Wednesday 14 December 2011

கவரேஜ் பிள்ளையார் கோவிலும் காதல் நினைவுகளும்!

வணக்கம் உறவுகளே! 

என் தமிழ் மொழியையும் என் தாய் மண்ணையும் வணங்கி ஈழவயலில் என் முதல் பதிவை ஆரம்பிக்கின்றேன். 
நானும் ஒரு பொடிப்புள்ள என்பதால் பொடிப்புள்ளைகளின் சங்கதிகள் சிலதை சொல்லுறன் கேளுங்க. வன்னியில் காதலர்கள் போவதற்கு கடற்கரைகளோ இல்லை,பூங்காக்களோ,தியேட்டர்களோ இல்லை கடற்கரைகள் இருந்தது ஆனால் அங்கே காதலர்கள் போவது கிடையாது. இதற்கான காரணம் நீங்கள் அறிவீங்கள் தானே.இதனால் பெரும்பாலும் காதலர்கள் சந்திக்கும் இடங்களாக ஊரில் உள்ள குச்சு ஒழுங்கைகள் ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொடிப் பிள்ளைகள் தான் அதிகமாக இந்த குச் ஒழுங்கை காதல் ஜோடிகளாக இருப்பினம். அவேன்ர வயதில் அவங்களுக்கு காதல் என்றால் பயம். காரணம் வீட்டில் தெரிந்தால் பேச்சு விழும் என்பதால் வெளியில் தங்கள் காதல் தெரியாத வண்ணம் காட்டிக் கொள்வீனம். இதுக்கு (இதற்கு) பெரும் சிரமம் எடுத்து தங்கள் காதலை மூடி வைப்பினம். ஆனாலும் எப்படித்தான் கண்டு பிடிப்பாங்களோ தெரியாது நம்ம பொடியங்கள் கண்டு பிடித்துவிடுவாங்க."டேய் அவனும் அவளும் இன்னைக்கு கவரேஜ் பிள்ளையார் கோவிலடில கதைச்சுக்கொண்டு இருந்தாங்கடா" என்று பொடியங்களின் புலனாய்வு ரிப்போட் சொல்லும் பிறகு என்ன அந்த காதல் ஜோடிகளுக்கு பள்ளிக்கூடத்தில் எல்லோறும் சேர்ந்து ஒரே பகிடி பண்ணுவம்.

உப்படித்தான் ஒரு நாள் நானும் இன்னும் ஒரு சிநேகிதனும் ஒருக்கா கவரேஜ் பிள்ளையார் கோவிலடி பாதையால் போய்க்கொண்டு இருக்கும் போது ஒரு பொட்டை எங்களைக் கடந்து லேடிஸ் சைகிளில் போனது அப்ப என்ர சினேகிதன் சொன்னான்; "டேய் குட்டிப்பையா அங்க பார் அந்த பொட்டை எங்கட பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொட்டைதானே இவள் ஏன்  கவரேஜ் பிள்ளையார் கோவிலடி பாதையால் போறாள் ஏதும் சங்கதி இருக்கும் போல வா பார்ப்பம்" என்றான்.

சரி என்று நானும் அவனும் அந்த பொட்டைக்கு பின்னால் போனம். பாத்தால் (பார்த்தால்) அவள் கவரேஜ் பிள்ளையார் கோவிலடியையும் தாண்டி அங்கால உள்ள டியூசனுக்கு போனாள். நாங்களும் அவளை விலத்திக்கொண்டு போய்விட்டம் அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் கதைக்கிறாங்க. "குட்டிப்பையனும் அவன்ற சினேகிதனும் நேற்று கவரேஜ் பிள்ளையார் கோவில் பக்கம் ஒரு பொட்டைக்கு பின்னால போனாங்களாம்". எப்படி இந்த பகிடியை பாத்தியளே! உதைத்தான் "பனைமரத்துக்கு கீழ நிண்டு பால் குடிச்சாலும் கள்ளு குடிக்கிறது" என்று சொல்லுவினம். ஹி...ஹி...

