Thursday, 22 December 2011

மார்கழியின் மகிழ்ச்சியும் சுமணா அக்காவின் கைப்பக்குவமும்!

வணக்கம் உறவுகளே; ஈழவயலில் இது எனது முதற் பதிவு என்பதால் சுமாராய் இருந்தாலும் சூப்பர் என சொல்லிவிடுங்கள் ப்ளீஸ்... ஹே..ஹே..

எமது சமய பண்பாட்டு கலாச்சார முறைமைகள் எமக்கு பல வகையான விடயங்களை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சிறுவர் முதல் முதியவர் வரை தங்கள் கஷ்டம் துன்பங்களை மறந்து ஒரு சந்தோஷ, களியாட்டமாக மனங்களை மாற்றுவதற்கு இந்த பண்டிகைகள் மிகவும் முக்கியமானவை. தேவையானவையும் கூட. அந்த பண்டிகைகள் சமயம் சார்ந்ததாகவோ அல்லது கலாச்சாரம் சார்ந்ததாகவோ அல்லது எங்கள் தமிழ் பண்பாடு சார்ந்ததாகவோ இருக்கலாம். இந்த பண்டிகைகளுக்காக நாம் செலவு செய்யும் பணம் தொடங்கி நேரம், சந்தோசம் வரை அனைத்தும் அதிகம். இந்த பண்டிகைகளிலே ஒரு விசேடத்துவம் இருக்கிறது பாருங்கள். பண்டிகை என்றதும் இரண்டு கருத்தியல் விடயங்கள் எங்கள் மனங்களில் வரும். ஒன்று பண்டிகைக்குரிய சம்பிரதாயங்கள்,அடுத்தது கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு விடயங்கள். நம்மவர்கள் எல்லாம் இந்தப் பண்டிகைகளில் கேளிக்கைகளுக்கும் பொழுது போக்குகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இந்த சம்பிரதாயங்களிற்கு கொடுப்பது குறைவு. 
ஆக, பண்டிகைகள் எமது வலிகளையும் அல்லது காயங்களையும் கொஞ்சமேனும் ஆற்றும் ஒரு மருந்தாகக் கூட தமிழர்கள் அனுபவித்திருக்கிறார்கள்.சரி விடயத்திற்கு வருவோம். ஒவ்வொரு மாதம் ஆரம்பமாகும் பொழுதும் எமக்கு ஒவ்வொரு விடயங்கள் ஞாபகத்திற்கு வந்துவிடும். அதிலே அந்த மாதத்தில் வரும் பண்டிகைகள் முதன்மை வகிக்கின்றன. இதைவிடுத்து, புது மாதம் ஒன்று பிறந்துவிட்டால் அந்த மாதத்தில் வரும் போயா மற்றும் லீவு நாட்களும் ஆபீஸ் போகும் நமக்கு முதலில் வந்து மனதில் நிற்பவை. இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு நினைவுப் பதிவுகள் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றையும் தாண்டி சில முக்கிய தினங்களும் வரலாற்று முக்கியம் நிறைந்த நிகழ்வுகளின் வருகையும் அந்த மாதத்தை நமக்கு வரும்முன்னே ஞாபகப்படுத்த வைத்துவிடும். 

தை என்றதும் பொங்கலும்,  மாசி என்றதும் விரதத்தில் தொடங்கி முளிப்பில் முடியும் சிவராத்திரியும், பங்குனி என்றதும் பல்லைக்காட்டி அடிக்கும் வெயிலும், சித்திரை என்றதும் பட்டாசும் பின்னர் நாமெல்லாம் சேர்ந்து சிலுவையில் அறைந்த இயேசுனாதரும், வைகாசி என்றதும் தீபச் சுட்டிகளும்,  ஆவணி ஐப்பசி வந்ததும் ஓடித்திரிந்து சாப்பிடும் நம் முஸ்லிம் நண்பர் வீட்டு பலகாரங்களும்,  புரட்டாதி என்றதும் துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி என்கின்ற மூவரின் ஒன்பது நாட்களும், கார்த்திகை என்றதும் அழகிய விளக்கீடுகளும் எமக்காய் அறையப்பட்ட சிலுவைகளும்,   என ஒவ்வொரு மாத தொடக்கமும் எமக்கு ஒவ்வொரு ஞாபக எதிர்பார்ப்பை உருவாக்கிப் போகும். 

