Sunday, 15 January 2012

கரடியோட சண்டைபோட்ட அப்பு - அதிர்ச்சியூட்டும் அந்த நாள் அனுபவம்!


எனது ஆச்சியிடம் கதை கேட்பதற்கு அந்தக் காலத்தில் எனக்கு அலாதி பிரியம். எந்த ஒருவிடயத்தை விளக்கவும் அவரிடம் எதாவது ஒரு கதை இருக்கும். சமைக்கும்போது வீட்டுவேலைகள் செய்யும்போது தோட்டவேலைகள் செய்யும்போது என எப்பொழுதும் யாரவது ஒருவருக்கு ஏதாவது ஒரு கதை சொல்லிக்கொண்டே இருப்பார்.


ஆச்சிக்கு எப்படி இவ்வளவு கதைகள் தெரியுமென சிறு வயதில் நானும், நண்பர்களும், சித்தி பையனும், மச்சாளும் பலதடவைகள் வியந்திருப்போம்.
எப்போதும் ஆச்சி தானே நேரில் பார்த்ததுபோல சொல்லும் கதைகள் பெரும்பாலும் நம்பும்படியாக இருக்காது. ஆனாலும் நாங்களெல்லாம் ஆவென திறந்த வாய் மூடாமல் ஆச்சியை சுற்றி இருந்து ஒருவித பரபரப்புடனும் பயத்துடனும் அந்தக்கதைகளை மீண்டும் மீண்டும் கேட்போம். இவையெல்லாம் உண்மையான கதைகளா என்பது ஆச்சிக்கு மட்டும்தான் வெளிச்சம்.
அப்புவின் வீரத்தையும் சம்பாதிக்கும் திறனையும் சொல்லுவதில் அவருக்கு அலாதி பிரியம். "உன்ரை அப்பாவெல்லாம் இப்ப என்னத்தைக் கஸ்ரப்டுகிறார் என்னத்தை உழைத்துக்கொட்டுகிறார்?உன்ரை அப்பு அந்தக்காலத்திலை சீமைக்காரன் இருந்த காலத்திலை நாலு மலை, ஆறெல்லாம் கடந்து பத்துநாள் நடந்துபோய் எவ்வளவு சம்பாதித்திருப்பார். காட்டுப்பாதையிலை நடந்து போகும்போது எத்தனை தடவை கரடி நரியளோடையெல்லாம் சண்டிபோட்டுக் கலைத்திருப்பார். இப்ப உன்ரை அப்பன் என்னதை செய்யிறான்.கோச்சியிலை ஏறி கொழும்புக்கு போய் கந்தோரிலை உக்கார்ந்திட்டு சம்பளத்தோட வாறான் உங்களுக்கெல்லாம் காசின்ரை அருமை எப்படி தெரியும்?" என்பாள்.

ஒருதடவை கரடி கலைத்துக் கொண்டு வர அப்பு வேட்டியை கழட்டி எறிஞ்சுபோட்டு கோவணத்தோடையே இரண்டுநாட்களாக நடந்து வீடு வந்தவர் என்பா. பலது இதுபோன்ற நம்பமுடியாத கதைகளாகவும் சிலது நம்பும்படியாகவும் இருக்கும்.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை அடுத்துள்ள ஒரு அழகிய கிராமமான நிலாவெளியில்தான் ஆச்சியவை இருந்தவை. நிலாவெளியிலை அரைப்பங்கு நிலமும் அப்புவிற்குத்தான் சொந்தம்.

ஆச்சி இவ்வளவு சொல்லும் அப்புவின் எழிமைக்கு உதாரணமாக இன்னொருவரை கூறமுடியாது. அவரது இளமைக்காலத்திலை இந்தியாவிற்கு போய் காந்தியின்ரை கையாலை வாங்கிவந்த நூல் நூற்கும் ராட்டினம் எல்லாம் வீட்டிலை வைத்திருந்தவர். எந்தப்பெரிய விசேசத்திற்குக் கூட அவர் கதர் வேட்டி தவிர்த்து வேறு உடை அணிந்து நான் பார்த்ததில்லை.