ஆனாலும் ஒன்றை கவனிக்க வேண்டும் என்னதான் காதலர்கள் ஒதுக்குபுறமான பாதைகளில் நின்று கதைத்துக்கொண்டு இருந்தாலும் எந்த தப்புதாண்டாவும் செய்ய வெளிக்கிட மாட்டினம் காரணம் அதுதான் அந்த மண்ணின் கலாச்சாரம் அதன் புனிதம். காதலை மதிக்கும் அங்கு காதலர்கள் ஏதும் விளையாட்டு விட்டினம் என்றால் டின் கட்டி விடுவார்கள் அண்ணாக்கள். தமிழனின் கலாச்சாரத்தில் காதலுக்கு தனி இடம் உண்டு காதலும் வீரமும் தமிழனின் கலாச்சாரத்துடன் ஓட்டிய இரட்டைக்குதிரைகள்.சங்ககாலங்களின் காதலுடன் கலந்த வீரத்தை சொல்லியிருப்பார்கள் அதை நாங்கள் நேரில் பார்த்தது இல்லை ஆனால் வீரம் விளைந்த வன்னி மண்ணில் அதை நேரில் கண்டு இருக்கேன்.தன் காதலைவிட தன் தாய் நிலத்தின் மீது வைத்த காதலுக்குகாக தன்னை அர்பணித்த பல புனிதர்கள் வாழ்ந்த நிலம் அது.

                                  
இதனால் தான் அந்த மண்ணில் காதலுக்கு தனிமரியாதை உண்டு காதலியே தன் காதலனை உச்சிமுகர்ந்து தன் மண்ணுக்க்காக அனுப்பிவைத்த புண்ணிய பூமி அது. ஒரு பெண்ணின் மீது கொண்ட காதலுக்காகவோ இல்லை ஒரு ஆணின் மீது கொண்ட காதலுக்காகவோ உயிர் துறப்பது சரியா தவறா என்றால் நிச்சயம் தவறு தான். ஆனால் தன் மண்ணின் மீதான காதலுக்காக தன்னை அர்ப்பணித்த மனிதர்களின் வாழ்ந்த அந்த பூமியில் என்றும் காதல் போற்றப்படும்.ஒரு பெண்ணின் மீது வரும் காதல் என்றாலும் சரி.பலருக்கு தன் மண்ணில் வந்த காதல் என்றாலும் சரி புனிதர்கள் வாழ்ந்த பூமியில் புனிதமான காதல் என்றும் வாழும்.
*********************************************************************************
அரும்பத விளக்கம் / சொல் விளக்கம்:
  • பொடிசுகள்-இளம் பையன்கள்,பொண்ணுகள்
  • பொடிப்புள்ள- பையன்
  • சொல்லுறன்-சொல்கிறேன்
  • சங்கதிகள்-மேட்டருகள்
  • பெரும்பாலும் -அதிகமாக
  • கேளுங்க-கேளுங்கள்.
  • பொட்டை-பொண்ணு/ பிகரு
  • அறிவீங்கள் -அறிந்திருப்பீங்க.
  • குச்சி ஒழுங்கை/ குச்சு ஒழுங்கை/ குச்சொழுங்கை-சின்ன சின்ன வீதிகள்  (Small Street)
  • லேடிஸ் சைக்கிள்-பெண்களுக்கு என்று தனியாக வரும் பார் இல்லாத சைக்கிள் (Ladies Bike)
  • பேச்சு விழும்-திட்டுதல்/ ஏசுதல்.
  • இருப்பினம் -இருப்பார்கள். 
  • பகிடி-நக்கல்
  • சங்கதி-செய்தி/ மேட்டர், சுவாரஸ்யமான விடயம்.
  • அவேன்ர-அவர்களின்
  • இதுக்கு -இதற்கு. 
  • விலத்திக்கொண்டு போய்விட்டம் -கடந்து செல்லுதல்/முந்தி செல்லுதல்
  • தாண்டிச் செல்லுதல்- கடந்து செல்லுதல்.
  • டின் கட்டி விடுவார்கள் அண்ணாக்கள்.-டின் கட்டுதல் என்றால் தண்டனை வழங்குதல் என்ற பொருள் படும். அண்ணாக்கள் என்பது புலிகளை குறிக்கும்
  • மூடி வைப்பினம்-மூடி மறைப்பார்கள்.
  • ஒருக்கா: ஒருக்கால்/ ஒருவாட்டி / ஒரு தடவை.
  • பண்ணுவம் -செய்வோம்/ கலாய்ப்போம்.
  • உப்பிடித்தான்: இதே மாதிரி /அதே மாதிரி.
  • பகிடி-பகடி
  • கதைக்கிறாங்க: பேசுறாங்க.
  • அப்ப: அப்போது.
  • போனம்: போனோம்
  • பாத்தால்: பார்த்தால்.
  • காட்டிக் கொள்வீனம்-காட்டிக் கொள்வார்கள் / பாசாங்கு செய்வார்கள்.
  • பாதைகள்-வீதிகள்
  • கவரேஜ் பிள்ளையார் கோவிலடி-கிளிநொச்சியில் கணேசபுரம் ஊடாக உருத்திரபுரம் போகும் வீதியில் உள்ள ஒரு கோவில். இதற்கு ஏன் கவரேஜ் பிள்ளையார் கோவில் என்று பெயர் வந்தது என்றால்; வன்னியில் அப்போது கைத்தொலைபேசிகள் பாவனையில் இல்லை இதனால் அங்கே கைத்தொலை பேசிக்குரிய சிக்னல் கோபுரங்கள் இல்லை. எனவே கைத்தொலை பேசிகள் யாரும் பாவிப்பது என்றால் கவரேஜ்(சிக்னல்) இருக்காது.ஆனால் சில இடங்களில் கவரேஜ் இருக்கும்.அதில் முக்கியமான இடம் தான் கவரேஜ் பிள்ளையார் கோவில். வயல் வெளிகளுக்கு நடுவில் இருக்கும் பசுமையான ஒரு இடம்.அங்கே கவரேஜ் இருப்பதால் பலர் அங்கு தான் கைத் தொலைபேசிகளில் (அலைபேசி) கதைக்க வருவார்கள். அந்த கோவிலை ஓட்டி இருந்த வீதிகளில் காதலர்கள் சந்தித்து பேசிக்கொள்வார்கள். ஹி..ஹி...அதெல்லாம் ஒரு காலமுங்க! அந்த நினைவுகள் தான் மீண்டும் வருமா?
    ****************************************************************************
    மீண்டும் மற்றுமோர் பதிவினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை; 
    என்றும் அன்புடன்;
    உங்கள்;
    குட்டிப்பையன்!
    அப்ப நான் போயிட்டு வரட்டே! (ஓக்கே நான் கிளம்புறேனுங்க).

