Thursday 22 December 2011

திருட்டு மாங்காயும், வெ(சு)ருட்டல் நினைவுகளும்!

ஈழவயலில் இணைந்திருக்கும் ஐயா, அம்மா, தம்பிங்க, தங்கைங்க மற்றும் அனைவருக்கும் இந்தக் காட்டானோட வணக்கமுங்க! 
சிறுவயதில் செய்யும் குழப்படிகள் எங்களுக்கு அந்த நேரத்தில் பெற்றோரிடம் கண்டிப்பும், தண்டனையும் பெற்று தந்தாலும் பிற் காலத்தில் அச் சம்பவங்களை நினைக்கும்போது வரும் இனம்புரியாத சந்தோசத்திற்காகவே 'இன்னும் அதிக குளப்படிகள் செய்திருக்கலாமோ!' என்று எண்ணிப் பார்க்க வைக்கும் இயல்பு கொண்டவை. இவையெல்லாம் எவ்வளவு உண்மைன்னு அனுபவித்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன் கேளுங்கள். வீட்டை சுத்தி மாமரமும் விளாத்தி, இலந்தை, நாவல் போன்ற மரங்கள் இருந்தாலும். அடுத்தவன் தோட்டத்துக்குள் வேலி பாய்ஞ்சு அங்கே புடுங்கி தின்பதில் இருக்கும் சுவாரசியம் வேறு எதிலும் கிடைப்பதில்லை..தனியாக பி(பு)லத்துக்கு வரும் மத்தியான நேர கிளி போல போவதைக் காட்டிலும் நண்பர்களோடு சேர்ந்து திருட்டு மாங்காய் அடிப்பதில் இருக்கும் சுகமே அலாதிதான் போங்கள்..!!
பள்ளிக்கூடம் முடிந்தால் வீட்டுக்குள் கால் வைப்பது புத்தக பையை வைப்பதற்கும் சாப்பாட்டுக்கும்தான். ஹி..ஹி.. "உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டல்லவோ..!" என்பதை போல பாட்டியும் தத்தாவும் வேப்ப மரத்துக்கு கீழ இருக்கும் கிடுகு கொட்டிலில் குட்டி தூக்கம் போட்டு எழுந்திருக்கும் வேளைதான் வீட்டுக்குள் நாங்கள் கால் வைக்கும் நேரம்; இது அவர்களின் அலாரம்..!!  குட்டித் தூக்கம் முடித்த பாட்டி "எட ராசா இஞ்ச வாடா..! தாத்தாவுக்கு கால் உழைவு நீ போய் நொச்சி இலை கொண்டு வா" என்பார்..நொச்சி இலையை பறித்து,  பாட்டியின் பழைய சேலையில் சுற்றி தாத்தாவின் காலில் கட்டி விட்டால் போதும் எங்களுக்கு வெளியில் செல்ல ஓப்பன் பாஸ் கிடைத்து விடும்.. ஹி ஹி

எங்கள் நண்பர்களும் இப்படித்தான்!, ஏதாவது சிறிய வேலையை வீட்டில் செய்து கொடுத்தால் போதும்..  ஒன்று சேரும் நண்பர்கள் நாம் முதலில் செல்வது தம்பிராசா தாத்தாவின் கொய்யா தோட்டமாகத் தான் இருக்கும். (அவர் உண்மையான பெயர் கனகவேல் வீட்டில் அவர்தான் ஒரே பொடி என்பதால் எல்லோரும் தம்பி, ராசா என்று அழைத்ததால் தம்பிராசாவாகிவிட்டார்). இதற்கான காரணம் தம்பிராசா தாத்தா கொய்யா தோட்டத்தில நாங்க நிக்கிறது தெரிஞ்சா தாத்தா ஓடி வருவார் 'டேய் பேராண்டிகளா மேல இருக்கிற பழங்கள மட்டும் பிடுங்குங்கோடா, கீழ விடுங்கடா'ன்னு எங்கள அவர் ஒரு நாளும் திருடங்கள போல நடத்த மாட்டார்.  நாங்க அவருக்கும் சேர்த்துதன் பழங்கள் பறிக்க வேண்டி வரும்.. பிறகென்ன, பள்ளிகூடத்தில யாராவது தம்பிராசா தோட்டத்தில கொய்யாக் காய் களவெடுப்போமா என்றால் முதல் ஆளா சண்டைக்கு போயிடுவம் நாங்க அவர் தோட்டத்து அறிவிக்க படாத காவலாளிகள்..!! :-)