எமது போராட்டம் ஆரம்பித்து ஆமிக்காரன் குண்டுபோடத்தொடங்கின காலத்திற்கு முதலே குண்டு போடுகிற கதையைக்கூட ஆச்சி சொல்லிக் கேட்டிருக்கிறன்.இரண்டாம் உலக யுத்தகாலத்திலை ஜப்பான்காரன் திருகோணமலையிலை குண்டுபோட்டு தாக்கின கதையை, அவ பல தடவை சொல்லக்கேட்டு, பின்னொருகாலத்தில் நேரடியாக அந்த அனுபவத்தை காண்பேன் என்பதை அறியாது வியந்திருக்கிறேன்.

ஆச்சி திறமையான ஒரு திரைப்பட டைரக்டர்போல சம்பவங்களை நிஜமாக கண்முன் நடப்பதுபோல சொல்லுவா. எங்களை அந்தப்ப் பக்கம் இந்தப் பக்கம் அசையவிடாது கட்டிப் போடும் அளவு சுவாரசியமாக கதை சொல்லுவா. பலநாட்கள் அவரது கதையை கேட்டபடியே நான் நித்திரையாகிவிடுவேன். ஆச்சியிடம் இருந்துதான் எனக்கும் இந்த கதை சொல்லும் (எழுதும்) திறன் கொஞ்சமாவது வந்ததோ என்று பலதடவை நினைத்திருக்கிறன்.

எனக்கு ஆச்சியை முதன்முதல் நினைவிருக்கும் காலத்திலேயே ஆச்சிக்கு எழுபது வயதாவது இருக்கும், ஆனாலும் ஒரு நாளாவது நோய் நொடியென்று ஆச்சி படுத்திருந்ததாக எனக்கு ஞாபகமில்லை. ஆச்சி இறந்து போனதை இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை.

எனக்கு கிடைத்த இந்த கதை கேட்கும் இனிய அனுபவம், இன்றைய அவசர உலகில் எங்கள் அடுத்த சந்ததிகளுக்கு கிடைக்காமல் போவது வேதனையாக இருக்கிறது."இது போல இருப்பவை பலதை தொலைத்துக்கொண்டு இல்லாததை தேடிக்கொண்டு இருக்கிறோமா?" விடை தெரியவில்லை!!

அரும்பத விளக்கங்கள்/ சொல் விளக்கங்கள்

அப்பு - தாத்தா
ஆச்சி - பாட்டி
சீமைக்காரன் - ஆங்கிலேயன்
கந்தோர் - அலுவலகம்
கோச்சி - புகையிரதம்
ஆமிக்காரன் - இராணுவத்தினர்

மீண்டும் மற்றுமொரு பதிவுடன் ஈழவயலினூடாக உங்களைச் சந்திக்கும் வரை இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன் விடைபெறுவது;
நேசமுடன்;
அம்பலத்தார்
நன்றி,
வணக்கம்!!
இப் பதிவிற்கான படங்கள் யாவும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.

13 comments:

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் அம்பலத்தார்!
எல்லாற்ற ஆச்சியும் ஒரே மாதிரித்தானோ? என்ர ஆச்சியும் உங்கள் ஆச்சியை போலத்தான்.. எங்களையும் அடிக்கடி கூப்பிட்டு கதை சொல்லுவா.. அதில அவர் சொன்ன கதையில் வரும் வெள்ளைக்காரனும் அவன் குதிரையும் அரைப்பனை உயரம் என்பார்.
தான் வெள்ளைக்காரனையும் அவன் குதிரையையும் நேரில் கண்டதை கதை கதையா சொல்லுவா. இப்ப நாங்களும் பாக்கிறோம்தானே வெள்ளை காரனையும் அவன் குதிரைகளையும்..!!

என்ன இருந்தாலும் ஆச்சி கதையில் எங்கள் கற்பனையையும் கலந்து கேட்பதை போல ஒரு வாய்ப்பு இனி யாருக்குமே கிடைக்காது!!!

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said... Best Blogger Tips

அட, அம்பலத்தாரா இப்பதிவை எழுதினது? மிக அழகான அனுபவ பதிவு! ஆச்சிமார் சொல்லும் கதைகள் நம்ப முடியாவிட்டாலும், அவை கேட்க கேட்க சுவாரசியமாக இருக்கும்!

