்டி இருந்தது அந்த மைதானம்.

Thursday, 19 January 2012

பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகமும், கட்டுடல் மேனிகளும்!

இணையத்தில் ஈழத்து நினைவுகளைச் சுமந்து வரும் ஈழவயலைப் படிக்க வந்திருக்கும் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்;
ஈழவயலில் எனது முதற்பதிவு இது.
ஏற்கெனவே "வரோ" அவர்கள் எழுதிய கோயில்த்திருவிழாக்களும் சைட் அடிக்கப்படும் பெண்டுகளும் என்ற பதிவின் அடுத்த பாகமாகக் கூட நீங்கள் இந்தப் பதிவைப் பார்க்கலாம். கலாச்சார காவலர்கள் யாராச்சும் அவசரக்குடுக்கை தனமாக பதிவினை முழுமையாகப் படிக்காது, போர்க் கொடி தூக்குவதனை விடுத்து, கொஞ்சம் நிதானமாக இப் பதிவில் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதனை ஆராய்ந்து பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா? திருவிழாக்களில் இளையோர் பட்டாளத்தின் திருவிளையாடல்களைப் பற்றிய பல விடயங்களை வரோ அவர்கள் தனது பதிவில் பொதுவாக கூறியிருந்தார். இப் பதிவினூடாக சில அனுபவப் பகிர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து களமிறங்குகிறேன்.

Wednesday, 18 January 2012

ஈழத்தின் மிக அ(பெ)ரிய வளம் - இரணைமடுக் குளம்!

ஈழ வயலினூடே இப் பதிவினைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்;
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளம் இரணைமடுக் குளம் பல வரலாற்று சிறப்பு மிக்க இந்தக் குளம் ஈழத்தின் புகழ் பூத்த குளங்களில் ஒன்று.
ஊரில் இருக்கும் போது இரணைமடுக் குளம் வான் பாயுது என்றால் ஏதோ திருவிழாக்களுக்கு போவது போல போய் பார்ப்போம். அவ்வளவு அழகாக இருக்கும். இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டால். வன்னியில் யுத்தம் ஏற்பட்ட காலத்திலும் சரி தற்போது யுத்தம் முற்றாக ஓய்ந்து அமைதி திரும்பியுள்ள போதும் சரி கிளிசொச்சிக்கு வருகின்றவர்கள் ஒரு முறை சென்று பார்க்கும் இடம் இரணைமடுக் குளம்.

Sunday, 15 January 2012

கரடியோட சண்டைபோட்ட அப்பு - அதிர்ச்சியூட்டும் அந்த நாள் அனுபவம்!


எனது ஆச்சியிடம் கதை கேட்பதற்கு அந்தக் காலத்தில் எனக்கு அலாதி பிரியம். எந்த ஒருவிடயத்தை விளக்கவும் அவரிடம் எதாவது ஒரு கதை இருக்கும். சமைக்கும்போது வீட்டுவேலைகள் செய்யும்போது தோட்டவேலைகள் செய்யும்போது என எப்பொழுதும் யாரவது ஒருவருக்கு ஏதாவது ஒரு கதை சொல்லிக்கொண்டே இருப்பார்.


ஆச்சிக்கு எப்படி இவ்வளவு கதைகள் தெரியுமென சிறு வயதில் நானும், நண்பர்களும், சித்தி பையனும், மச்சாளும் பலதடவைகள் வியந்திருப்போம்.

Friday, 13 January 2012

தைப்பொங்கல் - சிறுவர் பாடல்


தைமகளே வருக
தரணி பொங்கத் தருக-இன்பம்
தரணி பொங்கத் தருக
செந்நெல்லின் தோகைகள் போல்
செழுமை வாழ்வில் பெருக

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
காணியிலே வைத்த பயிர்
காளையாக நிமிர - பொலிக்
காளையாக நிமிர
காடு கரை வீடு எல்லாம்
கதிரவனால் ஒளிர

கரையுடைத்து ஓடும் வெள்ளம்
அணைகளிலே மூழ்க - பெரு
அணைகளிலே மூழ்க
கவலைகளை மறந்து மக்கள்
களிப்பினிலே மூழ்க

வரப்புயர நெல்லுயரும்
வட்டிக் கடன் குறையும்
வட்டிக் கடன் குறையும்
வாழ வந்த பெண்களுக்கு
தங்கம் கழுத்தில் நிறையும்

