Tuesday, 20 December 2011

கோயில் திருவிழாக்களும் சைட் அடிக்கப்படும் பெண்டுகளும்!

இணையத்தில் இறக்கை விரித்து பறந்து கொண்டிருக்கும் ஈழவயலில் அடியேன் எழுதும் முதல் பதிவு இது. ஈழ வயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்!
”சைட் அடிக்கப்படும் பெண்டுகள்” என்ற தலைப்பில் எழுதப்படும் இப் பதிவிலுள்ள விடயங்களானது பல ஆண்களின் பார்வையில் உள்ள விடயங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ”சைட் அடிக்கும் பெண்டுகள்” எனவும் இதனை எழுதலாம். ஏன்னா, "அவங்க சைட் அடிக்கிறதும், நம்மளை மறைந்திருந்து பார்க்கிறதும்" எங்களுக்குத் தானே தெரியும்! ஹி..ஹி....
சினிமாவில ஹீரோ பார்த்திருப்பம். அவர் பாடுவார், ஆடுவார், சண்டைபோடுவார், ரொமான்ஸ் பண்ணுவார். ஹீஹீ இப்பிடியெல்லாம் செய்தால் தான் அவர் ஹீரோ. அதே வேலையை நாங்களும் செய்தம் எண்டா எங்களை ”பைத்தியக்காரன், விசரன், லூசன்” (எல்லாம் ஒண்டு தானோ!?) எண்டெல்லாம் பேசுவாங்க. அப்ப நாங்க ஹீரோ ஆகவே முடியாதா?.. முடியும்.

அதுக்கு சரியான இடம் தான் கோவில் திருவிழாக்கள். அங்கு நாம் ஒவ்வொருவரும் ஹீரோக்கள். எங்கள் ஊரில் இருக்கும் இளம் பெண்களுக்கு நாங்கள் ஹீரோ, எங்களுடன் படிக்கும் பெண்களுக்கு நாங்கள் ஹீரோ, ஆகக் குறைந்தது எங்கள் தெருவில் இருக்கும் இளம் பெண்களுக்களுக்காவது நாங்கள் ஹீரோவாக இருக்க மாட்டோமா? அடப் போய்யா! பக்கத்து வீட்டு பெண்ணுக்காவது நாங்கள் ஹீரோவா இருப்பமில்லே!

நாங்க ஹீரோ எண்டுறதை எப்பிடிக்காட்டுறது.? எதையாவது பண்ண வேண்டாமா? பண்ணணும்... ஊர்த்திருவிழா வரும் வரை வெயிட் பண்ணணும்.. திருவிழா வந்தால் ஒரே கொண்டாட்டம் தான்.

”பள்ளிக்காதல் பாதியிலே..” என்பார்கள். அது நூற்றுக்கு 98 வீதமாவது வெறும் எதிர்ப்பாற் கவர்ச்சி தான். டீன்-ஏஜ் பருவத்திலை அது வந்து போகும். (அது வந்தாத்தாண்டா நீ ஆம்பிளை). இந்த எதிர்பாற்கவர்ச்சியால் கோயிலுக்கு வரும் ஒரு பெண்ணையோ! அல்லது ஒரு பெண்கள் குழுவையோ நாங்கள் தனியாகவோ அல்லது நண்பர்கள் குழுவாகவோ டாவடிப்போம். அவர்களும் எங்கள் டாவுக்கு பதிலளிப்பது போல சிரிப்பார்கள், நெளிவார்கள், சிலவேளை கதைக்க கூட செய்வார்கள். இதுக்காகவே திருவிழாக்காலத்திலை ஆன்மீக பக்தி கூடி அலையுற ஆசாமிகள் பலபேர்.

எப்படியெல்லாம் கோயிலில் சைட் அடித்தார்கள் - அடிக்கிறார்கள் - அடிப்பார்கள் - அடித்தோம்..

