Monday, 2 April 2012

ஈழமும்,கிராமப்புற வாழ்வும்!

நகர மயமாக்கல் என்பது கிராம புறங்களை சிறிது சிறிதாக ஆட்க்கொண்டு வந்தாலும், மறுபுறம் அக்கரைப் பச்சை என்பது போல நகர் புறத்தை நோக்கி சில பல காரணங்களால் கிராமங்கள் ஓட்டம் பிடித்தாலும், இந்த கிராமப்புற வாழ்க்கை என்பது சொர்க்கத்திலும் கிடைக்காத ஒன்று தான்; இதை கிராமப்புற வாழ்க்கையில் இருந்து நகர்ப்புறம் ஒன்றுக்கு இடம்பெயர்ந்த ஒருவனால் நன்றாகவே உணர்ந்து கொள்ளக்கூடியதாக  இருக்கும்.

காற்றையும் வழி மறித்து நிற்கும் வானுயர்ந்த கட்டடங்கள், எந்நேரமுமே எம்மை வெறுப்பேற்றும் வாகன இரைச்சல், துன்பம் ஒன்று வரும் போது உணரப்படும் தனிமை, விடுமுறைகளின் போது எம் உணர்வுகளை கூட பகிர்ந்து கொள்ள முடியா வண்ணம் இடை வெளி நிரப்பி நிற்கும் இலத்திரனியல் சாதனங்கள் என்று ஒரு வட்டத்துக்குள்ளே வாழ்க்கை சுழலுவது போல நகர் புற வாழ்க்கை எண்ணத் தோன்றும்.

பணம், வசதியான வீடு, சிறந்த வாழ்க்கை தரம் என்று நகர் புறங்களிலே என்ன தான் சௌகரியம் இருந்தாலும் கிராம புற வாழ்வில் தனி இன்பம் இருப்பதை மறுக்க முடியாது.

அவ்வளவு எளிதில் நோய் நொடிகளை அண்ட விடாத சுத்தமான காற்று, மிக சிறந்த ஓவியங்களை கண் முன்னே விரித்து நிற்கும் இயற்கை, சந்தோசங்களில் மட்டுமில்லாது நம் துயர்களிலும் பங்கு போடும் உறவுகளுக்கிடையிலான அன்னியோன்யம், நடை போட வயல் வெளி, நண்பர்களுடன் உறவாட நாற்சந்தி, வருடமொரு முறை ஊர் கூட ஒரு கோவில் என்று  கிராம புற வாழ்வு என்பது முற்றிலும் வித்தியாசமானது.
 
        
ஈழத்தை பொறுத்த வரை மிக பெரும்பான்மையான தமிழர்கள் கிராம புற வாழ்க்கையில் வாழ்பவர்கள் /வாழ்ந்தவர்கள் தான். அத்துடன் ஈழத்திலே தன்னிகரற்ற, பல்வேறு இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்ட கிராம புறங்கள் பரந்து விரிந்து காணப்படுகிறது.  இங்குள்ள கிராமப்புறங்கள் பெரிதும் விவசாயத்தை நம்பி உள்ளது.

நெற்பயிர்  செய்கையில் இருந்து மரக்கறி உற்பத்தி, தென்னை செய்கை, புகையிலை உற்பத்தி, பழவகை உற்பத்தி  என்று கிராமத்துக்கு கிராமம் மக்கள் விவசாயத்தை நேசித்தார்கள். அத்துடன் விவசாயத்துக்கான நீர் என்பது ஈழ மக்களுக்கு ஒரு கொடையாக கிடைத்த ஒன்று என்று சொல்லலாம். குளமாக இருந்தாலும் சரி கிணறாக இருந்தாலும்  சரி அவ்வளவு எளித்தில் வற்றி போகாதவை.

இவை போக ஈழ மக்களுக்கு பனை மரம் என்பது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்து வருகிறது. "கற்பகதரு" என்று அழைப்பதற்கேற்ப இதால் மக்கள் பெறும் நன்மைகள் மிக ஏராளம். படுப்பதற்கு பாயில் இருந்து சீனி தட்டுப்பாடான காலப்பகுதிகளில் தேநீர் குடிக்க கருப்பட்டியாக கூட மக்களுக்கு பயன்பட்டது. ஈழத்தை பொறுத்தவரை 'பனைமரம் ஈழ மக்களின் நண்பன்' என்று சொன்னாலும் மிகை இல்லை.

