Saturday 31 December 2011

விபரீத நிலையினை நோக்கிச் செல்லும் தமிழர்களின் விளையாட்டுக்கள்!

இணையத்தில் உங்கள் இதயங்களை இணைத்திருக்கும் ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்களே; வணக்கம்,
சர்வதேச ரீதியில் இடம் பெறும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழாமில் தமிழ் வீர, வீராங்கனைகளின் பங்களிப்பு என்ன? தேசிய ரீதியில் நடைபெறும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் பங்குபெறும் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் உள்ள விளையாட்டு வீரர்களின் பங்களிப்பு என்ன? (இங்கு “தமிழ்” - “தமிழர்” என்று பயன்படுத்தும் போது மொழியால் ஒன்று பட்ட அனைத்து இலங்கைத் தமிழர்களுமே உள்ளடங்குவர்)
ஏன் இந்தப் பின்னடைவு? “திறமையான மெய்வல்லுனர்களுக்கு தேசிய அளவிலான அங்கீகாரங்கள் மிகக் குறைந்தளவிலேயே உள்ளது” என்ற குற்றச்சாட்டு இங்கு எழுவது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது. அதை மறுப்பதற்கில்லை. தவிர, கடந்த கால யுத்த சூழ் நிலைகளினால் போதிய பயிற்சி இன்மை, பயிற்சியாளர்கள் இன்மை, விளையாட்டு உபகரணங்கள் இன்மை போன்ற குற்றச்சாட்டுக்களையும் சுமத்திவிட்டு இலகுவாக தப்பிவிட முடியும். இது மட்டுமா தமிழர்களின் பிரதிநிதித்துவம் தேசிய மற்றும் சர்வதேச அளவுகளில் குறைந்தளவு இருப்பதற்கான காரணம்? இல்லவே இல்லை. இதையும் தாண்டி எமது சோம்பேறித்தனங்களும் அதிகளவில் இதில் தாக்கம் செலுத்துகின்றது.

இன்று தேசிய அளவில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மெய்வல்லுனர்களுக்கான வாய்ப்புக்கள் கிடைத்து வருகின்றன. தேசிய மட்டப்போட்டிகளைக் கூட முன்னர் தென்னிலங்கை மைதானங்களில் நடத்தினார்கள். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள விளையாட்டரங்குகளில் நடத்துகின்றனர்.இதனால் அதிகளவான உள்ளுர் மெய்வல்லுனர்கள் பங்குபெறுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. இருந்தும் சாதிக்கத் தவறுகின்றோம்.

ஒரு வருடத்திற்கு முன்னர் அகில இலங்கை ரீதியில் மெய்வல்லுனர்களை உள்ளடக்கியதாக 36ஆவது தேசிய விளையாட்டு விழா கண்டி போகம்பரை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.இதில் 75 தங்கப்பதக்கங்களுடன் மேல் மாகாணம் முதலிடத்தைப் பெற்றதுடன் எந்தவொரு தங்கத்தையும் பெறாமல் வெறும் நான்கு பதக்கங்களுடன் வட மாகாணம் இறுதி ஸ்தானத்தைப் பெற்றுக் கொண்டது. கிழக்கு மாகாணம் 8 தங்கங்களுடன் எட்டாவது இடத்தைப் பிடித்தது. மத்திய மாகாணம் சார்பாக கலந்து கொண்டவர்களில் அதிகம் பெரும்பான்மை இன மெய்வல்லுனர்களே! அவர்களுக்கு 42 பதக்கங்கள் கிடைத்தபோதும் அதில் தமிழர்களின் பங்கு மிகச் சொற்ப அளவானதே.

உள்ளுர் பெறுபேறுகளே இப்படியானதாக இருக்கும் போது சர்வதேச ரீதியில் எப்படி உயர்ந்த பெறுபேறுகளை எதிர்பார்ப்பது?
நான் ஒரு மெய்வல்லுனர் வீரன் என்ற வகையிலும், சில மெய்வல்லுனர் பயிற்சிகளில் கலந்து கொண்டவன் என்ற முறையிலும், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாவட்ட ரீதியான போட்டிகளில் பல மெய்வல்லுனர்களுடன் பழகியவன் என்ற முறையிலும் நாங்கள் எங்கே பலவீனமானவர்களாக இருக்கின்றோம் என்பதை என்னால் உணர முடிந்தது.

எங்களைப் (தமிழரைப்) பொறுத்தவரை படிப்பு தான் பிரதான உணவு. விளையாட்டு என்பது தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் போன்றது. படிப்பில் செலுத்தும் கவனத்தில் ஐந்து வீதத்தைக் கூட விளையாட்டில் செலுத்த மாட்டோம்.யாராவது கேட்டால் “படிப்புக் கெட்டுவிடும்”என்று பிரயோசனமில்லாத ஒரு காரணத்தை சொல்வது. இதில் முக்கியமானவர்கள் பெற்றோர்கள். தங்கள் பிள்ளைகள் விளையாட்டில் கவனம் செலுத்துவதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என நினைத்து 24 மணி நேரமும் படிப்பைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.இறுதியில் அம் மாணவர்களின் பெறுபேறுகள் எதிர் பார்த்தளவு திருப்திகரமானதாக இருக்காது.

