Tuesday, 1 May 2012

விற்போரும் வாங்குவோரும் : மருதனார்மடம் பொதுச்சந்தை


இணையத்தினூடே ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனைவருடனும் இணைந்து தொழிலாளர் தினத்தில் (மே தினம்) உழைக்கும் வர்க்கத்தின் கரங்களைப் பலப்படுத்துவோம். ஒவ்வொரு மனிதனுமே ஏதோ ஒரு வகையில் உழைப்பாளியாக இருக்க வேண்டும். அப்படியானால் தான் வீட்டுக்கும், நாட்டுக்கும் பயன். 
“அண்ணே! கிள்ளிப் பாக்க வேண்டிய அவசியம் இல்ல, பால் வெண்டிக்காய்.. பார்த்தாலே தெரியுது. யோசிக்காம வாங்குங்க…”
“வெய்யில் வெளிச்சத்தில வடிவா பாருங்க.. கீரைல எந்த மஞ்சலும் அடிக்கல..”
“தம்பி கத்தரிக்காய் கிலோ நூறு. இண்டைக்கு இதை விட மலிவா நீங்க இங்கை எங்கையும் வாங்க மாட்டீங்க. சூத்தை இல்லாத கத்தரிக்காய்..”


இது போன்ற பல குரல்கள் மருதனார்மடம் சந்தையின் பல திக்குகளிலும் இருந்து எழுந்து கொண்டிருந்தது. காலை நேர வியாபாரம் சூடுபிடித்திருந்தது. விற்போரும் வாங்குவோரும் மும்மரமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். 

அன்றாடச்சமையலுக்கு அருகில் உள்ள கடைகளிலேயே மரக்கறிகளை வாங்கிக் கொள்வோம். ஏதாவது கோயில் பொங்கல்கள் மற்றும் விசேடங்களுக்கு மட்டும் இப்படி சந்தை செல்வது எனது வழக்கம். இன்றும் ஒரு பொங்கல் இருந்ததால் சந்தைக்குச் சென்றேன். இன்று மே தினம் என்பதால் வழமையாக சாதாரணமாக பார்க்கும் விவசாயிகள், விற்பனையாளர்கள் எல்லாம் ‘உழைப்பாளர்களாக’ தெரிந்தார்கள். என்ன பண்ணுறது, ஆசிரியர் தினம் வந்தால் தானே படிப்பிக்கிற ஆசிரியர்களை பல மாணவர்களுக்கு தெரியுது..
நுழையும் போதே விவசாயி ஒருவர் “பசளை போட்டு தண்ணி விடுறது நாங்க, காசு பிடுங்கறது அவங்க..” என கவலையுடன் கூறிக்கொண்டு சென்றார். அதாவது உற்பத்தி செய்யும் மரக்கறிவகைளை சந்தை விற்பனையாளர்களுக்கு கொடுக்க வரும்போது இடையில் இருக்கும் தரகர்கள். வரி அறவிடுவோர், சந்தைவிலையைத் தீர்மானிப்போர் போன்றோர் தங்களுக்கு லாபம் வைப்பதால் உண்மையாக வியர்வை சிந்தி உழைத்து தங்கள் விளைச்சல்களை விற்க வரும் விவசாயிகளுக்கு பெரும்கவலை தான். 
சைக்கிள் பார்க்கில் சைக்கிளை நிறுத்திவிட்டு உட்சென்றேன். சந்தையில் எல்லா மரக்கறிகளும் கிடைக்கும். ஆனால் ஒரே வியாபாரியிடம் கிடைக்காது. எப்படியும் பெரிய தாள் (500 அல்லது 1000) ஒன்றுடன் தான் சந்தை செல்வது. காலையில் அதை மாற்றுவது கடினம். இதனால் சந்தையில் ஒரு ரவுண்டு வந்து ‘நான் வாங்க வேண்டிய மரக்கறிகளில் அதிகம் யாரிடம் உள்ளது’ என பார்த்துவிட்டு அங்கே தரித்துவிடுவேன். சில மரக்கறிகள் அவர் கடையை விட வேறு கடைகளில் மலிவாக இருந்தாலும் காசை மாற்ற வேண்டும் என்பதற்காக அங்கேயே வாங்குவது. 
சந்தைக்குப் போகும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ‘இராசவள்ளி’ கிழங்கை வாங்கத் தவற மாட்டேன். எனக்கு ‘இராசவள்ளி களி’ அவ்வளவு விருப்பம். இதை வாங்குவதற்குத் தான் மினைக்கட்டு சந்தை செல்வதாகவும் வைத்துக் கொள்ளலாம்.
ருதனார்மடம் சந்தை யாழ் - வலிகாமம் வலயத்தின் முக்கியமான கேந்திர நிலையம் ஒன்றில் அமைந்துள்ளது. இணுவில், உடுவில், கோண்டாவில் உள்ளிட்ட பல கிராம விவசாயிகளுக்கும் இது ஒரு விற்பனைக் கூடமாக திகழ்கின்றது. போதியளவு இடவசதி இருக்கின்றது. ஆனால் உரிய வகையில் விற்பனைக் கூடங்கள் இல்லை என்பது வியாபாரிகள், நுகர்வோர் ஆகியோரின் குறைபாடாக உள்ளதை அவதானிக்க முடிந்தது. ஏற்கனவே இச்சந்தையின் குத்தகைக்கு பிரதேச சபை அதிகளவான பணத்தை அறவிட்டும் சந்தையின் அபிவிருத்தி பற்றி சிந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. மழைகாலங்களில் வெள்ள நீர் தேங்குவதாகவும் குறிப்பிடுகிறார்கள். 

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கொழும்பின் நாரஹேன்பிட்ட – கிரிமண்டல மாவத்தையில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் போல் யாழ் - மருதனார்மடம் சந்தைப்பகுதியையும் அபிவிருத்தி செய்ய முடியும். இதற்கு அரசாங்க அபிவிருத்தி திட்டங்களின் கீழ் விரைவில் நடவடிக்கை எடுத்தால் இப்பகுதி விவசாயிகளும், நுகர்வோரும் பயனடைவார்கள். 

4 comments:

ஆகுலன் said... Best Blogger Tips

தொழிலாளர்களுக்கு தலை வணங்குவோம்.....

ஆகுலன் said... Best Blogger Tips

நினைவுகளை மீட்டும் பதிவு ..சின்ன வயதிலையே சந்தைக்கு போய் காய்கறி வாங்கின நினைவுகள் எல்லாம் வருகுது...

கரெட் ப்ரீ ஆ சாப்பிடுறது எல்லாம் சுகமான அனுபவங்கள்.....

மதுரன் said... Best Blogger Tips

மருதனார் மடம் சந்தையை அப்படியே கண்னுக்குள் கொண்டுவந்துவிட்டீர்கள்.. அதுவும் உழைப்பாளிகள் தினத்தன்று..

நன்றி வரோ அண்ணை

Yoga.S.FR said... Best Blogger Tips

வணக்கம்,வரோ!!!ஊருக்குச் சென்று கொஞ்சம் ஆக்கபூர்வமான விடயங்களிலும் கவனம் செலுத்துவது நல்லதே!எங்களுக்கு திருநெல்வேலி தான் கிட்ட.மருதனார்மடம் சென்றதில்லை!

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!