Sunday, 18 December 2011

கொப்பரையும் கொம்மாவையும் விட்டு கோதை நீ ஓடி வாடி!

கனகரின் கோப்பிறேசன்
கால் போத்தல் சாராயம்
மப்பேறியதும் மனதில்
அளவற்ற மகிழ்ச்சியூட்ட
மச்சான்ர குறைச் சுருட்டு!
மாலையில் கனிவூட்டும்
வடிசாலை பனங் கள்ளு
இவை யாவும் இருந்தாலும்
இணையில்லா இன்பம் தரும்
இளஞ் சிரிப்பு குமுதினியை போல்
என் இளமைக்கு ஈடாகுமா?
அணைக்கின்ற போது
கால் நகத்தால் கோடு கீறி
கண்களினை மையலுறச் செய்யும்
கன்னியவள் இனிக்கும் அரியதரம் - செல்லமாய்
அடித்தாலும் அவளுடன் வாழ வேண்டும் என
மனமோ எண்ணிக் கொள்ளும் பல தரம்!

உதடு கடிக்கையில் உவர்ப்பும் கசப்பும் சேர்த்து தரும்
உயிர் மூச்சவளின் இதழ்களோ டிப்பிளிசன் மாம்பழம்!
அணைக்கையில் இணை பிரியா உயிராக என்னுடன்
ஒட்டிக் கொள்ளும் அவளோ நிறத்தில் பாலப் பழம்!

தாழ் போடா வீடு - மெதுவாக
காலாட்டி நீயோ எப்போது
உள்ளே வருவாய் என
என் மனமும் நாடும்!
ஆளில்லா நேரம் அச்சம் விட்டு விலகிட
அக்கராயன் குளக் கட்டும் பார்த்து சிரிக்கும்!
அடியே குமுதினி நீயும் சைக்கிளில்
குறுக்காலே போகையில் மனமோ உன்
குறு குறு கனிகளின் துள்ளல் பார்த்து ரசிக்கும்!

கலியாணம் கட்டிட கச்சேரிக்கு போவோம் என்றேன்
பலியாடு நானாகிட உனக்கும் ஆசையோ என்றாள்!
அறியாத வயது! ஆனாலும் நீயோ எனை அடிக்கடி
தவிக்க வைக்கும் அந்த மாதிரி அழகி என்றேன்!
வளையாத மூங்கில் போல நீ நிமிர்ந்து நிற்கின்றாய்
வரிசையிலே உனக்காக பெண்கள் பலர் காத்திருக்கின்றார்!
இது கூட தெரியாது ஏன் நீயும் எனை பார்த்து
ஏகாந்த இராகம் இசைக்கின்றாய் என்று கேட்டாள்-
எனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்!
கொப்பரையும் விட்டு! கொம்மாவையும் விட்டு
கோதை நீ ஓடி வாடி என்று இரைஞ்சி கேட்டேன்!
மப்பினில் கவிதை பாடும் என் மன்னவா - உன் மனதில்
மங்கை என் மீதான ஆசை இன்னமும் தீரலையா?
தப்பது செய்த பின்னரும் என்னை தாளையடி மீன் போல
தள்ளி வைக்க மாட்டியா கிறுக்கா?
இப்பவே வருகிறேன்! ஆனாலும் ஒரு கண்டிசன்!
இரணைமடுக் குளக்கட்டில் நாமிருவரும்
இரவிரவாய் நீந்தி மகிழனும் என்றாள் - அடியே
அது என்ன இடுப்பளவு தண்ணீர் உள்ள குளமா?
ஆழம் அதிகமுள்ள குளமடி என்றேன் - அத்தான் உங்களுக்கு
அந்த மாதிரிக் கருத்தும் புரியலையே!
நீங்கள் ஓர் மொக்கு என்று கடிந்தாள் - என்
இதழை இறுக்கி கடித்தாள்!

அரும்பத விளக்கங்கள்/ சொல் விளக்கங்கள்:

கோப்பிறேசன்/ கோப்பிரேசன்: Corporation - ஈழத்தில் கள்ளுத் தவறணை மற்றும் சாராய பாரினைச் செல்லமாக குறிக்கும் சொல்.
மப்பேறியதும்: போதை ஏறியதும்.
வடிசாலை: கள்ளு வடித்து விநியோகம் செய்யுமிடம்.
அரியதரம்: சீனிப் பணியாரம் அல்லது இனிப்பாக சிவப்பு அரிசி மாவில் செய்யப்படும் பணியாரம்/ பலகாரம்.
டிப்பிளிசன் மாம்பழம்/ மாங்காய்: கிளிச் சொண்டன் மாங்காய்.
பாலப் பழம்: வன்னியில் கிடைக்கும் இனிப்பு நிறைந்த மஞ்சள் நிற சிறிய அளவிலான பழம்.
அக்கராயன் குளக் கட்டு: கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயன் குளத்தின் அணைக் கட்டு.
குறுக்காலே போதல்:  ஒருவரைக் கடந்து போதல். அல்லது குழப்பம் விளை விக்கும் நோக்கில் குறுக்கே செல்லுதல்.
கச்சேரி: மாவட்டத் திணைக்களம். அல்லது அரசாங்க அலுவலகம். இங்கே கச்சேரி Register Office எனும் பொருளில் வந்துள்ளது.
அந்த மாதிரி அழகி: சும்மா ஜோரான பிகரு அல்லது சூப்பரான அழகி!
கொப்பர்: அப்பா. அப்பன், அல்லது தந்தை.
கொம்மா: அம்மா.
தாளையடி மீன்: ஈழத்தின் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் உள்ள தாளையடியில் பிடிக்கப்படும் மீன். சில நேரங்களில் நல்ல சுவையாக இருக்கும். சில வேளை சுவையாக இருக்காது.
அந்த மாதிரிக் கருத்து: இங்கே அந்த மாதிரி என்பது அந்த மாதிரியான அர்த்தத்தில் வந்துள்ளது. ஹி...ஹி..
மொக்கு: மக்கு.