ஆனா கந்தையர் தோட்டம் அப்பிடி சிவப்பு கம்பளம் விரிக்காது எங்களுக்கு.. கந்தையரே ஒரு சுவாரசியமான ஆள் தான். நெடித்து வளர்ந்த மெல்லிய தேகத்துக்கு சொந்தகாரரான அவர்; காதில் கடுக்கனும் கொண்டையோடும் வானத்தை பார்துக்கொண்டிருக்கும் உப்பும் மிளகும் கலந்த மீசைன்னு ஒரு கம்பீரமான தோற்றம்தான்.. வீட்டுக்கு வரும்போது கதவை திறந்து கொண்டே "கொம்மா எங்கடா போட்டாள்?" என்று கேட்கும் தோரனையே ஆள் பொல்லாதவர் தான் என்று கூறும். ஏனோ தெரியல தம்பிராசா தாத்தாவை விட வயசில் மூத்தசரான கந்தையரை என்றுமே தாத்தா என்று அழைக்க மனம் வருவதில்லை..!!!

அந்த நாட்களில் நெல் விதைத்திருக்கும் காலங்களில் கந்தையரும் ரெம்ப நல்லவர்தான்..  பள்ளிக்கூடம் போகும் வழியில் அவரை கண்டால் அவரின் திருக்கை வண்டியில்தான் பள்ளி செல்வோம்.  அப்போது எங்களுக்கு உறுத்தாத வண்டியில் இருக்கும் வாளா நம்பட்டி ஏனோ அவர் தோட்டம் செய்ய தொடங்கியவுடம் உறுத்தும்...!
தை கடைசியில் அல்லது மாசி மாதத்தில் நெல்லை அறுத்து சூடு கட்டி வைத்தவுடன் கந்தையர் தனது தோட்ட வேலையை தொடங்கும். அதே வேளை நாங்களும் குளத்து கரையை சுத்தம் செய்து மைதானம் அமைக்கும் வேலையில் மூழ்குவோம். இங்கு தான் கந்தைதருக்கும் எங்களுக்குமான பகை தொடங்கும்! தோட்டம் விளைய முன்னரே எங்களை அவர் தோட்டத்து திருடர்களாகவே முடிவு செய்து காய் நகர்த்துவார்.. கந்தையர் தோட்டத்திற்கு செய்யும் ஆயத்தமே அழகு தான். மாரி காலத்தில் மாட்டு மாலில் போட்டிருக்கும் காட்டு தடிகளையும், கருக்கு மட்டைகளையும் கொண்டு வந்து தோட்டத்தை சுற்றி நெருக்கமான வேலி அமைப்பார். அதுவும் போதாது என்று ஒரு இராணுவ முகாம் போல் விளாத்தி, இலந்தை முட்களை கொண்டு வேலியின் மேல் போடுவார்.. எல்லாம் முடித்து காய்கறிகள் பழங்கள் பயிரிட்டால் அவை காய்கும் வரை காலை மாலை தண்ணீர் பாய்ச்சலோடு சரி..

