Sunday, 18 March 2012

செத்தவீட்டில் சந்தோசப்படலாமா?

இணையத்தினூடே ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் மீண்டும் இந்தக் குந்தவையின் அன்பு வணக்கங்கள்!

பிரிவு என்பது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. மனித வாழ்க்கையில் ஏதொவொரு கட்டத்திலாவது இந்தப் பிரிவை நாங்கள் எதிர்நோக்க நேரிடும். தற்காலிக பிரிவுகளே மனித மனங்களை வாட்டியெடுக்கும் போது நிரந்தரமாக நம்மை விட்டு ஒருவர் பிரிவதென்பது எவ்வளவு கொடுமையான விடயம். ஆனாலும் அதை ஜீரணித்துத் தான் ஆக வேண்டும். காரணம் அதுவே ‘பகவத்கீதை’யில் சொல்லப்படும் இயற்கையின் நியதி.

வாரம்தோறும் டி.வி களில் ‘ரியாலிட்டி ஷோ’ என்ற பெயரில் நடத்தப்படும் ஆடல், பாடல் நிகழ்வுகளின் ஒவ்வொரு சுற்றுக்களிலும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படும் போது, அந்தத் தொடரில் இருந்து பிரிகின்றோமே என்ற ஏக்கத்தில் அழுகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் வெளியூருக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ பிரிந்து செல்லும் போது தேம்பித் தேம்பி அழுவார்கள். கல்விக்கூடங்களில் நண்பர்கள் பிரியும் போது என்றுமே இல்லாத சோகம் அவர்களை வாட்டிக் கொள்ளும். இவற்றில் எல்லாம் ‘மீண்டும் சந்திப்போம்’ என்ற நினைப்பு இருந்தாலும் பிரிவுத் துயர் எங்களை வாட்டி விடும். நிரந்தரமாகவே ஒருவர் இப்பூவுலகை விட்டும், எங்களை விட்டும் பிரியும் போது அதன் தாக்கம் சொல்லில் அடங்காது.

ஒரு செத்தவீடு எப்படியிருக்கும். அங்கு எவ்வாறான அழுகை ஓலங்கள் எழும் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சிலர் உண்மையாகவே அழுவார்கள். பலர் நடிப்பில் அழுவார்கள். ஆக மொத்தத்தில் அங்கு அழுகையும், குமைச்சலுமே அதிகமாக இருக்கும். இந்த இடத்தில் எப்படிச் சந்தோசப்பட முடியும்.? ஏன் இவள் நடமுறைக்கு ஒவ்வாத ஒன்றைப்பற்றிக் கதைக்கத் தொடங்குகிறாள்? என யாராவது நினைக்கிறீர்களா? உங்களை கொஞ்சம் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றேன். உங்கள் இளமைப் பருவத்துக்கு…

உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், நீங்கள் சிறுவர் - சிறுமியராக இருந்த காலத்தில் கொஞ்சம் நெருக்கம் குறைந்த உறவினர்களின் மரண வீடுகளில் சந்தோசப்பட்டதில்லையா? நான் சந்தோசப்பட்டிருக்கின்றேன். என்னைப் போல் எல்லோரும் இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் இல்லாமலும் இருக்க முடியாதல்லவா? இந்தச் சந்தோசம் எதற்காக?

முக்கியமாக, இதைச் சாட்டாக வைத்து பாடசாலைக்கு ஒரு முழுக்குப்போடலாம். செலவு முடியும் வரை ஒரு நாலைந்து நாளைக்கு பாடசாலைப் பக்கமே போகத் தேவையில்லை. காய்ச்சலுக்கு இரண்டு நாள் பாடசாலை போகாவிட்டாலும், ‘ஏன் குளிசையைப் போட்டிட்டு வரவேண்டியது தானே! உனக்கு படிக்கிற எண்ணம் இருந்தா தானே!’ என ஆசிரியர்கள் திட்டுவார்கள். ஆனால் ஒரு செத்தவீட்டை, அதுவும் எங்கள் வீட்டில் நடந்தால் அதைக்காரணம் காட்டி பாடசாலை செல்லாவிட்டால் எங்களை ‘லீவு லெட்டர்’ கூட கேட்கமாட்டார்கள். எப்படியும் சிறுவயதில் ஊர்ப்பள்ளிக்கூடத்தில் தான் படிப்போம். ஆசிரியர்கள் கூட எங்கள் வீட்டில் இடம்பெற்ற செத்தவீட்டுக்கு வந்திருப்பார்கள்.

