Tuesday, 27 December 2011

பனம் பழமும் பசுமையான நினைவுகளும்!

ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்களே,
வணக்கம்,
உங்கள் ஈழ வயலில் மீண்டும் ஒரு பனங்காய் பதிவு:
"பனம் பழம்"என்றவுடன் உங்கள் அனைவரின் நாவிலும் எச்சில் ஊறுகிறதா?வாழ்க்கையில் ஒரு தடவையேனும் பனம்பழத்தை ரசித்திருந்தால் கட்டாயமாக எச்சில் ஊறி இருக்கும்."எட்டாக்கனி புளிக்கும்" என்பார்கள்.உண்மையில் நகரவாசிகளாகிவிட்ட எங்களுக்கு பனம் பழம் எட்டாக்கனி தான். ஆனால் புளிப்பு அல்லது ஒரு விதமான இனிப்பு மற்றும் கசப்பு சுவைகளின் கலவை தான் இந்த பனம்பழம். பனைமரம் இல்லாத ஊர்களைக் காணக் கிடைப்பது அரிது இலங்கையின் வட கிழக்கில்.
Borassus ake-assii MS 1315.JPG
பெரும்பாலும் இரவு வேளைகளில் தான் பனம்பழம் விழுவதாக சொல்லிக்கொள்வார்கள். சில சமயம் பகல் வேளைகளில் விழுந்தால் ஊர் மாடுகள் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவதால் ஊரில் உள்ள பனம் பழப் பிரியர்களின் கைகளுக்கு பனம் பழங்கள் சிக்காமல் போயிருக்கலாம். (ஊர் மாடுகள் என குறிப்பிட்டது உண்மையான மாடுகளை). அதிகாலை ஐந்து ஐந்தரை மணிக்கு எழும்பி பனை மரங்களை நாடிச்செல்வது ஊர் மக்களின் வழக்கம்.இதற்கான காரணங்களாக காலைக் கடன் கழிக்கச் செல்வதும், பனம் பழம் பறிக்கச் செல்வதும் அமைந்து கொள்ளும்.

கொஞ்சம் நேரம் பிந்திச் சென்றாலும் பனம்பழம் சிக்காது.அயல் வீட்டுக்காரன் ஆட்டையை போட்டிருப்பான். அல்லது மாடுகள் சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கும். கொட்டையை பொறுக்கிக்கொண்டு வரவேண்டியது தான். வீட்டுக்கு பக்கத்தில் பனை மரங்களும் இருந்தால்,அதிகாலை தொப்பு தொப்பென்று பனம்பழம் விழுகின்ற சத்தம் கேட்கும். கேட்ட மாத்திரத்தில் எழும்பி ஓடிவிட வேண்டும் ஏன் என்றால் பக்கத்து வீட்டுக்காரனுக்கும், அதிகாலை வீதியில் மாடுகளுடன் செல்பவர்களுக்கும் நிச்சயம் அந்த சத்தம் கேட்டு அவர்களும் உஷாராகி பனை மரத்தை நோக்கிப் படையெடுத்து விடுவார்கள்.

நன்றாக பழுத்த பனம்பழம் ஒரு வாசம் வீசும் பாருங்கள் அம்மம்மா!!அம்மம்மா தான் எனக்கு பனம்பழம் சுட்டு தந்தவா. அவர்களின் கைப் பக்குவம் இந்தக்காலத்து பெண்களிடம் இம்மியளவுக்கும் இருக்காது என்பது கல்யாணமான பதிவர்களுக்கே வெளிச்சம்! பனம் பழம் ஒன்றின் உள்ளே மூன்று கொட்டைகள் இருக்கும்(நான் சாப்பிட்ட அத்தனையிலும் மூன்றுதான் இருந்தது). நல்ல ஊதிப்பருத்த பனம்பழம் செம கனம் கனக்கும்.இரண்டு தொடக்கம் மூன்று கிலோ வரை தேறும். அப்படியானவற்றில் ஒரு பனங் கொட்டை சூப்பினாலே வயிறு நிறைந்து விடும். ஹிஹி கடைசியாக பனம்பழம் ருசித்தது எனது பத்து/ பதினோரு வயதில் .அப்போது ஒன்று போது மானதாய் இருந்தது. 