மாணவர்களுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கலாம். ஆனால் எங்களில் எத்தனை பெற்றோர் “என் மகன் முரளி போல ஆகவேண்டும், ஹுஸைன் போல்ட் போல ஆக வேண்டும். என் மகள் சுசந்திகா போல ஆகவேண்டும்” என்றெல்லாம் கனவு கண்டிருப்பீர்கள். எங்களுக்கு தெரிந்ததெல்லாம் “த்ரீ ஏ (3A) எடுக்க வேண்டும். பெரதெனியா போக வேண்டும்” என்பது தான். பத்தாயிரம் பேர் கணித பாடத்தில் 3A ஏ எடுத்தாலும் பல்கலைக்கழகத்திற்குள் உள் வாங்க கூடியவர்களைத் தானே உள்வாங்க முடியும். அப்படியாயின் ஏனையவர்களின் கதி? ஏன் படிப்பின் மூலம் தான் முன்னுக்கு வர முடியுமா? விளையாட்டில் மூலம் பல கோடிகளை அள்ளலாமே! நீங்கள் கால்பந்தில் ஒரு ரூனியாக இருந்தால் எத்தனை கழகங்கள் போட்டி போட்டுக் கொண்டு உங்களை வாங்கும்?

உங்களுக்குத் தெரிந்த உதாரணத்தையே கூறுகின்றேன். “எல்லோரும் படித்து டொக்டர், இஞ்சினியர் ஆனால் எங்கு போய் முடி வெட்டுவது, எங்கு போய் காய்கறி வாங்குவது”. எல்லாத் துறைகளிலேயும் எல்லோரையும் பிரகாசிக்க வைக்க முடியும். அந்தந்த துறைகளில் அவர்களை முன்னுக்கு கொண்டுவர முடியும். ஆனால் எங்கள் பெற்றோர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். எம் தமிழ்ப் பெற்றோர்கள் கொஞ்சம் மனசு வைத்தால் சரிக்குச் சமனாக படிப்பிலும், விளையாட்டிலும் தங்கள் பிள்ளைகளை மிளிர வைக்க முடியும்!

எம் மாணவர்கள் தரம் 6 முதல் 10 வரை ஓடியோடி எல்லா விளையாட்டுக்களிலும் பங்குபற்றுவார்கள்.ஓ.எல்,(O/L) ஏ.எல் (A/L) வந்தால் ஒட்டுமொத்தமாக அவற்றுக்கெல்லாம் மூட்டை கட்டி விட்டு படிப்பில் குதித்து விடுவார்கள்.பல மாணவர்களை துரத்திப் பிடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விளையாட வைத்த வரலாறுகள் எல்லாம் நானறிவேன்.

விளையாட்டு என்பது எமது வாழ்க்கையின் ஓர் அங்கம். படி முறையிலான பயிற்சிகளின் மூலம் அவற்றில் எமது திறமைகளை வெளிப்படுத்தி தேசிய ரீதியில் வெற்றிகளைப் பெற முடியும். இதற்கு பாடசாலைக் காலங்கள் நிச்சயம் கை கொடுக்கும். அந்த நேரத்தில் படிப்புடன் மாத்திரம் நிறுத்திவிடாது இவற்றையும் கவனத்தில் கொண்டு சாதிக்க முயற்சி செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் அவற்றிற்கான களங்கள் தாராளமாகவே திறந்து கிடக்கும். எனவே நம்மவர்கள் சாதிக்க நினைக்க வேண்டும். அதற்கு செயல் வடிவத்தையும் கொடுக்க வேண்டும்.

திறமையாளர்கள் காட்டாறு போன்றவர்கள் அவர்களுக்கு கையால் அணை கட்டி தடுத்திட முடியாது.

மீண்டும் மற்றுமோர் பதிவினூடாக உங்களைச் சந்திக்கும் வரை,
வண்ணத் தமிழ் வணக்கங்களுடன்,
கானா வரோ,
நன்றி,
வணக்கம்!

வெகு விரைவில் உங்கள் ஈழவயலில் ஓர் புத்தம் புதிய படைப்பாக, வித்தியாசமான எண்ணக் கருவினைத் தாங்கி "புலமும் தமிழும்"! காத்திருங்கள்! எதிர்பார்த்திருங்கள்! 

10 comments:

ஆகுலன் said... Best Blogger Tips

இந்த நிலைமை மாற வேண்டும்..
புலம் பெயர் தேசங்களில் பெற்றோர் அனுமதிக்கிறார்கள் அனால் உள்நாட்டில் விடுவதே இல்லை................