32 comments:

ஆகுலன் said... Best Blogger Tips

கவிதை அருமை அதைவிட அரும்பத விளக்கம் அருமை...

//டிப்பிளிசன் மாம்பழம்/ மாங்காய்: கிளிச் சொண்டன் மாங்காய்.//

எனக்கு இதை டிப்பேசன் மாங்காய் எண்டு கூபிட்ட ஜாபகம்....

KANA VARO said... Best Blogger Tips

இரணைமடுக் குளக்கட்டில் நாமிருவரும்
இரவிரவாய் நீந்தி மகிழனும் என்றாள் - //

ஹீ ஹீ.. குளிக்கிறதை தானே மச்சி சொல்லுறாய்..

நிரூபன் said... Best Blogger Tips

@ஆகுலன்

//டிப்பிளிசன் மாம்பழம்/ மாங்காய்: கிளிச் சொண்டன் மாங்காய்.//

எனக்கு இதை டிப்பேசன் மாங்காய் எண்டு கூபிட்ட ஜாபகம்....
//

நீங்கள் செல்லப் பையன் தானே..
முள்ளியவளையில் செல்லமாக கூப்பிட்டிருப்பீங்க.
அவ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said... Best Blogger Tips

@KANA VARO
இரணைமடுக் குளக்கட்டில் நாமிருவரும்
இரவிரவாய் நீந்தி மகிழனும் என்றாள் - //

ஹீ ஹீ.. குளிக்கிறதை தானே மச்சி சொல்லுறாய்..
//

பொஸ்....அதுக்குத் தானே பொஸ்..அவா கீழே விளக்கம் கொடுத்திருக்கா!
கொர்ர்ர்ர்ர்ர்ர்

மைந்தன் சிவா said... Best Blogger Tips

தாளையடி மீன் என்ன பாவம் செஞ்சிச்சு!!

மைந்தன் சிவா said... Best Blogger Tips

ஹிஹி "அந்த மாதிரி" என்பது நமக்கு மட்டுமே விளங்கும் அந்த மாதிரி!!

நிரூபன் said... Best Blogger Tips

@மைந்தன் சிவா

தாளையடி மீன் என்ன பாவம் செஞ்சிச்சு!!
//

ஹே...ஹே..குமுதினி தான் சொல்லனும் மச்சி!

நிரூபன் said... Best Blogger Tips

@மைந்தன் சிவா

ஹிஹி "அந்த மாதிரி" என்பது நமக்கு மட்டுமே விளங்கும் அந்த மாதிரி!!
//

அந்த மாதிரியோ....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சரியில்ல....... said... Best Blogger Tips

தமிழ் வார்த்தைகளை கேட்டு எவ்வளவு நாளாச்சு. ஹும்.

J.P Josephine Baba said... Best Blogger Tips

வாசித்து விட்டேன்.

Powder Star - Dr. ஐடியாமணி said... Best Blogger Tips

தப்பது செய்த பின்னரும் என்னை தாளையடி மீன் போல
தள்ளி வைக்க மாட்டியா கிறுக்கா? ///////

ஆஹா, சூப்பர்! எங்கையா தேடிப்புடிச்சே இந்த உவமையை?

Powder Star - Dr. ஐடியாமணி said... Best Blogger Tips

இரணைமடுக் குளக்கட்டில் நாமிருவரும்
இரவிரவாய் நீந்தி மகிழனும் என்றாள் - /////

யோவ், குளத்தில்தானே நீந்த முடியும்! குளக்கட்டில் எப்படி நீந்த முடியும்?

ஓ.... “ அந்த” நீந்தி யா?

Powder Star - Dr. ஐடியாமணி said... Best Blogger Tips

அத்தான் உங்களுக்கு
அந்த மாதிரிக் கருத்தும் புரியலையே!
நீங்கள் ஓர் மொக்கு என்று கடிந்தாள் - என்
இதழை இறுக்கி கடித்தாள்!//////

ஹி ஹி ஹி ஹி ம்.... இதுதான் நேற்று ப்ளாக் பக்கம் உன்னைக் காண முடியவில்லைப் போலும்!

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

வழமைபோலவே சூப்பர் கவிதை நிரூ. அதுவும் அரும்பத விளக்கத்தில் அந்தமாரி கருத்துக்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறீர்களே.. சுப்பரா விளங்கிடிச்சு..