எப்ப காய்ப்பு தொடங்குமோ அப்போதே தோட்டத்துக்குள் காவோலைகளை கொண்டு சிறிய குடிலை அமைத்துக்கொள்வார்  கந்தையர். பள்ளிக்கூட நாட்களில் அதில் தங்க மாட்டார். ஆனா எங்களுக்கு பள்ளிகூட லீவு விட்டா கந்தையர் குடிசையிலேயே குடும்பம் நடத்த தொடங்கிடுவார் ஹிஹி... எங்களுக்கும் கந்தையர் தோட்டத்தில் எப்படி களவு செயலாம் என்றே சிந்தனை ஓடும். ஒவ்வொரு நாளும் நாங்கள் விளையாடி முடித்து வீடு சென்றதன் பின்னரே கந்தையரும் வீடு செல்வார். இதை கவனித்த நாங்கள் ஒரு நாள் வீடு செல்வதை போல பாவனை செய்து அருகில் உள்ள குளத்தில் ஒளித்திருந்தோம். சிறிது நேரத்தில் தோட்டத்திற்கு சென்றால் கிணத்துக்குள்ள கந்தையர்  நின்று கொண்டு எட்டி எட்டி பார்கிறார். அட இவருக்கு எப்படி நாங்கள் அருகில் இருப்பது தெரியும் என்றால் எங்களோடே சுற்றி திரியும் எங்கள்  நாயை பார்த்த கந்தையர் வீடு செல்வாரோ? ஹி ஹி  பிறகென்ன அடுத்த நாள் நாயை வீட்டில் கட்டி வைத்து கந்தையர் தோட்டத்தில ஆட்டைய போட்டோம்...!!!

இரண்டு நாட்களின் பின்னர் தெருவில் எங்களை கண்ட கந்தையர் சொன்னதுதான் எங்களை நிம்மதி இல்லாமல் செய்தது. நாங்கள் தான் அவர் தோட்டத்து பழங்களை திருடி இருப்போம் என்ற நம்பிக்கையில் சொன்னார். 'என்ர தோட்டத்தில் திருடியவன் கை விழவேணும்' என்று சுடலை வைரவருக்கு மூன்று இழை கட்டி இருக்கேன். இன்னும் மூன்று நாளில களவெடுத்தவன் கை விழப்போகுது என்றார். பிறகென்ன, அந்த மூணு நாளும் வலது கை எப்ப விழ போகுதோ எனும் கவலையில் தான் கழிந்தது...!!!! 

இன்றும் பழைய நண்பர்களை கண்டால் 'நாங்கள் யார்? கந்தையருக்கே ஆப்படிச்சோம்; என்று பெருமை பேசுவோம். ஆனா ஒன்று மட்டும் உறுதி! இழை கட்டினா அது கட்டாயம் பலிக்கும் எந்த விதத்திலாவது..!!! ஹி ஹி ஹி பின்ன கந்தையர் கட்டின இழயால தானே அவர் பேத்திய நான் கட்டி இண்டைக்கு நொந்து நூல்டிஸ்ஸாக இருக்கேன்.....!!!!!-:) -:) 

அரும்பத விளக்கம்.
* பிலம் - வயல்,தோட்டம்
* நொச்சி இல்லை- ஒருவகை மூலிகை ,ஆடுதொடா இல்லை.
* திருக்கை வண்டி- ஒரு மாடு பூட்டி செலுத்தக்கூடிய வண்டில்.
* கொம்மா - அம்மா
* நம்பட்டி - மண் வெட்டி

* நெல்லை அறுத்து சூடு கட்டி வைத்தவுடன்-நெல்மணிகளுடன் கூடிய வைக்கோலை அடுக்கி வைத்தல்.
* மாட்டுமால் -மாட்டு கொட்டகை
* கருக்கு மட்டை -பனை மட்டை 

* காவோலை- காய்ந்த பனை ஓலை
* இழை கட்டுதல் - செய்வினை செய்தல்.
*சுருட்டல்/ சுருட்டுதல்: ஆட்டையைப் போடுதல்.

நன்றி.

37 comments:

ஆகுலன் said... Best Blogger Tips

மாமோய் அருமை..பழையது எல்லாம் ஜாபகம் வருகுது... அந்த நாட்களை இழந்து விட்டோம்......

திருட்டு மாங்காய் என்னதான் புளித்தாலும் அதான் ருசி அதிகம்...

ஆகுலன் said... Best Blogger Tips

* பிலம் - வயல்,தோட்டம்
* நம்பட்டி - மண் வெட்டி//

இரண்டு புது சொற்கள்....

சரியில்ல....... said... Best Blogger Tips

அருமை ராசா.....

Anonymous said... Best Blogger Tips

அழகான நினைவுகள் காட்டான் மாம்ஸ்... அந்த காலம் மீண்டு(ம்) வரப்போவதில்லை.. ஆனால் இவ்வாறு எம் நினைவுகளை பகிர்வதன் மூலம் அந்த சந்தோசத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம்...