கோயில்ல எது ரேனிங்பாயிண்ட், முதல்ல அதைக் கண்டு பிடிக்கணும். கோயிலுக்கு வாரவங்க எப்பிடியும் கும்பிடத்தான் வருவாங்க. அதனாலை நாங்க வளைச்சுப் போட வேண்டியது சுவாமியை. நம்ம பசங்க எல்லாம் என்ன செய்வாங்க எண்டால், அநியாயத்துக்கு சுவாமியை சுத்திச் சுத்தி வருவாங்க. சுவாமி காவுவது, சுவாமியின் வாகனம் காவுவது என்பது இதன் முதற்படி. எல்லோரும் சுவாமியை நோக்கி கும்பிடும் போது இவர்கள் மட்டும் இலக்கு வைத்த பெண்ணை நோக்குவார்கள். அவளும் இவரை நோக்கினால், ஐயா வெரி ஹெப்பி. திருவிழாவின் 25 நாளும் அவர் அந்த கொம்பிலை அந்த இடத்திலையே பிடிச்சு சுவாமி தூக்குவர். அவாவும் அதே இடத்திலை சுத்தி வருவா..

இன்னுமொரு விசயம், தேர்முட்டிப் படி அல்லது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மஞ்சம், கைலாசவாகனம், சப்பறம் போன்றவற்றில் சுவாமியை ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் படிக்கட்டு. அதில் ஏறினால் கொஞ்சம் எல்லோரையும் விட உயரத்தில் தோன்றலாம். அடித்துப் பிடித்து சுவாமியுடன் ஏறினால் எங்களோட கண் பார்வைக்கு எல்லோரும் தெளிவாகத் தெரிவாங்க. உயரத்தில் நின்று பெரிய நாட்டாமை போல அங்கை இஞ்சை ஓடியாடித் திரியுறது. அப்ப தானே, ஊர் இளவயதுப் பெண்களெல்லாம் ”யாரிந்த மன்மதன்” என உயரே பார்ப்பார்கள்.
முக்கியமான இன்னொரு பகுதி. தேர், சப்பறம், மஞ்சம் போன்றவற்றின் வடம் (பிடித்திழுக்கும் கயிறு). வகுப்பறையைப் போல கோயிலிலும் பெரும்பாலும் ஆண்கள் ஒரு கரை, பெண்கள் ஒரு கரை எனத்தான் வலம் வருவார்கள். பெண்கள் பக்கம் உள்ள வடத்தைப் போய் பிடித்துக் கொள்வது. அதுவும் உட்புறமாக. அப்பத்தானே பெண்ணுங்களை வடிவாப் பார்க்கலாம். கோயில் வீதியின் நாலு மூளையிலும் தேரைத்திருப்பும் போது எப்படியும் வடம் அங்கும் இங்கும் போகத்தான் செய்யும். பெண்ணுங்க பக்கம் நிண்டா கதைக்கிறதுக்கும் எல்லாத்துக்கும் வசதி தானே!

சுவாமியை விட்டு விலத்தியும் (விலகி) ஹீரோயிசம் பண்ணலாம். அதுக்கெண்டு சில இடங்கள் கோயிலிலை இருக்கு. கோயில் வெளி வீதியில் உள்ள வீடுகள் மற்றும் கடை போன்ற இடங்களில் அல்லது மானப் பந்தல் (கும்பம் வைத்து படையல் படைப்பது) வைப்பார்கள். அதில் நிச்சயம் சாப்பிடுவதற்கு ஏதாவது படையல் பண்ணியிருப்பார்கள். ஐயர் பூசை முடித்ததும் அதைத் தூக்கிக் கொண்டு போய் பெண்கள் பகுதியில் கொடுக்கலாம். (ஆம்பிளைங்க கடுப்பானால் ஒண்டும் செய்ய முடியாது). அல்லது குடுக்கிறவனிட்ட அடிச்சு பிடிச்சு; வேட்டி ஊத்தையாகி ஒரு கேசரியை வாங்கி பொண்ணுங்களுக்கு குடுத்திட்டு நாங்கள் கையிலை மிஞ்சின ஒரு பருப்பு பருக்கையை மட்டும் திண்டு ஏப்பம் விடுவது. (இதெல்லாம் தேவையா பாஸ்?)
கோயிலையும் அன்னதானத்தையும் பிரிக்க முடியாது. அன்னதானம் எண்டா சும்மா வாங்கிட்டு போகலாம் எண்டு நினைக்காதீங்க. வேலாயுதத்திற்கு டிக்கட் எடுத்து முதல் ஸோ பார்த்தாலும் (இங்கையும் விஜயா? ஸப்பா...) எங்கட ஊரில அன்னதானத்தின் முதல் பந்தியில் உட்காரேலாது. நாங்க கோயிலிலை கொஞ்சம் ஓடித்திரிஞ்சு வேலை செய்யுற ஆளா இருந்தா தெரிஞ்ச பொண்ணுங்களை பின் கதவாலை கூட்டிட்டு வரலாம். எல்லாரும் கறி, சோறுக்கு அடிபட நாங்க மட்டும் அவங்களுக்கு வலிய வலிய கொண்டு போய்ப் போடலாம். கொஞ்சம் கோயில் பெடியளோட தொடர்பில்லாத ஆட்களா நாங்கள் இருந்தா, அந்த பொண்ணுங்களை எல்லாம் ஒரு இடத்தில நிற்கச் சொல்லிப் போட்டு சனத்துக்க அடிபட்டு நாங்க சோறு வாங்கி குடுத்திட்டு வயிறு பசியால் கடிக்க மூஞ்சையில் அசடு வழியலாம்.

