Friday 30 December 2011

உன்(ண்)னானைச் சொல்லுறேன்! உவள் சிவப்பியைத் தான் கட்டுவேன்!

ஈழவயலோடு இன்பத் தமிழ் மொழியூடாக இணைந்திருக்கும் அன்புத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் விண்ணாணம் விநாசியாரின் வணக்கம், 
என்ன தான் இருந்தாலும் பாருங்கோ. வயசான கிழடுகளுக்கு அந்த நாள் ஞாபகங்களை மீட்டிப் பார்க்கும் போது கிடைக்கிற சுகம் மாதிரி ஏதும் வருமேங்கோ? தமிழர்களின் பண்பாட்டில் லுக்கு விடுறதுக்கும், எனக்கென்று ஒருத்தியை பள்ளிக் கூடத்தில படிக்கும் போது புக்குப் (Booking) பண்ணி வைக்கிறதுக்கும் நாங்கள் எப்பனும் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஆறாங் கிளாஸ் படிக்கும் போதே நிரூபிக்கத் தொடங்கிடுவம் பாருங்கோ.  என்னோட வாழ்க்கையில வந்து போன சிவப்பியளைப் பற்றி நான் சொல்லத் தொடங்கினால் உங்களுக்கே அலுப்படிக்கத் தொடங்கும் பாருங்கோ. 
"டேய் கிழடு! மொதல்ல வாயை மூடு! நீ ஈழவயலுக்குள் எழுத வந்ததே எங்களுக்கு அலுப்படிக்கும்" ன்று இந்தக் கால இளம் பொடியள் சொல்லுறதும் என்னோட காதில கேட்குது கண்டியளே!. அதால சுத்தி வளைச்சு திரும்பத் திரும்ப சுப்பரின் வெத்திலைக் கொல்லையிற்கை நிக்காமல் மேட்டருக்கு வாறேன் பாருங்க. உப்பிடித் தான் பாருங்கோ. முந்தி ஒரு காலத்தில நானும் என்ரை மச்சான் காட்டானும் ஒரே பள்ளிக் கூடத்தில படிச்சனாங்க. ரெண்டு பேருக்கும் பயங்கரப் போட்டி. நீங்க எங்கள் ரெண்டு பேருக்கும் படிப்பில போட்டி என்று நெனைச்சால் அதை விட மகா தவறு உலகத்தில ஒன்றும் இல்லை. யாரை எந்தப் பொட்டை அடிக்கடி பார்க்கிறாள் என்று ரெண்டு பேருக்கும் பயங்கரப் போட்டி. உந்தக் கோவணக்காரன் அது தானுங்கோ என்னோட காட்டான் மச்சானும் சும்மா ஆளில்ல. 

அந்த நாளில தனக்கு லுக்கு விட ஆளில்லை என்று பாருங்கோ. என்னோட ஆசை மச்சாள் பத்மினியைப் போல இருக்கிற புஷ்பத்தின் மேல ஆளுக்கும் ஒரு கண் வந்திட்டுது. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில விநாசியானின் அடி மடியிலே கை வைச்சிட்டான் இந்தக் காட்டான் என்று நான் பதறியடித்து அலேர்ட் ஆகி நிற்கிறேன் இவன் நாசமாப் போவான் காட்டான் என்ன செய்தான் தெரியுமே? தன்னோட சைக்கிளில என்னோட ஆள் என்று நான் மனதில கற்பனை வைச்சிருக்கிற புஷ்பத்திற்கு பின்னால போய், "இஞ்சாருங்கோ! உங்களையும் எனக்கு புடிச்சிருக்கு! எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கும் என நினைக்கிறேன்! ஆகவே ஆட்சேபனை ஏதுமின்றி உங்கட நோட்ஸ் கொப்பியை கொடுங்கோ என்று கேட்டிட்டான்!" பின்னால சைக்கிளில போன நான் இதனைக் கேட்டதும் சும்மா கிடப்பேன் என்றே நீங்கள் நினைக்கிறீங்க?

