Monday, 2 January 2012

கிளிநொச்சியில் கோடைக்கு குளிர்ச்சியூட்டிய காமதேனு!

ஈழ வயலின் இன்றைய பதிவினைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் குட்டிப் பையனின் இந் நேர வணக்கங்கள்;
ஈழத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈழவரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற நகரமாக விளங்குவது தான் கிளிநொச்சி. கிளிநொச்சி என்றதும் ஞாபகத்துக்கு வரும் விடயங்களில் காமதேனுவும் ஒன்று.
இவ் இடம் முதன்மைச் சாலை கிளிநொச்சி யின் பழைய தோற்றம்- அந்தோ தொலைவில் தெரியும் தண்ணீர் தாங்கி இன்று இல்லை! ஈழ வரலாற்றில் இந்த தண்ணீர் தாங்கிக்கும் உயிர் இருப்பின் கண்ணீர் கலந்த பல கதைகளைப் பேசும்!
1996ம் ஆண்டுக்கு முன் கிளிநொச்சியில் வாழ்ந்தவர்கள் அல்லது கிளிநொச்சிக்கு விஜயம் செய்தவர்கள் அனைவரும் இந்தக் காமதேனு என்ற பெயரை அறியாமல் இருந்திருக்கமாட்டார்கள்.கிளிநொச்சி நகரத்துக்கு வந்தால் ஒரு முறையேனும் காமதேனுவுக்கு போகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எனக்குத் தெரிய காமதேனுவின் தரத்திற்கும் சுவையிற்கும் நிகராக இன்றைய நவீன தொழில் நுட்பங்கள் நிறைந்த காலத்திலும் கிளிநொச்சியில் காமதேனுவினை விஞ்ச (மிஞ்ச) எதுவும் வரவில்லை என்றே கூறலாம். கிளிநொச்சி நகரத்தில் A9 வீதியில் அமைந்து இருந்தது காமதேனு.
நான் பிறந்து வளர்ந்த வாழ்ந்த இடம் கிளிநொச்சி என்ற படியால் காமதேனுவுக்கும் எனக்குமான உறவு அதிகம் என்றே சொல்லலாம்.கிழமையில் எப்படியும் ஜந்து அல்லது ஆறு தடவை அங்கே போய் விடுவேன். காமதேனுவுக்கு போவது என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். அப்ப மிகவும் சின்னப்பையன் என்பதால் எப்படியும் வீட்டில் அடம் பிடித்து அப்பாவுடன் போய் விடுவேன். என்னைப்போல சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காமதேனு அனைவரையும் ஈர்க்கும் ஒரு சொல்லாக மாறியிருந்தது.
சரி காமதேனு என்றால் என்ன என்று கேட்கிறீஙகளா? சொல்கின்றேன்  கேளுங்கள்.காமதேனு என்பது ஒரு குளிர்களி நிலையம். இதனைக் குளிர்பாண நிலையம் என்றும் சொல்லலாம்.குளிர்பாணத்தை விட குளிர்களிதான் காமதேனுவில் பிரபலம். 60 ரூபாய்க்கு ஒரு பெரிய கப் நிறைய குளிர்களியை வைத்து அதில் அழகாக பழங்களினால் அலங்காகரம் செய்து அதில் ஒரு வேபர்ஸ் (Wafers) பிஸ்கட்டினை சொருகி தருவார்கள். (இதனை ஸ்பெஷல் ஐஸ்கிரீம் என்றும் அழைப்பார்கள்) கடும் வெய்யிலில் அதை அருந்துவது தேவாமிர்தம் அருந்துவது போல இருக்கும். ஏன் என்றால் எம்மைப் பொறுத்த வரை பாட நூல்களில் படித்த தேவாமிர்தம் எனப்படும் சொல்லுக்கான சுவையினை நாக்கில் உணரச் செய்தது இந்த காமதேனு தான்!.
1996ம் ஆண்டில் அப்போதைய யுத்த சூழ் நிலையின் காரணத்தினால் மக்கள் இடம் பெயர்ந்து கிளிநொச்சி நகரை விட்டுச் சென்று 1998ம் ஆண்டு கிளிநொச்சியில் மீளக் குடியேறிய போது மீளவும் கிளிநொச்சி நகரத்தில் காமதேனுவும் இயங்க ஆரம்பித்தது. மீண்டும் காமதேனு பிரபலமாகத் தொடங்கியது. ஆனால் சிறிது காலத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை. தீடீர் என்று காமதேனு மூடப்பட்டது. அதன் குளிர்களியை ருசித்த பலருக்கு அது பெரும் கவலை தான். பின்னர் கொஞ்ச நாட்களில் அமுதசுரபி எனும் பெயருடன் அதே இடத்தில் குளிர்களி நிலையம் இயங்கத் ஆரம்பித்தது.
காமதேனு என்ற பெயரில் இருந்த நன்மதிப்பின் காரணமாக அது இயங்காமல் போனதால் அதன் குளிர்களியை சுவைக்க முடியாமல் போன பலருக்கு அதே இடத்தில் இயங்கிய அமுதசுரபி கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனாலும் காமதேனு அளவுக்கு அமுதசுரபி பிரபலம் அடையவில்லை. காலப்போக்கில் அமுதசுரபி குளிர்களி நிலையம் அமுதசுரபி பேக்கரி யாக மாற்றமடைய குளிர்களி நிலையம் முற்றாக மூடப்பட்டது. அதன் பின்னர் பல குளிர்களி நிலையங்கள் கிளிநொச்சியில் தோன்றினாலும் காமதேனு அளவிற்கு ஒன்றுமே புகழ் பெறவில்லை. மீளவும் ஒரு இடப்பெயர்வை 2008ம் ஆண்டில் கிளிநொச்சி மண் சந்தித்து. இதன் பின்னர் மீண்டும் மக்கள் தற்போது அ(இ)ங்கே குடியேறியுள்ளார்கள். இப்போதும் காமதேனு அமைந்திருந்த அந்த இடத்துக்கு செல்லும் போது பழய ஞாபகங்களில் இருந்து மீளமுடியவில்லை. சந்தோசமாக சின்ன வயதில் காமதேனுவில் குளிர்களி அருந்தியது மீண்டும் என் நினைவலைகளைத் தாலாட்டுகின்றது.
எனக்கு மட்டும் இல்லை கிளிநொச்சியில் காமதேனுவில் குளிர்களி அருந்திய அனைவருக்கும் அந்த ஞாபகம் வருவது தவிர்கமுடியாதது. காலவோட்டத்தில் காமதேனு என்ற பெயர் கொஞ்சம் கொஞ்சமாக பலருக்கு மறந்துவிட்டாலும்; அங்கே அருந்திய குளிர்களியின் சுவையினை பலராலும் என்றும் மறக்கமுடியாது. எத்தனை குளிர்களி நிலையம் கிளிநொச்சியில் வந்தாலும் காமதேனுவுக்கு நிகர் என்றுமே காமதேனு தான்!