இதேபோல தண்ணீர்ப் பந்தலில் நின்று அள்ளியள்ளி தண்ணீர் கொடுக்கலாம். கச்சான், பூந்திரி, பகோடா, தேன்முறுக்கு, ஐஸ்கிறீம் என எங்கள் காசில் (ஹீ ஹி அப்பாவின்) அவர்களுக்கு தின்பண்டங்களை வாங்கிக் கொடுக்கலாம். இவ்வளவு ரிக்ஸ் எடுத்தும் ”காவாலி” (ஒண்டுக்கும் உதவாதவன்) என்ற பெயர் தான் கிடைக்குதா? டோண்ட் வொறி.. இரவு திருவிழா முடிந்து போகும் போது அவர்களுக்கு துணையாக இருட்டில் வழிகாட்டியாகவும், பாதுகாவலனாகவும் போகலாம்.

இவ்வளவு கஸ்டப்பட்டும் ஒரு பலனும் இல்லையா? கோயிலுக்கே போகவேண்டாம் பேசாம வீட்டை படுத்திருந்து கேபிள் டி.வி பாருங்க..
இப்பிடியெல்லாம் ரிக்ஸ் எடுத்தா தான் நீங்க ஊரில ஹீரோ.. இல்லாட்டி ஸீரோ..
டிஸ்கி : கோயிலுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் வழிபடுவதற்கே வருவார்கள். இது குறித்த வயதெல்லையில் உள்ள டீன்-ஏஜ் பசங்களின் குறும்பு. வயது 20ஐ தாண்டியவர்கள் உங்கள் ஞாபகங்களை அசைபோட்டு பாருங்கள். சிறுவர்கள் வாசிக்க வேண்டாம். கெட்டுப்போயிடுவீங்க..
அரும்பத விளக்கம்/ சொல் விளக்கம்: 
பெண்டுகள்: பிகருங்க/ பெண்கள்.
எண்டா: என்றால்
கதைக்கிறது: பேசுறது.

படங்கள் : நன்றி இணுவைக்கந்தன் இணையம்

34 comments:

“நிலவின்” ஜனகன் said... Best Blogger Tips

ம்ம்ம்ம்.. அனுபவம் பேசுகிறது.. சரி சரி...

அப்படியே எங்களையும் கொஞ்சம் வெட்கப்பட வைச்சுட்டியள்.. ஏன்னா உண்மைகளை எழுதி..

இருந்தாலும் கடைசியில சொன்னீங்க பாருங்க ஒரு விடயம்..
ஃஃஃஇவ்வளவு கஸ்டப்பட்டும் ஒரு பலனும் இல்லையா? கோயிலுக்கே போகவேண்டாம் பேசாம வீட்டை படுத்திருந்து கேபிள் டி.வி பாருங்க...ஃஃஃ

wow.....superb..

மைந்தன் சிவா said... Best Blogger Tips

ஹிஹி அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வரோவே வரோவே வரோவே....ஹஹஹா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பிள்ள !!!
அப்பிடி ஒண்ணுமே பண்ணினதில்ல...:)

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

ம்ம்ம்.. தெரிஞ்சு கொள்ள வேண்டிய விஷயங்கள் தான்.. அட ஒரு கோவில்ல இவ்வவளவு மேட்டர் இருக்கா???

//கோயிலுக்கு வாரவங்க எப்பிடியும் கும்பிடத்தான் வருவாங்க.//
ஹிஹி ஹி ஹி நல்லாஇருக்கு...

