Saturday 24 December 2011

சிலோன் பொப் இசையும் சிந்தையுள் நிற்கும் நினைவுகளும்!

இணைய வலையினூடே ஈழவயலோடு இணைந்திருக்கும் சொந்தங்களுக்கு வணக்கம், 
பொப் எனும் இசை வடிவம் போத்துக்கேயர்களினால் 15 ஆம், 16ஆம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது. இந்த வகையில் இலங்கை 1505ம் ஆண்டு போத்துக்கேயர்களால் கைப்பற்றப்பட்டு 1658 வரை போர்த்துக்கேயர்களால் ஆளப்பட்டது. அந்தக் காலங்களில் இலங்கையில் வாழ்ந்த இந்து, பௌத்த சமயங்களைச் சேர்ந்த மக்களை கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறவேண்டும் எனப் போர்த்துக்கேயர் ஆணை பிறப்பித்திருந்தனர். இதன் காரணமாக கோவில்கள், விகாரைகள் என்பன இடிக்கப்பட்டு, இவர்கள் கிறிஸ்தவ துதிகளைப்பாடவேண்டும் என கேட்கப்பட்டனர். 
மேற் கூறிய காரணங்களால் இடிக்கப்பட்ட ஆலயங்கள், விகாரைகள் இருந்த இடங்களில் தேவாலயங்கள் கட்டியெழுப்பப் பட்டது. அப்போதைய இலங்கை மக்களை உடனயடியாக முழு கிறிஸ்தவர்களாக மாற்றுவது சிரமம் என உணர்ந்த போத்துக்கேயர், தேவ ஆராதனைகளுக்கு தமது வழக்கத்தில் இருந்த பொப் இசையினை பயன்படுத்த தொடங்கினர். இங்கு போத்துக்கேயர்களால் 16ஆம் நூற்றாண்டில் விதைக்கப்பட்ட பொப் இசை அத்திவாரத்தின் சாயலே இன்றும் இலங்கையின் பொப் இசையில் பாரிய தாக்கத்ததை ஏற்படுத்தி வருகின்றது.அன்றில் இருந்து ஊர்ப்பாடகர்கள், அண்ணாவியர்கள் வாயிலாக, சில தமிழ் பொப் இசைப் பாடல்கள் செவிமடுக்கப்பட்டு வந்துள்ளன. அந்தக்காலங்களில் பெரும்பாலும், திருமண வீடுகளில் சில பாடகர்கள் இப்படியான பொப் பாடல்களை பாடிவந்திருந்தனர்.

“சின்னத்தம்பி சீமானாம் சிப்பிலி சந்தைக்கு போனானாம்”
அங்கே ஒருத்தியை கண்டானாம் கும்மட்டம் தம்பட்டம் போட்டானாம்”
என்று ஆரம்பிக்கும் பாடலும்,
அன்றைய போத்துக்கேய ஆட்சியாளர்களையே எதிர்ப்பது போன்று அமையும் பாடலான
“என்ன பிடிக்கிறாய் அந்தோனி?
எலி பிடிக்கிறன் சிஞ்சோரே!
பொத்தி பொத்தி பிடி அந்தோனி!!
பூறிக் கொண்டோடுது சிஞ்சோரே”
போன்ற பாடல்கள் நாம் அறிந்த வகையில் போத்துக்கேயர் காலங்களிலேயே தமிழில் உருவாகிய பிரபலமான பொப்பிசைப் பாடல்கள். 

