Thursday 19 January 2012

பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகமும், கட்டுடல் மேனிகளும்!

இணையத்தில் ஈழத்து நினைவுகளைச் சுமந்து வரும் ஈழவயலைப் படிக்க வந்திருக்கும் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்;
ஈழவயலில் எனது முதற்பதிவு இது.
ஏற்கெனவே "வரோ" அவர்கள் எழுதிய கோயில்த்திருவிழாக்களும் சைட் அடிக்கப்படும் பெண்டுகளும் என்ற பதிவின் அடுத்த பாகமாகக் கூட நீங்கள் இந்தப் பதிவைப் பார்க்கலாம். கலாச்சார காவலர்கள் யாராச்சும் அவசரக்குடுக்கை தனமாக பதிவினை முழுமையாகப் படிக்காது, போர்க் கொடி தூக்குவதனை விடுத்து, கொஞ்சம் நிதானமாக இப் பதிவில் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதனை ஆராய்ந்து பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா? திருவிழாக்களில் இளையோர் பட்டாளத்தின் திருவிளையாடல்களைப் பற்றிய பல விடயங்களை வரோ அவர்கள் தனது பதிவில் பொதுவாக கூறியிருந்தார். இப் பதிவினூடாக சில அனுபவப் பகிர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து களமிறங்குகிறேன்.
எமது ஊர்களில் "ஊற்றங்கரை" என்பது ஒரு அழகிய கிராமம். எப்போதும் தண்ணீர் இயற்கையாகவே ஊறி, சிறிய சிறிய நீர் நிலைகளுடனும் அயலில் வயல்கள் நிறைந்த பசுமையான பிரதேசங்களைக் கொண்டிருப்பதாலுமே ஊற்றங்கரையை உள்ளடக்கிய பகுதி "தண்ணீரூற்று" என்று பெயர்பெற்று விளங்குகிறது.அந்த பகுதியில் உள்ளடங்கிய சிறு ஊர்தான் ஊற்றங்கரை. இதனால் ஊற்றங்கரை பசுமையும் நீர் ஊற்றுகளும்,ஈரலிப்பும் நிறைந்த அழகான பகுதியாக விளங்குகின்றது. அங்கு ஓர் பிள்ளையார் கோயில் உண்டு. பிரபல்யமான கோயில். தண்ணீரூற்று, முள்ளியவளை, மாமூலை, நீராவிப்பிட்டி,வற்றாப்பளை,குமாரபுரம்,கணுக்கேணி... போன்ற ஊர்கள் சூழ்ந்த அந்த பிரதேசங்களில் முக்கியமான கோயிலும் கூட. சித்திரைப் பௌர்ணமி அன்று தீர்த்தத் திருவிழா நடைபெறக் கூடிய வகையில் அதற்கு முன்னுள்ள ஒன்பது நாட்களும் கொடியேற்றத்திருவிழா இடம்பெறும். பத்தாம் நாளான பௌர்ணமியன்று கொடியிறக்கி,தீர்த்த திருவிழா நடைபெறும்.இது தொடர்பான உண்மை விளக்கங்கள் எல்லாம் அடுத்தொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பார்க்கலாம்.இப்போது சும்மா ஜாலியா ஒரு பதிவு.
ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயம்
அந்த ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயத்தில் 12 வருடங்களின் பின்னர் 2004 ஆம் ஆண்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.கோயில் பல வகைகளிலும் புனரமைக்கப்பட்டு,புதிதாக மண்டபங்கள் கட்டப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு,சிறப்பாக கும்பாஷேகம் நடைபெற்றது. அப்போது எனக்கு பதின்ம வயது என்றால் நம்பவா போறீங்க?  பதின்ம வயது என்றாலே மேலதிக விளக்கங்கள் நான் சொல்லவேண்டிய தேவையில்லை தானே? அந்த வயதில் என்னென்ன வேலைகளெல்லாம் நடைபெறுமென்று நான் சொல்லியா உங்களுக்கு தெரியனுமுங்க? வித்தியாசம் வித்தியாசமாக தலை முடி வெட்டுவதில் ஆரம்பித்து இன்னும் எத்தனையோ அழகு அலங்காரங்களை நாம பண்ணிக்கிட்டு இருப்போம்.

