Sunday 1 January 2012

உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் நம்ம ஊர் வடகம்!

இணையத்தினூடாக உங்கள் இல்லம் நாடி வந்து ஈழக் கதைகளைப் பேசும் ஈழ வயலூடாக புதியதோர் ஆண்டில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகின்றேன்.
எனக்கு இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி. முதலாவது 2012ஆம் ஆண்டில் ஈழ வயலுக்காக பதிவெழுதும் முதல் பதிவர் நான். இரண்டாவது, "ஆல் போல் வேர் ஊன்றுவதற்காக வளர்ந்து வரும்" ஈழவயலின் முதல் பெண் பதிவர் என்ற பெருமையும் எனக்கே!

“பெண் பதிவர்கள் என்றாலே கவிதையும், சமையலும் தான் எனப் பலர் கருதும் பதிவுலகில்; இந்தக் குந்தவையும் என்ன விதிவிலக்கா?” என நீங்கள் நினைத்தால் இப்பொழுதே அந்த எண்ணத்தினை மறந்து விடுங்கள். எனக்கு இவை இரண்டையும் சுத்தமாகவே பிடிப்பதில்லை. இந்தப் பதிவில் சமையலையும் தாண்டி ஈழத்தின் உணவு முறையும், எங்கள் ஊர் ஞாபகங்களும் கலந்து இருக்கின்றது.

எமது அன்றாட உணவை எடுத்துக் கொள்வோம்.முக்கியமாக “மதியச்சாப்பாடு”. நெல்லரிசியில் ஆக்கப்பட்ட சோற்றையே நாங்கள் மதியம் உட்கொள்வோம். சோறுடன் பிரதான கறி, துணைக் கறி என்பவற்றுடன் மூன்று முக்கிய உப உணவுகளையும் சேர்த்துக் கொண்வோம். அவை அப்பளம் - மிளகாய் - வடகம். அப்பளத்தை அதிகளவானோர் நிச்சயம் தங்கள் உணவுடன் சேர்த்துக் கொள்வார்கள்.மிளகாயையும் ஓரளவு மக்கள் உண்ணுவார்கள்.வடகத்தினை எல்லோரும் தங்கள் உணவில் சேர்ப்பதில்லை. மிக மிக அருமையான சுவையும், ஊட்டச்சத்தும் இந்த வடகத்தில் உண்டு. பெரும்பாலும் கிராமப்புற மக்கள் அதிகளவில் தங்கள் உணவுடன் வடகத்தைச் சேர்த்துக் கொள்வார்கள். 

தாங்களே தயாரித்து தாங்களே உண்ணுவார்கள். அத்துடன் சிறு குடிசைக் கைத் தொழிலாகவும் சிலர் வடகத்தினை ஈழத்தில் தயாரித்து வருகின்றனர். ஏனெனில் இதற்கான பெருமளவு கிராக்கி (சந்தை வாய்ப்பு)  நகரப்புரங்களிலும், வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களிடமும் உண்டு.

வடகத்தில் பல வகையுண்டு. வேப்பம்பூ வடகம், வாழைப்பூ வடகம், வெங்காய வடகம், அரிசி வடகம் என்பவை இவற்றுள் சிலவாகும். இலங்கையில் அதிகளவாக வேப்பம்பூ வடகத்தையும் அதற்கு அடுத்த படியாக வாழைப்பூ வடகத்தையும் தயாரித்து பயன்படுத்துகின்றனர்.
வடகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் புதியவர்களுக்காக சுருக்கமான முறையில் அதன் செய்முறை பற்றியும் பார்த்துவிடலாம் என நினைக்கிறேன்.

