Tuesday 13 December 2011

சிவப்பு நிற பலாச்சுளை தெரியுமா உங்களுக்கு?

ழவயலின் சொந்தங்களுக்கு இந்த ஈழத்துப் பூதந்தேவனாரின் அன்பு கலந்த வணக்கங்கள்! அனைவரும் நலம் தானே உறவுகளே!

தமிழிலே பல அணிகள் இருக்கின்றன! அதிலே எனக்கு மிகவும் பிடித்தது உவமை அணி! எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிடித்திருக்கும்! அது என்ன உவமை அணி? தெரியாத ஒரு விஷயத்தை, தெரிந்த ஒரு விஷயத்தைக் கொண்டு விபரிப்பது உவமை அணி என்று இலக்கணம் சொல்கிறது!
இப்போ, மானிப்பாயில், நமது நண்பன் மதுரனுக்கு மிகவும் பொருத்தமான ஒரு பெண் இருக்கிறாள்! அவளையே மதுரனுக்கு கட்டிக் கொடுத்துவிடலாம்! சரி பெண் எப்படி இருப்பாள்? ஓ.... அதைக் கேட்கிறீர்களா? அவளது கண் இருக்கே கண்... அது வாளை மீனைப் போல கூர்மையானதாக இருக்கும்! உதடுகள் இருக்கே, சிவப்பு நிறத்தில் பலாச்சுளை இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும்!

அடடா! பெண் மிகவும் அழகாக இருப்பாள் போலிருக்கிறதே! நண்பர்களே, அந்த மானிப்பாய் தேவதையை நாம் இதுவரை கண்ணால் காணவில்லை அல்லவா? ஆனால் அவள் அழகாக இருப்பாள் என்பதை எதனைக் கொண்டு தீர்மானிக்கிறோம்! அவளைப் பற்றிச் சொல்லப்பட்ட உவமைகளைக் கொண்டுதானே! உங்களுக்கு வாளை மீனையும் பலாச்சுளையையும் நன்கு தெரியும் அல்லவா? ஆகவே தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாத பொருளை விபரிப்பது உவமை ஆகிறது!

உவமை சிறப்பாக அமைய வேண்டுமானால் அல்லது அனைவரும் நயந்து பாராட்டும் உவமைகளை நீங்கள் எழுத வேண்டுமானால் நீங்கள் கண்டிப்பாக மாற்றியோசிக்க வேண்டும்! இப்போ, ஒரு பெண்ணின் முகத்தை வர்ணிக்க....... அழகிய நிலா போன்ற அவளது முகம்..... இப்படித்தான் காலம் காலமாக வர்ணித்து வருகிறார்கள்! எத்தனை காலம் தான் பெண்ணை நிலவோடு ஒப்பிடுவது? கொஞ்சம் வேறுவிதமாகச் சிந்தித்தால் என்ன?

இப்போது வரும் ஆனந்த விகடனின் அட்டையைப் பார்த்திருக்கிறீர்களா? அது மிகவும் பளபளப்பாக இருக்கும்! அந்தப் பளபளப்பை உங்கள் காதலியின் முகத்தோடு ஒப்பிடுங்கள்! “ அன்பே! ஆனந்தவிகடனின் அட்டையைப் போல பளபளக்கும் உன் முகத்தைப் பார்த்து.......” என்று ஒரு கவிதை எழுதி அவளிடம் நீட்டுங்கள்! ஆஹா, முன்பை விட அவள் பல மடங்கு உங்களைக் காதல் செய்வாள்!

எவரெல்லாம் புதிது புதிதாக உவமைகளைக் கண்டறிகிறார்களோ, அவர் அவரெல்லாம் எல்லாம் ஏனையவர்களால் ரசிக்கப்படுவார்கள்! இப்போது திரைப்படப்பாடல்களில் மனதைக் கவரும் பல்லாயிரக்கணக்கான உவமைகளை கவிஞர்கள் பயன் படுத்துகின்றனர்!