Anonymous said... Best Blogger Tips

மதில் ஏறி பாய்ந்து பறிக்கும் மாங்காய்க்கும், தோட்டத்தில் புகுந்து திருடும் மரவள்ளி கிழங்குக்கும் தனி சுவை உண்டு ;)

அதுவும் திருடி தின்றுகொண்டு இருக்கும் போது பிடிபடால், தின்றது எல்லாம் அந்த இடத்திலேயே செமித்துவிடும் பாருங்கள்.....)

காட்டான் said... Best Blogger Tips

ஆகுலன் said...
* பிலம் - வயல்,தோட்டம்
* நம்பட்டி - மண் வெட்டி//

இரண்டு புது சொற்கள்....

 ஹி ஹி மாப்பிள அது வட்டார வழக்கு..
மண் வெட்டியில் சதுரவடிவமாய் இருப்பதை நம்பட்டின்னும் முன் பகுதி கூராய் இருப்பதை ஊர் நம்பட்டின்னும் வட்டார வழக்கில் சொல்லுவாங்க. ஊர் நம்பட்டியை வயல்களில் மாத்திரமே பயன் படுத்துவாங்க அதில் கல்லு படக்கூடாது..)

காட்டான் said... Best Blogger Tips

 கந்தசாமி. said...
மதில் ஏறி பாய்ந்து பறிக்கும் மாங்காய்க்கும், தோட்டத்தில் புகுந்து திருடும் மரவள்ளி கிழங்குக்கும் தனி சுவை உண்டு ;) 

அதுவும் திருடி தின்றுகொண்டு இருக்கும் போது பிடிபடால், தின்றது எல்லாம் அந்த இடத்திலேயே செமித்துவிடும் பாருங்கள்.....)
23 December 2011 06:48
ஹா ஹா மாப்பிள செமிக்கிறதா..? அந்த இடத்திலேயே கக்க வைச்சிடுவாங்களே..!!))

காட்டான் said... Best Blogger Tips

 சரியில்ல....... said...
அருமை ராசா.....
23 December 2011 05:38
நன்றிங்க ஐய்யா..!!!

சுதா SJ said... Best Blogger Tips

மாமா அருமை..... பதிவை படிச்சதில் இருந்து ஊருக்கு போகணும் போலவே இருக்கு...... அதெல்லாம் ஒரு காலம் மாமா..... நானும் இப்படி செய்து இருக்கேன்..... கூட பள்ளி முடிந்து வரும் வழியில் தான் உந்த விளையாட்டு எல்லாம் காட்டி இருக்கோம்.... :))))) ஆனாலும் திருட்டு மான்காய்க்குத்தான் ருசி அதிகம்... ஹா ஹா

சுதா SJ said... Best Blogger Tips

வீட்டுக்கு வரும்போது கதவை திறந்து கொண்டே "கொம்மா எங்கடா போட்டாள்?" என்று கேட்கும் தோரனையே ஆள் பொல்லாதவர் தான் என்று கூறும். <<<<<<<<<<<<<<

அட இப்படி என்னையும் சின்ன வயதில் ரெம்ப பேர் மிரட்டி இருக்காங்களே.... அவ்வ்வ்வ்

சுதா SJ said... Best Blogger Tips

ஹி ஹி ஹி பின்ன கந்தையர் கட்டின இழயால தானே அவர் பேத்திய நான் கட்டி இண்டைக்கு நொந்து நூல்டிஸ்ஸாக இருக்கேன்.....!!!!!-:) -:)<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

இருங்க மாமா, என் மாமிட்ட பத்த வைக்கிறேன்..... கிர்ர்ர்ர்

சுதா SJ said... Best Blogger Tips

பிலம் - வயல்,தோட்டம்
* நொச்சி இல்லை- ஒருவகை மூலிகை ,ஆடுதொடா இல்லை.
* திருக்கை வண்டி- ஒரு மாடு பூட்டி செலுத்தக்கூடிய வண்டில்.
* நம்பட்டி - மண் வெட்டி
* மாட்டுமால் -மாட்டு கொட்டகை<<<<<<<<<<<<<<<<

இவை எல்லாம் எனக்கு தெரியாத சொற்கள் மாமா :((((

மண் மனம் வீசும் பதிவு..... ஹும்... எங்களால இப்படி எல்லாம் எழுத்து முடியாது மாமா.... பொறாமையா இருக்கு :)))

KANA VARO said... Best Blogger Tips

மாமோய், கடைசில வைச்சீங்க பாருங்க ஒரு ருவிஸ்டு.. சான்சே இல்லை.

