Sunday 8 January 2012

ஆமத்துறூ வெட்டும் அந்த நாள் நினைவுகளும்!

வாழும் காலத்தில் வண்ணத் தமிழ் மொழியால் இணையத்தில் வலம் வரும் ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் குழை போடும் காட்டானின் இனிய வணக்கம்;
நேற்று குடும்பத்தோட லாச்சப்பலுக்கு போனேன்.நாங்கள் அங்கு போகும்போது கன வேலைகளை ஒரே நேரத்தில செய்திடுவம். மனிசி சிலோன் மரக்கறிகள் வாங்க ஒரு பக்கம் கிளம்பினால், நானும் பிள்ளைகளும் ஊருக்கு காசனுப்பிட்டு அப்பிடியே மூணு பேரும் முடி வெட்ட கிளம்பிடுவம் . ஏனோ தெரியல! ஊரில ஒரே கடையில மயிர் வெட்டியது போல இங்கேயும் நான் அப்படிதான். கல்யாணம் கட்ட போகேக்க கூட நான் வழமையா போகும்   அந்த கடைக்குத்தான் போய் என் மொட்டைய மறைக்கிற மாதிரி முடி வெட்ட சென்றிருக்கேன். 
பிள்ளைகளுக்கு முதல் மொட்டை அடித்தது கூட  அதே கடையிலதான். ஆனா பாருங்க! எங்களை போல ஆக்கள் தங்கள் வாழ் நாளில் ஒரு தடவையாவது தங்கள் விரும்பிய சிகை அலங்காரம் செய்திருப்பார்களோ தெரியாது!! ஆமாங்க நேற்று கூட குமாரண்ணையிடம் தலைய கொடுத்துட்டு ரஜனி ஸ்டையிலில் வெட்டுங்கன்னு சொன்னா அண்ணர் பேய் முழி முழிக்கிறார்! பின்ன... எனக்கு தலையில் இருக்கிறதே நாலு முடி. இத போய் ரஜனி ஸ்டையிலில் வெட்டுங்க என்று கேட்டால்? ஆனா நான் சொன்னது சரி தானே!, இப்ப ரஜனியும் என்னை மாதிரிதானே!!

அட நான்தான் எனக்கு விரும்பியபடி வெட்ட முடியாதுன்னு என்ர பொடியன்களை அவங்க விரும்பினபடி வெட்டட்டும் என்று விட்டா; பின்னால சாமான் சக்கட்டெல்லாம் வாங்கி முடிச்சதும் மனிசி வாறாள் 'என்ன வெட்டு வெட்டுறிங்க பொடியங்களுக்கு? அவங்களுக்கு போலிஸ் குரோப் அடிச்சாதான் நல்லா இருக்கும் என்று சொல்லுறாள்.அட அப்படி அடிச்சாத்தானே  ரெண்டு மாசம் தாங்கும்? இப்பிடித்தான் ஊரிலையும்  மயிர் வெட்டுரதென்னா முதல்ல ஆச்சி அது வளர் பிறை நாளோ தேய் பிறை நாளோன்னு பார்ப்பா. தேய் பிறையில மயிர் வெட்ட விடமாட்டா!, அப்படி வெட்டினா மயிர் திரும்ப முளைக்காதாம். வளர் பிறையில மயிர் வெட்ட போகும் போது ஏதோ ஒரு திருவிழாவுக்கு போறதைப் போல தான் போவம்!
என்ர ஆச்சிக்கும் அப்புக்கும் என்னையும் சேர்த்து இருவது பேரப் பிள்ளைகள். அதில ஒருக்கா மயிர் வெட்ட பத்து பேராவது சேந்திடுவம்! பக்கத்தில முடி திருத்தும் கடை இருந்தாலும், அப்புக்கு வடிவேல் கடையில வெட்டாட்டி திருப்தி வராது. வடிவேலு கடைக்கு போறது கொஞ்சம் தூரம்தான். அம்மா கேட்பா "அப்பா பக்கத்தில தானே கடை இருக்கு. பிறகு ஏன் வடிவேலு கடைக்கு போறீங்க? அப்படீன்னு கேட்பாங்க. பதில் கிடைக்காது! ஒரு சின்ன புன் சிரிப்பு மட்டும் தான் கிடைக்கும். இப்ப  நான் யோசிச்சு பாக்கிறன் 'என்னை போல அவரும் பழகினவங்க பிழைக்கட்டுமே என்ற ஒரு அவாவா இருக்கலாம்.