கரும்பின் அடி இனிப்பு போல
காதல் வாழ்வில் மகிழ -மக்கள்
காதல் வாழ்வில் மகிழ
பசி பிணி பட்டினிகள்
சாதல் கண்டு மகிழ

பொங்க வேண்டும் இன்பமெலாம்
பசுவைக் கண்ட கன்றாய் - தாய்ப்
பசுவைக் கண்ட கன்றாய்
மங்க வேண்டும் துன்பமெல்லாம்
மாரி கண்ட கன்றாய்

தைமகளே வருக
தரணி பொங்கத் தருக-இன்பம்
தரணி பொங்கத் தருக
செந்நெல்லின் தோகைகள் போல்
செழுமை வாழ்வில் பெருக

----
மீண்டும் மற்றுமோர் பதிவினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை அன்பு வணக்கம் கூறி, விடை பெற்றுக் கொள்வது;
மன்னார் அமுதன்
நன்றி,
வணக்கம்.
அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

Thursday, 12 January 2012

அன்றும் இன்றும் என்றும் - பொங்கல்

ஈழவயலோடு இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்;
வசந்தம் தொலைக்காட்சியில் 2012-01-15 ஆம் திகதி ஒளிபரப்பப்பட உள்ள பொங்கல் சிறப்புக் கவியரங்கம் - கவிபாடுவோர் தமிழ்மணி அகளங்கன்(தலைமை), வதிரி சி.ரவீந்திரன், கிண்ணியா அமீர் அலி, மன்னார் அமுதன்
---

கண்ணிரண்டும் காதிரண்டும் கொண்டவனாயல்லாமல்
பண்ணிரண்டு படைக்கும் ஆற்றலோடு எனை வகுத்த
கண்ணாலோ காதாலோ கண்டறியா கர்த்தாவே
என் நாவில் வந்தமர் வாய். 

ஆன்ற பெருங்கவிஞர் அகளங்கன் தலைமையிலே
தோன்ற நான்செய்த பெரியதவம் யாதறியேன்
கூனோடும் குறையோடும் பிறக்குமென் கவிதையிலே
குறைகண்டால் பொறுத்தருள்வீர்

Sunday, 8 January 2012

ஆமத்துறூ வெட்டும் அந்த நாள் நினைவுகளும்!

வாழும் காலத்தில் வண்ணத் தமிழ் மொழியால் இணையத்தில் வலம் வரும் ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் குழை போடும் காட்டானின் இனிய வணக்கம்;
நேற்று குடும்பத்தோட லாச்சப்பலுக்கு போனேன்.நாங்கள் அங்கு போகும்போது கன வேலைகளை ஒரே நேரத்தில செய்திடுவம். மனிசி சிலோன் மரக்கறிகள் வாங்க ஒரு பக்கம் கிளம்பினால், நானும் பிள்ளைகளும் ஊருக்கு காசனுப்பிட்டு அப்பிடியே மூணு பேரும் முடி வெட்ட கிளம்பிடுவம் . ஏனோ தெரியல! ஊரில ஒரே கடையில மயிர் வெட்டியது போல இங்கேயும் நான் அப்படிதான். கல்யாணம் கட்ட போகேக்க கூட நான் வழமையா போகும்   அந்த கடைக்குத்தான் போய் என் மொட்டைய மறைக்கிற மாதிரி முடி வெட்ட சென்றிருக்கேன். 

Wednesday, 4 January 2012

ஈழ தேசத்தில் கான ஸ்வரமிசைத்த நாதஸ்வர வித்துவான்!

ஈழ வயலோடு இணைந்திருக்கும் அன்புச் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்,
அரிவரி தொடங்கி, கைதேய மண் மீது அகரம் எழுதத் தொடங்கிய காலங்களிற்கு முன்பாகவே இசை என்னும் நாத வெள்ளம் மனதிற்குள் புகுந்து விடுகின்றது. கருவினில் இருக்கும்போதே இசையை இரசிக்கும் பண்பு வந்துவிடுவதாக விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். நேர்தியான கருத்துக்கள் இசையுடன் கரைந்து வரும் போது, என் இயல்புகள் அத்தனையையும் தொலைத்து விட்டு, காதின் கீழ் உள்ள பகுதியில் இருந்து மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகம் பாய சிலிர்துப் போய் கண்ணீர் சொரிந்து அந்த இசையுடன் இலயித்த சம்பவங்கள் பல உள்ளன.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!