குட்டிப்பையன் said... Best Blogger Tips

வணக்கம் வரோ அண்ண அந்தமாதிரி சொல்லியிருக்கீங்க கோயில் திருவிழாவில் சைட் அடிக்காத வாலிப பசங்கள் யாரும் உண்டோ?அவ்வ்வ்வ்வ்வ்

அண்மையில் கூட கடந்த சூரன்போர் திருவிழா அன்று நானும் நம்ம நண்பர்களும் நல்லா சைட் அடித்தோம் அவ்வ்வ்வ்வ்

மதுரன் said... Best Blogger Tips

ஹா ஹா அப்பிடியே என்னமாதிரியே இருந்திருக்கிறீங்க வரோ அண்ணை..

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் சகோ,
அந்த நாள் நினைவுகளை மீட்டும் அசத்தலான பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க,
நன்றி.

முன்பெல்லாம் நல்ல முறுக்குச் சங்கிலி போட்ட நெஞ்சு மயிரைக் காட்டிக் கொண்டு தான் ஆண்கள் சாமி தூக்கி வீதி உலாக் கொண்டு செல்ல முண்டியடிப்பார்கள்.
ஏன் இப்போதும் அப்படித் தான். ஹி...ஹி..

இதில சாமி காவும் போது ஆண்களை கடைக் கண்ணால் பெண்கள் ஒரு பார்வை பார்ப்பார்கள் பாருங்க...ஹே...ஹே...ஹே..
ஸப்பா....

ஆகுலன் said... Best Blogger Tips

அண்ணே தேங்காய் உடைகுறது ஒரு சந்தோசம்...எனக்கும் கொஞ்ச அனுபவம் இருக்குது.....

விக்கியுலகம் said... Best Blogger Tips

பகிர்வு பல விஷயங்களை ஞாபகப்படுத்தியது நன்றி!

veedu said... Best Blogger Tips

பால்யகாலம்...இல்லை..இல்லை..பருவகாலத்தின் நினைவுகளை மெல்லிய சிறகாய் இதயத்தை வருடும் எளிய நடை அருமை.....அருமை...நண்பா!

யோகராஜா சந்ரு said... Best Blogger Tips

பலர் திருவிழாக்களுக்கு சாமி தரிசனத்துக்காக போவார்கள்.. நாங்கள் மாமியுடன் வரும் மாமியின் மகளை தரிசிப்பதற்காக செல்வோம். அழகான இளம் பெண்களின் தாய் எமக்கு மாமிதானே.. நல்ல பகிர்வு… நாமும் உங்க கட்சிதான்

ஹேமா said... Best Blogger Tips

அடக்கடவுளே....இப்பத்தானே தெரியுது இந்தப் பெடியள் எல்லாம் வீபூதியோட சாமி தூக்கினதும்,
சுத்தினதும்,அன்னதானச் சோறு வாங்கித்தந்ததும்.அப்பிடியே சொல்லிப்போட்டீங்கள் கானா.இனிக் கவனமா இருப்போமெல்லோ !

கவி அழகன் said... Best Blogger Tips

ஆம் ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டுவியல் விடயங்களை எம் வலையில் ஆவணப்படுத்தி எம் அடுத்த சந்ததியிடம் கொண்டு சேர்க்கும் விடயத்தினை நாம் அனைவரும் கையிலெடுத்திருக்கின்றோம்

டிஸ்கி- சிறுவர்கள் வாசிக்க வேண்டாம். கெட்டுப்போயிடுவீங்க..

KANA VARO said... Best Blogger Tips

“நிலவின்” ஜனகன் said...//

பின்னை என்னப்பா! நண்பன் ஹீரோ ஆக நாங்க காமடியன் ஆகிறதோ?

KANA VARO said... Best Blogger Tips

மைந்தன் சிவா said... //

உன்னைப்பற்றி பொதுவில சொல்லணும் எண்டு ஆசைப்படுறியோ கண்ணா?