தீ சுடும் என்று எனக்கும் உங்களுக்கும் தெரியும்! ஆனால் ஒரு குழந்தைக்குத் தெரியுமா? இல்லைத்தானே! அதனை ஒரு கவிஞர் பின்வருமாறு பாட்டில் சொல்கிறார்! “ கையைச் சுடும் என்றாலும் தீயைத் தொடும் பிள்ளை போல் உன்னையே மீண்டும் நினைக்கிறேன்” ஆஹா! அருமையாக இருக்கிறதல்லவா?

கவிப்பேரரசு வைரமுத்து சிரிப்பின் வகைகள் பற்றி மிகவும் அழகாக பல உவமைகளுடன் சொல்கிறார்! பாருங்கள்,

சற்றே உற்றுக் கவனியுங்கள்

சிரிப்பில் எத்தனை ஐதி?

கீறல்விழுந்த இசைத்தட்டாய்
ஒரே இடத்தில் சுற்றும்
உற்சாகக் சிரிப்பு

தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்
விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு

தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச்
சென்றடித் தேய்ந்தழியும் சிரிப்பு

கண்ணுக்குத் தெரியாத
சுவர்க்கோழி போல
உதடு பிரியாமல்
ஓசையிடும் சிரிப்பு

சிரிப்பை இப்படி
சப்த அடிப்படையில்
ஐதி பிரிக்கலாம்
இப்படி வைரமுத்து சொல்லும் போது நமக்கும் சிந்திக்கத் தோன்றுகிறது அல்லவா? மேலும் வைரமுத்து எழுதிய சில சுவையான உவமைகளை கீழே தருகிறேன் ரசியுங்கள்!

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?


இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி


உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்


என்ன நண்பர்களே படிக்கும் போது அழகாக இருக்கிறது அல்லவா?
எந்திரன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயை வர்ணித்து நா.முத்துக்குமார் ஒரு அழகிய கவிதை தீட்டியிருப்பார்! அதில் உவமைகளை எப்படிக் கொட்டியிருக்கிறார் பாருங்கள்!

ஸனா!!!!
கணிப்பொறியையும் காதலிக்க 
வைக்கும் கன்னிப்பொறி!
அவள் தொட்டால் எந்திரம் மனிதன் ஆகும்!
மனிதன் எந்திரன் ஆவான்!
அவள் கூந்தல்.. கருப்பு அருவி!
நெற்றி... நறுக்கி வைத்த நிலா துண்டு !
கண்கள்... பார்ப்பவர்கள் தொலையும் 
பர்முடா முக்கோணம்!
உதடுகள்... படுத்து உறங்கும் வரிக்குதிரை!
இடை... குழந்தைகள் உட்காரும் 
குட்டி நாற்காலி!

இப்படி பல்லாயிரக்கணக்கான அழகிய உவமைகள் தமிழ் சினிமாவில் கொட்டிக் கிடக்கின்றன! வித்தியாசமான உவமைகளை எழுதுவதன் மூலம் நீங்களும் அடுத்தவர்களின் மனதினைக் கவரலாம்! எல்லாம் சரி நானும் எனது பங்கிற்கு சில உவமைகள் சொல்கிறேன் கேளுங்கள்!

அன்பே, 
ஐரோப்பிய பொருளாதாரம் போல
என் மனம் தடுமாறுகிறதடி!

நீயோ, புதிய ஐரோப்பிய 
ஒப்பந்தத்தை நிராகரித்த பிரிட்டன் போல
என்னை நிராகரித்துச் செல்கிறாய்.....!

இப்படி உலக விஷயங்களை உவமையாக்கி படிப்பவர்களை ரசிக்க வைக்கலாம்! அல்லது, 

அன்பே!
பணக்காரர்வீட்டுப் பிள்ளைகளை
முன் வரிசையில் உட்காரவைக்கும் 
சில ஆசிரியர்கள் போல.....!

