Saturday, 31 March 2012

சொந்தமாக கூட வரும் அந்த மாதிரி வார்த்தைகள்!

உறவுகள் அனைவரையும் மற்றுமோர் பதிவின் வாயிலாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி!

பேச்சு மொழி வழக்கு என்பது ஒரு மனிதனை, அவனது கலாச்சார விழுமியம் சார்ந்த நிலையினூடாக ஏனைய மனிதர்களோடு வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது. இவ் வகையில் இலங்கைத் தமிழர்களுக்கே உரிய தனித்துவமான வட்டார மொழி வழக்கு எனும் வகையினுள் இடம் பெறும் ஒரு சில சொற்பதங்களைப் பற்றிய அலசல் தான் இப் பதிவு!
ந்த மாதிரி:

தமிழகத்து மொழி வழக்கில் அந்த மாதிரி என்றால், அர்த்தம் வேறாக இருக்கும். அந்த மாதிரி என்பது (It's might be a different Or It's could be a different)  சமூகத்தில் இருந்து நடத்தை அடிப்படையில் வித்தியசமாகக் காணப்படுகின்ற பெண்ணைக் குறிக்கவோ அல்லது, வழமைக்கு மாறான இயல்பு கொண்ட நபரினைச் சுட்டவோ பயன்படுகின்றது.

’அவள் அந்த மாதிரிப் பெண் என்று தமிழகத்தில் பயன்படுத்தப்படும் மொழி வழக்கின் பின்னே, அவள் வித்தியாசமான பெண் அல்லது, ஒரு நடத்தை  கெட்ட பெண், மனிதரில் இருந்து மாறுபட்ட தப்பான பெண் எனும் கண்ணோட்டம் தான் வந்து கொள்ளும், இது திரைப்படங்கள் வாயிலாக நான் உணர்ந்து கொண்ட அந்த மாதிரி எனும் தமிழக மொழி வழக்கிற்கான அர்த்தம்.

அந்த மாதிரிப் படம் , அந்த மாதி ஆள், அந்த மாதிரி மேட்டர்கள் என்றால் ஆபாசம் கலந்த ஒரு உணர்வு தான் தமிழக உறவுகளிற்கு இவ் வசனங்கள் ஊடாகக் கிடைக்கும். ஆனால் எமது இலங்கையில், ’அந்த மாதிரி’ எனும் வசனத்திற்கு இரு வேறு விதமான பொருள் விளக்கங்கள் இருக்கின்றன.

காலாதி காலமாக நாங்கள் அந்த மாதிரி என்றால்-
‘அருமையான, செம சூப்பரான, ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளக் கூடிய வகையினைச் சார்ந்த தரமான விடயம் என்றே பொருள் கொள்கின்றோம்.

உதாரணத்திற்கு, இவ் அந்த மாதிரி எனும் சொல்லை எங்கள் ஊரில் எவ்வாறு கையாள்கிறார்கள் என்று பார்ப்போம்.
*அட இது ஒரு அந்த மாதிரிச் சாப்பாடு(அருமையான உணவு)

* சும்மா...அந்த மாதிரிக் கறி மச்சான், அந்த மாதிரிப் பொங்கல் மச்சான்....இப்படியும் சொல்லுவோம்.
*புது வீட்டிற்கு வந்தாய் மச்சான், வீடு எப்படி என்று சொல்லவில்லையே என்று நண்பன் கேட்டால்,
இது மச்சான் சும்மா.......அந்த மாதிரி வீடு மச்சான், அந்த மாதிரி இருக்கு’
என்று புகழ்ந்து தள்ளுவோம்.

*அவள் அந்த மாதிரி இருப்பாள்- தேவதை மாதிரி இருப்பாள், நல்ல வடிவாக இருப்பாள், சூப்பராக இருப்பாள், கியூட் ஆக இருப்பாள் என்பதை குறிப்பால் உணர்த்த இச் சொல்லினைப் பயன்படுத்துவோம்.
*அவர் சும்மா அந்த மாதிரி ஆள்- ஒரு சில இடங்களில் அந்த மாதிரி என்பது சுட்டப்படும் இடத்தின் காலத்திற்கேற்றாற் போலவும், நபர்களின் அடிப்படையிலும் வேறுபட்டுக் கொள்ளும்,

*அந்த மாதிரிப் பொடியன் என்று அவனை நினைக்க வேண்டாம்,( இது ஒருவர் இன்னோர் ஆளைப் பரிந்துரை(சிபாரிசு) செய்யும் போது அவனைத் தப்பான பொடியன் ஆக நினைக்க வேண்டாம் எனக் கூறுவதாக வந்து கொள்ளும்)