சுதா SJ said... Best Blogger Tips

உங்களுக்குத் தெரிந்த உதாரணத்தையே கூறுகின்றேன். “எல்லோரும் படித்து டொக்டர், இஞ்சினியர் ஆனால் எங்கு போய் முடி வெட்டுவது, எங்கு போய் காய்கறி வாங்குவது”. எல்லாத் துறைகளிலேயும் எல்லோரையும் பிரகாசிக்க வைக்க முடியும். அந்தந்த துறைகளில் அவர்களை முன்னுக்கு கொண்டுவர முடியும். ஆனால் எங்கள் பெற்றோர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். எம் தமிழ்ப் பெற்றோர்கள் கொஞ்சம் மனசு வைத்தால் சரிக்குச் சமனாக படிப்பிலும், விளையாட்டிலும் தங்கள் பிள்ளைகளை மிளிர வைக்க முடியும்!<<<<<<<

மிக மிக உண்மை

காட்டான் said... Best Blogger Tips

இவற்றுக்கெல்லாம் காரணம் தாங்கள் சாதிக்க முடியாததை பிள்ளைகளில் புகுத்த முனையும் பெற்றோரே..!!

குட்டிப்பையன் said... Best Blogger Tips

வரோ அங்கிள் முதலில் கையை கொடுங்க ஒரு சிறப்பான பதிவு.

வடக்கு கிழக்கில் பல திறைமையான விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள் அவர்களின் பங்கு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் இல்லாமல் போனமைக்கு பிரதான ஒரு காரணம் யுத்தமே.

சில வருடங்களுக்கு முன்பு கூட யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளுக்கு இடையிலான ஒரு கிரிக்கெட் போட்டியில் ஒரே இனிங்சில் ஒருமாணவன் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி சாதனை படைத்தான்..
சர்வதேச ரீதியில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரே இனிங்சில்இந்தியாவின் அணில் கும்ளே,மற்றும் இங்கிலாந்தின் ஜிம்லேக்கர் இருவர் மாத்திரமே இந்த அரிய சாதனையை புரிந்தவர்கள்...

திறமையானவர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு சரியான வாய்பு அமையவேண்டும்.நீங்கள் சொன்னது போல பெற்றோர்கள் பலர் பிள்ளைகளுக்கு எதில் ஆர்வம் என்று தெரிந்து கொண்டு அதில் அவர்களை ஊக்குவிப்பது இல்லை.அப்படி செய்து வாய்ப்பும் கிடைத்தால்
எம்மண்ணில் இருந்தும்.பல சச்சின்கள்,லாராக்கள்,ரூனிகள்,ரோஜர் பெடர்கள்,உருவாகுவார்கள் என்பதில் ஜயமில்லை

மகேந்திரன் said... Best Blogger Tips

பூத்துவரும் பொன்னெழிலாய்
பூக்கட்டும் புத்தாண்டு!
ஏழுவண்ண வானவில்லாய்
வண்ண வண்ண இன்பங்கள்
நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said... Best Blogger Tips

அருமையான மறக்கப்பட்டு வரும் மறுக்கப்பட்டுவரும்
ஒரு விடயத்தை அழகாய் கையாண்டு எழுதியிருக்கிறீர்கள்.
குழந்தைப்பருவம் முதல் ஈடுபாடு எதிலுண்டோ அதில்
கவனம் செலுத்தி வளர்க்கவேண்டும் என்பதை ஆணித்தரமாக
உணர்த்தியிருக்கிறீர்கள்.
அதே போல அரசும் திறமையானவர்களை இனம்கண்டு
அவர்களின் திறமையை மேலும் வளர்த்து விடவேண்டும்.
எல்லாமே ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்கள்.

Anonymous said... Best Blogger Tips

\\\\த்ரீ ஏ (3A) எடுக்க வேண்டும். பெரதெனியா போக வேண்டும்\\\\

எல்லாற்ற ஆசையும் இது தானே..

இன்று என் பதிவு:: இந்த வருசம் வேற ஆக்கள் கிழிச்சவை...

Jana said... Best Blogger Tips

இன்றும் எனக்கு நினைவு இருக்கின்றது 1994ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 200 ஆவது ஆண்டு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டிருந்தார், இலங்கைக்கு சர்வதேச போட்டி ஒன்றிலே முதன் முதல் தங்கப்பதக்கம் ஒன்றை பெற்றுக்கொடுத்த எதிர் வீர சிங்கம் அவர்கள்.
அவர் பேசும்போது, நான் இங்கு கற்றதைவிட, அங்குதான் (ஜன்னலின் ஊடாக தெரியும் மைதானத்தைக்காட்டி) நிறைய கற்றிருக்கின்றேன் என்றார். அதன் அர்தத்தத்தை பின்னர் வாழ்வின் பல இடங்களில் அனுபவரிதியாக உணர்ந்திருக்கின்றேன். வாழ்வை வளப்படுத்தும் தொடக்கங்கள் மைதானத்தில் இருந்துதான் பிறக்கின்றன என்பது என் அனுபவம்கூட.
பகிர்வுக்கு நன்றி வரோ...

அம்பலத்தார் said... Best Blogger Tips

தமிழ் பெற்றோரின் மனநிலையை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறியள் வரோ.

அம்பலத்தார் said... Best Blogger Tips

எமது பின்னடைவுக்கு மற்றொருகாரணம் எமது மக்களின் வாழ்வாதாரங்களை அழித்தபோர். போர் தின்ற மண்ணிலிருந்து இவையெல்லாம் வலுப்பெற சிறிதுகாலம் எடுக்கும்

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!