Saturday 17 March 2012

அட்ராசக்கை - அடிசக்கை - அம்மன் கோயில் புக்கை - ஐயோ வெக்கை!

உலகின் பழமையான மொழிகளுக்குள்ளே தமிழ் மொழியும் ஒன்றாக இருப்பது அனைவரும் அறிந்த விடயம். எம் தாய் மொழியில் எழுதுகின்ற அளவிற்கு,பேசுகின்ற அளவிற்கு அதேயளவு புலமைச் செழிப்போடு பிற மொழிகளில் எழுத முடியாது என்பது யதார்த்தம். இதற்கான காரணம் தமிழ் எமக்குத் தாய் மொழியாக இருப்பதாகும்.  இத் தமிழானது பேச்சு வழக்கு, உச்சரிப்பு அடிப்படையில் பல்வேறு பிரதேசங்களுக்கு ஏற்றாற் போல வெவ்வேறு உச்சரிப்பு அல்லது ஒலிக் குறிப்புக்களைப் பெற்றுக் கொள்ளும். அந்த வகையில் எமது தமிழின் கிராமத்துப் பேச்சு வழக்கு சொற்கள் பலவற்றிற்குச் சரியான விளக்கமிருக்காது. ஆனால் அந்தச் சொற்களைச் சரியான நேரத்தில், சரியான இடத்தில் இடம், பொருள் ஏவல் பார்த்து உச்சரிப்போம். அத்தகைய ஓர் சொல் வகைக்குள் அடங்குவது தான் இந்த ‘அடி சக்கை! அம்மன் கோவில் புக்கை! எனும் வாக்கியமாகும்.
தமிழகத் திரைப்படங்களில் ஒரு நிகழ்வினைக் கண்ணுற்று வியப்படையும் போதோ அல்லது ஆச்சரியப்படும் போதோ ‘அடி ஆத்தி! எனப் பெண்கள் ஒரு கையினை மறு கையில் தட்டி, உள்ளங்கையானது நாடியில் பொருந்தும் வண்ணம் வைத்துக் கொள்வார்கள். உதாரணமாக இது வரை அறிந்திராத ஒரு புதிய சங்கதியினை அறிந்து கொள்ளும் வேளையில் ‘அடி ஆத்தி! இம்புட்டுப் பெரிய விசயமா? எனக் கேட்பார்கள்.

’அட்ராசக்க’/ அட்ராசக்கை” எனும் தொனியில், ஒரு சில ஆச்சரியப்படும், விநோத நிகழ்வுகளைப் பார்த்துச் சந்தோசப்படுகையில் தமிழக உறவுகள் பேசிக் கொள்வதனையும் நாம் திரைப்படங்களில் பார்த்துள்ளோம். இச் சொற்கள் இரண்டிற்கும் நிகரான ஒரு செயலைத் தரக் கூடிய சொல்லாகத் தான் எமது ஈழத்தில் ‘அடி சக்கை! அம்மன் கோவில் புக்கை! எனும் பதத்தினைப் பயன்படுத்துவார்கள். ஆச்சரியப்படக் கூடிய, அல்லது விநோதமான நிகழ்வுகளைக் கண்டு மகிழ்கையில் அல்லது கேட்க நேரிடும் பொழுதுகளில் இச் சொற்றொடரினைப் பயன்படுத்தி மகிழ்வார்கள். ஆனால் இச் சொல்லுக்கான பொருள் தான் என்னவென்று தெரியவில்லை. 

அடி எனப்படுவது- ஒன்றினது அடிப் பாகம் (Base) அல்லது ஒரு எட்டு அல்லது ஒரு அடி வைத்தல் (Step) எனப் பொருள் புலப்படும் வகையில் தமிழில் வந்து கொள்ளும். சக்கை எனும் சொல் ஒன்றினது சாறு, அல்லது ஒரு பொருளினை அரைக்கும் போது கிடைக்கும் இறுதி கழிவு(Waste) வெளியீட்டினைக் குறிக்கப் பயன்படும். அம்மன் கோயிலுக்கு இங்கே விளக்கம் சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்.
புக்கை எனப்படுவது ஈழத்தில் சர்க்கரை போட்டுப் பொங்கப்படும் பொங்கலைக் குறிக்கும் பாரம்பரியச் சொல்லாகும். ஈழத்தில் பொங்கலினைப் புக்கை என்றே கூறுவார்கள். எடுத்துக் காட்டாக சர்கரைப் புக்கை, பச்சையரிசிப் புக்கை, கோழிப் புக்கை என நாம் அழைத்து மகிழ்வோம். (கோழியினைக் கறியாக்கிச் சமைக்கப்படும் புக்கை- இது எப்படிச் செய்வதென்பதை ரெசிப்பியாக பிறிதோர் பதிவில் சமையல் குறிப்பின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிறேன்) இப் புக்கை எனும் சொல்லினை பெரும்பாலானவர்கள் பேச்சுத் தமிழில் தான் புக்கை என்று சொல்லுவார்கள். வானொலித் தமிழிலோ அல்லது உரை நடைத் தமிழிலோ புக்கை என்பது பொங்கல் என்று வந்து கொள்ளும். வெக்கை எனப்படுவது வெப்பத்தைச் சுட்டப் பயன்படுத்தப்படும் பேச்சு வழக்கு சொல்லாகும்.

பேச்சுத் தமிழில்; புக்கையினைக் காய்ச்சுவதென்று சொல்லுவோம். இதுவே உரை நடைத் தமிழாக வருகையில் பொங்கலினைப் பொங்குவதாக அல்லது பொங்கி மகிழ்வதாக குறிப்பிடுவோம். 