தேவையான பொருட்கள் :
வேப்பம்பூ மற்றும் வாழைப்பூ - ஒரு கிலோ
உடைத்த உழுந்து: கால் கிலோ
வெங்காயம் (சிறிதாக நறுக்கியது) : 100 கிராம்
செத்தல்மிளகாய் (சிறிதாக நறுக்கியது) : 50 கிராம்
பெருஞ்சீரகம், கடுகு, உள்ளி, கறிவேப்பிலை: சிறியளவு
உப்பு: தேவையான அளவு
எண்ணை: சிறியளவு

செய்முறை :
நன்கு கழுவிய வேப்பம்பூவுடன், சிறிது சிறிதாக நறுக்கி சுத்தம் செய்த வாழைப்பூவினையும் ஊறவைத்துக் கழுவி சிறிதளவு அரைக்கப்பட்ட உழுந்தைச் சேர்க்க வேண்டும். (மாவாக கரையும் வரை அரைக்கக் கூடாது) அவற்றுடன் ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் வெங்காயம், மிளகாய், உப்பு மற்றும் இதர பலசரக்குகளையும் இட்டு சிறியளவில் நீருற்றி பிசைய வேண்டும். தேவையான அளவு எண்ணையையும் சேர்த்துக் கொள்ளலாம் (கையில் - பாத்திரத்தில் ஒட்டாமல் இருப்பதற்கு) பின்னர் சிறிது சிறிதாக (பெரிய நெல்லிக்காய் அளவில்) உள்ளங்கையினால் பிடித்து கைகளுக்கு இடையில் வைத்து தட்டி ஏதாவது ஒரு பெட்டியில் இட்டு வெயிலில் இரண்டு நாட்கள் காய வைக்க வேண்டும். (மழை காலங்களில் இவற்றைச் செய்வது நல்லதல்ல.ஈரப்பதன் இருப்பதால் பூஞ்சணம் (பங்கஸ்) பிடித்துக் கெட்டுவிடும்)

இதோ வடகம் தயார். அப்பளம், மிளகாய் பொரிக்கும் எண்ணையில் வடகத்தையும் இட்டு பொரித்து எடுத்து உங்கள் பிரதான உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு பாருங்கள். அதன் சுவையை நிச்சயம் உணருவீர்கள்.
பத்தோடு பதினொன்றாக சாப்பிடும் உணவு என நினைத்து இதனை ஒதுக்கிவிடாதீர்கள். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு. வேம்பின் மகத்துவம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் இலை, பட்டை, வேர், காய், பூ என எல்லாவற்றிலும் மருத்துவ குணம் உண்டு. வேப்ப மரம் நிற்கும் சூழலின் வளி சுத்தமாக இருக்கும் என்பார்கள். எனவே வேப்பம்பூ வடகம் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உதவும். அதே போல வாழைப்பூ மலச்சிக்கலை நீக்கவல்லது என்பது மருத்துவர்களின் ஆலோசனையும் கூட.வாழைப்பூ வடகம் சுவையானதாக இருக்கும். (வேப்பம்பூ வடகம் சிறியளவில் கசக்கும்). வெங்காய வடகம் மிக மிக சுவையாக இருக்கும். காரணம் அதில் வெல்லம் உண்டு.
இனி வரும் காலங்களிலாவது உங்கள் பிரதான உணவில் இவ்வாறான ஊட்டச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் வித்தியாசமான பதிவொன்றுடன் உங்களைச் சந்திக்கும் வரை
அன்புச் ஸ்நேகிதி
குந்தவை.

14 comments:

MaduraiGovindaraj said... Best Blogger Tips

வேப்பம்பூ வடகமா? எங்கூர்ல இல்லை அரிசி வடகம் , வத்தல் இவைகளே உள்ளன ///விளம்பரம் இல்லை ஓகே யா ///

Muruganandan M.K. said... Best Blogger Tips

நம்ம ஊர் பக்குவம்
நல்லாகவே இருக்கு.

வாழ்வினில் துன்பங்கள் அகலும்
நாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்
ஆண்டிது பிறக்கிறது 2012.

இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்

ad said... Best Blogger Tips

சமையலைப்பற்றி எழுதமாட்டேனென்று ஆரம்பித்து நல்ல செய்முறை விளக்கங்களோடு கலக்கிவிட்டீர்களே?ஹிஹி...

ad said... Best Blogger Tips

வடகம் என்றால் நமக்கு உயிருங்க.இப்ப அதெல்லாம் இல்லாப பெரும் பாடு.

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் குந்தவை அக்கா,

ஆரம்பத்திலே சமையல் குறிப்பு சொல்லமாட்டேன் என்று பில்டப் போட்டு விட்டு வாயூற வைக்கும் வடகம் செய்முறையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.

