Wednesday 28 March 2012

துகிலுரியப்பட்ட கட்டங்களும், வீதிகளும் கோரத்தின் எச்சங்களாய்..

இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
2010ஆம் ஆண்டு ஏ-9 நெடுஞ்சாலை மீண்டும் திறந்த சில மாதங்களின் பின்னர் வன்னியூடான எனது பயணத்தின் சில அனுபவங்கள் கவிதை வடிவில்,
கண்ணுக்கெட்டிய தூரம்
வரையில்
கால அரக்கனின்
நினைவுச் சின்னங்கள்..
துகிலுரியப்பட்ட
வீடுகள்
கட்டடங்கள் எச்சங்களாய்...!!
களி மண் சகதியால்
குளிப்பாட்டப்பட்ட வடலிகள்..!

சேவைக்கால மூப்பு காரணமாக
ஓய்வு வழங்கப்பட்ட
பெரிய நீர்த்தாங்கி
மல்லாக்காய் படுத்து
மீளாத்துயில் கொள்கிறது..!
எல்லையற்ற காணிகள்..
பிடிப்பற்ற வாழ்க்கை..
துளிகளாக சிலர் கண்களில்..!

தூக்கத்தை
கெடுப்பதற்கென்றே
உருவாக்கப்பட்டது போல்
யாழ்-கொழும்பு நெடுஞ்சாலை..
இனிய பாடல்கள் தாலாட்டிய போதும்
தூக்கம் கைக்கெட்டவில்லை..!!

ஒரு அரச மரம்
விட்டு வைக்காமல்
புத்தரின் அனுக்கிரகம்
அருகில்,
பாழடைந்த காளி கோவிலுக்கு
முத்தாய்ப்பாய் ஒரு
மின் வெளிச்சம் மட்டும்!

தனிமையில் வேதனை
அனுபவிக்கின்றன
மின்சார கம்பங்கள்
வீதி நெடுகிலும்..
அதனை எண்ணுவதில்
என் தனிமை
சலனப்பட்டது!

வா வா என
வரவழைத்த பனைகள் எங்கே?
தென்றல் வீசிய
தென்னந்தோப்புகள்எங்கே?
"நெல்லாடிய நிலமெங்கே"
பாடல் மனதை வருடியது..!!

வேதனைகளும் ரணங்களும்
மனதில்..
இயற்கை ரசிகனுக்கு
ஏமாற்றமே மிச்சம்!
நானொன்றும் செயற்கை அழிவுகளின்
ரசிகன் இல்லையே!

பக்தி பரசவத்தில்
பயணத்தை 30 நிமிடம்
தாமதிக்க வைத்த கனவான்களும்
மாற்றான் இடத்தினுள்
தங்கள் தலையை புகுத்தி
படுத்த நண்பர்களுமாய்
பயணம்!!

எண்ணக்கிடக்கைகள்
ஏராளம்..
முடிந்தால் வந்து
என் மனதை படியுங்கள்
அரவமற்ற இராப்பொழுதில்!!

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
மைந்தன் சிவா.

3 comments:

ஆத்மா said... Best Blogger Tips

மாமரத்துக் குயிலே என் வீடு இன்னும் இருக்கிறதோ....இந்த பாடல் ஞாபகத்துக்கு வருகிறது தோழா....அருமையான கவிதை

Anonymous said... Best Blogger Tips

எ ஒன்பது வீதியால் பயணிக்கும் பலரின் மன ஓட்டத்தை மைந்து படம் பிடித்து காட்டி விட்டார்....

ஹேமா said... Best Blogger Tips

வாசிக்கவே மனம் கனக்குது.கண்டு அனுபவிப்பவர்களின் மனப்புளுங்கல்...நினைச்சுப் பார்க்கவே முடியேல்ல சிவா !

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!