வழக்கமாக எங்கள் ஊர்க்கோயில் விழாக்களில் நாங்கள் உள் நின்று பங்களிப்போம். ஏன் பதின்ம வயதுக்காரங்க மட்டும் உள் நின்று பங்களிக்கிறாங்க என்று உங்களுக்கு சின்னச் சந்தேகம் வரலாம். காரணம் இருக்கு. சொல்கிறேன் கேளுங்க. ஐயருக்கு குடை பிடிப்பது,கும்பம் தூக்குவது,சாமி காவுவது,பிரசாதம் கொடுப்பது,சாமிக்கு குடை பிடிப்பது, அர்ச்சனை பற்றுச்சீட்டு விற்பது,...... இப்படி எக்கச்சக்கமான பொதுத் தொண்டுகளை பதின்ம வயதில் அழையா விருந்தாளிகளாக முண்டியடித்துக் கொண்டு செய்வோம். வேட்டி அவிழ்ந்து விழாதிருக்கவென்று இடுப்பில் பெல்ட் போட்டு வரிஞ்சு கட்டி,அதன் மேலே சால்வையை ரெண்டு கரையும் தெரியுமாறு மடித்துக்கட்டிக்கொண்டு, வாலிபிகள் நிற்கும் வரிசைகளுக்கு இடையே புகுந்து அங்குமிங்குமாக எந்த தேவையுமின்றி ஓடித்திரிவதில் ஒரு தனீ.... சுகம்.

அப்படி திரியும்போது யாராவது ஒரு கலர்ஃபுல் அம்மணி எங்கள் பக்கம் திரும்பிப்பார்த்தால்,சொல்லவே தேவையில்லை.(உள்ளங்காலிலிருந்து புல்லரிப்பு ஏற்பட்டு கபாலத்தில் இருக்கக்கூடிய மயிர்களெல்லாம் கம்பிபோல் எழுந்து நிற்கும்.) மனதுக்குள் "கண்ணுக்குள் நூறு நிலவா..." என்று எஸ்.பி.பி அண்ட் சித்ரா பாடிப் பரவசப்படுத்த,இளைய சமுதாயம் அப்படியே.. விஜய்யாகவோ அஜித்தாகவோ மாறி காற்றிலே பறக்க ஆரம்பிக்க, அவர்களுக்கே தெரியாமல் வேட்டியும் அவிழ்ந்து பறக்க,... சனம் முழுக்க ஹீரோவைப்பார்க்க, ஹீரோவோ-சனம் முழுவதும் தன் அழகைப் பார்ப்பதாக நினைத்து- மெய்மறந்து நிற்க,... திருக்கூத்து பெருங் கூத்தாகிவிடும். ஹே...ஹே..

அதற்குள் அடுத்த பிரச்சனை என்னவென்றால் "கட்ஸ்". கட்ஸ் என்றால் கட்டுடல் மேனி என்று அர்த்தம். அதாவது,சிக்ஸ்பேக்,செவன்பேக் இப்படியான இத்தியாதி வகைகளைத் தான் நம்ம ஊரில் கட்ஸ் என்று சொல்லுவோமுங்க. ஹிஹி..! ஒரே வகுப்பில் படிக்கும் பொண்ணுங்க ஒரு வகுப்போ இரு வகுப்போ குறைவாக படிக்கும் வாலிபிகள்,  அயல்ப்பாடசாலை அழகு நிலாக்கள், ஊரிலுள்ள உள்ளூர் அழகிகள் என எல்லோரும் சும்மா... பளபள என்று மினு மினுப்பாக வந்து கலந்துகொள்ளும் திருவிழாவில் நாமளும் கலந்து கொள்ளும்போது-அதிலும்,வேட்டியுடன்,சேட் இல்லாமல் எல்லா காரியங்களுக்கும் முன்னுக்கு நின்று கலந்துகொள்ளும் போது ஒல்லிகுச்சியாகவோ தள தள உடம்பாகவோ போய் நின்றால் நன்னாவா இருக்கும்?அது தான் பெரிய பீலிங்கு.
முதலே சொன்னது போல,ஊற்றங்கரை சித்திவிநாயகர் கோயிலில் 2004 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற ஆயத்தம்.நாமும் எல்லோருக்கும் முன்னின்று "தொண்டாற்ற" ஆயத்தம். கும்பாபிஷேகத்துக்கு பத்து நாட்களுக்கு முன்பே வகுப்பில் இது தொடர்பான பேச்சுக்களும் திட்டங்களும் ஆரம்பம்.கும்பாபிஷேகத்துக்கு முதல் நாள் எண்ணெய்க் காப்பு நடைபெறும். அதற்கும் சேட் இல்லாமல் தான் கோயிலின் உள்ளே சென்று சாமிக்கு எண்ணெய்க்காப்பு வைக்க வேண்டும்.கும்பாபிஷேகத்துக்கும் அதே மாதிரிதான்.ஆகவே-உடம்பை டெவெலொப் பண்ண வேண்டும்.எத்தனை பியூட்டிகள் வரும்.! கட்டுடல் மேனியர்களாக சென்றால்தானே மவுசு. ஆனால், அந்த மேனிதான் எங்களுக்கு இல்லையே!!! என்ன செய்வது?வகுப்பில் படிக்கும் பாடத்தை விட நமக்கு இந்த கட்டுடல் மேனிப் பிரச்சனைதான் பெரும் பிரச்சனை. ஒவ்வொரு பாடங்களும் முடிய, வாத்தியார் வெளியே போவதற்குள் நாம் ஒன்று கூடி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிடுவோம்.