25 comments:

சம்பத்குமார் said... Best Blogger Tips

//எந்த தப்புதாண்டாவும் செய்ய வெளிக்கிட மாட்டினம் காரணம் அதுதான் அந்த மண்ணின் கலாச்சாரம் அதன் புனிதம். காதலை மதிக்கும் அங்கு காதலர்கள் ஏதும் விளையாட்டு விட்டினம் என்றால் டின் கட்டி விடுவார்கள் அண்ணாக்கள். தமிழனின் கலாச்சாரத்தில் காதலுக்கு தனி இடம் உண்டு காதலும் வீரமும் தமிழனின் கலாச்சாரத்துடன் ஓட்டிய இரட்டைக்குதிரைகள்//

இந்த கலாச்சாரம் தான் தமிழன் எங்கு சென்றாலும் தலை நிமிர வைக்கிறது..

கேணியூர் வீறுடை வேந்தனார் said... Best Blogger Tips

வணக்கம் தம்பி குட்டிப் பையன்!

ஈழவயலில் நீ எழுதுற முதலாவது பதிவுக்கு என்ர வாழ்த்துக்கள்! நானும் பார்த்திருக்கிறன் எத்தனையோ இடங்களில் காதல் இருந்தாலும் வன்னிக்காதலுக்கு இருக்கிற மரியாதையே தனிதான்! அதை அனுபவிக்கிற சுகம் இருக்கே! அப்பப்பா!

அந்த பழைய நினைவுகளைக் கிளறி அருமையானதொரு பதிவு போட்டிருக்கிறாய்!”கவரேஜ் பிள்ளையார்” - ம் நல்லதொரு காரணப் பெயர்தான்!

காதல்ல ஆரம்பிச்சு கடைசியில வீரத்தில முடிச்ச குட்டிப்பையனுக்கு வாழ்த்துக்கள்!

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

வணக்கம் ராசா குட்டிப் பையன்,
எப்பிடிச் சுகமாய் இருக்கிறீரே?
சும்மா சோக்கான ஒரு பதிவினைக் கொடுத்திருக்கிறீர்.
எனக்கு கூட என்ர மனுசி புஷ்பத்தோட கிளிநொச்சி அக்கராயன் குளக்கட்டிலையும்,
வன்னேரிக் குளத்திலையும் வலம் வந்த நினைவுகள் வந்து போயிச்சுது உம்மடை பதிவினைப் படிக்கையில்! வாழ்த்துக்கள் ராசா!

வன்னியில குளங்கள், கோயிலடியை விட காதலுக்கு இன்னுமோர் பேர் போன இடம் இருக்கு! எது சொல்லும் பார்ப்பம்?
பற்றைகள்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பத்தைக்குள்ள பொடியன் பொட்டையோட போயிட்டான் என்றால் அன்றைக்கு அவருக்கு சங்காபிஷேகம் தான் குட்டிப் பையா.

