Thursday, 26 January 2012

பால் ரொட்டியும், பாட்டி தந்த அடியும்!

இணையத்தினூடே ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் எல்லோருக்கும் அன்பு வணக்கம்! மீண்டும் மற்றுமொரு பதிவினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

”சமையல் பதிவுகளை எழுதுவதில் விரும்பமே இல்லை” என முதல் பதிவில் பீற்றியவள் மீண்டும் ஒரு சமையல் பதிவு எழுதுகிறாளே என நீங்கள் நினைக்கக்கூடும். ”அப்பப்ப தொட்டுக்க ஊறுகாய் போல..” எமது ஈழத்தின் வாழ்வியலோடு கலந்து விட்ட சில உணவுப் பண்டங்கள் பற்றிய விடயங்களை ஈழவயலுக்காக பகிர்ந்து கொள்ளுங்கள் என சில சொந்தங்கள் கேட்டதால் இதனை எழுதுகின்றேன். சமையலையும் தாண்டி இந்தப் பதிவில் தமிழர்களின் விசேட தினங்களில் பண்ணப்படும் (செய்யப்படும்) முக்கியமான ஒரு பலகார வகை பற்றி குறிப்பிடப் போகின்றேன். இது அவ்வளவு ருசியானதொரு பண்டமல்ல. ஆனால் கட்டாயம் இருக்க வேண்டிய பண்டம்.
பால் ரொட்டி எனும் பெயரே அதற்கான உள்ளீட்டு விளக்கத்தைக் கொடுத்து விடுகின்றது. தேங்காய்ப்பாலுடன் இணைந்த மா, அது ரொட்டி போல தப்பிய வடிவில் இருக்கும். அனால் இதைச் செய்து முடிப்பதற்குள் நாம் படும் அவஸ்தை இருக்கின்றதே... அப்பப்பா! அது சொல்லில் அடங்காது. பூப்புனித நீராட்டு விழா,திருமண வைபவம், புதுமனைப் புகுவிழா போன்ற மங்களகரமான விசேட நிகழ்வுகளின் போது பால்ரொட்டி நிச்சயம் செய்வார்கள். பொதுவாக தின்பண்டங்கள் உறைப்பு அல்லது இனிப்பாக இருக்கும்.ஆனால் இது பச்சைத் தண்ணீர் போல இருக்கும். எனவே சிறுவர்களுக்கு இதை கண்ணிலும் காட்டக்கூடாது. 

நிகழ்வுகளுக்கான முக்கிய பலகாரங்கள் செய்து முடித்ததும் இதனைக் கடைசியாகச் செய்வார்கள். ஏனெனில் படைப்பதற்கோ அல்லது ஆரத்தி எடுப்பதற்காகவோ தான் இதனை செய்வார்கள். அதுவும் வயது போன பாட்டிகள் தான் செய்வது அதிகம். அதைச் செய்து முடிக்கும் வரை பார்க்க கூடாது என சொல்லுவார்கள். மீறிப்பார்த்தால் பொங்காதாம். அதாவது அப்பளம் போல பொங்கி வரவேண்டும் என்பது பால்ரொட்டிக்கு எழுதப்படாத சட்டம். எங்கள் வீட்டில் இதை பாட்டி (அம்மாவின் அம்மா) செய்து தான் அதிகம் பார்த்திருக்கின்றேன். அவர் கொஞ்சம் சீக்கிரமாகவே சிவபதம் அடைந்ததால் பின்னர் அம்மா செய்யத் தொடங்கிவிட்டார்.

