Thursday, 15 March 2012

தமிழ்(?) படிக்கலாம்!

இணையத்தினூடே ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வணக்கங்கள்!
தாய்மொழி தவிர்ந்த பிற மொழிகள் தெரியாமல் சில இடங்களில் படுகின்ற அவஸ்தை இருக்கே… அப்பப்பா! அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இன்னொருவர் பேசுவதை விளங்கிக் கொள்ளாமல் திருட்டு முழியுடன் திரு திருவென ’சோளக்காட்டு’ பொம்மை மாதிரி தலையாட்டி அசடு வழியும் போது எங்களை நினைக்கவே எங்களுக்கு வெறுப்பாக இருக்கும். தென்னிலங்கையில் (குறிப்பாக கொழும்பு) சிங்களம் தெரியாமல்  படுகின்ற அவஸ்தையும், ஆங்கிலம் தெரிஞ்சிருந்தும் வெளிநாடுகளில் பல்வேறு நாட்டவர்கள் பேசும் ஆங்கிலம் புரியாமல் மூளையைக் கசக்குவதும் செம காமடியாக இருக்கும்.

இந்த இரண்டு அனுபவங்களும் எனக்கு நிறையவே இருக்கின்றது. எனது துறையில் என் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக அமைந்தது இந்த மொழிப் பிரச்சினை. சிங்களம் தெரியாமல் தேசிய வானொலியில் ஒரு வருடம் வண்டியோட்டியது நானாகத்தான் இருப்பேன். அந்த ஒரு வருடத்தில் மற்றவர்களுடன் கதைத்து பழகியிருந்தாலே நிறைய சிங்களம் கற்றிருக்கலாம். அதே போல் லண்டனிலும் பகுதி நேரமாக தொழில் பார்ப்பது ஒரு ’பூட் சிற்றி’ யில், பல்வேறு நாட்டைச்சேர்ந்த நுகர்வொரும் வருவார்கள். கண்ணுக்கு முன்னால் இருக்கும் பொருளைக் கேட்டால் கூட பல சமயங்களில் அவர்கள் உச்சரிப்பு சரியாக விளங்காததால் விழித்துக் கொண்டு நிற்பேன். இறுதியில் முதலாளி வந்து எடுத்துக் கொடுத்து என்னை ஒரு பார்வை பார்ப்பார்.. அம்மணமான உணர்வு தான் எழும்.

இதுகூடப் பறவாயில்லை, எல்லாம் வேற்று மொழி தானே! எங்கள் தமிழே எங்களுக்குப் புரிவதில்லை. அதற்கு என்ன செய்யலாம்? 

ஒருமுறை நண்பர் ஒருவர், கட்டுரை ஒன்றை எழுதிவிட்டு சரி பார்க்கும் படி என்னிடம் கூறினார். நான் அதை வாசித்துக் கொண்டு போகும் போது ‘மன்னை’ என்ற சொல் ஒரிடத்தில் வந்தது. அது ஏதோ எழுத்துப் பிழை என நினைத்து நான் அதைத் திருத்தி அந்த இடத்துக்கு பொருத்தமாக எனக்குத் தெரிந்த அழகு தமிழில் கட்டுரையை முடித்துக் கொடுத்துவிட்டு, நண்பரிடம் சொன்னேன், ‘மன்னை’ என ஒரிடத்தில பிழையாக இருந்தது அதை திருத்தி விட்டேன் என அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ‘மன்னை’ என்பது ஏமாற்றத்தின் போது ஏற்படும் ஒரு பரிதாபகரமான நிலை என்று அவர் விளங்கப்படுத்தினார். (அதிகமாக சிறுவர்களுக்கு ஏதாவது ஒரு விளையாட்டுப் பொருளின் மீது ஆசைப்பட்டு அது கிடைக்காத போது ஏற்படுவது). நானும், அவரும் யாழ்ப்பாணம் தான். ஆனால் இதுவரை நான் அவ்வார்த்தையை கேள்விப்பட்டதில்லை. 

’மன்னை’ என்பது தமிழ்நாட்டில் உள்ள மன்னார்குடி எனும் ஊரை சுருக்கமாக அழைக்கும் முறை என இந்தியப் பதிவுலக நண்பர் ஒருவர் கூறினார்.

இதேபோல் நான் கதைக்கும்போது அடிக்கடி ‘எக்கணம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவேன். இதை அந்த நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. பலர் இதற்கு விளக்கம் ’எந்தக் கணமும்’ என குறிப்பிடுவர். ஆனால் நாங்கள் இந்த ‘எக்கணம்’ என்ற பதத்தை விருப்பப்படும் அல்லது விருப்பப்படாத காரியம் இரண்டுக்கும் பயன்படுத்துவதுண்டு. உதாரணமாக, ‘எக்கணம் உது சரிப்பட்டு வராது, எக்கணம் உது நல்ல விளையாட்டாவெல்லோ கிடக்கு, எக்கணம் எல்லாம் பிழைக்கப் போவுது, எக்கணம் நீ வாங்கப்போறாய் பார்….’ இவ்வாறு தேவைப்படும் இடங்களில் எக்கணம் என்ற வார்த்தையை பாவித்துக் கொள்வோம். இது பிராந்திய வழக்குத் தான். இவ்வாறு பல பிராந்திய வழக்குச் சொற்றொடர்களை கேட்கும் போது நகைச்சுவையாக இருக்கும்.