துஷ்யந்தன் said... Best Blogger Tips

வரோ அண்ணாவின் வண்டவாளங்கள் எல்லாம் வருதுங்கோ.... அவ்வ

KANA VARO said... Best Blogger Tips

பி.அமல்ராஜ் said...//

இல்லை அண்ணே! ”நான் பொதுமைப்படுத்தி எழுதி கோயில் கும்பிட வாறவங்களை அவமதிச்சுப் போட்டன். இந்துக்களை அவமதிச்சு போட்டன். மற்ற சமயத்திலை இப்பிடி எல்லாம் எழுதுவாங்களா?” என சம்பந்தமே இல்லாமல் புரளிகள் கிளம்பும். எதுக்கும் முன் ஜாக்கிரதையா சொல்லிவிடுவமே!

துஷ்யந்தன் said... Best Blogger Tips

எங்களுக்கு எல்லாம் இந்த அனுப்பவங்கள் இல்லைப்பா :)
ஆனா உங்களிடம் இருந்து காப்பாற்ற யாரும் அக்கா மாருக்கு காவலுக்கு எங்களைத்தான் விடுவாங்க , அப்பாவுன் நீங்க எங்களுக்கு ஜஸ் வாங்கி கொடுத்து பேக்காட்டி அவங்கள மடக்கிடுவீங்களே அவ்வ்

KANA VARO said... Best Blogger Tips

குட்டிப்பையன் said... //

இல்லைப்பா.. அடிக்காதவங்களும் இருக்காங்களாம். அதாவது அடிச்சாலும் வெளியில காட்டிக்கொள்ளுற கலாசார காவலர்கள்.

KANA VARO said... Best Blogger Tips

மதுரன் said... //

அப்ப நீயும் கெட்ட பையனா? என்னை அப்பிடித் தான் சொல்லுறாங்க.

KANA VARO said... Best Blogger Tips

நிரூபன் said...//

மைனர் சங்கிலியோட தான் திரிஞ்சிருக்கார் போல!

KANA VARO said... Best Blogger Tips

ஆகுலன் said... //

எதிலையப்பு அனுபவம்? தேங்காய் உடைக்கிறதிலையோ? அல்லது சைட் அடிக்கிறதிலையோ?

KANA VARO said... Best Blogger Tips

விக்கியுலகம் said... //

ஈழவயல் ஞாபக மீண்டலுக்கும் ஒரு களம் தானே!

KANA VARO said... Best Blogger Tips

veedu said... //

இப்படியான பாராட்டுக்கள் எனக்கு மட்டுமல்ல எமக்கும் உற்சாகம் தான் நண்பரே!

KANA VARO said... Best Blogger Tips

யோகராஜா சந்ரு said... //

நம்ம கட்சியா? அப்படீன்னா வெற்றி நிச்சயம்.

KANA VARO said... Best Blogger Tips

ஹேமா said... //

ஹா ஹா! அக்கா, உப்புமட பிள்ளையார், கோண்டாவில் - காளி கோவில் போன்றவற்றில் நிறைய ஏமாந்து போயிட்டீங்க போல.

KANA VARO said... Best Blogger Tips

கவி அழகன் said...//

எங்கள் பேச்சு வழக்குகள், அனுபவ பகிர்வுகள் இதற்குள் உள்ளடங்குகின்றது என்பது உங்களுக்கு படவில்லையா அழகரே!

//டிஸ்கி- சிறுவர்கள் வாசிக்க வேண்டாம். கெட்டுப்போயிடுவீங்க..//

இது நகைச்சுவைக்காக சொல்லியிருப்பதும் உங்களுக்கு புரியவில்லையா அழகரே!

KANA VARO said... Best Blogger Tips

துஷ்யந்தன் said... //

நீங்க அக்காக்களோட நிண்டு என்னத்தை கிழிப்பீங்க? பெண்கள் மத்தியில் நீங்கள் இருக்கும் போது எதற்கு ரிக்ஸ் எடுத்து சைட் அடிக்க வேண்டும்.

எஸ்.பி.ஜெ.கேதரன் said... Best Blogger Tips

@கவியழகன்:...பண்பாட்டுவியல் விடயங்களை எம் வலையில் ஆவணப்படுத்தி......////

..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........
ஆமாங்க்ணா.
இத்தால் யாவருக்கும் அறியத்தருவது என்னவென்றால்..
அடுத்த சந்ததிகளும் சாமி காவும்படி
கேட்டுக்கொள்கிறோம்.
ஹிஹிஹி............