வகுப்பில் நாங்கள் ஆறுபேர் ஒரே செட்.எங்கு போனாலும் ஒன்றாகப் போவது,வகுப்பில் ஒன்றாக இருப்பது, ஒன்றாய் திரிவது,ஒன்றாய் படம் பார்ப்பது... என்று ஒரு பிணைப்பு. சிவரதன்,சயன்,சதீஸ்,நிதர்சன், கோவிந்தன் மற்றும் அடியேன். இதில் சதீஸ் மட்டும் கொஞ்சம் விலக்கு.அதாவது,அவர் கோயில் குளங்களிலெல்லாம் இப்படி வேட்டியுடுத்து கலந்துகொள்ள மாட்டார்.ஆயத்த வேலைகளில் எல்லோரையும் போல கலந்துகொள்வார்.ஆனால்,விழா நடைபெறும் போது கலந்து கொள்வதென்றால்;வேட்டி உடுத்த வேண்டும் என்பதால்,கலந்துகொள்ளமாட்டார்.ஆகவே அவருக்கு கட்டுடல் மேனிப் பிரச்சனை கிடையாது. மற்றவர்களுக்கு தான் பிரச்சனை. கட்ஸ் வேண்டுமென்றால் நல்ல உடற்பயிற்சி செய்யவேண்டும்.பாரம் தூக்கவேண்டும். உடற்பயிற்சி செய்யலாம்.பாரம் தூக்குவதென்றால் என்ன செய்வது? இரு புறமும் பெரிய பாரமான வளையம் இணைக்கப்பட்ட எடை கூடிய இரும்புக்கோல் தேவை.ஆனால், நம்மிடம் இல்லையே.!?
கட்டுடல்மேனி வேண்டுமா? இதைத் தூக்குங்கள்.உடனே சிக்ஸ்பேக் வந்துவிடும்.
         
யோசி யோசி என்று யோசித்து,இறுதியாக ஒரு முடிவெடுக்கப்பட்டது. அதிரடியான முடிவு.(ஹிஹி).எல்லோர் வீட்டிலும் "வாங்கு" இருக்கிறது. அதுவும் நல்ல முதிரம் பலகையில் செய்த பாரமான வாங்கு.(வாங்கு என்றால் -BENCH)அதுவும் நீளமாகத்தான் இருக்கும்.வல்லவனுக்கு புல்லும் ஆயுதமல்லவா..!!! ஹிஹிஹி.இரும்பு இல்லாவிட்டாலென்ன, ஜிம் செண்டர் இல்லாவிட்டாலும் என்ன.இருக்கவே இருக்கிறது. வாங்கு.பத்தே நாட்களில் சிக்ஸ்பேக் என்ன? டுவல் (12) பேக்கே வந்துவிடும். (முடியல...!)முன் மொழிந்தது நான். வழிமொழிந்தது நம்ம குறூப்பு. பிறகென்ன? ஆரம்பித்தது அதிரடி. ஒவ்வொருநாளும் காலையில் வழமையைவிட வேளைக்கு எழுந்துவிடுவோம். அவரவர் வீட்டில்.எழுந்தவுடன் ஓடிப்போய் வாங்கைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குப் பின்புறம் ஓடிப்போக, பொடியனுக்கு இரவில பேய் அடிச்சிருக்குமோ என்று பயந்து பெற்றோர்களும் சேர்ந்து ஓட,.. செம காமெடி. ஓடிப்போய் வீட்டின் பின்புறம் நின்று, வாங்கை இரு கைகளாலும் பிடித்து,மேலே தூக்குவதும், கீழே இறக்குவதும், மேலே தூக்குவதும், கீழே இறக்குவதும்.. அதிரடியாக நடக்க, போதாக்குறைக்கு பின்புலத்தில் மியூசிக் வேறு. 