பனங்காய் பழுத்து விழும் வரைக்கும் பொறுமை இல்லாதவர்களும், கள்ளு குடிக்க விருப்பமில்லாத பெரும்பாலானவர்களுக்கும் "நுங்கு"மேல் கொள்ளை ஆசை. பனம் பழம் இளங் காய்களாக இருக்கும் போது அதன் உள்ளே இருக்கும் திரவத் தன்மையான பதார்த்தம் தான் நுங்கு. இனிப்பாக இருக்கும். நாங்களும் கள்ளு அடிக்கிறோம் என்ற நினைப்பில் - இறுமாப்பில் அடிப்பவர்களுக்கு சற்று கிக்கையும் தரக்கூடியது இந்த நுங்கு.பெரும்பாலான வீடுகளில் நுங்கு குடிக்க சிறுவர்கள் ஆசைப்பட்டாலும் பெருசுகள் விடுவதில்லை. காரணம் பனம்பழம், மற்றும் அதன் கொட்டைகளை வைத்து பெறக் கூடிய பனங் கிழங்குகளுக்கும்
அதைப் பின் தொடர்ந்து வரும் புழுக் கொடியலுக்கும் (ஒடியல்) ஆகும்.
பனம்பழம் சுட்டு சூப்பிச் சாப்பிட்ட பின்னர் மிச்சம் (எஞ்சிய) வந்த பனங் கொட்டைகளை பாத்தி ஒன்று செய்து அதில் முளை வரும் வரையில் வைத்து பனங்கிழங்கு எடுப்பார்கள். அதனை அவித்து தோலுரித்து சாப்பிடுவார்கள் பனம் பழ சீசன் முடிந்த பின்னர் தான் இந்த பனங் கிழங்கு இழுத்தல் இடம் பெறும். .அந்த சீசன் முழுவதும் சேர்க்கப்பட்ட பனங் கொட்டைகளை கொண்டு பாத்தி அமைத்து நிலத்தினுள் புதைத்து சிறிது காலத்தின் பின்னர், முளை வந்ததும் பனங் கிழங்கு கிண்டுவார்கள். இந்த பனங்கிழங்கு ஒரு சில வாரங்கள் வீடுகளில் களை கட்டும். தேவையான பனங் கிழங்கை சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை இரண்டாக வெட்டி வெய்யிலில் காயப்போடுவார்கள். 

இந்த வெய்யிலில் காயப்போடுவது ஒரு பெரிய வேலை. அதுவும் சில வாரங்கள் தொடர்ச்சியாக காயப் போட வேண்டும். .காக்கா, குருவி ஆடு மாடு வாய் வைக்காமல் பாதுகாத்த பின்னர் பனங்கிழங்கு எல்லாம் காய்ந்து இறுக்கமாக வரும் இறுதி அம்சம் தான் இந்த புளு(ழு)க் கொடியல் (ஒடியல்.இந்தப் புளுக்கொடியல் தான் ஊர்களில் நொட்டுத்தீனி நொறுக்குத்தீனி எல்லாமே!மாலை நேரங்களில் ஆளுக்கொரு புளுக் கொடியலுடன் கொறிக்க தொடங்கி விடுவார்கள் நம்மவர்கள். இந்த புழுக்கொடியல் பெரும்பாலும் அடுத்த பனம்பழ சீசன் வரைக்கும் பனை மரத்தை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்!!
இவ்வாறு ஒரு வருடத்தின் எந்தப் பகுதியாக இருந்தாலும் பனம்பழத்தின் உப உணவுகள்(By products ) வீட்டில் காணப்படுவது தவிர்க்கமுடியாதது. இந்த பதிவில் பனம்பழம் மூலம் செய்யப்படும் பனங்காய் ப்பணியாரம் பற்றி எதுவும் கூறவில்லை. ஏற்கனவே ஈழ வயலில் ஓர் பதிவினூடாக சகோதரன் மதுரன் அவர்கள் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அதனைப் படிக்க ஆர்வமுள்ளோர் இங்கே கிளிக் செய்யவும். 

பனையும் தென்னையும் தங்களது உடலில் அத்தனையையும் மனிதர்களுக்காய் தாரை வார்ப்பன. வேண்டியதெல்லாம் தருவதால் தான் பூலோக கற்பகதரு என்று சிறப்பிக்கின்றோம். இத்தகைய பயன்களை கொண்ட பனை தென்னை வளங்களானது போராலும் ஏலவே அழிக்கப்பட்டதோடு, தற் காலத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களாலும் கண்முன்னே அழிக்கப்பட்டு வருவதால் இவ் இயற்கை வளங்கள் அருகி வருகின்றமையானது மனதைக் கனக்க வைக்கும் ஓர் விடயமாக உள்ளது. 