சைக்கிளை வேலிக்குள் போட்டு விட்டு, காட்டானுக்கும் காதைப் பொத்தி ரெண்டு போட்டேன் பாருங்க. அண்டையோட இந்தப் பாவிப் பையன் சொன்னான் பாருங்க! "மச்சான் விநாசியார், உனக்குத் தான் புஷ்பம்! ஆனாலும் நீ காதலிக்க முன்னாடி நான் அவளை காதலிச்சு ஊர் சுத்தி கிளிநொச்சி கனகாம்பிகை குளம் காட்டவோ? என்று கேட்டான் பாருங்கோ ஒரு கேள்வி! அப்புறமா விநாசியார் சும்மா நிற்பார் என்றே நினைக்கிறீங்க? "அட நாசமறுவானே! உன்னாணைச் சொல்லுறேன்! அவள் புஷ்பம் எனக்குத் தான்! உன்னானை, உன்ர கொம்மாவானை உவள் புஷ்பம் எனக்குத் தான்!" என்று கற்பூரம் கொழுத்தாத குறையாக காட்டானின் மண்டையில அடிச்சு சத்தியம் செஞ்சு போட்டு நிமிர்ந்து பார்க்கிறேன். புஷ்பத்தை காணேல்லை! என்ர செல்லக் குஞ்சு! என்னையும் தாண்டிச் சைக்கிளில வேகமாய்ப் போயிட்டாள். 
அடக் கறுமம் என்று நினைச்சுக் கொண்டு நானும் சைக்கிளை எட்டி மிதிச்சுப் போய், அவளையும் அவசர அவசரமா நிற்பாட்டிப் போட்டு சொன்னேன் பாருங்க!என்ரை ஆசை மச்சாள் புஷ்பம் எல்லே! உன்னாணைச் சொல்லுறேன்,  எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு! என் மேல சத்தியமா, எங்கட கந்தசுவாமியார் மேல சத்தியமா நான் உன்னைத் தான் கட்டுவேன் என்று சத்தியமும் செஞ்சு போட்டு, அவளின் தலையிலையும் இதே சாட்டில கை வைச்சு சத்தியம் செய்வோம் என்று கையைத் தூக்கினேன் பாருங்க. அந்தப் பாவி சொன்னாள் "செருப்பை கழட்டி அடிச்சால் கன்னம் பழுக்கும்!" என்று. நானும் சொன்னன் பாருங்கோ ஒரு வசனம்.....அதை இங்க எழுதினாலும் ஆபாசம்! எழுதா விட்டாலும் உங்கட மனம் கேட்காது.  "கன்னத்தோட கன்னம் வைச்சால் மூஞ்சை சிவக்கும்!" என்று...அவள் இதைக் கேட்டது தான் தாமதம்...ஒரு வார்த்தை சொன்னாள் பாருங்க!

"விநாசி! நீர் ஒரு அச்சாப் புள்ளை என்று நினைச்சேன்! ஆனால் உப்பிடி அந்த மாதிரியான அர்த்தத்தில பேசுவீர் என்று நினைக்கேல்லை! ஆகவே, ஓடிப் போய் உங்களின் அம்மாவிடம் பேசிட்டு வாங்க. அவங்க ஓக்கே சொன்னாப் பிறகு நீங்க என்னைக் காதலியுங்கோ"! என்று ஓர் அணு குண்டைத் தூக்கிப் போட்டு விட்டாள் பாவி! அப்புறம் விடுவேனே! என்ர மச்சான் காட்டானுக்கு முன்னதாக என்னோட புஷ்பத்தை, என்ர கிளிக் குஞ்சை நான் கொத்த வேணும் என்று ஓடிப் போனன் பாருங்கோ வீட்டிற்கு. 

"அம்மா எல்லே அம்மா! என்ர ஆசை அம்மா!," வீட்டில பாலுக்கு சீனி குறையுது. சோத்துக்கு உப்பு குறையுது" என்று என்னோட பேச்சைத் தொடங்கிட்டு அம்மா கலியாணக் கதையை தொடங்குவா என்று காத்திருந்தா; அடக் கடவுளே! என்ர அம்மா என்றால் சொல்லவே வேணும்! அவாவும் கிட்னியை யூஸ் பண்ணி ஓவரா யோசிப்பா என்றால் மனுசி சோத்துக்கு உப்பு குறைஞ்சால் போட்டுச் சாப்பிடு, பாலுக்கு சீனி இல்லேன்னா போட்டுக் குடி என்று சொல்லிப் போட்டுது.