காலப் பெரு வெளியில் கரைந்து போன நினைவுகளில் அழிக்க முடியாத நிழற்படமாக எம் நெஞ்சத்தில் இன்றும் நிழலாடுகின்றது காமதேனு!


அரும்பத விளக்கம்/ சொல் விளக்கம்:
குளிர்களி: ஜஸ்கிறீம்.
குளிர்பானம்: சோடா, சர்பத், கூல் டிரிங்க்ஸ்
அப்ப: அப்போது. 

மீண்டும் மற்றுமோர் பதிவினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை,
குதூகலம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி விடை பெற்றுக் கொள்வது;
என்றென்றும்
உங்கள் அன்பின்;
குட்டிப்பையன்.
நன்றி, வணக்கம்!


வெகு விரைவில்! உங்கள் அபிமான ஈழவயலில் ஓர் புத்தம் புதிய படைப்பாக, வித்தியாசமான எண்ணக் கருவினைத் தாங்கி உங்களை நாடி வரவிருக்கிறது "புலமும் தமிழும்"! 
காத்திருங்கள்! ஆவலுடன் எதிர்பார்த்திருங்கள்! 

15 comments:

கொண்டோடி said... Best Blogger Tips

நல்லதொரு நனவிடை தோய்தல். நானும் காமதேனுவில் குளிர்களி உண்டிருக்கிறேன். அற்புதமான சுவை.

காட்டான் said... Best Blogger Tips

அப்படியா..,? அங்கு நான் போனதேயில்லை.. அறிந்து கொண்டேன்..!!

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

ம்ம்ம்ம்... எனக்கும் ஒரேயொரு அனுபவம் இருக்கிறது.. நான் கிளிநொச்சி சென்றபோது எனது நண்பர் ஒருவரே இந்த காமதேனு பற்றிச் சொல்லி அங்கு அழைத்துப்போனார். குட்டிப் பையன் சொன்னதுபோல ஒருமுறை அங்கே சென்றிருந்தால் அதை மறக்கவே முடியாது.. பதிவிற்கு நன்றி தம்பி

ராஜ நடராஜன் said... Best Blogger Tips

குளிர்களி சொல்லாக்க பகிர்வுக்கு நன்றி.