இவ்வளவு குறிப்புக்களை வைத்துப் பார்க்கையிலும், ‘அடி சக்கை! அம்மன் கோவில் புக்கை! என்பதற்குரிய பொருள் விளக்கம்; என் அறிவிற்கு எட்டிய வரை  சரியாகத் தெரியவில்லை. அல்லது இது வரை யாராலும் சரியாகக் கண்டறியப்படவில்லை என்றே கூறலாம். இச் சொற்றொடரினை நாம் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களும், சூழ் நிலைகளும் தெரிகிறது. எப்போது பயன்படுத்துகிறோம் என்பதுவும் புரிகிறது.ஏன் பயன்படுத்துகிறோம் என்பதும் விளங்குகிறது. அப்படியாயின் இதற்குரிய பொருள் விளக்கம் என்ன? யாராவது தெரிந்தால் கூறுங்களேன்! 

பிற்சேர்க்கை: இலங்கையில் தமிழில் புக்கை என்றால் பொங்கல் என வந்து கொள்ளும். சிங்களத்தில் புக்கை என்றால் மனித உடலுறுப்பின் பிட்டப் பக்கம் அல்லது பின் பக்கத்தைக் குறிக்கும் பாணியில் இச் சொல் பொருளினைத் தரும்.
நான் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் கட்டுகஸ்தோட்டை வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது, ஒரு சிங்களப் பெண்ணைப் பார்த்து எமது நண்பன் ஜொள்ளு விட்டுக் கொண்டு வந்தான் அல்லது அசடு வழிந்து கொண்டு வந்தான்.
அவன் எம்மோடு வந்து கொண்டிருந்த குழப்படிகார(Naughty) குசும்புக் குணம் கொண்ட நண்பன் ஒருவனிடம் பின் வருமாறு கேட்டான்.
‘இவள் வடிவா இருக்கிறாள் என்பதைச் சிங்களத்தில் சொல்ல வேண்டும். அதற்கு ஏதாச்சும் வசனம் சிங்களத்தில் சொல்லித் தாடா மச்சான் என்று.
உடனே அவன் சொன்னான் ‘அவளுக்கு கிட்டப் போய் ’சுது புக்கை’ என்று சொல்லு மச்சான் என்று.
இவனும் ஆர்வக் கோளாறிலை என்ன ஏது என்று அறியாது அவளுக்கு கிட்டப் போய்ச் சொல்லியிருக்கிறான். சுது புக்கை என்று...
பிறகென்ன ஆள் போலிஸ் ஸ்டேசனுக்குப் போய் முட்டி போட்ட கதை தான் நடந்திச்சு....

சுது என்றால் சிங்களத்தில் வெள்ளை நிறத்தைக் குறிக்குமாம். அப்போ புக்கை என்றால்......
ஐயோ வேணாம் சாமி, ஆளை விடுங்கோ!

மீண்டும் மற்றுமோர் பதிவினூடாக, ஈழவயலின் வழியே உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, தற்காலிகமாக உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்கிறேன்,
ஈழவயலுக்காக,
நேசமுடன்,
செல்வராஜா நிரூபன். 

4 comments:

ஹேமா said... Best Blogger Tips

நகைச்சுவையாய் இருந்தது நிரூ.எனக்கும் இப்படியான அனுபவம் இருக்கு.நான் இப்போதும் பொங்கல் என்று மட்டும்தான் சொல்வேன்.சிங்களப் பிரதேங்களில் வாழ்ந்ததால் புக்கை சொல்லப் பிடிப்பதில்லை.சகோதர மொழிச் சொற்களில் இப்படியான வில்லங்கங்கள் நிறைய இருக்கு !

KANA VARO said... Best Blogger Tips

யாழ்ப்பாணத்தில் சோதனை சாவடிகளில் அடிக்கடி ராணுவம் மறித்து சோதனையிடும் காலத்தில் கோவிலில் இருந்து புக்கை கொண்டு வரும் போது அவன் அது என்ன என் வினாவுவான், அவசரத்தில் 'புக்கை' எண்டு சொல்லிவிடுவோம். அவனும் நிறைய பேரிடம் கேட்டு கேட்டு பழகிவிட்டான் போலும், சிரித்துக்கொண்டே வாங்கி சாப்பிடுவான்.

அம்பலத்தார் said... Best Blogger Tips

நிரூ, சுவாரசியமான விடயம் சொல்லியிருக்கிறியள். நிரூ யாராவது ஜேர்மன்காரியை சைட் அடிக்கிற ஐடியா இருந்தால் கவனம் ஆசை ஆசையாக அவளுக்கு எதாவது பரிசுப்பொருள் கொடுக்கும்போது gift கொண்டுவந்திருக்கிறன் என்று சொல்லிப்போடாதையுங்கோ அவ்வளவுதான் கதை கந்தல். ஜேர்மன் மொழியில் gift என்றால் நஞ்சு என்று பொருள்படும்.

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் செல்வராஜா நிரூபன் அவர்களே!அடிடா சக்கை,அம்மன் கோயில் புக்கை என்றால்,கருத்து மிகவும் சுலபமானது!அதாவது,அடிடா சக்கை என்றால் நீங்கள் நினைப்பது போல் கரும்பைப் பிழிந்து சாறு எடுத்த பின் மீந்தும் "சக்கை" தான்!மிகவும் சிரமப்பட்டே கரும்பை சாறு பிழிவார்கள் இல்லையா?அடுத்து,அம்மன் கோவில் புக்கை;பொதுவாகவே கோவில்களில் செய்யப்படும்/பொங்கப்படும் புக்கை வீட்டில் செய்வதை விட ருசி அதிகமாக இருக்கும்,இல்லையா?விளக்கம் என்னவென்றால்,கஷ்டப்பட்டாலும்,அருமை என்பது அந்த வார்த்தையின் பொருள்!

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!