இதன் செய்முறையே கொஞ்சம் வித்தியாசமானது. வில்லங்கமானதும் கூட.. உடையல் அரிசியை (வெண் பொங்கலுக்கு பயன்படுத்துவது) நீரில் ஊறவைத்து அதனை உரலில் இட்டு இடிக்க வேண்டும். அடிக்கடி அள்ளி அள்ளி அரித்துக் கொண்டு கொஞ்சம் அரிசிப்பதத்தில் உள்ளதை மீண்டும் மீண்டும் இடிக்க வேண்டும். மாவாக சேர்வதை புறம்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கட்டத்திற்கு மேல் இடிக்க முடியாது. கைகளும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் எஞ்சும் குறுணல்களை ஒரு பானையில் இட்டு கொஞ்ச நீர் மற்றும் உப்பைச் சேர்த்து சூடாக்க வேண்டும். கட்டிபடாமல் அடிக்கடி கிளறி விடவேண்டும். இதனைப் ”புக்கை” காய்ச்சல் என்பர். (அப்பத்திற்கு மா குழைக்கும் போதும் இந்த முறையைப் பின்பற்றுவதுண்டு) புக்கைப் பதத்தில் வந்ததும் ஏற்கனவே குற்றி அரித்து வைத்திருக்கும் மாவில் இதனைக் கொட்டி தேங்காய்பாலையும் சேர்த்து தப்புவதற்கு ஏற்றது போல குழைக்க வேண்டும். 

மா பாத்திரத்தில் ஒட்டாமல் இருப்பதற்காக சிறியளவு எண்ணையும் சேர்க்கலாம். ஒரு சில மணி நேரங்கள் பாதுகாப்பாக வைத்து விட்டு பின்னர் ரொட்டி தப்புவது போல தப்பி எண்ணெயில் இடவேண்டும். ஒவ்வொரு பால்ரொட்டியின் அளவும் ரொட்டியளவுக்கு இல்லாமல் சிறிதாக தட்டைவடை சைஸில் இருக்க வேண்டும். இதனை முக்கியமாக பூப்புனித நீராட்டுவிழா, திருமண வைபவங்களின் போது பெண்களுக்கு ஆராத்தி எடுப்பதற்கு பயன்படுத்துவர். பால்ரொட்டியுடன் வேப்பிலையையும் சேர்த்து ஆரத்தி தட்டில் வைத்து மூன்றுமறை சுற்றுவார்கள். பின் பெண்ணின் தலைக்கு நேரே வைத்து கையால் பால்ரொட்டியை நொருக்கி நாலு திசைக்கும் எறிவார்கள். இதனைக் கூட வயதான (பாட்டி) பெண்களே செய்வார்கள்.

பால் ரொட்டியை ஆக்கி பொரித்து எடுக்கும் வரை பல பேர் பார்க்க கூடாது குறிப்பாக சிறுவர்கள் பார்க்க கூடாது என்பதில் பாட்டிமார் அக்கறையாக இருப்பார்கள்.
பால் ரொட்டியை நினைக்கும் போது நான் அடிக்கடி எட்டிப் பார்த்து பாட்டியிடம் வாங்கிய திட்டுத் தான் இன்றும் ஞாபகம் வருகின்றது. ஈழவயலுக்கு நன்றி. என் ஞாபக மீட்டலுக்காய்...!!

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கும் வரை
அன்புச் ஸ்நேகிதி,
குந்தவை.

அரும்பத விளக்கம்
பீற்றல் - ஒரு விடயம் பற்றி அதிகமாகக் கதைத்தல்
பண்டம் - பொருள்
தப்பிய வடிவம் – தட்டையான வடிவம்
பச்சைத்தண்ணீர் - சாதாரண குடிக்கும் நீர்
குறுணல் - அரிசிப்பதத்தில் உள்ள மா
பண்ணப்படும் - செய்யப்படும்

2 comments:

பழனி.கந்தசாமி said... Best Blogger Tips

திருஷ்டி கழிக்கும் முறை இங்கேயும் அப்படித்தான் நடக்கிறது. என்ன பார் ரொட்டிக்கு பதில் சாதத்தில் சுண்ணாம்பும் மஞ்சட்தூளும் கலந்து பிசைந்து வடை மாதிரி தட்டி உபயோகிப்பார்கள்.

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

ஞாபக மீட்டலுக்காய் அருமையான பகிர்வு.....!!

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!