அதேபோல, நமது பிரதேசங்களில் மார்கழி மாதம் வந்துவிட்டால் எங்கும் வண்ண விளக்குகளும், பகலில் பச்சையாகவும் இரவில் கலர் கலராக மாறும் முற்றத்து மரங்களும், இறைச்சிக்கடை தவிர அனைத்துக் கடைகளிலும் விற்பனைக்காய் தொங்கும் நத்தார் பாப்பா பொம்மைகளும், மாத தொடக்கத்திலேயே கணவன் மார்களை அடகு வைத்துக்கூட கடை கடையாய் ஏறி இறங்கும் பெண்கள் கூட்டமும், ஐஸ் பழம் கூட சாப்பிடாமல் மிச்சம் பிடித்து சீறுவானம் வாங்கும் சிறுவர்களும், வீடுகளில் குப்பி விளக்கு மங்கலாய் எரிய ஆலயங்களை பகலிலும் கலர் கலர் ஒளிகளால் அழகுபடுத்தும் மின் விளக்குகளும், அந்த இரவு நத்தார்ப் பூசைக்காய் நித்திரை முழித்து பழகும் சிறுவர்களும் என ஒரு பெரிய மாற்றங்களே மார்கழி என்றதும் நமது ஊர்களை கட்டிப்போட ஆரம்பித்துவிடும்.

இந்த மார்கழியும் இயேசுவின் பிறப்பும் எப்பொழுதுமே நமது தமிழ் கிறீஸ்தவர்களின் நெஞ்சை குளிரச்செய்யும் விடயங்கள். எங்களது ஊரிலே அதுவும் எங்களது நகரத்திலே வசிப்பவர்களில் 85% இற்கும் அதிகமானோர் கிறீஸ்தவர்கள். இதனாலோ என்னவோ சிறு வயது தொடக்கம் நாங்கள் பார்த்து வளர்ந்த பிரமாண்ட பண்டிகை என்றால் இந்த நத்தார் பண்டிகைதான். எப்பொழுதுமே கார்த்திகை வந்ததும் நத்தார் பண்டிகை மோகம் எமது மக்களை தொட்டுவிடும். சிறுவயது முதல் இந்த நத்தார் என்கின்ற ஒரு கொண்டாட்டம் பல வகையான சுகமான அனுபவங்களை சொல்லித்தந்திருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த பண்டிகையானது ஒரு நல்ல களியாட்ட பொழுதுபோக்கு பண்டிகையாகவே இப்பொழுது மாறியிருக்கிறது. ஒரு சமய ரீதியான பண்டிகை உச்ச அளவு  களியாட்டங்களை கொண்டிருக்கிறது என்றால் அது நிச்சயமாக இந்த நத்தார் பண்டிகையாகத்தான் இருக்க முடியும். 
இந்த நத்தார் என்றதுமே எமக்கு பல விடயங்கள் ஞாபகம் வந்துவிடும்.  இப்பொழுதும் அப்படித்தான் அந்த ஞாபகங்களின் பிரதியே இந்த பதிவு. அவற்றில் மிக முக்கியமானது நத்தார் பாப்பா. சிறுவயதில் இந்த கரோல் என்கின்ற கிறீஸ்து பிறப்பு பாடல்களை இசைத்து நடனமாடும் நிகழ்வு மிகவும் சுவாரஸ்யமானது. சிறுவயதில் நத்தார் பாப்பாவுடன் சேர்ந்து ஆடுவதற்காகவோ அல்லது பாடல் இசைப்பதற்காக மட்டுமே எங்களை பயன்படுத்துவார்கள் எங்கள் அண்ணன் மார்.  காரணம் அவர்கள்தான் இந்த நத்தார் பாப்பா பாத்திரம் ஏற்பவர்கள். அதுவும் எங்களது ஊரில் அந்த அண்ணன்மார் காட்டும் கூத்து பெரும் கூத்து. சில அண்ணன்மார் அழகான பெண்கள் இருக்கும் ஏரியாவிற்கு வந்தால் மட்டும் நான் தான் நத்தார் பாப்பா என்று அறிவித்து விடுவார்கள்.  