சிறிமாவின் காலத்தில் மூடிய பொருளாதார கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும், அதன் பின் நாட்டிலே  'கடுமையான காலப்பகுதி' நிலவிய போதும் கூட தன்னிறைவு பொருளாதாரத்தில் மக்கள்  தம் வாழ்க்கையை ஓட்டிச் சென்ற சிறப்பும் மேற்படி  கிராமப்புறங்களிடம் உண்டு. உதாரணமாக இயற்கையாகவே வீடுகளிலும் வயல் நிலங்களிலும் கிடைக்கும் முருங்கை இல்லை, முருங்கை காய், அகத்தி இலை, தூதுவளை இலை, குறிஞ்சா இலை  போன்றனவே எம் ஒருநாள் உணவுக்கான தேவையை போக்கக்கூடியனவாக இருந்தது.

இந்த விவசாயம், வயல்வெளி என்று சொல்லும் போது கண்முன்னே விரியும் காட்சிகள் என்றுமே பசுமையானவை. அன்று பாடசாலைக்கு செல்லும் இளைஞன் அதிகாலையில் எழுந்து வயல்வெளிக்கு சென்று விவசாய நடவடிக்கைகளில் தன் அப்பாவுக்கு ஒத்தாசை செய்த பின்னரே பள்ளி செல்வான். இது ஒருவிதத்தில் அந்த இளைஞனுக்கு தேக பயிற்சியாகவும் அமைந்துவிடுகிறது.
       
சிறு வயசில் பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர்கள் காலை காட்சி என்ற தலைப்பில் ஏதாவது சொல்லி தருவார்களே.. ஒரு கிராம புறத்தில் வாழ்பவனால் தான் இதை முழுமையாக உணர்ந்து அனுபவித்திருக்க முடியும்.

அதிகாலை வேளையில் எழுந்து தன் ஊரில் உள்ள வயல் வெளி பக்கம் செல்பவன் உணர்வுகள் எவ்வாறு இருக்கும்?


காலை பொழுது ஒன்றில்
வயல் வரப்பு ஊடான
ஒரு பயணம்,
மனதை இதமாக்கும்
இனம் புரியாத அமைதி,
புலர்ந்த பொழுது
மீண்டும் மலர்வதை கண்டு
கானமிசைத்த படி
வானத்தை வட்டமிடும்
பறவைகள் கூட்டம்,
பயிர்களை தழுவி வந்து
உடலை வருடும் மெல்லிய காற்று,
சூரிய கதிர்பட்டு
வானவில் நிறங்களை காட்டி நிற்கும்
புல் நுனி மேல் படர்ந்த
பனித்துளிகள்,
உழவன் கை பிடியில் கலப்பை, அதில்
பூட்டிய காளைகள் அசைந்து நடக்க
அதற்க்கேற்றா போல் தாளம் போடும்
கழுத்தில் கட்டிய சலங்கை ஓசை,
கிணற்றில் இருந்து
வரப்பு ஊடாக இறைக்கும் நீரில்
உரிமை எடுத்து
நீந்தி மகிழும் காக்கை கூட்டம்,
அருகிலுள்ள
ஆலய மணி ஓசையுடன் மந்திர ஒலியும்
காற்றில் தவழ்ந்து வந்து
காதுகளில் தஞ்சமாகும்...,
இத்தனையும் கண்டு உணர
என்ன தவம் செய்ய வேண்டும்...!


மீண்டும் மற்றுமோர் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, விடை பெற்றுக் கொள்வது,
அன்புடன்,
சி.பவன்.

2 comments:

Yoga.S.FR said... Best Blogger Tips

வணக்கம் பவன்!முதல் முதலாக உங்கள் எழுத்தை ரசித்து."கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்". என்பது ஆன்றோர் வாக்கு!கூடவே,வயல் மற்றும் விவசாய நிலங்களை உள்ளடக்கிய ஈழத்தில் வாழ்ந்ததில் இருந்த சுகம்,ஹும்.........!

அம்பலத்தார் said... Best Blogger Tips

கிராமப்புற வாழ்வின் சுகங்களையும் நிறைவையும் சுவாரசியமாக பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் பவான். உங்கள் பணி தொடரட்டும் தொடர்ந்து எழுதுங்கோ

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!