நிரூபன் said... Best Blogger Tips

@சரியில்ல.......

தமிழ் வார்த்தைகளை கேட்டு எவ்வளவு நாளாச்சு. ஹும்.
//

ஏலேய்.....நீ இங்கிட்டும் வந்திருக்கியா! வருக வருக மச்சி!
உங்களை வரவேற்கிறேன்!

நிரூபன் said... Best Blogger Tips

@J.P Josephine Baba

வாசித்து விட்டேன்.
//

நன்றி அக்கா.

நிரூபன் said... Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

ஆஹா, சூப்பர்! எங்கையா தேடிப்புடிச்சே இந்த உவமையை?
//

ஹே..ஹே...சும்மா யோசித்தேன் மச்சி! தாளையடி மீன் சுவை ஞாபகத்திற்கு வந்திச்சு, எழுதிட்டேன்.

நிரூபன் said... Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி
யோவ், குளத்தில்தானே நீந்த முடியும்! குளக்கட்டில் எப்படி நீந்த முடியும்?

ஓ.... “ அந்த” நீந்தி யா?//

ஆகா...நீ பயங்கர டியூப் லைட்டா இருக்கிறியே..
இன்பக் கடலில் நீந்துவோம் என்று சொல்லுவாங்களே..
அவ்வ்வ்வ்

அந்த நீந்தி மச்சி!

நிரூபன் said... Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

ஹி ஹி ஹி ஹி ம்.... இதுதான் நேற்று ப்ளாக் பக்கம் உன்னைக் காண முடியவில்லைப் போலும்!
//

யோ...எதை எதோட முடிச்சுப் போடுறீங்க. மவனே! பிச்சுப் புடுவேன்! பிச்சு!

நிரூபன் said... Best Blogger Tips

@பி.அமல்ராஜ்

வழமைபோலவே சூப்பர் கவிதை நிரூ. அதுவும் அரும்பத விளக்கத்தில் அந்தமாரி கருத்துக்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறீர்களே.. சுப்பரா விளங்கிடிச்சு..
//

ஹி....ஹி..
அண்ணே உங்களுக்கு விளங்காத அந்த மாதிரியா.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஹேமா said... Best Blogger Tips

நிரூ....அந்த மாதிரி !

துஷ்யந்தன் said... Best Blogger Tips

நிரு கலக்கலா இருக்கு..... கவிதை சூப்பர் அதை விட கீழே தரும் சொல் விளக்கங்கள் அருமை.... இது தொடரட்டும்.... அதில் எனக்கு தெரியாத சொற்களும் அதிகம் இருக்கு....... அதான் ஆவலாய் படிக்கிறேன்.... இது பல பேருக்கும் உதவும்..

துஷ்யந்தன் said... Best Blogger Tips

தப்பது செய்த பின்னரும் என்னை தாளையடி மீன் போல
தள்ளி வைக்க மாட்டியா கிறுக்கா?<<<<<<<<<<<<<<<< நிரு இது புது தகவல்... இப்படி ஒரு மீன் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரியும்.... இதை பார்த்தால் அந்த மீன் சந்தோஷப்படும்.... இனி அதன் உயிருக்கு ஆபத்து இல்லையே.... ஹா ஹா

காட்டான் said... Best Blogger Tips

அட அந்த மாதிரி இருக்கு மோனே..!!

நிரூபன் said... Best Blogger Tips

@ஹேமா

நிரூ....அந்த மாதிரி !
//

நன்றி அக்கா.

நிரூபன் said... Best Blogger Tips

@துஷ்யந்தன்
நன்றி துஸி.

நிரூபன் said... Best Blogger Tips

@காட்டான்
நன்றி அண்ணர்.

மதுரன் said... Best Blogger Tips

நிரூ.. முற்று முழுதாக ஈழத்து நடையில் எழுதியிருப்பது வித்தியாசமாக இருக்கிறது

மதுரன் said... Best Blogger Tips

//தப்பது செய்த பின்னரும் என்னை தாளையடி மீன் போல
தள்ளி வைக்க மாட்டியா கிறுக்கா?//

ஹா ஹா அசத்தலான உவமை நிரூ

எஸ்.பி.ஜெ.கேதரன் said... Best Blogger Tips

ஹிஹிஹி... முடியல...!!!
எல்லாரும் குளத்துலதான் நீந்துவாங்க. ஆனா நீங்க குளக்கட்டுல நீந்துறீங்களா?

N.H.பிரசாத் said... Best Blogger Tips

'களவு' காதல் கவிதை அருமை. அதில் உள்ள சில புரியாத வார்த்தைக்கான விளக்கமும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said... Best Blogger Tips

சகோ நிரூபன்!உங்கள் பதிவின் தொடர் வேகத்துக்கு தொடர்ந்து பின்னூட்டங்கள் சொல்ல இயலவில்லை.மன்னிக்கவும்.

கூடவே மொழி உயிர்ப்பிக்கும் உங்கள் தொடர் எழுத்துக்கும் எனது ஆதரவு என்றும்.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!