நாங்க பத்து பன்னிரண்டு பேரும் இரட்டை மாட்டு வண்டியில் போகும்போதே எங்களுக்குள் கற்பனைகள் தொடங்கிடும். ஒருவர் தான் அந்த படத்தில வாற ஹீரோ போலவும்,மற்றவர் அவருக்கு போட்டியா இருக்கும் ஹீரோ போலவும் முடி வெட்டுவதாக..! வடிவேலு கடையில் இறங்கிய பின்னர் தான் தெரியும் அப்புக்கும் வடிவேலுக்கும் இருக்கும் எழுதப்படாத ஒப்பந்தம் பற்றி ..!தங்கைகளுக்கும் மச்சாள்மாருக்கும் ஒரே ஸ்டையிலில் வெட்டினா; எங்களுக்கு இன்னும் ஒரு ஸ்டையிலில் தான் வெட்டுவாங்க. அது தாங்க போலிஸ் குரோப்..!! சிறிது காலங்களின் பின்னர் எங்களுக்கு பத்து பன்னிரண்டு வயது இருக்கும்போது அப்புவுக்கு வயல்  வேலைகள்  அதிகமானாலோ அல்லது வயசுக்குரிய நோய்கள் தாக்கினாலோ எங்களை தனியாக பஸ்ஸில் ஏற்றி அனுப்புவார்கள் வடிவேலைய்யா  கடைக்கு.
வடிவேல் ஐயாவின் கடையை அவர் மகன் மகேந்திரண்ணை பொறுப்பேற்ற நேரம் அது. அப்போதான் காதின் அரைவாசி வரை முடியை விட்டு வெட்டும் "சக்கி கட்" பிரபலமாக இருந்த காலம். அப்புவுக்கும் வடிவேலையாவுக்கும் இருக்கும் ஒப்பந்தம் தெரியாது மகேந்திரண்ணையை ஏமாற்றி சக்கி கட் வெட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தா, அதை பார்த்த ஆச்சி பூவரசம் கம்போடு அப்புவை கூப்பிட்டு எங்களை மீண்டும் வடிவேலையா கடைக்கு வண்டியை கட்டி அனுப்பிடுவா..! பிறகென்ன 'சக்கி கட்' வெட்டின மகேந்திரண்ணை மீண்டும் எங்களுக்கு 'போலிஸ் குரோப் ' அடித்து விடுவார்..  இன்றைக்கு நான் சக்கி கட் வெட்டுற நிலையில் இல்லை!அந்த ஆசையை பொடியங்களில் நிறைவேற்ற மனிசியும் விடுறாள் இல்ல.. என்ன இருந்தாலும் நம்ம வீட்டில என்றுமே மதுர ஆட்சி தான்..!!

அரும்பத விளக்கம்/ சொல் விளக்கம்:


ஆமத்துறூ வெட்டு: தலை முடியினை முழுமையாக மளித்திருக்கும் அல்லது மொட்டை போட்டிருக்கும் ஒருவரின் முடி வெட்டினை ஈழத்தில் நையாண்டியுடன் ஆமத்தூறு வெட்டு என அழைப்பார்கள்.
ஆனா : ஆனால்
மயிர் வெட்டுதல்: முடி வெட்டுதல் சிகை / அலங்காரம் செய்தல்.
ஆக்கள்: ஆளுங்க/ ஆட்கள்.
சொன்னா: சொன்னால்
பேய் முழி/ பேந்தப் பேந்த முழிக்கிறது: பயத்துடன் கண் விழிகளை உருட்டி உருட்டி விழிகள் பிதுங்கப் பார்க்கும் பார்வை.
சாமான் சக்கட்டு: உணவுப் பொருட்கள் / மளிகை கடையில் வாங்கும் பொருட்கள்.
ஒருக்கா: ஒருவாட்டி/ ஒரு தடவை.
குரோப்: மொட்டையாக, தலையில் மயிர்கள் இல்லாது வெட்டுதல்.


மீண்டும் மற்றுமோர் பதிவினூடாக ஈழவயலினூடே உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளுவது,
கனிவன்புடன்;
காட்டான். 
காட்டானும் குழை போட்டானில்லே!
வெகு விரைவில்! உங்கள் அபிமான ஈழவயலில் ஓர் புத்தம் புதிய படைப்பாக, வித்தியாசமான எண்ணக் கருவினைத் தாங்கி உங்களை நாடி வரவிருக்கிறது "புலமும் தமிழும்"! 
காத்திருங்கள்! ஆவலுடன் எதிர்பார்த்திருங்கள்! 
*இப் பதிவிற்கான படங்கள் யாவும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.

13 comments:

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

மொத வெட்டு

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>>>ஆமத்துறூ வெட்டு: தலை முடியினை முழுமையாக மளித்திருக்கும் அல்லது மொட்டை போட்டிருக்கும் ஒருவரின் முடி வெட்டினை ஈழத்தில் நையாண்டியுடன் ஆமத்தூறு வெட்டு என அழைப்பார்கள்.

பதிவில் பல புதிய வார்த்தைகள், அனுபவங்கள் அறிந்தேன்

K said... Best Blogger Tips

ஆஹா, அழகான அனுபவம் அண்ணர்! நீங்க வெட்டும் சலூன் எது எண்டு சொல்லுங்க அண்ணர், நானும் அங்க போறன்! படிக்க படிக்க இனிமையா இருந்திச்சு பதிவு!