*அவள் சும்மா அந்த மாதிரி அச்சாப் பிள்ளை( இது அவள் ஒரு அருமையான அச்சா- நல்ல பிள்ளை என்பதை விளிக்கப் பயன்படும்)

இந்த அந்த மாதிரி எனும் சொல்லை யாழ்ப்பாணம், வன்னி, வவுனியாவைச் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் தான் அதிகளவில் பயன்படுத்துவார்கள். ஏனைய மாவட்டங்களில் இச் சொல்லைப் பயன்படுத்துவது குறைவு, இதற்கு நிகரான சொற்கள் ஏதாவது தெரிந்தால் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

அந்த மாதிரி எனும் சொல்லிற்கு வன்னியில் விடுதலைக் கவிஞராக வாழ்ந்த புதுவை இரத்தினைதுரை அவர்கள் இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு வெளி வந்த அவரது பாடல் ஒன்றின் மூலம் அர்த்தம் கொடுத்திருக்கிறார்.
ஈடு வைத்து ஈடு வைத்து நந்த லாலா......எனத் தொடங்கும் நையாண்டியும் நக்கலும் கலந்த பாடலின் இடை நடுவில்
‘எந்த மாதிரி அட அந்த மாதிரி
எந்த மாதிரி அட அந்த மாதிரி
..........................எங்கள் கண் எதிரே வந்த மாதிரி
சொந்த ஊரில் ஏறி நாங்கள் சென்ற மாதிரி
ஏதோ தேவதைகள் வந்து வரம் தந்த மாதிரி.................. இது தான் அந்தப் பாடல்.

இந்த அந்த மாதிரி எனும் சொல்லினைச் சில நேரங்களில்

*அவளை நீங்கள் அந்த மாதிரி ஆள் என்று நினைக்க வேண்டாம்...(அவள் ஒரு தப்பான பெண் என்று நினைக்க வேண்டாம்) எனும் அர்த்தத்திலும் பயன்படுத்துவார்கள்- ஆனால் கெட்ட விடயங்களையோ அல்லது தப்பான விடயங்களையோ சுட்ட வரும் அந்த மாதிரி எனும் சொல்லினைத் தமிழகச் சினிமாவின் தாக்கத்தினால் தான் ஈழத்தில் பயன்படுத்துவார்கள், இதைத் தவிர எங்கள் ஊர்களில் அந்த மாதிரிக்கு உள்ள அர்த்தம், அந்த மாதிரித் தான்!

அந்த மாதிரிப் பொண்ணை நான் அந்த நாளன்று பார்த்தேன், அந்த மாதிரி அவள் இருந்தாள், அந்த மாதிரிக் காதலித்து, அந்த மாதிரி அவளைக் கரம் பிடித்து, அந்த மாதிரி அவளுடன் வாழ நினைத்தேன், அவளோ என்னை அந்த மாதிரி அந்தரத்தில் தவிக்க விட்டுப் போய் விட்டாள்!

மீண்டும் மற்றுமோர் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, விடை பெற்றுக் கொள்வது,
நேசமுடன்,
செ.நிரூபன்.

4 comments:

Yoga.S.FR said... Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!"அந்தமாதிரி" ஒரு பதிவு போட்டிருக்கிறியள்.ஒருத்தருக்கும் அறிவித்தல் குடுக்காட்டி ஒருத்தரும் ஈழ வயலை சீண்ட மாட்டினம்!"அந்தமாதிரி" ஒரு அறிவித்தலை உங்கட "நாற்று" லையாவது குடுத்திருக்கலாம்!இண்டைக்கு சனிக்கிழமை.எங்கட வீட்டில "அந்தமாதிரி" மரக்கறிச் சாப்பாடு,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!

சிட்டுக்குருவி said... Best Blogger Tips

அந்த மாதிரி பதிவு நண்பா.....//
நடைமுறையில் இன்னும் இந்த வழக்குச் சொல் உண்டு

koodal bala said... Best Blogger Tips

ஒரு மொழியிலே இரு அர்த்தங்கள்...சுவையான பதிவு!

பாரத்... பாரதி... said... Best Blogger Tips

அந்த மாதிரி பதிவாக(தமிழக அர்த்தம்) இல்லாமல், அந்த மாதிரி(ஈழ அர்த்தம்) பதிவாக அமைத்திருப்பது பாராட்டிற்குரியது சகோ.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!