காரணம் அந்த கரோல் இரவில் நையிட்டியுடன்,  வாசல் கதவில் சாய்ந்தபடி அரை வாசியை மட்டும் வெளியில் காட்டியபடி (உடம்பின் அரைவாசியை என்று சொன்னேன்)  எங்கள் கரோலை பார்க்கும் அந்த அக்காவை வாழ்த்துவதாய் கையைப் பிடித்து இனிப்பு கொடுக்க வேண்டுமே அதற்காக. இப்படி அந்த வீடு வீடாய் போகும் கரோல் கூட்டத்தை மறக்க முடியாது.  அதேபோல நத்தார் காலங்களிலே இந்த நத்தார் பாப்பா என்கின்ற ஒரு நபரும் நம்ம சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நபர். இருந்தும் நான் சிறிய வயதில் இந்த நத்தார் பாப்பாவைப் பார்த்தால் அலறி ஓடுவேனாம் என அம்மா சொல்லும் போது வெட்கம் வெட்கமாய் வரும். இந்த சிறுவர்களுக்கு நம்ம நத்தார் தாத்தாவை பிடிப்பதற்கு இன்னுமொரு முக்கிய காரணமும் இருக்கிறது. கூடுதலாக கரோல் நேரங்களில் சிறுவர்களுக்கு நத்தார் தாத்தா கொடுக்கும் பரிசுகளும் இனிப்பு பண்டங்களுமாகும். சிறுவயதில் நத்தார் தாத்தா கொண்டுவரும் சுவை மிக்க அந்த இனிப்பு பண்டங்களை வாங்குவதற்கு முண்டியடித்த சந்தர்ப்பங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது.
இவை அனைத்தையும் தாண்டி இந்த நத்தாரிற்கான ஏற்பாடுகள் இருக்கிறதே...சொல்லி வேலை இல்லை. எங்கள் ஊர்களில் எல்லாம் (மன்னாரில்) மார்கழி ஆரம்பித்தாலே காளான் முளைக்குதோ இல்லையோ எல்லா வீதிகளிலும் கடைகள் முளைத்து விடும். எங்கு திரும்பினாலும் கடைகள்தான். அந்த கடைகள் ஒவ்வொன்றாய் ஒவ்வொரு  பொருட்களுக்காய் ஏறி இறங்கும் பெண்கள் கூட்டம் ஒருபுறம்.  கடைத்தெருவில் நிற்கும் பெண்களையும் தங்கள் காதலியையும் நூல்விட வரும் ஆண்கள் கூட்டம் இன்னொரு புறம்.  அதிலும், 'நிறைய கடைகள் போட்டிருக்கிறாங்களாம் , வாங்க கடைகள் போய் பார்த்துவிட்டு வருவோம்' என கண்காட்சி பார்க்க போவதைப்போல் மாலையானதும் சந்தை பக்கம் நோக்கி வெளிக்கிடும் இன்னொரு கூட்டம் மறு புறம்.  

இவற்றை எல்லாம் கடந்து நத்தாரிற்கு புத்தாடைகள் வாங்குதல் என்கின்ற ஒரு வழக்கம் மார்கழி வந்ததும் குடும்பங்களிலிருக்கும் ஆண்களுக்கு தொல்லைகொடுக்கும் ஒரு விடயமாக உருவாகிவிடும்.அதிகமான பெண்கள் வீடுகளில் இருப்பதை விட நத்தார் காலங்களில் புடவைக்கடைகளில் நிற்கும் நேரம்தான் அதிகம் என்பது பல கணவன்மார்களின் கம்ப்ளைன். அதேபோல அந்த பெண்களை திருப்திப்படுத்துவதற்கு அந்த கடைக்காறர்கள் போடும் தோப்புக்கரணங்கள் இருக்கிறதே.. அது சொல்லி மாளாது. என்னதான் பெருசாக எங்கள் தேசத்தையும் மக்களையும் பற்றி பெருமையாய் பேசினாலும் வன்னியில் மக்கள் செத்துக்கொண்டு இருக்கும் காலங்களில் கூட அரச கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்களுள் பலர் புத்தாடை உடுத்தாமலும்,தங்கள் வீடு கூரைகளில் வண்ண விளக்குகள் தொங்கவிடாமலும், நத்தாரை களியாட்டமாய் கொண்டாடாமலும் இருந்தார்களா என்றால் அது இல்லை.  