பத்ரி படத்தில் விஜய் குத்துச்சண்டைக்கு பயிற்சியெடுக்கும்போது வருமல்லவா ஒரு பாட்டு-ரமண கோகுலா பாடினது. அந்தப் பாட்டையும் போட்டு,சத்தத்தைக் கூட்டி விட்டுத் தான் நாங்கள் வாங்கை தூக்கிக்கொண்டு ஓடுவது ஆரம்பிக்கும். வீட்டில் செம திட்டு. அம்மாவிடம் விளக்குமாற்றால் அடி வாங்காததுதான் குறைச்சல். ஒரு பக்கம் பாட்டு-காது கிழியுமளவு சத்தத்தில் ஒலிக்க, மறுபுறம் வாங்கினை வைத்து பயாஸ்கோப்பு காட்டினால் வீட்டில் என்ன நடக்கும்.? திட்டு விழாமல் பொன்னாடையா போர்த்துவார்கள்?ஆனால், நமக்கு அந்த திட்டெல்லாம் பெரிய விசயமே அல்ல. சிக்ஸ்பேக் தான் முக்கியம்.ஆகவே-தூற்றுவோர் தூற்றட்டும்-என்று நம் முயற்சியை தொடர்ந்தோம்."திட்டுற ஆக்களெல்லாம் எங்கட கட்ஸ் ஐப் பார்த்து பொறாமைப் படுவினம்" என்று பஞ்ச் வேறு.

நாங்களாவது கொஞ்சம் பெருசா வாங்கை வைத்து வெயிட் அடித்தோம்.(வெயிட் அடித்தல்-பாரம் தூக்கி உடற்பயிற்சி செய்தல்.) ஆனால், நம்மில் ஒருவராகிய நிதர்சன் அவர்களுக்கு வீட்டில் வாங்கு இல்லை. ஒன்லி கதிரை.(கதிரை-CHAIR) பொடியன் கதிரையை தூக்கி வெயிட் அடிப்பான் பாருங்க.. சும்மா அப்புடியொரு கட்ஸ்.ஹிஹி..!!!
அதுவும் பல கால இடைவெளியுமல்ல.ஒரே வாரம்தான்.அந்த ஒரே வாரத்தில் உடம்பை கட்டுக்கோப்பாக்கவேண்டும். எப்படித் தெரியுமா? கதிரைதூக்கி உடலை இறுக்கவேண்டும்.எவ்வளவு பெரிய முக்கியமான "அறிவுமிக்க" முயற்சி.! போதாக்குறைக்கு வகுப்பிற்கு வந்து ஆளையாள் அளந்து பார்ப்பது. "உனக்கு கட்ஸ் வந்திருக்கோ எனக்கு வந்திருக்கோ.?" என்று.மேசையில் எதிரெதிரே நின்று கொண்டு கைகளை வைத்து இருவர் இருவராக போட்டி போட்டு ஒருவரின் கையை ஒருவர் மடக்கி தம்ஸ் பிடித்துப் பார்ப்பது, காலைப் பிரார்த்தனைக்கு வரிசையாக செல்லும்போதும், வகுப்பில் எழுந்து நிற்கும் போதும் கஸ்டப்பட்டு உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பது, நெஞ்சை அளவுக்கதிகமாக நிமிர்த்தி நடப்பது,..... இப்படி எக்கச்சக்க பில்டப்புகள் அந்த நாளில் நாம செய்திருக்கோம். 