மகேந்திரன் said... Best Blogger Tips

வணக்கம் சகோதரி,
வீட்டில் செய்யும் பண்டம் என்றாலே
ஒரு தனி சுவைதான்.
வேப்பம்பூ வடகம் எனக்கு புதியது..
நீங்கள் சொல்லும் முறையை பார்த்தாலே
இப்பவே சாப்பிடனும் போல இருக்கு.

பகிர்வுக்கு நன்றிகள் பல.

என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

K said... Best Blogger Tips

இந்த வருடத்தின் முதலாவது பதிவைத் தொடக்கி வைத்து, ஈழவயலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும், குந்தவைக்கு வணக்கங்கள் + வாழ்த்துக்கள்!

ஈழவயலில் வலம்வரும் முதலாவது பெண்பதிவரின் பதிவு! இவ்வருடத்தை ஒரு பெண்பதிவரின் பதிவோடு தொடங்கியிருப்பது நல்லதொரு அறிகுறி! மங்களகரமானதும் கூட!

வாருங்கள்! குந்தவை! ஈழவயலில் உங்களுக்கும் பணி உண்டு! பங்களிப்பு உண்டு!

ஈழவயல் செழிக்க உங்கள் பங்களிப்புக்களையும் வழங்குங்கள்!

மீண்டும் - வாழ்த்துக்கள்!

சுதா SJ said... Best Blogger Tips

குந்தவை அக்காவுக்கு என் வரவேற்பும் வாழ்த்துக்களும்.

புதிய ஆண்டு.... ஹும்... மங்களகரமாய் தொடங்கி இருக்கீங்க..... :)

சுதா SJ said... Best Blogger Tips

நல்ல சமையல் குறிப்பு...... ஆனா என்ன..... நமக்கு சமைக்க தெரியாதே..... என்ன வீட்ட என்ன தாறான்களோ அதைத்தானே சாப்பிட முடியும்... ஹீ ஹீ

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் குந்தவை..!
ஊர் மணக்கும் பதிவு.. நான்கூட வடகம் செய்வதற்காய் "களபாயை" வேப்ப மரத்துக்கு கீழ விரித்து வைத்து வேப்பம் பூவை உலுப்பி இருக்கிறேன்.. அதுக்கு ஆச்சி ஐம்பது சதம் முந்தானை முடிச்சில் இருந்து அவிட்டு தருவா..அப்போ அந்த காசில் கடலைக்காரியிடம் ஒரு பக்கற் கடலை வாங்கலாம்..!!

பழைய நினைவையும் ஆச்சியையும் நினைக்க வைத்து விட்டீர்கள்... புது வருடத்தின் முதல் பதிவை எழுதி இருக்கிறீங்கள் வாழ்த்துக்கள் சகோதரி ..!!

KANA VARO said... Best Blogger Tips

இந்தப் பதிவில் சமையலையும் தாண்டி ஈழத்தின் உணவு முறையும், எங்கள் ஊர் ஞாபகங்களும் கலந்து இருக்கின்றது.//

உண்மை தான் போலும், இந்திய பதிவர் சிலருக்கும் வேப்பம்பூ வடகம் புதிது என்பதை பின்னூட்டத்தில் பார்த்தேன். வாழைப்பூ வடகம் என் பேவரேட்.

KANA VARO said... Best Blogger Tips

லண்டனில் இது கிடைப்பது அரிது. ஆனால் உண்டு.
புது வருடத்தில் ஈழவலுக்கு குந்தவை அக்காவை வரவேற்கிறோம்.

Jana said... Best Blogger Tips

வேப்பம்பூ பூத்து விழத்தொடங்கியதுமே நிளப்பாய் விரித்து, பூ சேகரித்து மண் கல் பார்த்து ... அப்படி இப்படி பார்த்து பார்த்து சேகரித்து செய்யும் வடகம் விரத நாட்களில் வாயில் கடிக்கும்போது ஒரு அலாதியான சுவை... அதன் நினைவுகளை மீட்டவைத்ததற்கு நன்றிகள்.

அம்பலத்தார் said... Best Blogger Tips

வணக்கம் குந்தவை, முதலில் ஈழவயலில் நீங்களும் கால்பதித்து பதிவிட்டதற்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!