பக்கத்து வீட்டுக்காரன் அந்தரத்தில் தொங்கும்போது, நம்ம வீட்டுக்காறர் பணியாரம் சாப்பிட்டுக்கொண்டிருந்த வரலாறும் ஏதோ நமக்குத்தான் இருக்கிறது. எப்படியேனும் ஒரு நத்தார் முடிந்து போகும் பொழுது அந்த வீட்டின் கணவன் உரிந்து போய்விடுவான். அத்தனை செலவுகள். அனைத்தும் ஆடம்பரத்திற்காய் கொட்டப்படும் பணம். இதை இந்த ஆண்கள் கூட எதிர்ப்பதில்லை காரணம் இதுவும் நத்தார் என்கின்ற பெயரில் பண்பாடாய் மாற்றமடைந்து விட்டது. சரி இறுதியாக நத்தார் காலங்களில் நம்ம வயிற்றையும் சயிற்றையும் பற்றி பேசினால், நத்தார்க் காலங்களில் இவை இரண்டிற்கும் பஞ்சம் இருப்பதில்லை. எங்கள் ஊர்களிலே நத்தார் திருவிழாவிற்கு அதிகம் பலகாரங்கள் செய்யமாட்டார்கள். அதுவும், திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒரே ஒரு தீன்பண்டம் மட்டும் செய்வார்கள். அதுதான் 'அடை' எனப்படும் ஒரு உணவுப் பண்டம். சாதாரணமாக இது வட்டவடிவத்தில் இருக்கும். வட்டமாய் போடும் கேக் இறுக்கமாக இருந்தால் எப்படி இருக்குமோ அதுதான் இந்த அடை. 
இது தான் அடை.
எங்களுடைய அம்மா அதை மிகவும் ருசியாகச் செய்வார். அதேநேரம் பக்கத்துவீட்டும் சுப்பு மாமாவின் மனைவி செய்யும் அடைதான் வெறியில் வந்து கலாட்டா பண்ணும் சுப்புமாமாவை குறிவைத்து எறிய பயன்படுத்தும் ஒரு ஆயுதம் (அதிகம் வெந்துவிடும் அடை, தோண்டி எடுத்த பாறை படை போல இருக்கும்... அவ்வளவு கடினமாய்). அதேபோல எங்களது வீட்டிலிருந்து இரண்டாவது சந்தியில் திரும்பி மூணாவது வீடு சுமணா அக்கா வீடு. சுமணா அக்காதான் எங்கள் ஊரிலே நத்தார் அடைக்கு பிரபலம். ஏனெனில் சுமணா அக்காவின் கைப் பக்குவம் இருக்கே.. அப்பொழுது நாங்கள் சிறுவர்களாக இருந்ததால் அதைப்பற்றி சரியாக தெரிந்திருக்கவில்லை, ஆனால் ஊரே பேசிக்கொள்ளும் அளவிற்கு 'அந்தமாதிரி' (மக்கள்ஸ், நான் இப்பொழுதும் அடையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்). 

எங்களது ஊரில் அதிகமான வீடுகளில் அடை செய்தாலும் கூட நம்ம சுமணா அக்காவின் அடையும் கொஞ்சம் வீடுகளில் வாங்கி வைத்திருப்பார்கள். காரணம் யாராவது வெளியூரிலிருந்து அல்லது பெரும் விருந்தாளிகள் வீடுகளிற்கு வருகின்ற பொழுது சுவை குறைந்த தங்கள் அடைகளை வைத்துக்கொண்டு சுமணா அக்காவின் அடையை பரிமாறுவார்கள். காரணம் அத்தனை சுவை. ஆக, எங்க ஊரில "படை பிரபலமானது அண்ணனால, அடை பிரபலமானது சுமணா அக்காவால." அடுத்தது சைட் அடிக்கப்படும் பெண்கள். நத்தார் காலங்களில் பெண்களை சைட் அடிப்பதற்கு நம்ம பசங்களுக்கு போதுமான அளவு சந்தர்ப்பங்கள் வாய்த்து விடுகின்றன. அட, மார்கழி முதலாம் திகதி ஆரம்பிக்கும் சந்தை தொடங்கி 24 ஆம் திகதி நள்ளிரவு நடக்கும் நத்தார் திருப்பலி பூசை வரை திரும்பும் இடமெல்லாம் தெரியும் பிகர்கள் எல்லாம் நம்ம பையன்களை உசுப்பேத்தி விடுவதாகவே இருக்கும். 

