Tuesday, 27 March 2012

பால் குடித்து பீதியை கிளப்பிய பிள்ளையார் - ஓர் அலசல்!

இணையத்தினூடாக, ஈழவயலோடு இணைந்திருக்க வரும் அத்தனை சொந்தங்களுக்கும் அன்பான வணக்கங்கள்.
1995 ம்  வருடம் என்று நினைக்கிறேன் அப்பொழுது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்திருந்த இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வெற்றி மேல் வெற்றிக் குவித்துக் கொண்டிருந்த ஒரு காலக்கட்டம். எனக்கு 13 வயதளவில் தான் இருக்கும். கிரிக்கெட் வெறி தலைக்கேறியிருந்த சமயம் யாரேனும் நான் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கையில் சனலை மாத்தினார்கள் என்றால் தொலைந்தார்கள். இப்படி இருக்கும் போதுதான் கிரிக்கெட் காய்ச்சலை இலகுவாய் புறந்தள்ளிய அந்த சம்பவம் நடைபெற்றது.

"விஷயம் கேள்விப் பட்டீர்களா? இந்தியாவில் பிள்ளையார் பால் குடிககீராறாம் TV இல காட்டினார்கள்" என்று போகிற போக்கில் ஒருவர் சொல்லிப்போனதுதான் தாமதம் அனைவரும் தெரிந்த இடத்திலெல்லாம் பால் வாங்கிக் கொண்டு வழிப் பிள்ளையார்களுக்கு கொடுக்கத் துவங்கினார்கள். எத்தனை இடத்தில் பிள்ளையார் பால் குடித்தார்? எத்தனை லீட்டர் குடித்தார் என்ற புள்ளி விவரங்கள் தெரியவில்லை. ஆனாலும் போனவர்களில் அநேகமானோர் பரவசம் ததும்பிய முகத்துடன் வந்தனர்.

அப்போதெல்லாம் சிறுவானாயிருந்த நான் அதிகம் வாசிப்பது பக்திக் கதைகளைத்தான் அதுவும் அவற்றை வாசித்து இறைவனின் அற்புதங்களை பார்த்து வியந்து ஆண்டவனே நான் என்ன புண்ணியம் செய்தேனோ இந்துவாய் பிறந்திருக்கிறேன் என்று புளங்காகிதம் கொண்டிருந்த காலம். எனக்கும் பிள்ளையாருக்கு பால் கொடுத்து பார்க்கும் சிறிய ஆர்வம் தலைக்காட்டியது. வீட்டில் என் விருப்பத்தை சொன்னப் போது அதெல்லாம் ஆச்சாரமாய் செய்ய வேண்டியது என என் விருப்பத்துக்கு தடை போடப்பட்டது. ம்ஹ்ம் வீட்டிலுருந்து வெளியே போக வழியில்லை பாலுக்கும் வழியில்லை.

அப்போதுதான் எனக்கு நந்தனாரும், தின்னனாரும் ஞாபகத்துக்கு வந்தனர் அவர்களை விட பக்தியில் குறைந்தவனா நான் என்ற எண்ணத்தோடு திட்டம் ஒன்றை தீட்டினேன். எனது மச்சானும் என்னோடு இந்த செயற்றிட்டத்தில் இணைந்துக் கொண்டான். பூஜையறை சென்று அங்கிருந்த சிறிய பிள்ளையார் சிலையை வெளியே கடத்திக் கொண்டு வந்தேன். வீட்டுக் கொல்லைப் புறத்திலே கம்புகளை ஊன்றி கோயில் போல் அமைத்து அதற்கு யூரியா உரப்பையினால் கூரை அமைத்தோம். உள்ளே களிமண்ணை குழைத்து மேடை போல் அமைத்து விட்டு அதில் விநாயகரை வைத்தோம். பிறகு கிடைத்த பூக்களை எல்லாம் பறித்து அவர் மேல் தூவி விட்டு "ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை" எல்லாம் பாடி விட்டு பார்த்தால் அவருக்கு கொடுக்க பால் இல்லை. பூஜையறையில் இருந்து விநாயகரை கடத்தியது போல் சமையலறையில் இருந்து பாலை கடத்துவது அவ்வளவு எளிதான ஒரு விடயமாய் இருக்க வில்லை. என்ன கொடுமை கடவுளே இது என்று நொந்தவன் பின் மெல்ல மனதை தேற்றிக் கொண்டு அடியேனின் அன்பை அறியாதவரா கடவுள் கொடுப்பதை மனமுவந்து ஏற்பார் என்ற நம்பிக்கையுடன் spoon ஒன்றை கொண்டு வந்து எங்கள் வீட்டில் toilet போகும் போது தண்ணீர் அள்ள பீப்பாய் ஒன்று வைத்திருந்தனர். அதிலிருந்து சிறிது தண்ணீர் அள்ளி பிள்ளையாருக்கு கொடுக்க என்ன ஆச்சரியம் ஒரு சொட்டு விடாமல் அவ்வளவையும் உறிஞ்சிக் குடித்தார் பிள்ளையார்.