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

காதலையும், வீரத்தையும் இணைச்சு அழகாக எழுதியிருக்கிறீர். முதல் பதிவு சும்மா சோக்கா வந்திருக்கு மோனை.
இன்னோர் விடயம் உமக்கு தெரியுமே?

வன்னியில இருக்கும் போது காலை 07.30 செய்திக்கு முன்பதாக அந்த வயசான வெள்ளைத் தலைக் கவிஞர் நாடு நாடு என்றோர் கவிதை நிகழ்ச்சி செய்வார், கேட்டிருக்கிறீரே?’
அதில அவர் தாயகத்தை காதல் செய்யுங்கள் என்றோர் கவிதையும் வாசித்ததாக நினைவிருக்கு!

சொன்னாப் போல இப்பத் தான் அந்தக் கவிஞரோட பேர் ஞாபகத்திற்உ வந்திச்சு ராசா. அவர் தான் புதுவை இரத்தினதுரையர்.

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

உலைக் களம் என்று வி.....பு பேப்பரின் பின் பக்கத்திலையும் தாயகத்தை காதல் செய் என்பது தொடர்பாக அழகான ஒரு கவிதையை அவர் எழுதியிருந்தார் குஞ்சு.

அதே மாதிரி
"தாய் நிலத்தை காதலிக்கும் தளிர்கள் இருக்கும் வரை
பாய் விரித்து எம் தேசம் படுக்காது என்றும்" ஓர் கவிதையிலை இந்தக் கவிஞரே எழுதியிருந்தார்.

அவ்வளவுக்கு நீங்கள் எழுதியிருப்பது போல மண்ணை நேசித்த பெருமைக்குரிய பூமி அது!

உங்களின் இப் பதிவிற்கு தலை வணங்குகிறேன் ராசா.

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

விழித்திருப்போம் என்று 2008ம் ஆண்டு ஓர் சிடி புலனாய்வுத்துறையால வெளியிட்டவை!
அதில கூட இந்தக் கவிஞர் தான்
"தாயகம் மீதில் காதல் கொள்
வாழ்வெல்லாம் அதையே காவல் செய்
பெருமை கொள் தமிழர் தேசியம்
உரிமையாய் அதிலே இணைந்து நில்...

இப்படி ஒரு பாடலை எழுதியிருந்தார்..

சந்திரமோகன் பாடிய பாடல் அது!
இன்றும் நினைவில் நிற்குது பார்த்தியே குஞ்சு!

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

பதிவுக்குத் தொடர்பில்லாது அரசியல் கதைக்கிறேன், விநாசியாருக்கு அறளை பேந்து போட்டுது என்று நினைக்க வேண்டாம் குஞ்சு.
இந்தப் பதிவில வாற வீரத்தை நினைவூட்டும் வகையில் தான் மேற்படி கவிதைகளை நினைவூட்டியிருக்கிறேன்.

Yoga.S. said... Best Blogger Tips

ஈழத்தமிழில எழுதியிருக்கிறியள்.எழுத்து நடையிலிருந்து ஆர் எழுதியிருப்பினமெண்டு கண்டு பிடிக்கக் கூடியதாயிருக்கு!ஈழவயல் இப்புடியே நல்ல,நல்ல விஷயங்களோட வரட்டும்!வரட்டே?(தொப்புள் கோடி உறவுகளுக்காக;அருமையாக ஈழத்தமிழில் எழுதியிருக்கிறீர்கள்!எழுத்து நடையிலிருந்து யார் எழுதியிருப்பார்கள் என்பதைக் கண்டு பிடிக்கக் கூடியதாக இருக்கிறது!ஈழவயல் இப்படியான நல்ல,நல்ல விஷயங்களுடன் வரட்டும்,சந்திப்போம்.)

ஆகுலன் said... Best Blogger Tips

கவரேஜ் பிள்ளையார் கோவிலடி.....பிள்ளையார் பாவம் இல்லையா...அவரே தனிமரம்..இவர்கள் போய் அவருக்கு பகத்தில நிண்டு கூத்து அடிச்சா...

ஆகுலன் said... Best Blogger Tips

மீளும் நினைவுகள்..

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் குட்டி பையா..!
ஈழத்து தமிழில் பதிவை அழகாக கொண்டு செல்கிறீர்கள்..

வாழ்த்துக்கள் குட்டிபையா..!