ஆகவே இது போன்ற பல பாடல்கள் கால மாற்றங்களால் அழிந்துபோய்விட்டன. அதன் பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் (1815 -1948), மேலைத் தேச நாகரிகங்கள் அறிமுகப்படுத்தப் பட்டதும், ஒரு முழுமையான நிர்வாக அமைப்பு முறை வந்ததும், இசை வடிவத்தில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தின. ஆங்கிலேயர்களின் பாண்ட், மொங்கட் ட்ரம், டிஸ், ட்டம்பற் ட்ரம்,போன்ற வாத்தியங்கள்,இந்த இசையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின. ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் பொப் இசை ஒரு புது வேகத்துடன் அரங்கேற ஆரம்பித்தது. குறிப்பாக அந்த காலங்களில் பல கார்னிவேல்களில் (விசேட நிகழ்வுகள்), விசேட சிறப்பு நிகழ்சிகள், பீஸ்ட் வைபவங்கள் போன்ற நிகழ்வுகளிலும், அப்போது இலங்கையில் பரபல்யம் பெற்ற “ருவிஸ்ட்” என்ற அட்டத்தின் போதும் இந்த பொப் இசை மேற்கத்தேய இசைக் கருவிகளின் பக்கவாத்தியத்துடன் புது உத்வேகத்துடன் அரங்கேறியது.
அதன் பின்னர் மீண்டும் பல விழாகளிலும், திருமணம் போன்ற வீட்டு விசேடங்களுக்கும் இந்த பாடல்கள் இசைக்கப்பட்டன. இலங்கையின் சுதந்திரத்தின் (1948) பின்னரான காலங்களில், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பல புதிய இசைக் குழுக்கள் ஆரம்பமாகி மேற்படி பொப் இசையினை, வழங்கி மிகப் பிரபலமாகின. இதில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவர் கண்ணன் நேசன் அவர்கள். இவ்வாறு 1950 களின் கடைசி பகுதிகளில் தமிழ் பொப் இசை இசைக் குழுக்களால் இசைக்கப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கியது. இருப்பினும் தென்னிந்திய திரை இசைக்கு பலரும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து காரணத்தால் ஈழத்தில் தமிழ் திரையிசையின் தாக்கம் ஏற்றபட்ட காரணத்தினால் 1960 களில் பொப் இசையினை மட்டுப்படுத்தப்பட்ட அளவே கேட்ககக் கூடியதாக இருந்தது.

அதன் பின்னர் இலங்கையில் நிகழ்ந்த பல அரசியற் குழப்பங்கள், 1958ம் ஆண்டு கலவரம், ஸ்ரீமா ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சம் என்பனவற்றால் மேற்படி தமிழ்ப் பொப் இசைக்கும் பஞ்சம் ஏற்படலாகிற்று. 1977 ஆம் அண்டு ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சியை கைப்பற்றி இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கையினை கொண்டு வந்து;அனைத்தையும் நவநாகரிகப்படுத்தி, மேலைநாட்டு கலாச்சாரங்கள், அப்படியே கொழும்புக்கு வந்து சேர்ந்த போது, தமிழ் பொப் இசை மட்டும் இன்றி சிங்கள பொப் இசையும் வீறு கொண்டெழுந்து என்றும் இல்லாத சிகரத்தை அடைந்தது.

ஆம் இன்றும் நீங்கள் முணுமுணுக்கும்.
“கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற நித்தி கனகரத்தினத்தின் பாடல்,
“குடத்தனையில குடியிருக்கிறது” என்ற நித்தியின் பாடல் போன்ற பாடல்கள் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்றன. அவை இலங்கையில் மட்டுமன்றி இலங்கை வானொலியில் ஒலிபரப்பட்டு இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை எற்படுத்தி இந்தியாவிலும் வெற்றிக்கொடி நாட்டின. நித்தி கனகரத்தினைத் தொடர்ந்து ஏ.ஈ.மனோகரன்; அமுதன் அண்ணாமலை, எஸ். இராமச்சந்திரன். வி.முத்தழகு, ஸ்டெனி சிவாநந்தன், அன்சார், என்.இமானுவேல் போன்றோர் ஈழத்து பொப்பிசைச் துறைக்கு வந்து சேர பொப்பிசை வளரத் தொடங்கியது.
பல இசைக் குழுக்களும் காலப் போக்கில் பொப் இசையினுள் தடம் பதிக்க பல பாடல்கள் வெளிவரத் தொடங்கின. இக் காலம் ஈழத்து பொப்பிசையின் பொற் காலம் என்று கூட சொல்லலாம். அன்றைய காலங்களில் இலங்கையில் பொப்பிசை, நகைச்சுவை, மற்றும் சில கலைகள் இலங்கை மண்ணியற் பண்பு, இலங்கை மொழி வழக்கு, என்பவற்றை மட்டுமன்றி சமுதாய சீர்திருத்தங்களையும் முன்னிறுத்துவதாக இருந்தன என்றால் மிகையாகாது. இதற்கு "நித்தி கனகரத்தினத்தின் கள்ளுக்கடை பக்கம் பொகாதே!" என்ற பாடலை உதாரணமாகச் சொல்லலாம். அந்தக் காலங்களில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பெரியவர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என்ற பேதங்கள் இன்றி அனைவரும் கள்ளு அருந்துபவர்களாக இருந்தனர்.குறிப்பாக மாணவர்கள் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கும்போதும்,பல்கலைக் கழகங்களில் இருந்தும் கள்ளுக்கு தவறணைகளுக்கே நேரடியாக போபவர்களாக இருந்தனர்.இந்த காலங்களிலேயே நித்தி கனகரத்தினத்தின் “ கள்ளுக்கடை பக்கம் போகாதே, காலைப்பிடித்து கெஞ்சுகின்றேன்” என்ற பாடல் வெளியானது.

இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்தப்பாடல் இலங்கை வானொலி மூலம் தமிழ் நாட்டிலும் பரவி, அப்போது முதலைமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால், தமிழக மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தமையாகும். பின்னர் இலங்கை பொப் இசைப் பாடல்கள் தென்னிந்திய தமிழ் திரைகளிலும் இடம்பெறலாயிற்று. 1977 அம் அண்டு, “அவர் எனக்கே சொந்தம்”என்ற படத்தில் “சுராங்கனி, சுராங்கனி” என்ற பாடலை இளையராஜா உட்புகுத்தினார், இதனோடு நின்றுவிடாது. இந்த இலங்கை பொப் இசையை ஒட்டியதாக, “அண்ணே அண்ணே சிப்பாயண்ணே”, “உப்புமா கிண்டி வையடி”, பட்டண்ணா சொன்னாரண்ணா, போன்ற பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. இன்றும் கூட சுராங்கனி போன்ற பொப் பாடல்கள் மீள் கலவை இசை வடிவில் (ரீமிக்ஸ்) சில திரைப்படங்களில் வருவதை நீங்கள் பார்த்திருக்க முடியும்.
எனினும், 1983 களின் பின்னதான இலங்கையின் இனப் பிரச்சினை காரணமாக, கலைஞர்கள். பாடகர்களின் வெளியேற்றம், தென்னிந்திய சினிமா பாடல் மோகம் போன்ற பல காரங்களினால் இன்று இந்த இலங்கை பொப் பாடல்களின் வருகையானது குறைவடைந்து செல்கின்றது. இதற்கு உயிர் கொடுத்து அதை ஒலிபரப்பி தமது பாரம்பரியங்களை பேணிப் பாதுகாத்து அடுத்த தலை முறையிடம் கொண்டு செல்லும் நல்ல முயற்சினைச் செய்ய முடியாதவர்களாக இலங்கையிலுள்ள அரச, தனியார் வானொலிகள் விளங்குகின்றன. எனினும், மேற்படி பொப் இசையில் சிங்களவர்கள் இன்று சிகரத்தை அடைநதுள்ளனர்.சிங்கள ஊடகங்களும், பத்திரிகைகளும் அதற்குரிய கௌரவங்களை கொடுத்து அவ் இசையினை ஊக்குவிக்கின்றன.

எது எப்படியோ, இன்று புலத்தில் புலம்பெயர்ந்து வாழும் மேற்படி பொப்பிசை திலகங்களை தொடர்பு கொண்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களாவது தமது இலங்கைத் தமிழர்களின் தனிச் சிறப்பான பொப் இசையினை மீண்டும் துளிர்விக்க முயற்சி எடுக்க வேண்டும்!
வாசகர்கள் கவனத்திற்கு: இப் பதிவில் உள்ள சிகப்பு நிறத்தினால் காட்டப்பட்டுள்ள இணைப்புக்களினால் சுட்டப்பட்டும் பாடல்களில் கிளிக் செய்வதன் மூலம் பொப் இசைப் பாடல்களைப் பார்த்தும், கேட்டும் மகிழ முடியும். 

ஈழவயலுக்காக இப் பதிவினை வரைந்தவர்,
Cheers With Jana வலைப் பதிவின் சொந்தக்காரன்;
உங்கள் அன்பின்,
ஜனா. 
நன்றி, வணக்கம்!