அதிசயம் பார்க்க ஆசைப் பட்ட என் மச்சான் " பாவம் பிள்ளையாருக்கு ரொம்ப தாகம் போல" என கூறி பிள்ளையார் மேல் பலியை போட்டு விட்டு மேலும்  தண்ணியை அள்ளி அள்ளி பிள்ளையாருக்கு கொடுக்கத் துவங்கினான். அசூயை படாமல் பொறுமையாக அவ்வளவையும் குடித்தார் பிள்ளையார். சாமி toilet தண்ணி என சந்தேகம் கிளப்ப முற்பட்ட மச்சானை "போடா பிள்ளையார் அப்படித்தான் எளிமையானவர் சாணத்தில் பிடித்து வைத்தாலே அவர் வந்து விடுவார். கோமயம் எலாம் அவருக்கு பிடித்த அபிஷேகப் பொருள் பார்வதி குளிக்கும் போது தேய்த்ததில் உருவான ஊத்தை தானேடா அவர் அதான் ரொம்ப விரும்பிக் குடிக்கிறார் என அவன் வாயை அடைத்தேன்.
அன்று முழுவதும் எல்லையில்லா ஆனந்தத்துடன்தான் இருந்தேன். பிறவிப் பெருங்கடலை கடந்து விட்டதாயும் இறைவனுடன் விரைவிலேயே நான் இரண்டறக் கலக்கும் நாள் வரப் போவதாயும் எண்ணிக் கொண்டேன்.

அப்போதுதான் இடியென தாக்கும் அந்த செய்திக் கிடைத்தது. அதாவது சில விஞ்ஞானிகள் ஏதோ நிறமூட்டிய பாலை கொடுத்த போது பால் சிலையில் துளியாக இருந்ததைக் கொண்டு மயிர்துளைவிளைவு மற்றும் மேற்பரப்பு இழுவிசை என்பவற்றின் ஊடாக ஏதோ விளக்கமளித்து விட்டனராம். திரவ மூலக்கூறுகளை பிணைத்திருக்கும் மேற்பரப்பிழுவிசையினால் (surface tension) புவிஈர்ப்பினையும் மீறி பால் மேலேத் தள்ளப் பட அங்கிருந்து மயிர்த்துளை விளைவினால் (capillary action) பால் தொடர்ந்தும் உள்ளே செல்கின்றது என்பதே இவ்விளக்கமாகும்.

விண்வெளியில் புவியீர்ப்பு புறக்கணிக்கத் தக்க அளவில் தொழிற்படும் இடத்தில் திரவப் பானங்களை பருக மேற்படி மேற்பரப்பிழுவிசையை அவர்கள் பயன்படுத்த நாம் பிள்ளையாரைப் பால் குடிக்க வைக்க பயன் படுத்துகிறோம் இன்னதென்று தெரியாமலே.தாவரங்களில் காழ் இழையம் வழியே தொடர்ச்சியாய் நீர் உட்செல்வதிலும் (சாற்றேறம்) மேற்படி விடயங்கள் பங்களிக்கின்றன.

விடுவோம் விரைவிலேயே கண்களில் இரத்தம் வழிதல், வீபுதி குங்குமம், தேன் வடிதல் போன்ற ஏதாவது செய்து பிள்ளையார் தன்னை நிருபிக்காமலா போகப் போகிறார்.

மீண்டும் மற்றும் ஒரு பதிவில் சந்திக்கிறேன்.
அன்புடன்;
ஸ்ரீதர்ஷன் 

3 comments:

பரமசிவம் said... Best Blogger Tips

மக்களின் அடிமுட்டாள்தனமான ஒரு மூட நம்பிக்கையைத் தகர்க்க அறிவியல் ஆதாரம் தந்த தங்களைப் பாராட்டுகிறேன்.
மிக்க நன்றி.

பழனி.கந்தசாமி said... Best Blogger Tips

பிள்ளையார் உங்கள் கண்ணைக் குத்தப் போறார்!!!

KANA VARO said... Best Blogger Tips

நாங்கள் இடம்பெயர்ந்த தருணம். மறக்க முடியுமா இவற்றை?

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!