என்று ஏடாகூடமான உவமைகள் சொல்லி, மறை முகமாக சமூக அவலங்களைச் சாடலாம்! 

அதுமட்டுமல்லாது, 

7 வது ஓட்டு வாங்கும் வரை 
அனைவருக்கும் சென்று ஓட்டுக்களும் 
கமெண்டும் போடும் ஒரு பதிவரைப் போல்..... 

என்றும் வில்லங்கமான உவமைகளும் சொல்லலாம்!

எனவே நண்பர்களே, அழகிய உவமைகளை ரசிப்போம்! தமிழை இன்னும் இன்னும் நேசிப்போம்!

அது சரி இப்பதிவு எப்படி இருந்தது?

கந்தளாய் சீனி போல இனிப்பாக இருந்திச்சா?
அல்லது ஆனையிறவு உப்பைப் போல கரிப்பாக இருந்திச்சா?
.

18 comments:

ஆமினா said... Best Blogger Tips

நல்லாதானே போயிட்டிருந்துச்சு? பின்ன எதுக்கு ஓட்டு பத்தி இழுக்குறேள்? :-))

செம ஏடாகூடமான பதிவு தான் :-)

ஆமினா said... Best Blogger Tips

//“ கையைச் சுடும் என்றாலும் தீயைத் தொடும் பிள்ளை போல் உன்னையே மீண்டும் நினைக்கிறேன்” //

எனக்கு பிடிச்ச வரி ஹி...ஹி...ஹி.. :-)

ஆகுலன் said... Best Blogger Tips

இலகுவாக விளங்கி கொள்ள கூடியதாக உள்ளது........அழகான தொகுப்பு..

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

வணக்கம் மோனை பூதம்,
எப்பிடிச் சுகமாய் இருக்கிறீரே?

சும்மா அந்த மாதிரி எழுதியிருக்கிறீர் அப்பா!
உம்மளை என்னோட வம்சம் என்று சொல்ல உண்ணாணைப் பெருமையா இருக்கு ராசா!
அது சரி மோனை உவமை அணியள் பத்தி அந்த மாதிரி விளக்கியிருக்கிறீர்.
ஈழத்துச் சிலேடை பற்றி எப்ப காணும் எழுதப் போறீர்?

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

அப்பு ராசா!
என்ர செல்லமெல்லே!

கிழவனுக்கும் கொஞ்சம் வயசு போயிட்டுது.
மதுரனுக்கு மானிப்பாயில பொம்பிளை பார்த்த மாதிரி எனக்கும் ஒராளை பேசி வைக்கிறீரே?
கிழவனுக்கு வயசு போயிட்டுதெண்டாலும் வல்லமை போகவில்லையெல்லே?

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

கந்தளாய் சீனி போல இனிப்பாக இருந்திச்சா?
அல்லது ஆனையிறவு உப்பைப் போல கரிப்பாக இருந்திச்சா?
.//

எனக்கெண்டால் இன்றைய பதிவு மக்கள் கடைச் சர்க்கரை போல சும்மா செமையாக இருந்திச்சு மோனை!

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

சிவப்பு நிறத்தில் பலாச்சுளை இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும்!//

ஓம் அப்பன்! உனக்கு விசயம் தெரியுமே?
எங்கட வன்னியில பாலப் பழம் போல வெள்ளையா...என்று வர்ணிப்பீனம்!
அதே மாதிரி பிள்ளையை கையால தொடுறதென்றால் சவர்க்காரம் போட்டுக் கை கழுவித் தான் தொட வேணும் என்றும் சொல்லுவீனம்!

சொன்னா நம்பமாட்டியள் உவள் புஷ்பம்!
அவள் தானுங்கோ என்னோட பெண்டாட்டி! அந்தக் காலத்தில கொவ்வைப் பழம் போல சிவப்பான உதடும்,
குளத்து மீன் போல பார்வையால என்னை விழுங்கிற கண்ணும் கொண்டிருந்தவள்!