மீண்டும் மற்றுமோர் பதிவினூடான உங்கள் மனங்களோடு இணைந்திருக்கும் வரை, நன்றியுடன் விடை பெற்றுக் கொள்பவர்,
மைந்தன் சிவா. 

21 comments:

Riyas said... Best Blogger Tips

பனம் பழம் தொடர்பாக எழுதி சிறு வயது ஞாபகங்களை கிளரிவிட்டீர்கள்.. பனம் பழம்,ஒடியல், பனங்காய் பனியாரம் இவ்ற்றுக்கு நானும் ரசிகன். அதுவும் ஒடியல் எப்போதும் கொறித்துக்கொண்டேயிருக்கலாம்.

மகேந்திரன் said... Best Blogger Tips

பனைமரம் பற்றிய பதிவைப் படித்தவுடன்
மனதுக்கு சிறகு முளைத்து சிருபிராயத்துக்கு
பறந்து விட்டது நண்பரே.
அது ஒரு கனாக்காலம்....

மகேந்திரன் said... Best Blogger Tips

எழுத்துக்கள் தெளிந்த நீரோடை போல
அழகாக சிந்தையை சுண்டி இழுத்துச் செல்கிறது.

Jana said... Best Blogger Tips

பூலோக கற்பக தரு எனச்சும்மாவா சொன்னார்கள்! பகிர்வுக்கு நன்றி மைந்தன் சிவா

ஆகுலன் said... Best Blogger Tips

why this கொலைவெறி......
வாய் ஊருது..ஆனா இங்கு கிடைக்காது..

துஷ்யந்தன் said... Best Blogger Tips

மைந்து ஒடியல் கடிக்கணும் போலவே இருக்கு :(((

ஆசையை கிளறி விட்ட இந்த பாவம் உம்மை சும்மா விடாது ;(

துஷ்யந்தன் said... Best Blogger Tips

யோவ் பனம்பழம் அவ்ளோ நல்லாவா இருக்கும்!!!!!! நானும் சின்ன வயசில் சாப்புட்டு இருப்பேன்... ஆனா இப்போ நினைவு இல்லைப்பா :(
சூப்பர் பதிவு மைந்து

KANA VARO said... Best Blogger Tips

புலம் பெயர்ந்து இருக்கிற நேரம் பார்த்து பணம் பழம், புழுக்கொடியல் என கடுப்பெத்துறான்கள்

ஹேமா said... Best Blogger Tips

இவ்வளவும் சொல்லி சுவையைக் கற்பனையில் தந்த நீங்கள் பனாட்டைப் பற்றிச் சொல்லாமல் விட்டிட்டீங்களே சிவா !

குட்டிப்பையன் said... Best Blogger Tips

அட அட ஊரில் பனம் பழம் புடுங்க போனது,நொங்கு களவாண்டு மாட்டுபட்ட நினைவுகள் எல்லாம் இந்த பதிவை படிக்கும் போது வருது....
அருமை

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் மச்சி
பனை வளத்தின் அருமை பெருமைகளைச் சொல்லும் பதிவில் முக்கியமான ஓர் விடயத்தினைத் தவற விட்டு விட்டீங்க.

புளுக் கொடியலில் இருந்து துவையல் செய்து சாப்பிடுவார்களே. அது பற்றிச் சொல்லவில்லையே..

புளுக் கொடியலைச் சிறு சிறு துண்டுகளாக முறித்து அல்லது உடைத்து நறுக்கி உரலில் போட்டு இடித்து தேங்காயும், சீனியும் சேர்த்து துவையலாகச் சாப்பிடுவார்கள்.

அத்தோடு கூழுக்கும் ஒடியல் மா பயன்படுத்துவார்கள்.

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said... Best Blogger Tips

பனங்காய் பணியாரத்தின் ருசியை அடிக்க எதுவும் இல்லை... வெளிநாட்டு தமிழர்களுக்கு ஏற்றுமதி செய்தால் பெரிய லாபம் பார்க்கலாம்..