கந்தையர் பேத்தியை நீங்க கட்ட உங்க பேத்தியை, சாரி.. உங்க மோளை நாங்க கட்டுறம். எங்களுக்கும் ஆரோ இழை கட்டிட்டாங்கள் போல.

KANA VARO said... Best Blogger Tips

ஈழவயல் ஆரம்பித்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் எங்கள் பழைய ஞாபகங்கள் கிளறப்படுகின்றது. எல்லோருக்கும் நன்றி.

ஹேமா said... Best Blogger Tips

திருட்டு மாங்காய் ....பாருங்கோ காட்டன் அழகான துணையைத் தந்திருக்கு.இப்பிடி அதிஸ்டம் ஆருக்குக் கிடைக்கும் !

காட்டான் said... Best Blogger Tips

@துஷ்யந்தன்
ஹி ஹி மருமோனே ஆடு தொடா இலைன்னா ஆடு சாப்பிடாத இலைன்னு சொல்லுறேன்... ஏன்னா உண்மையாகவே ஆடுதொடா இலை என்று ஒன்றும் இருக்கையா ஊரில...!!!

அன்புடன் நான் said... Best Blogger Tips

அந்த கால நிகழ்வுகளை மீண்டும் நினைத்து பார்க்கையில் ஒரு ஏக்கம் வரத்தான் செய்கிறது....

அன்புடன் நான் said... Best Blogger Tips

மதிப்பிற்குரிய திரு காட்டான் அவர்களே.....

நீங்க உங்களுக்கான காட்டான் அடையாளமாய் ஒரு வேளாண்மை பெரியவரின் படத்தை அமைத்துள்ளீர்கள்.
எங்க பகுதி வேளாண்மக்கள் வயலுக்கு செல்லுகையில் இப்படிதான் செல்வார்கள்.... ஆனால் அவர்கள் தன்மானமிக்கவர்கள்... நல்லவர்கள் . அவர்கள் முழுக்கால் சட்டை அணிந்தோ மிடுக்கான உடையணிந்தோ செல்ல இயலாது... எங்களின் நிலத்தின் தன்மை அப்படி.

அப்படியிருக்க ஒரு நல்ல வேளாண்குடிமகனை இப்படி “காட்டான்” என் காட்டுவது சரியா? அல்லது முடுக்காக உடுத்தியவர்கள் எல்லாம் மிக நல்லவர்களா?

இது நெருடலாகப் பட்டது எழுதினேன் .

புரிந்து கொள்வீர்கள் என்ற நப்பிக்கையோடு.... நன்றி.

குட்டிப்பையன் said... Best Blogger Tips

////ஆனா ஒன்று மட்டும் உறுதி! இழை கட்டினா அது கட்டாயம் பலிக்கும் எந்த விதத்திலாவது..!!! ஹி ஹி ஹி பின்ன கந்தையர் கட்டின இழயால தானே அவர் பேத்திய நான் கட்டி இண்டைக்கு நொந்து நூல்டிஸ்ஸாக இருக்கேன்..../////

ஹி.ஹி.ஹி.ஹி என்ன ஒரு வசிகள் இதுதான் பதிவின் ஹைலைட்ஸ்

மாங்காய் திருடாத பசங்க ஊரில் யாரும் உண்டோ....திருட்டு மாங்காயில் அப்படி ஒரு ருசி

அருமையான பதிவு

குட்டிப்பையன் said... Best Blogger Tips

ஊரில் நானும் நண்பர்களுடன் திவ்யா வீட்டு மாங்காயை திருடி அப்பறம் திவ்யா என் மனதை திருடி....பின் இந்த பழம் புளிக்கும் என்று சொல்லிவிட்டு தலைதெறிக்க ஓடின சம்பவம் எல்லாம் குட்டிப்பையனுக்கும் இருக்கு மாம்ஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் மாமோய்,
என்னது மாங்காய் புடுங்கப் போயித் தான் மாமியை கட்டி வைச்சாங்களா?