அது என்னவோ தெரியவில்லை, பாடசாலையைக் ‘கட்’ அடிக்கும் சந்தோசத்தைப் போல ஒரு சந்தோசம் அந்த வயதில் எங்களுக்குக் கிடைக்காது. இதேபோல் அரசாங்கம் ‘ஊரடங்குச்சட்டம்’ பிறப்பிப்பார்கள். 95இற்கு முற்பட்ட காலப்பகுதியில் நாங்கள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் ஊரடங்குச்சட்ட நேரம் வீதிகளில் திரிந்தால் பிளேனில் குண்டுவீசி விடுவார்கள் என்கின்ற பயம் இருந்தது. அதனால் வீட்டுக்குள்ளேயே இருப்போம். எங்களுக்கு பாடசாலை இல்லை என்ற மகிழ்ச்சி தானே! ‘இந்தக் கஷ்டத்துக்குள்ளும் பிள்ளைகளை எப்படியெல்லாம் வளர்த்து கரையேற்றப்போகின்றோம்’ என்ற கவலையெல்லாம் பெற்றோருக்குத் தானே! விடயம் தலைப்பை விட்டு வெளிய போற மாதிரிப்படுது. அதனால திருப்ப உள்ள வாறன்.
ஆங், எங்க விட்டன்.. ஓ! செத்தவீடு, செத்தவீடு முடிஞ்சதும் அடுத்த நாள் அல்லது அதற்கடுத்த நாள் ‘செலவு’ என்று ஒரு காரியம் செய்வார்கள். அதில் இறந்து போனவர்களுக்கு பிடித்த சகல உணவு வகைகளையும் படைப்பார்கள். அவர் ஆசைப்பட்டு சாப்பிட்ட சாப்பாடுகளில் இருந்து, அவர் ஆசைப்பட்டு சாப்பிடமுடியாமல் போன சாப்பாடு வரை வருவித்து படைப்பார்கள். இறுதியில் அதை உண்பது யார்? நாங்கள் தானே! அதுவரை வீதியால் போகும்போது வாயூறின சாப்பாடுகள் எல்லாம் அன்று எங்கள் வீட்டில் இருக்கும். பிறகென்ன ஒரு கட்டுக்கட்ட வேண்டியது தானே!

இந்தச் ‘செலவு’க்கு சொல்லவில்லை என பிரிந்த மாமன் - மச்சானும், சகோதர – சகோதரிகளும் எத்தனை பேரப்பா.. ஊரில் இந்த வறட்டுக் கௌரவங்களுக்கு என்றுமே குறைச்சல் இல்லை.

அதேபோல் செலவு முடிந்து அடுத்த நாளில் இருந்து 31ஆம் நாள் ‘தீட்டு’ கழிக்கும் வரை உறவினர்கள், நண்பர்கள் என விதம் விதமாக உணவு சமைத்துக் கொண்டு வந்து தருவார்கள். செத்தவீடு நடந்த வீட்டில் எப்படியும் சோக மயமாகத் தான் இருக்கும். சம்பவத்தை கேள்விப்பட்டு தினம் தினம் சனங்கள் வந்துகொண்டே இருக்கும். ஒவ்வொருவரையும் காணும் போதும் வீட்டிலுள்ள பெண்கள் கட்டிப்பிடித்து அழுவார்கள். இந்த அமளிக்குள் யார் சமைப்பது? அதனாலோ என்னவோ பண்டைய காலத்தில் இருந்தே இந்த இலவச சாப்பாட்டை புத்திசாலித்தனமாக எங்கள் முன்னோர் வைத்துவிட்டார்கள். பிறகென்ன அம்மாவுக்கும் வேலை ஈஸி, எங்களுக்கும் ஜாலியோ ஜாலி.

எனக்கு தெரிந்து நான் இவற்றையெல்லாம் அனுபவித்தது எனது அம்மம்மா, அம்மப்பா ஆகியோர் இறந்த போது தான். அப்பப்பா நான் பிறக்கமுதலே இறந்துவிட்டார். அப்பம்மா இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். சில நெருங்கியவர்களின் மரணங்கள் வெளிநாடுகளில் இடம்பெற்றதால் அந்த அனுபவங்கள் கிடைக்கவில்லை.

அம்மம்மாவின் செத்தவீட்டுக்கு பிறகு முதன்முதலில் இட்லியும், சாம்பாரும் கொண்டு வந்து தந்த என் அம்மாவின் மச்சாளை மறக்க முடியாது. சிலபேர் சாப்பாடு செய்வதற்கு ‘பஞ்சி’ பட்டுக்கொண்டு கடையில் வடை, ரோல்ஸ் என வாங்கிவருவார்கள். அது இன்னமும் எங்களுக்கு வசதியாகப் போய்விடும். சிலர் காசுக்கு ‘நப்பி’ பட்டுக்கொண்டு ஒரு இரண்டு கிலோ சீனி, இரண்டு கிலோ பருப்பு என வாங்கிவருவார்கள். ஆவலாக அவர்கள் தந்த பார்சலைப் பிரித்த நானும் எங்கள் வீட்டில் இருந்த வாண்டுகளும் மிகக் கவலையடைந்தோம். அம்மம்மா செத்தபோது கூட இவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டோம்.