இன்னொரு சம்பவம், மதிய போசன இடைவேளையில் நண்பர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தோழியொருவர் விழுந்து விழுந்து சிரித்தார். விடயத்தை வினவியபோது நடந்த சம்பவத்தை விபரித்தார்கள். அப்பெண் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அவரது உணவில் அதிகமாக இலை வகைகள் இருந்திருக்கின்றது. அதைப்பார்த்த நண்பன் ‘உன் கோத்தை, கொப்பன் உனக்கு இலை குழையோ கட்டித் தாறவங்கள்’ என கேட்டிருக்கின்றான். ‘கோத்தை’ என்ற வார்த்தையை கொழும்பில் நீண்ட காலமாக வசிக்கும் அப்பெண் கேட்டதில்லையாம். இதையே அமெரிக்காவில் வாழும் இந்தியப் பதிவர் சித்ராவும் சொன்னார்.

247 எழுத்துக்கள் கொண்ட எங்கள் தாய் மொழியையே ’இந்தியத் தமிழ்’, ’இலங்கைத் தமிழ்’ என்ற இரு பெரும் பிரிவுகளாக பிரித்துவிட்டார்கள். அதிலும் இரு நாடுகளிலும் உள்ள மாவட்டங்கள், ஊர்கள், இனங்கள், சாதிகள் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தமிழ் உச்சரிப்புக்களும், வட்டார வழக்குகளும் உண்டு. யாழ்ப்பாணத்திற்குள் இருந்து கொண்டு தீவகத்தில் பாவிக்கும் தமிழ் சொற்கள் கூட வலிகாமத்தில் இருக்கும் எனக்குப் புதிதாக இருக்கின்றன. எனவே பல்வேறு இடங்களில் போய்ப்பழகும் போது எப்படியான வித்தியாச அனுபவங்களை எல்லாம் பெறவேண்டியிருக்கும். 

இதற்குள் எந்தத்தமிழ் சுத்தமான தமிழ், தூய தமிழ், திறமான தமிழ் என்ற சண்டைகள் வேறு. எது எப்படியிருந்தாலும் கேட்கும் போது கொழும்புத் தமிழும், சென்னைத் தழிழும் தனிச்சுவை தான். இவை பல நதிகள் சங்கமிக்கும் கடலல்லவா!

அரும்பதங்கள் 
படுகின்ற – அனுபவிக்கின்ற
அசடுவழிதல் - ஏமாற்ற நிலை 
வண்டியோட்டியது – காலத்தைப் கழித்தது
விழித்துக் கொண்டு – செய்வதறியாது
சொல்வது - கூறுவது

மேலும் சில வட்டாரச் சொற்கள் :
கப்பல் - ஆகாய விமானம்
மோனை – பெண்பிள்ளைகளை அழைப்பது
அசுமாற்றம் - அசைவு
சங்கதி – செய்தி
முடக்கு - மூலை
பிடிபாடு பிடுங்குப்பாடு – சண்டை 
புளுகம் - மகிழ்ச்சி
அப்பகுடுத்தி – அப்போது இருந்து
காணமறுத்துப்போச்சு – காணாமல் போன
பிராக்கு – வேடிக்கை
சுவர்தல் - ஊறுதல்
தடவுவினம் - தேடுவார்கள்

மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
KANA VARO


17 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

விளக்கங்களுடன் அருமையான பயன்படு பதிவு...

பகிர்வுக்கு நன்றி

மகேந்திரன் said... Best Blogger Tips

வட்டார மொழி வழக்குகள்
ஒரு தாய் ஈன்ற சேய்கள்...
வழக்கில் மாறுபாடு இருப்பினும் அதன் சுவை
மாறிடாது...

அருமையா எழுதி இருக்கீங்க சகோ...

வழக்குச் சொற்கள் அந்த வட்டாரப் பின்னணியுடன் அதற்கேற்ற
குழைவுடன் கேட்கையில் அதிலும் தனி சுகம் தான்...

நீங்கள் கொடுத்த பொருள் விளக்கங்கள் நன்று...

அருள் said... Best Blogger Tips

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

அம்பலத்தார் said... Best Blogger Tips

வணக்கம் வரோ நல்ல விடயமொன்றை சுவாரசியமான எழுத்துநடையில் பதிவிட்டிருக்கிறீர்கள்.