சுவடுகள் said... Best Blogger Tips

பொருளாதாரத்தடை,மின்சாரமின்மை போன்ற சிக்கல்களால் எமது பகுதிகளில் ஐஸ்க்ரீம் என்பது இல்லாமலே இருந்த ஒரு தோற்றப்பாடு நிலவியது.அந்தக்காலத்தில் முதன்முதலாக சைக்கிளில் கொண்டுசென்று எல்லா இடங்களிலும் ஒரு வித்தியாசமான கோண்(CORN) ஒலியெழுப்பி ஐஸ்க்ரீம் விற்க ஆரம்பித்தது காமதேனுதான்.அதன் பிறகுதான் குளிரருவி,சுவையூற்று போன்ற குளிர்பான நிலையங்களெல்லாம் ஆரம்பிக்கப்பட்டு எல்லா இடங்களிலும் கிளைகளும் பெரிய அளவில் நிறுவப்பட்டன.
முதன்முதலாக எமது வீதியில் அந்த காமதேனு சைக்கிள் வந்த நாள் இன்றும் மனதில் நிற்கிறது.

ஹேமா said... Best Blogger Tips

நீங்கள் சொன்னதுபோல கடைவிளம்பரங்கள,பதாதைகள் எங்குமே தமிழால் நிரம்பியிருந்தது.அதுவும் ஒரு காலம் !

ஆகுலன் said... Best Blogger Tips

அண்ணே வர்றாபளை திருவிழாவில் குடித்ததாக ஜாபகம்.....

துஷ்யந்தன் said... Best Blogger Tips

குட்டிப்பையன்.... சந்தோஷமான பதிவுதான், ஆனால் படித்து முடித்ததும் பழைய நினைவுகளால் மனசு கனத்துவிட்டது :(
அது எல்லாம் ஒரு காலம்........ எவ்ளோத்தை இழந்துட்டோம் :(((

நிரூபன் said... Best Blogger Tips

இனிய வணக்கம் குட்டீஸ்..
அருமையாக அந்த நாள் நினைவுகளைக் கிளறியிருக்கிறீங்க.
காமதேனுவின் பின்னர் தோன்றிய ஏனைய குளிர்களி நிலையங்களால் கூட காமதேனுவின் தரத்தினை அடிக்க முடியவில்லை என்பது உண்மை தான்.

அதெல்லாம் ஒரு காலமப்பா, நன்றாக நினைவுகளை மீட்ட வைத்திருக்கிறீங்க.

நன்றிகளும், பாராட்டுக்களும்!

குட்டிப்பையன் said... Best Blogger Tips

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

KANA VARO said... Best Blogger Tips

காமதேனுவை மறக்க முடியுமா?

என் “இடம்பெயர் கால நினைவுகள்” தொடரில் கூட சுட்டிக்காட்டியிருந்தேன். அதென்னவோ தெரியவில்லை ஊரில் இருக்கும் போது ஐஸ்கிறீம் பார்லர் போறதெண்பது ஏதோ பெரிய விசயம் போல! கோடைக்கு இதமாக இருக்கும்.
ஊரில் ஐஸ்கிறீம் குடிக்க ஆசையா இருக்கும். ஆனால் காசு இருக்காது. ஒரு பழம் (5ரூபா) வாங்க காசில்லாமல் வாய்பார்த்த நாட்களெல்லாம் அதிகம். எங்கள் பாடசாலை விடும் நேரம் சந்திரா, றியோ இரண்டு வாகனங்களும் வந்து நிற்கும். நாவூறும்.

லண்டனில் ஐஸ்கிறீம் குடிக்க காசிருந்தும் குடிக்க மூட் வருவதில்லை. (குளிர் தான்)

Ramani said... Best Blogger Tips

நான் இதுவரை அறியாத தகவல் ஆயினும்
நீங்கள் சொல்லிச் சென்ற விதத்திலேயே
கமதேனுவின் சிறப்பை மிகத் தெளிவாகப்
புரிந்து கொண்டேன்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Yoga.S.FR said... Best Blogger Tips

வணக்கம் குட்டிப்பையா! நான் அங்கு சென்ற ஆண்டில்(2006)அந்த நிலையம் இருக்கவில்லை!பேரூந்து நிலையத்திலிருந்த ஒரு கடையில் குளிர்களி மகனுக்கு வாங்கிக் கொடுத்தேன்!இங்கிருந்து சென்ற மகனுக்கு அதுகூட தேவாமிர்தமாக?!இருந்ததாம்!!!ஹ!ஹ!ஹா!!!

அம்பலத்தார் said... Best Blogger Tips
This comment has been removed by the author.
அம்பலத்தார் said... Best Blogger Tips

அடடா குட்டிப்பையா, உங்க பதிவு சுவைமிகுந்த காமதேனுவின் குளிர்பானங்களை சுவைக்கும் இனிமையான அனுபவத்தை தவறவிட்டுவிட்டேன் என்ற ஏக்கத்தை உண்டுபணிவிட்டது

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!