ஆக, தங்கள் காதலியை தவிர்த்து பொது பிகர்களுக்கு நூலு விடும் பசங்களும் அதிகம் சந்தோசப்படும் காலம் இந்த நத்தார் காலம். அதேபோல நம்ம பெண்களும் சும்மாவா இருக்கிறார்கள். நத்தார் புது ஆடை என்கின்ற போர்வையில் புதிதாய் வாங்கி மாட்டிக்கொள்ளும் விதம் விதமான கிழிந்த கிழியாத, சுருங்கி சுருங்காத, உள்ளே தெரிந்தும் தெரியாத புதுவித ஆடைகளை உடுத்திக்கொண்டு பெண்கள் ஆலயத்திற்கு வரும் பொழுது நம்ம பசங்களை எப்படி கையை குவித்து கண்ணை மூடு என்று சொல்ல முடியும்? நத்தார் நல்ல செய்தியைத் தருதோ இல்லையோ நல்ல பிகர்களைக் காட்டும் என்பது நம்ம பசங்களின் அனுபவம். இப்படி சகலரும் எதிர்பார்த்திருக்கும் அந்த நத்தாரை கொண்டாட ஆவலாய் இருக்கிறார்கள் நமது மக்கள். இம்முறை நத்தார் பல நல்ல செய்திகளை நமக்கு சொல்லவேண்டும். 

அத்தோடு வெந்த அடைபோல இறுக்கமாக இருக்கும் எம் இதயங்கள் சுமணா அக்காவின் மெதுவான அடை போல மாற்றம் பெற இந்த நத்தார் உதவி செய்யவேண்டும் என்பதே எனது ஆவலும் பிரார்த்தனையும். நத்தாரிலே புத்தாடை உடுத்தி, புதுநகை போட்டு, வெடி வெடியாய் கொழுத்தி, அடை அடையாய் சாப்பிட்டு குதூகலிக்கும் பொழுது உடலை மறைக்க ஒருதுண்டு கிழிஞ்ச துணியாவது போதும் என்றும், ஒரு  நேர சாப்பாட்டிற்காகவும் ஏங்கித்தவிக்கும் நமது சொந்தங்களையும் கொஞ்சம் மனதில் நிறுத்துங்கள் என்பது இம்முறை நத்தார் கொண்டாட இருக்கும் எமது சொந்தங்களுக்கு ஈழவயல் குழுமம் சொல்லும் தாழ்மையான வேண்டுகோள்.

சொந்தங்கள் அனைவருக்கும் எமது நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! என்ஜோய்......

படங்கள்: நன்றி கூகுள்.

26 comments:

ஆகுலன் said... Best Blogger Tips

அந்த வகையில் சிறுவர் முதல் முதியவர் வரை தங்கள் கஷ்டம் துன்பங்களை மறந்து ஒரு சந்தோஷ, களியாட்டமாக மனங்களை மாற்றுவதற்கு இந்த பண்டிகைகள் மிகவும் முக்கியமானவை. தேவையானவையும் கூட.////

இதுதான் எனது கருதும்...

ஆகுலன் said... Best Blogger Tips

சின்ன வயதில் நத்தார்பாப்பா ஆட்டம் பாற்பதற்காய் நித்திரை முளிதிருந்த காலங்கள் எல்லாம் நினைவுக்கு வருகுது....

அடை ஒருநாளும் ருசிக்க வில்லை....


அப்புறம் பதிவு சூப்பர் ஒ சூப்பர்....(நீங்க சொன்னமாதிரி டபுள் சூப்பர் சொல்லியாச்சு....)

எஸ்.பி.ஜெ.கேதரன் said... Best Blogger Tips

""நத்தார் நல்ல செய்தியைத் தருதோ இல்லையோ நல்ல பிகர்களைக் காட்டும் என்பது நம்ம பசங்களின் அனுபவம்..""