என்னுடைய ஆச்சியும் 2 ம் உலகப்போர் கதை எல்லாம் சொல்லுவா! அதில் இலங்கைக்கு மேலால் பற்க்கும் விமானங்கள் பற்றியும் அதுபற்றிய நிறைய கதைகளும் சொல்லுவா! எல்லாமே சுவையானவை!

ஹேமா said... Best Blogger Tips

எனக்கு கடுகடுக்கிற ஒரு அம்மம்மாதான் இருந்தவ.அதனால உங்கட ஆச்சியை எனக்கும் பிடிக்குது.ஆச்சி சொன்ன ஒரு முழுக்கதையை இன்னொரு நாளைக்குச் சொல்லுங்கோ.ஆசையாயிருக்கு !

சி.கருணாகரசு said... Best Blogger Tips

வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Yoga.S.FR said... Best Blogger Tips

அம்பலத்தார் ஐயாவுக்கு வணக்கம்!எனக்கும் ஒரு ஆச்சி(பாட்டி)இருந்தா.................

சென்னை பித்தன் said... Best Blogger Tips

//எனக்கு கிடைத்த இந்த கதை கேட்கும் இனிய அனுபவம், இன்றைய அவசர உலகில் எங்கள் அடுத்த சந்ததிகளுக்கு கிடைக்காமல் போவது வேதனையாக இருக்கிறது."இது போல இருப்பவை பலதை தொலைத்துக் கொண்டு இல்லாததை தேடிக்கொண்டு இருக்கிறோமா?" விடை தெரியவில்லை!!//
உண்மை.இன்றைய சந்ததிகளின் இழப்பு வேதனையளிப்பதுதான்.

KANA VARO said... Best Blogger Tips

என் அப்பா ஒரு ஆசிரியர். பாடசாலையில் மட்டுமின்றி வீட்டில் எங்களுக்கு நிறையவே கதை சொல்லியிருக்கிறார்.

அம்பலத்தார் said... Best Blogger Tips

வணக்கம் காட்டான், உங்க ஆச்சியும் இப்படித்தானோ. வீட்டுக்கு வீடு வாசப்படி என்றதுபோலதான் ஆச்சிமாரும் என்றது புரியுது.

அம்பலத்தார் said... Best Blogger Tips

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
//அட, அம்பலத்தாரா இப்பதிவை எழுதினது?//
கிறுக்குப்பயலுகளும் சிலவேளைகளில் தப்பித்தவறி இப்படி எதாச்சும் நல்ல காரியம் செய்திடுவாங்க. அது சரி உங்க வீட்டிலையும் இதே கதைதானோ மணி. அப்படியென்றால் இந்த ஆச்சிமார் எல்லாம் ஒரே குளோனிங்கில பிறந்தவங்களோ?

அம்பலத்தார் said... Best Blogger Tips

அடபாவமே ஹேமா. என்ரை ஆச்சியை பிடிச்சிருந்தால் அவவை உங்களிடம் அனுப்பிவிடலாம்தான் ஆனால் அதிலை ஒரு சிக்கல் அவ மேலை போய் ரொம்ப நாளாச்சு.

அம்பலத்தார் said... Best Blogger Tips

ஆகா யோகா உங்களுக்கும் ஒரு ஆச்சி இருந்தாவா? நான் எதோ எனக்குமட்டும்தான் ஒரு ஆச்சி இருந்தா என்று சந்தோசமாக பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்று பார்த்தால் பின்னூட்டம் இட வாறவையள் எல்லாருமே ஆச்சிமாரை கையோட கூட்டி வாறியள்.

அம்பலத்தார் said... Best Blogger Tips

வரோ நீங்க ரொம்ப கொடுத்துவச்சவங்க. வீட்டிலையும் பாடசாலையிலையும் கதை சொல்லுகிற நல்லதொரு ஆசிரிய அப்பா கிடைச்சிருக்கிறார். எங்களுக்கெல்லாம் அடிபின்னுற வாத்திமாரெல்லோ கிடைச்சவை.

அம்பலத்தார் said... Best Blogger Tips

வணக்கம் சென்னை பித்தன் சார் உங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!