ஹே...ஹே..

நிரூபன் said... Best Blogger Tips

கள்ள மாங்காய் நினைவுகள் எப்போதுமே மறக்க முடியாது. அதனைச் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் தொகுத்திருக்கிறீங்க.

வன்னியில நட்டாங்கண்டலில் நாம கள்ள இளநீர் குடிச்சிருக்கோம், கள்ள கோழி அடிச்சிருக்கோம்!
ஹே...ஹே..

Unknown said... Best Blogger Tips

நலமா நண்பரே!

பதிவு, பழைய சோறும்
கட்டித் தயிரும் போல சுவைத்தது!
இப்போதெல்லாம் இந்த ஏழைப்
புலவனை,வயதான கிழவனைப்
பார்க்க வருவதேயில்லை!
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

காட்டான் said... Best Blogger Tips

சி.கருணாகரசு said...
மதிப்பிற்குரிய திரு காட்டான் அவர்களே.....

நீங்க உங்களுக்கான காட்டான் அடையாளமாய் ஒரு வேளாண்மை பெரியவரின் படத்தை அமைத்துள்ளீர்கள்.
எங்க பகுதி வேளாண்மக்கள் வயலுக்கு செல்லுகையில் இப்படிதான் செல்வார்கள்.... ஆனால் அவர்கள் தன்மானமிக்கவர்கள்... நல்லவர்கள் . அவர்கள் முழுக்கால் சட்டை அணிந்தோ மிடுக்கான உடையணிந்தோ செல்ல இயலாது... எங்களின் நிலத்தின் தன்மை அப்படி.

அப்படியிருக்க ஒரு நல்ல வேளாண்குடிமகனை இப்படி “காட்டான்” என் காட்டுவது சரியா? அல்லது முடுக்காக உடுத்தியவர்கள் எல்லாம் மிக நல்லவர்களா?

இது நெருடலாகப் பட்டது எழுதினேன் .

புரிந்து கொள்வீர்கள் என்ற நப்பிக்கையோடு.... நன்றி.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
மதிப்பிற்குரிய சி.கருணாகரசுவிற்கு...!!
உங்களுக்கான பதிலாக என் மதிப்புற்கிற்குரிய அண்ணன் எனது பதிவில் போட்ட ஒரு பின்னூட்டத்தை இங்கு அப்படியே தருகின்றேன் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

Yoga.s.FR said...
காட்டில் வாழ்பவன் காட்டான் அல்ல!எங்கள் பாரம்பரிய சொல்லடை புரியாதவர்கள் அப்படித் தான் பேசுவார்கள்!எங்கள் காணிக்கு(நிலம்)செல்வது,வயலுக்கு செல்வது,தோட்டத்துக்கு செல்வதை காட்டுக்கு செல்வது என்று சொல்வதுண்டு!
<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>> வருகைக்கு நன்றி சகோதரரே..!

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

//பள்ளிகூடத்தில யாராவது தம்பிராசா தோட்டத்தில கொய்யாக் காய் களவெடுப்போமா என்றால் முதல் ஆளா சண்டைக்கு போயிடுவம் நாங்க அவர் தோட்டத்து அறிவிக்க படாத காவலாளிகள்..!! :-)//

அடப்பாவிகளா.. இது நூதனத்திருட்டால்லா இருக்கு.. ஹி ஹி

பதிவு அருமையிலும் அருமை. நிறைய ஞாபகங்களும் இருந்தது சிரிப்பும் இருந்தது.

அம்பலத்தார் said... Best Blogger Tips

வீட்டுத்தொட்டத்தில் எத்தனை காய் இருந்தாலும் அடுத்தவன் தோட்டத்திலை திருடித்தின்கிற ருசியே தனி ருசி. ஞாபகம்வருதே ஞாபகம்வருதே..... பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டு ஏக்கத்தை உண்டுபண்ணிவிட்டியள் காட்டான்.