ஒரு மாதிரி மெல்லமா அம்மாவிற்குப் பக்கதில போய் நின்று, "என்ர ஆசை அம்மாவெல்லே! எனக்கு என்னோட மச்சாள் புஷ்பத்தை தானே கட்டி வைப்பீங்க என்று கேட்டேன்! அம்மா சினங் கொண்டு எழுந்து ஒரு பேச்சுப் பேசினா பாருங்க! வானமேறி வைகுண்டம் போக முடியாதவன் கூரை ஏறி கோழி பிடிச்ச மாதிரியெல்லோ உன்ர கதை இருக்கு!” உன்னோட வயசுக்கும், அளவுக்கும் உனக்கு புஷ்பம் கேட்குதோ? புஷ்பம்? பேசாம படிச்சு முன்னேறுற வழியைப் பாரு என்று பேசிப் போட்டா, நானும் விடுவனேன்! பதிலுக்கு அம்மாவின் தலையில அடிச்சு, உன்னாணைச் சொல்லுறேன்! உவள் சிவப்பியைத் தான் கட்டுவேன் சத்தியம் செய்தேன்! 
இது தான் நம்ம காட்டானும் புஷ்பமும்! என்ன கொடுமை! 
அம்மா என்ன சொன்னா தெரியுமே! போயும் போயும் சிவப்பியையோ நீ கட்டப் போறாய்? நீ கட்டு ராசா! அப்புறம் தான் நிமிர்ந்து பார்த்தேன். வீட்டில ஒரு கலியாணக் கார்ட்! காட்டானுக்கும் புஷ்பத்திற்கும் கலியாணமாம்! நான் ஏன் புஷ்பத்தைக் கட்டேலாது? என்று காரணங் கேட்டேன். அம்மா சொன்னா உனக்கும் அவளுக்கும் எட்டு வயசு வித்தியாசம். நீ சின்னப் பொடியன். அவள் பெரிய பொட்டை. நீ இன்னும் வளரனுமாம். அடக் கறுமம்! இப்ப நீங்கள் சொல்லுங்க! நான் இன்னமும் வளரனுமே?  மற்றுமோர் பதிவினூடாக உங்களைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் நான் சுறுக்கா போய், மறுக்கா வாறேனுங்க! 

அரும்பத விளக்கங்கள்/ சொல் விளக்கம்:

உன்(ண்)னானை: உன் மீது ஆணையாக.
உவள்: அவள்.
சொல்லுறேன்: சொல்கிறேன்.
சிவப்பி: சிவப்பு நிறமுள்ள பெண்/ ஈழத்தில் மாடுகளையும் சிவப்பி என்று அழைபபர்கள்.
எப்பனும்: கொஞ்சூண்டு/ கொஞ்சம் என்றாலும்
அலுப்படிக்க: போறிங்காக இருத்தல்- Boring
தொடங்கினால்: ஆரம்பித்தால்.
 கண்டியளே: பார்த்தீர்களா/ கேட்டீங்களா?
கொல்லையிற்கை: கொல்லையினுள்
உப்பிடித் தான்: இப்படித் தான்.
உன்ர கொம்மாவானை: உன் அம்மா மேல் ஆணையாக.
போயிட்டாள்: போய் விட்டாள். 
அண்டையோட: அன்று முதல்/ அந்த நாள் தொடக்கம்
அந்த மாதிரி அர்த்தம்: கெட்ட அர்த்தம்/ தவறான அர்த்தம்.
மெல்லமா: மெதுவா. 
என்ர : என்னுடைய.
கட்டேலாது: கட்ட முடியாது. 
பொட்டை: பொண்ணு, பிகர்.
சுறுக்கா போய் மறுக்கா வாறேனுங்க: சுறு சுறுப்பாக இப்போது விடை பெற்று மறுபடியும் உங்களைச் சந்திக்க விரைவில் வருகிறேன். 

நன்றி, வணக்கம்!!

20 comments:

காட்டான் said... Best Blogger Tips

என்ன மச்சான் வினாசியார் நீ இன்னும் என்ர புஷ்பத்த மறகலபோல.. படுவா கோத்தையிடம் சொல்லட்டோ..!!