அடப்பாவிகளா...
ஜேசுநாதர மறுபடியும் சிலுவைல அறைஞ்சிட்டீங்களே..!!!

எஸ்.பி.ஜெ.கேதரன் said... Best Blogger Tips

"உடலை மறைக்க ஒருதுண்டு கிழிஞ்ச துணியாவது போதும் என்றும், ஒரு நேர சாப்பாட்டிற்காகவும் ஏங்கித்தவிக்கும் நமது சொந்தங்களையும் கொஞ்சம் மனதில் நிறுத்துங்கள்..""

நிச்சயமாக ஒரு அக்கறைமிக்க,தரமான கருத்து.

ஹேமா said... Best Blogger Tips

ஒன்றாய்க் கூடி எவ்வளவு சந்தோஷமாய் இருந்தோம்.இன்று சிதறுபட்டுக்கிடக்கிறோம்.நினைவுகளை இந்த இணையங்கள் சேர்க்கிறது என்பது சந்தோஷம்.அருமையான கொண்டாட்டப் பதிவு.

ஈழவயல் உழவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள் !

angelin said... Best Blogger Tips

பதிவு மிகவும் அருமை .
சான்டா/ஸ்டார் /கேரல்ஸ் என்று ஊர் நினைவுகளை கிளறிவிட்டீர்கள் .
பாக்ஸ் பாக்ஸா சாக்லேட்ஸ் இப்ப கிடைச்சாலும் சாண்டா தரும் மிட்டாய்
அது தனி டேஸ்ட் .இந்த கிறிஸ்துமஸ் எல்லாருக்கும் வாழ்வில் ஒளியேற்ற இறைவனை வேண்டுகிறேன்

KANA VARO said... Best Blogger Tips

அண்ணே! நான் லண்டன் வந்ததில் இருந்து இன்று வரை கடைக்காரங்க ஒவ்வொருவரும் கிறிஸ்மஸ் தினத்தை தான் எதிர்பார்க்கிறாங்க. அவங்க சந்தோசப்படுற ஒரே நாள் டிசம்பர் 24. அன்று கடும் தண்ணி வகை தொகை இன்றி விற்கப்படும். இந்த வருடம் முடிந்தால். மீண்டும் அடுத்த வருட கிறிஸ்மஸை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அவ்வளவு பவர்.

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் அண்ணா,

காலத்திற்கேற்றவாறு மிகவும் அருமையான பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க. கண் முன்னே ஒரு கிறிஸ்மஸ் பண்டிகையினைத் தரிசிப்பது போன்ற உணர்வினை வர்ணணைகள் மூலம் வரவைத்து விட்டீர்கள். நன்றி அண்ணா.

மைந்தன் சிவா said... Best Blogger Tips

ஹிஹி நகைச்சுவையுடன் கூடிய உங்க கலாச்சார பதிவு!!நல்லா இருக்கு...நானும் ரசித்தேன் சுமணா அக்காவையும் அடை கேக்கையும்!!

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

யப்பா... நன்றி நண்பர்களே..

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

@ ஆகுலன்,

//அப்புறம் பதிவு சூப்பர் ஒ சூப்பர்....(நீங்க சொன்னமாதிரி டபுள் சூப்பர் சொல்லியாச்சு....)//

ஆகுலன் உங்களுக்கு டபுள் நன்றி.. பாவப்பட்டு சூப்பர் ஒ சூப்பர் சொன்னதுக்காக. ஹி ஹி ஹி

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

@ எஸ்.பி.ஜெ.கேதரன்,

//அடப்பாவிகளா...
ஜேசுநாதர மறுபடியும் சிலுவைல அறைஞ்சிட்டீங்களே..!!!//

விடுங்க பாஸ்.. விடுங்க பாஸ்.. இதைத்தானே நாம காலா காலமா செய்துகிட்டு இருக்கம்.. ஹா ஹா ஹா...ஹா ஹா ஹா...

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

@ மைந்தன் சிவா,

//நானும் ரசித்தேன் சுமணா அக்காவையும் அடை கேக்கையும்!!//

என்னத்த ரசிச்சீங்க அண்ணே.. கேக்கல.. இவ்வளவு இருக்க.. ஏன் பாஸ் ஏன்???