கொஞ்சம் அமங்கலமான விசயமாக இருந்தாலும் இவ்வளவும் உண்மையோ இல்லையோ? நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள். இவையெல்லாம் எங்களுரில் தானே நடக்கின்றது. அதனால் ஈழவயலில் பதிவு செய்வதில் தப்பேயில்லை.

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புச் ஸ்னேகிதி,
குந்தவை

அரும்பதங்கள் 

ஓலம், தேம்பி அழுவது – ஆற்றமுடியாத கவலையில் அழுவது.
செத்த வீடு – மரண வீடு
குமைச்சல் - ஒருவித சங்கடமான அசாதாரண நிலமை
சாட்டு – காரணம்
முழுக்குபோடுதல் - செல்லாமல் விடுதல்
செலவு - இறப்பு இடம்பெற்றவர்களின் வீட்டில் இறந்தவர்களின் சாம்பலை கடலுடன் கரைத்த பின்பு செய்யும் காரியம்
பஞ்சி – அலுப்பு, சோம்பல்
நப்பி – கஞ்சத்தனம்

5 comments:

அம்பலத்தார் said... Best Blogger Tips

இந்தியாவில் வயதுபோய் நல்லா எல்லாம் அனுபவித்தபின் ஒருவர் இறந்தால் கல்யாணச்சாவு என்று சொல்லி சந்தோசமாக சாவீட்டை கொண்டாடி பிரேத ஊர்வலத்தையும் ஆடிப்பாடி ஊர்வலமாக எடுத்துச்செல்வார்கள்.

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

ஒரு தப்பும் இல்லை சிநேகிதி.. நல்லதொரு அலசல்... அம்மாம், உண்மைதான், பாடசாலைக்காலங்களில் பள்ளிக்கு கட் அடிக்குறதுக்கு என்ன காரணங்கள் எல்லாம் வருகிறதோ அவை அனைத்தையும் எமக்கு பிடித்துப்போய்விடும்.
பதிவிற்கு நன்றி.

Yoga.S.FR said... Best Blogger Tips

வணக்கம் குந்தவை!நல்லா எழுதியிருக்கிறியள்.கனகாலத்துக்கு முந்தி,எங்கட அயலுக்கை ஒரு செத்தவீடு!செத்தவற்ரை பேரனும்,நானும் "துப்பாக்கியே துணை"எண்டு ஒரு படம் பகல் "ஷோ"பாக்க வேண்டியதாப் போச்சு!ரிக்கற் அடிக்கட்டை என்ற காச்சட்டைப் பொக்கேற்றுக்கை கிடந்திட்டிது!பிறகென்ன இரவு ஷோ வும் நடந்திச்சு!!!!!சின்ன வயதிலை இதெல்லாம் நல்லாத்தான் இருந்திச்சு!எனக்கு அப்பு,ஆச்சி,பெரியம்மா,சித்தப்பா எண்டு "அருமையா"ன சாப்பாடு!இப்ப நினைக்கவும் வாயூறுது,ஹி!ஹி!ஹி!!!!

பராசக்தி said... Best Blogger Tips

சந்தோசமான இன்னுமொரு விடயம் கூட நடப்பதுண்டு. துக்கவீட்டில் இறந்தவரின் அருகிலே அழுதுகொண்டு இருக்கும் அல்லது, காரியம் யாவும் முடியும் வரை ஓடியாடி எல்லதேவைகளையும் இழுத்துப்போட்டு, துக்கத்தை அடக்கி மனோதிடத்துடன் திரியும், பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ கல்யாணப்பேச்சு தேடி வருவதும் நடந்திருக்கு. ஆண்டுதிதி எப்பவரும் என்று காத்திருந்து கல்யாணப் பந்தல் கட்டுவதும் சந்தோசம் தானே

பராசக்தி said... Best Blogger Tips

சந்தோசமான இன்னுமொரு விடயம் கூட நடப்பதுண்டு. துக்கவீட்டில் இறந்தவரின் அருகிலே அழுதுகொண்டு இருக்கும் அல்லது, காரியம் யாவும் முடியும் வரை ஓடியாடி எல்லதேவைகளையும் இழுத்துப்போட்டு, துக்கத்தை அடக்கி மனோதிடத்துடன் திரியும், பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ கல்யாணப்பேச்சு தேடி வருவதும் நடந்திருக்கு. ஆண்டுதிதி எப்பவரும் என்று காத்திருந்து கல்யாணப் பந்தல் கட்டுவதும் சந்தோசம் தானே!

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!