23 comments:

சுதா SJ said... Best Blogger Tips

அட பாடல்கள் லிங்க் வேறையா??? சூப்பர் சூப்பர்

சுதா SJ said... Best Blogger Tips

என்ன பிடிக்கிறாய் அந்தோனி?
எலி பிடிக்கிறன் சிஞ்சோரே!
பொத்தி பொத்தி பிடி அந்தோனி!!
பூறிக் கொண்டோடுது சிஞ்சோரே<<<<<<<<<<<<<<<<

பாடலே ஒரு மார்க்கமாய் இருக்கேப்பா..... அவ்வ்வ்வ்

சுதா SJ said... Best Blogger Tips

சின்ன மாமியே உன் சின்னமகள் எங்கே” என்ற ஏ.ஈ மனோகரனின் பாடல்,
“சுராங்கனி சுராங்கனி” என்ற ஏ.ஈ.மனோகரனின் பாடல்,<<<<<<<<<<<<<<<<<<

தேங்க்ஸ் ஜனா அண்ணா லிங்குக்கு
சூப்பர் சாங் இல்ல :)))))))

ஆகுலன் said... Best Blogger Tips

புதிய விடயங்கள்...

பாட்டுகள் அருமை..சின்ன மாமி பாட்டு அருமை..

KANA VARO said... Best Blogger Tips

ஐயோ என்னுடைய படத்தை காப்பி பேஸ்ட் செய்துவிட்டனர்.

ஹீ ஹீ சும்மா.. பதிவின் கடைசி படம் பொப்பிசை சக்கரவர்த்தி மனோகருடன் பொப்பிசை திலகம் ராமச்சந்திரன். அந்த அரிய புகைப்படத்தை பிடித்தவர் உங்கள் அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய "பன்னாடை" வரோ!

KANA VARO said... Best Blogger Tips

1960 - 70 களில் வளர்ந்த பொப்பிசை ஈழத்தமிழனுக்கு தனி அடையாளத்தை இசை உலகில் கொடுத்தது. அது தொடராமல் விட்டது வருத்தமே!

கவி அழகன் said... Best Blogger Tips

ஆவணப்படுதப்படவேண்டிய தகவல்

கவி அழகன் said... Best Blogger Tips

அருமையான அலசல்

கவி அழகன் said... Best Blogger Tips

ஈழ வயலுக்கு ஏற்ற படைப்பு

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் ஜனா அண்ணர்,

ஈழவயலில் இவ்வளவு நாளும் அனுபவப் படைப்புக்களைப் பகிர்ந்திருந்தோம், இன்று மிக முக்கியமான ஈழத்து பொப் வரலாற்றை மீட்டும் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

ரசித்தேன் அண்ணா,
பதிவுடன் சேர்த்தே பாடல்களையும்.

Unknown said... Best Blogger Tips

சிறந்த ஒரு ஆவணப்பதிவு..அனுபவம் பேசுதுப்பா...அவ்வ்வ்வ்

அம்பலத்தார் said... Best Blogger Tips

ஈழவயலிற்கு மணிமகுடமாக அமைந்த பதிவு.

அம்பலத்தார் said... Best Blogger Tips

ஈழத்து இசையுலகின் மொற்காலமென எழுபதாம் ஆண்டுகளைச் சொல்லலாம். ஈழத்துப்பொப்பிசை , ஈழத்து மெல்லிசை இரண்டும் உச்சத்தில் இருந்தகாலங்கள் அவை. இந்த வளர்ச்சியின் முக்கிய பங்கு இலங்கை வானொலியையே சேரும். அப்துல் ஹமீட், K.S.ராஜா இருவரதும் குரல்கள் இலங்கை, தமிழக மக்களை இலங்கை வானொலியின்பின் ஓடவைத்தன. வானொலி எமது கலைகளை பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக்கியது. இனிய பாடல்களுடன் நல்லதொரு பதிவைத் தந்ததற்கு வாழ்த்துக்கள் ஜனா

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

வணக்கம் ஜனா,

உண்மையிலேயே ஒரு அருமையான ஆவணப் பதிவு என்று சொல்லலாம். இந்த பொப் பற்றி நான் கொஞ்சம் அறிந்திருந்தாலும் இந்த பதிவின் பின்னர் ஒரு பூரணமான அறிவு வந்துவிட்டதாய் உணர்கிறேன். என்னதான் பாடல்கள் வந்தாலும் ஏ. ஈ. மனோகரனின் குரலில் அந்த சின்ன மாமியே பாடல் கேக்கிற சுகம் எங்கு கிடைக்கும்? வாழ்த்துக்கள் ஜனா.