ஒருவாரம் முழுவதும் 24 மணிநேரமும் இதே எண்ணம், இதே கூத்து.ஒருவாறாக கும்பாபிஷேகமும் வந்தது. கோயிலுக்கு சென்று, அங்கு "மக்கள்" மத்தியில் கம்பீரமாக போஸ்கொடுக்கும்போது மனதிற்குள் பெரிய புரூஸ்லி என்ற நினைப்போடு போஸ் கொடுத்ததை நினைத்தால்,... சிரிப்புச் சிரிப்பா வருகிறது. இப்போதுகூட வயிறு நோகிறது. நிதர்சனும் நானும் இப்போதும் ஒரே பிரதேசத்தில்தான் இருக்கிறோம். சந்திக்கும் நேரங்களில் ஒரு நாள்க் கூட இதைப்பற்றிப்பேசாமல் இருந்த வரலாறே இல்லை. ஹிஹி... நம்ம ஊர்க்காரங்க யாராச்சும் இந்தப் பதிவைப்படித்தால் அவர்களுக்கு மட்டும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.(கிட்ட வாங்களேன்... இதெல்லாம் ச்சும்மா.பகிடிக்கு எழுதினது.நம்பாதிங்கப்பா.நாங்க ரொம்ப நல்ல புள்ளைங்க..!?)

அரும்பத விளக்கம்/ சொல் விளக்கம்:
(விளக்குமாறு-முற்றம் கூட்டி சுத்தப்படுத்த தென்னை ஈர்க்குகளால் கட்டப்பட்டு,தடியினால் கைபிடி போடப்பட்ட ஒரு பொருள்.உதாரணமாக "துடைப்பம்" என்றும் வைத்துக்கொள்ளலாம்.
வெயிட் அடித்தல்-பாரம் தூக்கி உடற்பயிற்சி செய்தல்.
_________________________________________________________________________________
ஈழவயலில் எழுத அழைத்தமைக்கு ஈழவயல் குழுவிலுள்ள அனைவருக்கும் இந் நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு நாளும் எழுத முடியாமற் போனமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் மற்றுமொரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை;
விடை பெற்றுக் கொள்வது;
கனிவன்புடன்;
எஸ்.பி.ஜே.கேதரன்.
நன்றி,
வணக்கம்.

18 comments:

குட்டிப்பையன் said... Best Blogger Tips

ஈழவயலில் உங்கள் முதல் பதிவு கலர் புல்லாகவும் சிறப்பாகவும் இருக்கு பாராட்டுக்கள்

ad said... Best Blogger Tips

@குட்டிப்பையன் :கலர்ஃபுல்லா இருக்கு//

ஆஹா....
நன்றி!நன்றி!

ஆகுலன் said... Best Blogger Tips

என்னது ஊதங்கரையில இவளவு நடந்திச்சா......

பாஸ் நானும் போனேன் கும்பாஅவிசெகதிர்க்கு......

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் கேதரன்!
அட எனக்கும் இப்பிடி அனுபவங்கள் இருக்கு அதை எழுதுவோம் என்று நினைத்திருந்தேன் நீங்கள் முந்திட்டீங்கள்.!!

எல்லா ஊரிலும் பதின்ம வயதுக்காரர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் போலும்.. திருவிழா காலங்களில் மடப்பள்ளியை எங்கட கையில வைசசிருக்கிறதுக்கும்,வேட்டி விழாம இருக்க ஓம் முருகா மஞ்சள் சால்வையை கட்டிக்கொண்டு பஞ்சாமிர்தம் கொடுத்ததையும் நாபகப்படுத்தீட்டீங்க.. இப்ப எனக்கு சேட்டை கழட்டி சாமி தூக்கவே கூச்சமா இருக்கு... ஹி ஹி ஹி அவ்வளவு தொப்பை தம்பி!!! :-)

நல்லதோர் அனுபவ பகிர்வு வாழ்த்துக்கள்.

ad said... Best Blogger Tips

@ஆகுலன்
இவ்வளவும் மட்டுமல்ல, இன்னும் எத்தினையோ இருக்கு ராசா.மோன.
எல்லாத்தையும் ஒரேயடியா சொல்ல வெளிக்கிட்டால் பதிவு........ எங்கேயோ போய்விடும்.

ad said... Best Blogger Tips

@காட்டான்
வணக்கம் ஐயா.
அதெல்லாம் ஒரு காலம்.அதையெல்லாம் இப்ப யோசிச்சுப்பாத்தா... நாங்களா இப்பிடியெல்லாம் செய்தனாங்கள் என்டு பெரிய அதிசயமாக்கூட இருக்கு.
இது மட்டுமல்ல.இன்னும் நிறைய இருக்கு.

ad said... Best Blogger Tips

@காட்டான்இப்ப எனக்கு சேட்டை கழட்டி சாமி தூக்கவே கூச்சமா இருக்கு... ஹி ஹி ஹி அவ்வளவு தொப்பை தம்பி!!! :-)
///

ஓ... அப்புறமென்ன தயக்கம்.?
வாங்கு தூக்கவேண்டியான.ஹிஹி.!