எஸ்.பி.ஜெ.கேதரன் said... Best Blogger Tips

சொல்றதுக்கு கனக்க இருக்கு.ஆனா... கொஞ்சம் இருங்கோ வாறன். புனைபெயரில ஒரு எக்கௌண்ட் ஓப்பிண் பண்ணீட்டு .

KANA VARO said... Best Blogger Tips

எஸ்.பி.ஜெ.கேதரன் said... //

உன் பேரிலேயே சொல்லு மச்சி. அதில தான் ஒரு கிக்கே!

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் வரோ...!
அட போய்யா மடப்பள்ளியே நம்ம கையிலதான் இருந்துச்சு ஒரு காலத்தில... ஆனா என்ன பிரியோசனம்..  வெங்காயம் உரிக்கிறவங்க தொடக்கம் வென்னீர் வைக்கிறவங்க வரைக்கும் எல்லாமே நைன்டிகள்.. நீ குடுத்து வைசவன்யா..!!!))

ஈழவயல் said... Best Blogger Tips

@கவி அழகன்
ஆம் ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டுவியல் விடயங்களை எம் வலையில் ஆவணப்படுத்தி எம் அடுத்த சந்ததியிடம் கொண்டு சேர்க்கும் விடயத்தினை நாம் அனைவரும் கையிலெடுத்திருக்கின்றோம்

டிஸ்கி- சிறுவர்கள் வாசிக்க வேண்டாம். கெட்டுப்போயிடுவீங்க..
//

அன்பிற்கினிய உறவே;
இலக்கியம் எனப்படுவதும், ஒரு சமூகத்தைப் பற்றிப் பேசுகின்ற பரந்து பட்ட பார்வை கொண்ட எழுத்தாக்கங்கள் என்ப்படுபவையும், காலத்தின் கண்ணாடியாக விளங்குபவை!
உதாரணமாக சங்க இலக்கியங்களை நாம் உற்று நோக்கும் போது அகநானூறு, புறநானூறு எனும் இரு பெரும் பிரிவுகளூடாக சங்க கால மக்களின் வாழ்வியலையும், அக் காலப் பகுதிக்குரிய வரலாற்றுச் சிறப்புக்களையும் பேசி நிற்கின்றது.
இங்கே சங்க இலக்கியங்களை ஆராய்கின்ற யாரும் சங்க கால மக்களின் காதல், கலாச்சார, வாழ்க்கை முறை பற்றிப் பேசுகின்ற அகத்திணை இலக்கியங்களைப் புறந் தள்ளி ஆராய முடியாது.
அதே போலத் தான் ஈழத்து மொழி, கலை, கலாச்சார, பண்பாட்டியல் தொடர்பாக நாம் எழுதுகின்ற போது நாம் விரும்பாவிட்டாலும், ஈழத்துக் காதலையோ, அல்லத்து காதலுடன் சார்ந்த சில சுவையான சூடான விடயங்களையோ நாம் புறந்தள்ளி வைக்க முடியாது!

ஈழத்து காதல் பற்றி, ஈழத்தில் ஆண்கள் பெண்களைப் பார்க்கும் பார்வை பற்றிய விவரணங்களை நாம் எழுத நேரும் போது, சில வேளை அவை வரம்பு மீறி கொஞ்சம் விரசமானதாக வந்து கொள்ளும், ஆனாலும் எமது நோக்கத்தில் நின்று வழுவக் கூடாது என்பதற்காக, எம்மால் முடிந்த வரை அனைத்து தரப்பினரும் படிக்கும் வகையில் நாகரிகமாகத் தான் ஈழவயலைக் கொண்டு செல்ல விரும்புகின்றோம்! இதனை அனைத்துச் சொந்தங்களும் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றோம்!

இங்கே குழந்தைகள் படிக்க கூடாது என்பது வெறும் நகைச்சுவைக்காவே எழுதப்பட்டது!

எஸ்.பி.ஜெ.கேதரன் said... Best Blogger Tips

@KANA VARO

அலா... எச்சுஸ்மி.
கிக்கு மட்டுமில்ல.உதையும் கிடைச்சாலும் கிடைக்கும்.-வீட்டில.
ஹிஹிஹி...

அம்பலத்தார் said... Best Blogger Tips

அடகோயில் திருவிழாவில் இத்தனை விசயமிருக்கா உண்மையை இப்படிப்போட்டு உடைச்சிட்டியளே பாவம் நம்ம பசங்க

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!