அம்பலத்தார் said... Best Blogger Tips

//இன்றும் பழைய நண்பர்களை கண்டால் 'நாங்கள் யார்? கந்தையருக்கே ஆப்படிச்சோம்; என்று பெருமை பேசுவோம்.// ஒவ்வொரு ஊருக்கும் இதுபோல கந்தையருகளும் வால்பசங்களும் இருப்பாங்க

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

ஹா ஹா ஹா ஹா மலரும் நினைவுகள் அருமை...!!!

Unknown said... Best Blogger Tips

கலக்கல்ஸ் அங்கிள்! :-)

Mathuran said... Best Blogger Tips

காட்டான் மாமா!! அப்படியே வரிக்கு வரி மண்வாசனை அள்ளிக்கொண்டு போகிறது... கலக்கல்

Yoga.S. said... Best Blogger Tips

இரவு வணக்கம்,காட்டான்!அருமையாக முன்னைய நினைவுகளை மீட்டி ஊருக்குக் கூட்டிச் சென்றிருக்கிறீர்கள்!தாங்க்சுப்பா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said... Best Blogger Tips

//நொச்சி இலை- ஒருவகை மூலிகை ,ஆடுதொடா இலை//

நொச்சியிலை- ஒரு வகை மூலிகையே, வாதசம்பந்தமான நோக்கு ஆயுள்வேத வைத்தியர் இதை
அவித்த நீரில் குளிக்கும்படி கூறுவார்கள்.
ஆடாதோடை எனும் ஆடுதொடா இலை என்பது வேறு , இதைப் பாவட்டை எனவும் கூறுவர். இதுவும் ஆயுள்வேத மூலிகையிலையே!நொச்சி, ஆடாதோடை இரண்டும் உருவத்திலும், மணத்திலும் வித்தியாசமானது. நொச்சியிலை வாள் போன்ற ஓரமில்லாத வேப்பிலை அளவானது, ஆனால் ஆடாதோடை மாவிலை அளவானது. உருவமும் மாவிலை போன்றது.
நொச்சியிலை மணம் விரும்பத்தக்கது.
ஆடாதோடை- ஓங்காளம் வரவைக்கும் மணமுடையது.

மகேந்திரன் said... Best Blogger Tips

அன்புநிறை காட்டான் மாமா,
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே,,,

பள்ளிக்கூடத்துக்கு கட் அடிச்சிட்டு நாள் முழுதும்
தென்னைமரத்தின் மேலேயே குடிகொண்டு
இருந்ததை ... கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள்.
இறங்க மாட்டேன். அங்கே என்னவெல்லா கிடைக்குதோ அத்தனையும்
சுவைத்து பார்த்துருவேன்..
"ஒரு முறை தேள் கடியும் கிடைத்தது"

மகேந்திரன் said... Best Blogger Tips

""தோட்டம் விளைய முன்னரே எங்களை அவர் தோட்டத்து திருடர்களாகவே முடிவு செய்து காய் நகர்த்துவார்.."""

அவங்க என்ன வேலி போட்டாலும் நாங்க தாண்டிருவோம்ல...

மகேந்திரன் said... Best Blogger Tips

""'என்ர தோட்டத்தில் திருடியவன் கை விழவேணும்' என்று சுடலை வைரவருக்கு மூன்று இழை கட்டி இருக்கேன்."""

அந்த பருவத்தில் அந்த பேச்சு எல்லாம் நமக்கு ..விடுடா இதெல்லாம் நமக்கு சாதாரணம்
என்று தோன்றினாலும், இப்போது நினைத்தால் வலிக்கிறது மனசு..

மகேந்திரன் said... Best Blogger Tips

அப்படியே
பழைய நினைவுகளுக்கு கைபிடித்து கூட்டிப் போற மாதிரி
இருந்தது மாமா, இந்தப் பதிவு.
படித்து முடிந்ததும் மனதிற்குள் மகிழ்ச்சியும்
அதே நேரம் கனமும் கூடியது...

எஸ் சக்திவேல் said... Best Blogger Tips

அருமையான பதிவு.

அடியேனின் வேண்டுகோள், "இந்தக் 'ஹீ ஹீ' இனைக் குறையுங்களேன்"

It is over-used (by all boggers)

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!