இன்று என் பதிவு;;; அம்பலத்தாரும் கந்தையாண்ணையும்

theepika said... Best Blogger Tips

அழகான அந்தப் பனைமரம்
அடிக்கடி நினைவில் வரும்.
அடிக்கடி நினைவில் வரும்.

அன்னைத் தமிழீழ மண்ணே உன்னை
மறப்பேனா நீ என் அன்னை.

அன்று முற்றத்தில அழித்து அழித்து நான்
ஆனா எழுதிய மண்ணல்லவா.-இன்று
நான் பாடும் பாட்டும் என் தாய்மண்
என்னுள் இசைக்கின்ற பண்ணல்லவா.
----- ----- -----

பனைமரத்தின் அழகை தன்னுள் பதிவு செய்த அழகான பாடலின் இணைப்பை கீழே தருகிறேன். காசி ஆனந்தனின் வரிகளை இசையமைத்து பாடியவர் செல்லப்பா. பாடலுக்கு நடித்தவர் மறைந்த புலிகளின் குரல் கலைஞர் நாட்டுப்பற்றாளர் V.T.A.விசுவா.

ஏக்கம் நிறைந்த வலிதரும் வரிகளும் காட்சிகளும்..இந்த இணைப்பில்..
http://www.pulikal.net/2010/09/blog-post_27.html

தீபிகா.

sasikala said... Best Blogger Tips

கொஞ்சம் நேரம் பிந்திச் சென்றாலும் பனம்பழம் சிக்காது

மீண்டும் எங்கள் கிராமிய வாழ்கையை திரும்பி பார்க்க வைத்ததற்கு நன்றி .

காட்டான் said... Best Blogger Tips

புழுக்கொடியல் மாவோடு தேங்காய் பூவும் சீனியும் கலந்து சாப்பிட்ட என்னை மீண்டும் அந்த காலத்தை நினைக்க வைத்து விட்டீர்கள்.!!

காட்டான் said... Best Blogger Tips

பணம் பழத்தை பிழிந்து வெய்யிலில் காயவைத்து பிணாட்டு செவார்களே அருமையான சுவை அதை வருடம் முழுவதும் வைத்திருந்து சாப்பிடலாம்..!!

காட்டான் said... Best Blogger Tips

ரியாஸ்,துஷி..
எனக்கு தெரிந்து ஒடியலை நேரடியா சாப்பிட முடியாது அதை அரைத்து மாவாக்கி கூழுக்கு போடுவார்கள். பனங் கிழங்கை அவித்து காயப்போடுவதுதான் புலுக்கொட்டியல் அதை தான் நேரடியா சாப்பிடலாம்..!!

ஆனா சில இடங்களில்புளுக்கொடியலை ஒடியல் என்றுதான் அழைக்கிறார்களோ தெரியாது...!!! எப்படியோ பனையில் கழிவே இல்லை அது ஒரு கற்பக விருட்சம்...)

திருமகள் said... Best Blogger Tips

மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்ததும் நியூட்டன் புவிஈர்ப்பு விசையை மட்டும் கண்டுபிடித்தார்..
மரத்தில் இருந்து பனம்பழம் விழுவதைப் பார்த்ததும் நாங்க எத்தனை விடயத்தை கண்டுபிடிச்சிட்டம்...!!!
சும்மா சொல்லகூடாது ..எங்களுக்கு கொஞ்சம் மூளை அதிகம்தாம்பா :)

மாலதி said... Best Blogger Tips

பனம் பழம் தொடர்பாக எழுதி சிறு வயது ஞாபகங்களை கிளரிவிட்டீர்களஅது ஒரு கனாக்காலம்

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

அருமை மைந்தன், பனம் பழமும் எங்கள் பசுமையான நினைவுகளும் அழகாக ஞாபகம் வந்து போகிறது உங்கள் பதிவில். அதிகாலையில் அந்த பனம் பழம் பொறுக்கச் சென்ற ஞாபகம் இன்னும் இருக்கிறது.. வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said... Best Blogger Tips

பனம்பழ மகாத்மியங்களை சொல்லி பழைய ஞாபகங்களை கிளறிவிட்டியள் சிவா.
என்ரை ஆச்சி அவித்த ஒடியல்பிட்டின் சுவையும் கூழின் சுவையும் இன்னமும் மறக்கமுடியவில்லை.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!