ஆகுலன் said... Best Blogger Tips

என்னது எட்டு வயது இளமையா..
காட்டான் மாமா மனது எப்படி பாடுபட்டிருக்கும்.................

ad said... Best Blogger Tips

சில இடங்களில் சில எழுத்துப்பிழைகளைக்கவனிக்கவும்.
"சத்தியமா" என்பதற்கு "சத்தியா" என்றெல்லாம் வந்திருக்கிறது.வேகமாக வாசிக்கும்போது அர்த்தம் மாறுபடுவதுபோல் உள்ளது.

ad said... Best Blogger Tips

எட்டு வயசுக்கு மூத்த மனிசி தேவப்படுது??!!!!
ம்?
நடத்தி முடியுங்கோ.

ad said... Best Blogger Tips

புஷ்பம் இப்ப எங்கயையா?
காட்டான் அங்கிளின்ர கஸ்ரடியிலயோ?

ஹேமா said... Best Blogger Tips

இன்னும் பழைய ஞாபகம்.
இவ்வளவையும் கதைச்சுப்போட்டு இன்னும் வளரேல்லையாம்.நாங்க நம்பவேணும்.காட்டான் பாவம் !

KANA VARO said... Best Blogger Tips

ஈழத்து பேச்சு வழக்குச் சொற்கள் நிறைய அள்ளித்தெளித்திருக்கிறீர்கள்.

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

@காட்டான்
என்ன மச்சான் வினாசியார் நீ இன்னும் என்ர புஷ்பத்த மறகலபோல.. படுவா கோத்தையிடம் சொல்லட்டோ..!!
//

சும்மா இரும் மச்சான், இப்ப கலியாணம் கட்டி எனக்கு மனுசியும் இருக்கிற காலத்தில நீர் போய் கோத்தையிடம் சொல்லப் போறீரோ?

நீர் எப்பவுமே சும்மா தானே இருக்கிறனீர்...
நான் உம்மடை போட்டோவைப் பார்த்துச் சொன்னேன்.

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

@ஆகுலன்
என்னது எட்டு வயது இளமையா..
காட்டான் மாமா மனது எப்படி பாடுபட்டிருக்கும்.................
//

ஆய்..ஆசை தோசை அப்பளம் வடை,

நீர் காட்டான் மாமா ரேஞ்சில இருந்து கற்பனை பண்ணிக் பார்க்கிறீர் போல! ஹே...ஹே..

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

@எஸ்.பி.ஜெ.கேதரன்
என்னது எட்டு வயது இளமையா..
காட்டான் மாமா மனது எப்படி பாடுபட்டிருக்கும்.................
//

ரொம்ப நன்றி ராசா. என்ன செய்யுறது. வயசு போன காலத்தில இப்படிச் சின்னச் சின்ன பிழையளைத் தவற விடுகிறேன் ராசா.
இப்போது திருத்தி விட்டேன். பிள்ளைக்கு சுவையருவியில ஒரு பெஷல் வாங்கித் தாரேன். என்ன.

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

@எஸ்.பி.ஜெ.கேதரன்
எட்டு வயசுக்கு மூத்த மனிசி தேவப்படுது??!!!!
ம்?
நடத்தி முடியுங்கோ.//

உம்மட நக்கலுக்குத் தான் குறைச்சலில்லை கண்டீரோ!
அப்பு ராசா, ஆள் பெரிசு என்றாலும் என்ர மனசிற்குப் பிடிச்சிருந்தால் நல்லம் தானே?
ஹே..ஹே..

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

@ஹேமா
இன்னும் பழைய ஞாபகம்.
இவ்வளவையும் கதைச்சுப்போட்டு இன்னும் வளரேல்லையாம்.நாங்க நம்பவேணும்.காட்டான் பாவம் ! //

ஆகா...நீங்க நம்பித் தானே ராசாத்தி ஆகனும்! என்ன செய்யுறது. வயசு எகிறினாலும் நான் வளரேல்லையே என்ற மீனிங்கில சொன்னேன். !