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் நண்பா,
நினைவுகளை நல்லதோர் பதிவினூடாக மீட்டியிருக்கிறீங்க.
நித்திரை கண்ணைக் கட்டுகிறது.
விரிவான கருத்தினை பின்னர் எழுதுகிறேன்.

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் கேதரன்!அருமையாக இருந்தது. நானும் முன்பு இப்படியெல்லாம்,இப்படியெல்லாம் என்றால் வாலிபிகளை(வாலிபன்,பெண்பால்-வாலிபி?!)மயக்குவதற்காக!?செய்ததில்லை!இப்போது தான் தெரிகிறது ஏன் வாலிபர்கள் சுவாமி தூக்க அலைந்தார்கள் என்று!பிழைத்துப் போங்கள்!!!!!!!!!!!!

ad said... Best Blogger Tips

@நிரூபன்நன்றி.

ad said... Best Blogger Tips

@Yoga.S.FRவணக்கம் ஐயா.
ஹாஹா... பிழைத்துப்போங்களா???
இத வாசிச்ச
ஊர்க்காரங்க பலபேர் எடுத்து குசலம் விசாரிக்கிறாய்ங்க.

thiyagarajan.s said... Best Blogger Tips

அப்புறம் என்ன தம்பி ஆச்சு... திருவிழா வந்துச்சா..??கட்டுடல் வந்துச்சா..? வாலிபிகளை சைட் அடிச்சியளா..?
பதிவை முழுசா முடிக்காம அப்படியே விட்டிடு பொயிட்டியலளே

ad said... Best Blogger Tips

@thiyagarajan.
வணக்கம்.
ஏன் பதிவை முடிக்கவில்லை?பதிவில் நான் சொல்லவந்த விடயம் -அந்த வாங்கு தூக்கின,வெயிட் அடிச்ச கதைதானே.
கும்பாபிஷேகத்தில் நடந்ததை சுருக்கமாக முடித்துவிட்டேன்-கடைசிப்பந்தியை பாருங்கள்.

-ஒருவாறாக கும்பாபிஷேகமும் வந்தது. கோயிலுக்கு சென்று, அங்கு "மக்கள்" மத்தியில் கம்பீரமாக போஸ்கொடுக்கும்போது மனதிற்குள் பெரிய புரூஸ்லி என்ற நினைப்போடு போஸ் கொடுத்ததை நினைத்தால்,... சிரிப்புச் சிரிப்பா வருகிறது. இப்போதுகூட வயிறு நோகிறது. நிதர்சனும் நானும் இப்போதும் ஒரே பிரதேசத்தில்தான் இருக்கிறோம்.

சரியா?

ad said... Best Blogger Tips

@thiyagarajan.
ஹிஹி... கட்டுடல் எங்க சார் வாறது? அதுவும் நமக்கு?

அம்பலத்தார் said... Best Blogger Tips

அடடா கோயில் திருவிழாபின்னாடி இவ்வளவு சமாச்சாரங்கள் இருக்கா? நான் அந்தக் காலத்தில் ரொம்ப விசயங்களை மிஸ்பண்ணிட்டன் என்று இப்போதான் புரிகிறது.

ad said... Best Blogger Tips

@அம்பலத்தார்
மிஸ் பண்ணுனதா?
ஹாஹா..
அந்த "சிகப்பியும்,காட்டானும்" மேட்டரெல்லாம் மறந்துபோச்சா ஐயா?

KANA VARO said... Best Blogger Tips

சிங்கிள் பாக் எடுக்கவே படாத பாடெல்லாம் பட்டிருப்பியல் போல!

ad said... Best Blogger Tips

@KANA VAROசிங்கிள் பேக்????
ஹையோ ஹையோ...
"ஜிம்பாடி யா ஜிம்பாடி. ஆம்ஸப்பாத்தா ஜன்னி வந்துடும்."

சிங்கிள்பேக் எங்க?-கடேல கிடேல விக்குறாய்ங்களா?

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!