Jana said... Best Blogger Tips

வளர்பிறையில் முடி வெட்டுதல் உட்பட ஒரு விடயம் சார்ந்த பல நினைவுகளை கண்முன்னே கொண்டுவந்தீர்கள். அப்பொதெல்லாம் பெண்கள் தங்கள் முடியின் கீழ் மட்டத்தை சேப்பண்ணிவிட்டு, வெட்டிய மடியினை வாளை மட்டையில் கொண்டபோய் செருவுவதையும் கண்டள்ளேன். அப்படி செருகினால் முடி நன்றாக வழருமாம் என்ற நம்பிக்கை.

ஹேமா said... Best Blogger Tips

காட்டான் வணக்கப்பு.சுகமா இருக்கிறியளோ.நேற்று வரைக்கும் தலையைச் சலூனின குடுக்கிறியள் எண்டா சுகமா இருக்கிறியள் எண்டுதான் அர்த்தம்.நானும் உங்கட ஊர்க்காரிதானே.ஏன் என்ர பக்கம் வாறேல்ல.குழை போட்டுக் கனநாளாச்சு.ஒருக்கா வாங்கோ !

நல்லதொரு வீட்டு ஞாபகப் பதிவு.எங்கட அம்மா அப்பா தாத்தா அம்மம்மாக்கள் எல்லாருமே ஒரே குட்டையில ஊறின மட்டைகள்தான்போல.இருக்கிற நேரம் வெட்ட விடேல்ல.வெட்ட நினக்கேக்க தலையில ஒண்டையும் காணேல்ல.என்ன செய்யலாம் காட்டான் !

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் காட்டான்!இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!சும்மா தான இருக்கிறன்,வயல்பக்கம் போய்ப் பாப்பமெண்டு மவுச சுத்தினா உங்கட பதிவு!அதுகும்,"சிரைக்க"ப் போன கத.என்னத்தச் சொல்லுறது?குமாரை ஒருக்கா புதன்கிழமை சந்திப்பமெண்டிரு கிறன்!!!

Yoga.S. said... Best Blogger Tips

காட்டான்......///எனக்கு தலையில் இருக்கிறதே நாலு முடி.///இந்த விவரம் காணும்!ஹி!ஹி!ஹி!!!!!!!!!!!!!

மகேந்திரன் said... Best Blogger Tips

வணக்கம் மாமா,
முடிவேட்டுதலை ஒரு திருவிழா போல சொல்லிட்டீங்க போங்க...
அப்படியே மேளதாளத்தோட மொட்டைபோடும் திருவிழாவிற்கு
போயிட்டு வந்த சுகம் கிடைக்குது பதிவை படித்ததும்...

சுதா SJ said... Best Blogger Tips

அட காட்டான் மாம்ஸின் பதிவா??!!!
நான் இப்போத்தான் பார்க்கிறேன்... :(

மாமா..... உண்மையிலேயே ஊரில் முடிவெட்டுவது என்றாலே ஒரு கொண்டாட்டம் போல தானே....
நாங்கள் வன்னியில் இருக்கும் போது... முடி வெட்ட கடைக்கு போவது இல்லை
சலூன் காரர் தான் வீட்ட வந்து வெட்டிவிட்டு போவார்....
வெட்டும் போது கதை சொல்லி சொல்லி வெட்டுவார் இப்பவும் நினைவிருக்கு :)

இப்போ பிரான்ஸ் வந்தும் தொடர்ந்து ஒரே இடத்தில் முடி வெட்டுவது இல்லை... முடிவெட்ட நினைக்கும் போது எங்கே நிக்கிறோனோ அங்கேயே பக்கத்தில் முடிவெட்டிடுவேன்... ஹா ஹா........

KANA VARO said... Best Blogger Tips

சலூனுக்கு போகும் போது “அப்பிடி வெட்டணும், இப்பிடி வெட்டணும்” எண்டெல்லாம் நினைச்சிட்டு தான் போவன். அங்கை போய் குந்தினதும் பாபர் எப்பிடியெல்லாம் வெட்டுறாரோ அதுக்கெல்லாம் தலையை குடுத்துட்டு இருக்க வேண்டியது தான். ஏன்னா, அப்பா ஏற்கனவே சொல்லி வைச்சிருக்கிறார் “பெடியன் வந்தா ஒட்ட வெட்டி விடுங்கோ” எண்டு. ஹீ ஹி

Anonymous said... Best Blogger Tips

அழகான அனுபவம்...புத்தாண்டு வாழ்த்துகள் காட்டான்...

ஆகுலன் said... Best Blogger Tips

காட்டான் மாமா ஒவ்வொரு முறை முடி வெட்ட போகும் போதும் ஒவ்வொரு வடிவத்தில் வெட்டணும் என்டுதான் போவேன் ஆனா...ஏதோ ஒரு மாதிரி வெட்டி விடுங்கள்........

அம்பலத்தார் said... Best Blogger Tips

சாதாரணமாக ஒவ்வொரு குடும்பத்திலும் நிகழும் முடிவெட்டும் நிகழ்வைக்கூட இவ்வளவு சுவாரசிய,மாக பகிர நம்ம நண்பர் காட்டானால்தான் முடியும் வாழ்த்துக்கள் காட்டான்.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!