நீர் இப்படி ஒரு பதிவைப் போட்டு என்னோட பழைய நினைவுகளைக் கிளறிப்போட்டீர் ராசா!

உமக்கு மிக்க நன்றி!

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

அவள் புஷ்பம் பேசிற பேச்சிருக்கே! ஐயோ...அதையேன் கேட்பான் ராசா!
அது காட்டுத் தேன் போல இனிப்பு!
இதையே யாழ்ப்பாணத்தில கொம்புத் தேன் போல இனிப்பாக இருக்கும் என்று சொல்லுவீனம்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Mathuran said... Best Blogger Tips

உவமையணிபற்றி சும்மா அந்தமாதிரி விளாசித்தள்ளிப்போட்டிங்க பூதம்...

//கந்தளாய் சீனி போல இனிப்பாக இருந்திச்சா?
அல்லது ஆனையிறவு உப்பைப் போல கரிப்பாக இருந்திச்சா?//

நிவாரணம் வாங்க வரிசையில கடைசியா நிண்டவனுக்கு கால் கிலோ பருப்பு கூட கிடைச்சதுபோல இருக்கு தல.

குட்டிப்பையன் said... Best Blogger Tips

வணக்கம் பூதத்தேவனார் சும்மா அந்த மாதிரி ஒரு பதிவை தந்திருக்கிறீங்க..ஊரில் ஒரு முறை குட்டிப்பையன் ஒரு பொம்புளை பிள்ளையை பாத்து கொவ்வைப்பழ உதடு.
மேரு மலைபோல மா.....என்றன் அதுக்கு அந்த பிள்ளை என்ன சொன்னது கண்டியளே வீமனைப்போல அண்ணன் இருக்கான் என்றது.அப்பறம் என்ன பிடரியில் பின்னங்க்கால் அடிபட ஓடிட்டான் குட்டிப்பையன் எப்படி இந்த பகிடி...

சுதா SJ said... Best Blogger Tips

சப்பா...... என்ன ஒரு அழகு உவமைகள்..... ரெம்ப ரசித்து ரசித்து படித்தேன்..... ஆனா ஒன்று வைரமுத்துக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை நீங்களும் :)

Yoga.S. said... Best Blogger Tips

அருமை,பெருமையாக இருக்கிறது!

ம.தி.சுதா said... Best Blogger Tips

ஈழத்துப் பூதந்தேவனாரா அருமையான இலக்கியச் சுளையை பகிர்ந்துள்ளீர்கள்...

இந்த ஊவமையெல்லாம் காதலிக்கும் போது மட்டும் தானே... ஹ..ஹ..

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

வணக்கம் பூதந்தேவனார்,

அருமையான உங்கள் முதல் பதிவு நம்ம ஈழவயலில். உவமைகள் தான் கவிதையின் அல்லது பிரதான மொழிவடிவங்களின் வெற்றிக்கு மிகவும் துணை புரிபவை. வைரமுத்து, முத்துக்குமாரின் உவமைகளை விட உங்கள் உவமைகள் கலக்கல் பூதந்தேவனார்..

வாழ்த்துக்கள்.
பி.அமல்ராஜ்

தீபிகா(Theepika) said... Best Blogger Tips

ஈழவயல் செழித்து வளரவும்...அதன் அறுவடைகள் பயனுள்ளதாய் அமையவும் வாழ்த்துக்கள்.

தீபிகா.

N.H. Narasimma Prasad said... Best Blogger Tips

வைரமுத்து, நா.முத்துக்குமார்'ன்னு நல்லா தான் இருந்தது ஆரம்பத்துல. ஆனா கடைசியில உங்களோட சில 'மொக்கை கவிதைகளை' போட்டு இப்படி கடுப்பெத்திடிங்களே?

KANA VARO said... Best Blogger Tips

உண்மையில் சிவப்பு பலாச்சுழை இருக்கெண்டு நினைச்சிட்டன். அது உவமையா...

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said... Best Blogger Tips

வணக்கம்!
ஈழ வயல் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!