K.s.s.Rajh said... Best Blogger Tips

வணக்கம் நண்பரே சிறப்பான ஒரு பதிவை தந்திருக்கிறீங்க அருமையாக இருக்கு பாராட்டுக்கள்.

K.s.s.Rajh said... Best Blogger Tips

எந்த பண்டிகைகள் என்றாலும் பசங்களுக்கு பொண்னுங்களை சைட் அடிப்பது ஒரு வேலைதான்.ஹி.ஹி.ஹி.ஹி

மதுரன் said... Best Blogger Tips

வணக்கம் அமல்ராஜ் அண்ணா

நத்தார் கொண்டாட்டங்கள் பற்றி அழகாக விபரித்துள்ளீர்கள்..
நத்தார் கிறிஸ்தவர்கள் மாத்திரமன்றி அனைவராலும் இப்போது கொண்டாடப்படுகிறது சந்தோசமான விடயம்..

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

அழகான சூப்பரான விவரிப்புகள்...!!!

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

நத்தார் திருவிழா பற்றி பல விடயங்களை தெரிந்துகொண்டேன்..

பகிர்வுக்கு நன்றி..

காட்டான் said... Best Blogger Tips

ஊரில் இருக்கும்போது நத்தார் பற்றிய அனுபவங்கள் எனக்கு குறைவு அதை உங்கள் பதிவு போக்கியுள்ளது..!!

துஷ்யந்தன் said... Best Blogger Tips

பாஸ் அனுபவ பதிவு அழகு.... நத்தார் பாப்பா நினைவுகள் இப்பவும் மனசில் உண்டு.... அந்த நாட்களில் இரவில் அவர்கள் வருகைக்காய் கொட்ட கொட்ட முழித்து இருப்போம்..... வீட்டில் எங்கள் கையால் காசு போட எல்லோரும் அடிபட்ட நினைவுகளும்..... சூப்பர் பதிவு பாஸ். பழைய நினைவுகளை கிளரும் பதிவு

Anonymous said... Best Blogger Tips

அழகாக சொல்லியிருக்கீங்க பாஸ்.. அனைத்தும் அனுபவித்து உணர்ந்தவை தான்..

Anonymous said... Best Blogger Tips

///"படை பிரபலமானது அண்ணனால, அடை பிரபலமானது சுமணா அக்காவால." /// நச் ன்னு ஒரு வசனம் ;)

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

@ K.s.s.Rajh,

//எந்த பண்டிகைகள் என்றாலும் பசங்களுக்கு பொண்னுங்களை சைட் அடிப்பது ஒரு வேலைதான்.ஹி.ஹி.ஹி.ஹி //

பொண்ணுங்கள சைட் அடிப்பதற்கே பண்டிகைகள் வாறமாதிரி ஒரு நினைப்பு பாஸ் நமக்கு.. ஹி ஹி ஹி

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

@ மதுரன்,

நன்றி மதுரன், ஆமாம்.. உதாரணமாக எங்களது ஊரில் என்னைவிடவும் எனது இந்துமத நண்பர்களுக்கே அதிக கொண்டாட்டம்.

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

@ துஷ்யந்தன்,


ஆமாம் துஷி... இப்பொழுதெல்லாம் அந்த சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை.. கேட்டாலும் ஏழு கிளடு வயசாச்சு இன்னும் என்ன சின்னப்பிள்ளைக்கு நடிக்கிறா எண்ணு திட்டுறாங்க.. ம்ம்ம்ம்...

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

@ கந்தசாமி,

///"படை பிரபலமானது அண்ணனால, அடை பிரபலமானது சுமணா அக்காவால." /// நச் ன்னு ஒரு வசனம் ;)


நன்றி பாஸ், என்ன பண்றது என்னதான் வித்தியாசம் வித்தியாசமா பதிவு எழுதினாலும் அடி மனசில இருக்கிற சில பாதிப்புகள் எழுதுற எந்தப் பதிவுகளிலும் நம்மை அறியாமலே எங்கையாவது வந்து குந்திவிடுகிறது.. தவிர்க்க முடியாது அதால நம்ம உடம்புக்கு பாதிப்பு வரும் வரை. ஹி ஹ ஹி...

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!