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

@KANA VARO
ஈழத்து பேச்சு வழக்குச் சொற்கள் நிறைய அள்ளித்தெளித்திருக்கிறீர்கள்.
//

ஏன் மோனை நான் என்ன வயலுக்கு உரமே அள்ளித் தெளித்திருக்கிறேன்! ஹே...ஹே..

நன்றி!

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

@எஸ்.பி.ஜெ.கேதரன்
புஷ்பம் இப்ப எங்கயையா?
காட்டான் அங்கிளின்ர கஸ்ரடியிலயோ? //

ஏன் அந்தக் கொடுமையை உமக்கு என்ர வாயாலா கேக்கிறதில தான் சந்தோசம் போல?
ஹே...ஹே...
அது தான் காட்டானும் புஷ்பமும் மோட்டார் சைக்கிளில் போகிற படத்தை போட்டிருக்கேனே!

குட்டிப்பையன் said... Best Blogger Tips

வணக்கம் விநாசியார் உங்கள் கடந்த கால காதல் கதை நல்லாத்தான் இருக்கு.

காட்டான் மாம்ஸ் அந்த காலதில் பெரிய ஹீரோ போல

Jana said... Best Blogger Tips

பிரதேச வளக்கப்பாசைகளை எழுத்திலே அதே நயத்துடன் வாசிப்பதே சுவையான அனுபவமே. தவறணை என்ற வலை ஊற்றும் டிலானுடைய பதிவுகளின் பின்னர் பிரதேச மொழிநடை அழகை இரசித்தேன்.

சரியில்ல....... said... Best Blogger Tips

விரும்பின பொட்டைய கலியாணம் கட்டாம கோட்ட விட்டுட்டு, இஞ்ச வந்து வெறுங்கத கதைக்கிறியள், வெக்கங்கெட்ட மனுசா..... (ஹிஹிஹி நாங்களும் இலங்கை தமிழ்ல எழுதுவோம்ல.....)

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

வணக்கம் வினாசியார்,

நமது அருமையான ஈழத்து பேச்சு வழக்கை அழகாக கேட்க முடிகிறது.. அப்படியென்றால் காட்டான் உங்களை விட கிழவரோ??? ஹி ஹி ஹி ..

சுதா SJ said... Best Blogger Tips

என்ன வினாசியார் எப்படி இருக்கிறீங்கள்??
நேற்றே உங்க பதிவு பார்த்தாலும் இந்த "பிஸி"யால கருத்து போட முடியவில்லை.

ரெம்ப நல்லா எழுதுறீங்க.....
எனக்கு மச்சாள் பற்றி யார் எழுதினாலும் ஒரே சந்தோஷம்தான்..... காரணம் என் மச்சாள் நினைவு உடனே எனக்கு வந்திரும் :)

அப்போ காடானின் ஆள் உங்க மச்சாளோ.... அவ்வ்

வினாசியார் கல்யாணத்து வயசு ஒரு பிரச்சனையே இல்லை.

என்ன இருந்தாலும் நீங்க காட்டானுக்கு விட்டு கொடுத்து இருக்க படாது :(

மகேந்திரன் said... Best Blogger Tips

அன்புநிறை வினாசியார் ஐயா,
நீரோட்டம் போல அழகான எழுத்துக்கள்
பதிவைக் கொண்டு செல்லும் விதம்
அனுபவத்தை போகிற போக்கில் சொல்லிப்போகும் விதம்
அத்தனையும் அருமை.
காட்டான் மாமா அவர்களின் எழுத்துக்களை படித்திருக்கிறேன்
தங்களின் எழுத்துக்கள் என்னை இன்னும் கவர்கிறது.

///மஞ்சக்காட்டு ஓடையிலே
மரிக்கொழுந்து பூத்திருக்கு!
சும்மா நானும் சொல்லவில்லை
சுளுவாக நீயும் வாடி
மரிக்கொழுந்து பறிச்சுத் தாரேன்...
மரிக்கொழுந்து வாசத்திலே
கிரங்கிபோயி நிற்பவன
சுருக்குப்பையில போட்டு
இடுப்புல நீ சொருகாதடி...////

இப்படி உங்க பதிவைப் படித்ததும் ஆயிரம் ஆயிரம்
கிராமியக் காதல் கவிதைகள் தோணுது.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!