அம்பலத்தார் said... Best Blogger Tips

ஒவ்வொரு பிரதேச மக்களினதும் தனித்துவ அடையாளங்களில் முக்கியமான ஒன்றுதான் இந்த வட்டார மொழியும்.

KANA VARO said... Best Blogger Tips

கப்பல் - ஆகாய விமானம்
இது தவறுதலாக பதிவில் இடம்பெற்றதல்ல, எங்களுரில் - அயலூரில் வயதானவர்கள் விமானத்தைப் பார்த்து ‘கப்பல் பறக்கின்றது’ என கூறுவார்கள்.

ஆகுலன் said... Best Blogger Tips

கப்பல் - ஆகாய விமானம்
இது தவறுதலாக பதிவில் இடம்பெற்றதல்ல, எங்களுரில் - அயலூரில் வயதானவர்கள் விமானத்தைப் பார்த்து ‘கப்பல் பறக்கின்றது’ என கூறுவார்கள்.///
நானும் இப்படி பெரியவர்கள் கதைத்து கேடுருகுறேன்...

ஆகுலன் said... Best Blogger Tips

நான் ஜோசிப்பது நான் ஆங்கிலம் கதைக்கும்போது சொந்த நாடவருக்கு எப்படி இருக்கும் எண்டு.....(எனக்கு ஏதோ சரியாய் கதைப்பதாய் தான் தெரியும்......

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் வரோ!
வட்டார வழக்கிகை பற்றி அருமையா சொல்லி இருக்கிறீங்க.. ஊரில யாரவது முகம் கொடுத்து கதைக்காவிட்டால் சொல்வார்கள் "உவர் ஏன் மன்னைய நீட்டுறார்" அல்லது "மன்னைய விரிக்கிறார்" என்று!!!!

ஒவ்வொரு வட்டார வழக்கும் அழகுதான்..

KANA VARO said... Best Blogger Tips

கவிதை வீதி... // சௌந்தர் // said...
விளக்கங்களுடன் அருமையான பயன்படு பதிவு...

பகிர்வுக்கு நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..

KANA VARO said... Best Blogger Tips

மகேந்திரன் said...
வட்டார மொழி வழக்குகள்
ஒரு தாய் ஈன்ற சேய்கள்...
வழக்கில் மாறுபாடு இருப்பினும் அதன் சுவை
மாறிடாது...

அருமையா எழுதி இருக்கீங்க சகோ...

வழக்குச் சொற்கள் அந்த வட்டாரப் பின்னணியுடன் அதற்கேற்ற
குழைவுடன் கேட்கையில் அதிலும் தனி சுகம் தான்...

நீங்கள் கொடுத்த பொருள் விளக்கங்கள் நன்று...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

KANA VARO said... Best Blogger Tips

அருள் said...
ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html//

பார்த்தோம்..

KANA VARO said... Best Blogger Tips

அம்பலத்தார் said...
வணக்கம் வரோ நல்ல விடயமொன்றை சுவாரசியமான எழுத்துநடையில் பதிவிட்டிருக்கிறீர்கள்.//

நன்றி ஐயா..

KANA VARO said... Best Blogger Tips

ஆகுலன் said...
கப்பல் - ஆகாய விமானம்
இது தவறுதலாக பதிவில் இடம்பெற்றதல்ல, எங்களுரில் - அயலூரில் வயதானவர்கள் விமானத்தைப் பார்த்து ‘கப்பல் பறக்கின்றது’ என கூறுவார்கள்.///
நானும் இப்படி பெரியவர்கள் கதைத்து கேடுருகுறேன்...//

ஆகாய விமானத்தை ஆகாய கப்பல் என கூறுவார்கள். அதையே எங்கள் மூத்தோர் மொட்டையாக கப்பல் கப்பல் என் கூறி பழக்கிவிட்டார்கள்

KANA VARO said... Best Blogger Tips

காட்டான் said...
வணக்கம் வரோ!
வட்டார வழக்கிகை பற்றி அருமையா சொல்லி இருக்கிறீங்க.. ஊரில யாரவது முகம் கொடுத்து கதைக்காவிட்டால் சொல்வார்கள் "உவர் ஏன் மன்னைய நீட்டுறார்" அல்லது "மன்னைய விரிக்கிறார்" என்று!!!!

ஒவ்வொரு வட்டார வழக்கும் அழகுதான்..//

அண்ணரிடமும் கைவசம் நிறைய வட்டார வழக்குகள் இருக்கும் போல..

நிரூபன் said... Best Blogger Tips

நண்பா,
மன்னை பிடிக்கிற என்று யாழ்ப்பாணத்தில் உள்ள நீர்வேலி, சிறுப்பிட்டிப் பகுதி மக்கள் சொல்லுவார்கள்.

மன்னை பிடிப்பது அவர்கள் பாசையில் பிடிவாதம் பிடிப்பது எனும் தொனியிலும் வந்து கொள்ளுமாம் .

தாமரைக்குட்டி said... Best Blogger Tips

வீரத்தமிழ்.......

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!