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் ஜனா!
அருமையான பதிவு புலம் பெயர்ந்த பொப்பிசை சக்கரவர்த்திகள் இங்கு போதிய ஆதரவு இல்லாமல் தொலைந்து போகின்றார்கள் என்பதே உண்மை. 90 களின் ஆரம்பத்தில் மனோகரன் ஒரு இசை விழாவை நடத்த பாரீசுக்கு வந்து பட்ட பாட்டை பார்த்தேன்.. நாங்கள் கொடுக்கும் ஆதரவு போதாது என்பதே உண்மை!!

Admin said... Best Blogger Tips

நல்ல பதிவு எமது பொப்பிசைப் பாடல்களுக்கு நல்ல மவுசு இருக்கின்றது. ஆனாலும் தற்போது எமது பொப்பிசைப் பாடல்கள் மறக்கப்படும் கால கட்டத்தில் இருக்கின்றது. நானும் பொப்பிசைப் பாடல்களின் தீவிர இரசிகன். இலங்கைப் பதிவர்களிடம் எனது தாழ்மையான வேண்டுகோள் எமது பதிவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கு. பொப்பிசைப் பாடல்கள் என்றாலே என்ன என்று தெரியாத அளவிற்கு எமது எதிர்கால சந்ததி தள்ளப்படும் நிலையில் இருக்கின்றனர். எமக்கே உரித்தான பொப்பிசைப் பாடல்களை வழர்க்க வேண்டும். ஈழவயல் குழுவினரிடம் இன்பான வேண்டுகோள் எதிர்காலத்தில் பொப்பிசைப் பாடல் ஆல்பங்களை வெளியிட முயற்சி செய்ய வேண்டும்.

Anonymous said... Best Blogger Tips

சிறந்த பதிவு ... முதன் முதலாக சில தகவல்களை இதன் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது ...நன்றி ஜனா அண்ணா.

ad said... Best Blogger Tips

சின்னமாமியே பாட்டு கேட்டிருக்கிறன். எலிபுடிக்கிற பாட்டு கேட்டதில்ல.
இன்னும் பலபாடல்கள் இருக்கின்றன.

ஹேமா said... Best Blogger Tips

பொப் நினைவிசையில் அசைபோட்டு நிற்கிறது ஈழவயல் !

K said... Best Blogger Tips

வணக்கம் ஜனா அண்ணை!

மிகவும் அழகான + அவசியமான பதிவு! பொப்பிசையை யார்தான் விரும்ப மாட்டார்கள்? இன்று உங்கள் மூலமாகத்தான் பொப்பிசையின் பின்னணியை அறிந்து கொண்டேன்! பதிவுக்கு + பகிர்வுக்கு மிக மிக நன்றீ அண்ணா!

Jana said... Best Blogger Tips

கருத்துரைத்த அத்தனை நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள். சந்துரு மன்மொழிந்துள்ள ஐடியாவை நான் வழிமொழிகின்றேன். தமிழ் வயலின் எதிர்காலத் திட்டங்களில் பொப் ஆல்பம் ஒன்றை வெளியிட இப்போதே திட்டங்களை முன்வைப்போம். இதன் முதற்கட்டமாக பொப் இசை ரசத்திற்கு எற்றவாறான பாடல்களை விருப்பமுடையவர்கள் எழுதத்தொடங்கலாம்....

பால கணேஷ் said... Best Blogger Tips

தங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் வந்து பார்த்துக் கருத்திட்டால் மகிழ்வேன். நன்றி!

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_05.html

arul said... Best Blogger Tips

nalla thoguppu viruppam irunthal kovil patriya enathu valaipoovai parkavum

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!