குட்டிப்பையன் said... Best Blogger Tips

////
சம்பத் குமார் said...
//எந்த தப்புதாண்டாவும் செய்ய வெளிக்கிட மாட்டினம் காரணம் அதுதான் அந்த மண்ணின் கலாச்சாரம் அதன் புனிதம். காதலை மதிக்கும் அங்கு காதலர்கள் ஏதும் விளையாட்டு விட்டினம் என்றால் டின் கட்டி விடுவார்கள் அண்ணாக்கள். தமிழனின் கலாச்சாரத்தில் காதலுக்கு தனி இடம் உண்டு காதலும் வீரமும் தமிழனின் கலாச்சாரத்துடன் ஓட்டிய இரட்டைக்குதிரைகள்//

இந்த கலாச்சாரம் தான் தமிழன் எங்கு சென்றாலும் தலை நிமிர வைக்கிறது////

வாங்க சம்பத் அண்ணா உங்கள் கமண்ட்கு நன்றிங்கோ

குட்டிப்பையன் said... Best Blogger Tips

////ஈழத்துப் பூதந்தேவனார் said////

வாங்க தேவனார் நன்றிங்கோ

குட்டிப்பையன் said... Best Blogger Tips

////விண்ணாணம் விநாசியார்! said..////

விநாசியர் உங்களுக்கு வயசான காலத்தில் ஏன் உந்த வேலை பேசாம மீளும் நினைவுகளில் மூழ்கிடுங்கோ கருத்துக்கு நன்றிங்க

குட்டிப்பையன் said... Best Blogger Tips

////Yoga.S.FR said////

நன்றி ஜயா

குட்டிப்பையன் said... Best Blogger Tips

////ஆகுலன் said.////

நன்றி தம்பி

குட்டிப்பையன் said... Best Blogger Tips

////காட்டான் said..////

வாங்கோ மாமா நன்றிங்க

ம.தி.சுதா said... Best Blogger Tips

////தமிழனின் கலாச்சாரத்தில் காதலுக்கு தனி இடம் உண்டு காதலும் வீரமும் தமிழனின் கலாச்சாரத்துடன் ஓட்டிய இரட்டைக்குதிரைகள்./////

அதெல்லாம் வீதப் பெறுமானம் மாறி ரொம்பக் காலம் ஆயிடிச்சேப்பா....

நானும் கவலேஜ் பிள்ளையார் கோயிலடி போயிருக்கேன்...

சுதா SJ said... Best Blogger Tips

குட்டிப்பையன் நல்லா இருக்கு... முதல் பதிவே கலக்கல் ... இனி இன்னும் இன்னும் கலக்க வாழ்த்துக்கள்.... அப்புறம் வன்னிக்காதல்களின் எழில் எந்த காதல்களிலும் வராதுப்பா..... :)

பராசக்தி said... Best Blogger Tips

இந்த காதல் சம்பவங்கள் வாசிக்கும் போதே கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. அத்தகைய புனித காதலுக்கு சிரம் தாழ்த்தி தலை வணங்குவோம். கவரேஜ் பிள்ளையார் வாழ்க! களத்து நிகழ்வுகளை அள்ளித்தருக!

Unknown said... Best Blogger Tips

காதல் கதைகள் எப்பவும் சுவை மிகுந்ததுதான்.....தமிழர்கள் வீரத்தில் மட்டுமல்ல காதலிலும் சளைத்தவர்கள் இல்லை

சத்ரியன் said... Best Blogger Tips

வீரம் விளைந்த மண் சார்ந்த சங்கதிகளை உங்களால் நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

வணக்கம் குட்டிப் பையன்,

ஈழவயலில் உங்கள் முதல் பதிவு அருமை. வாழ்த்துக்கள். காதலை காவியங்களாக பேசிய மொழிகளில் மிக முன்னுநிலையில் இருப்பதும் முன்னோடியாக திகழ்வதும் நம்ம தமிழ் மொழிதான். நல்ல பதிவு. அனைத்தையும் விட அரும்பத விளக்கம் இருக்கே.. ஹிஹிஹி சூப்பர்.. லேடீஸ் சைக்கிள் க்கு இப்படி ஒரு விளக்கமா.. அருமை. அடுத்தமுறை கிளிநொச்சி பக்கம் போகும் பொழுது அந்த பிள்ளையார் கோவிலையும் கொஞ்சம் நான் பார்க்கவேண்டும்.

வாழ்த்துக்கள்.
பி.அமல்ராஜ்.

N.H. Narasimma Prasad said... Best Blogger Tips

உங்க ஊரு 'காதல் ஸ்பாட்' இடத்து கதையை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

KANA VARO said... Best Blogger Tips

உந்த கவரோஜ் பிரச்சினை முந்தி பெரிய தொல்லைப்பா! அதுவும் பாதை பூட்டின நேரம்.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!