Tuesday 24 January 2012

விளையாடும் போது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்த ஒருவர்!

பல வருடங்களுக்கு முன்பு வன்னியில் ஆணைவிழுந்தான் என்னும் ஊரில் ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் சிலர் மாலை வேளையில் பாடசாலை மைதானத்தில் பூப்பந்தாட்டம்(பட்மிட்டன்) விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பூப்பந்தாட்டம் விளையாடுவதற்குரிய மட்டை(ரக்கெட்) கூட அவர்களிடம் இல்லை. பனை மட்டையை மெல்லியதாக சீவி எடுத்து அதை பூப்பந்தாட்டத்துக்குரிய மட்டையாக பயன் படுத்தி பூப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தனர் அந்த மாணவர்கள். அந்த விளையாட்டு மைதானத்தில் மறு புறம் இளைஞர்கள் சிலர் கால்பந்தாட்டம் ஆடிக் கொண்டு இருந்தனர். இன்னும் ஒரு புறம் சிலர் கைப்பந்தாட்டம்(வாலி போல்)ஆடிக் கொண்டு இருந்தனர். மாலை வேளையில் களைகட்டி இருந்தது அந்த மைதானம்.
அப்போது ஒரு அண்ணன் எல்லோரும் விளையாடுவதை பார்த்துக் கொண்டு மைதானத்தை சுற்றி நடந்து வந்தார்.அவர் நடக்க முடியாமல் கெந்திக் கெந்தி நடந்து வந்தார் ஆனாலும் அந்த நடையில் ஒரு கம்பீரம் இருந்தது. மைதானத்தை சுற்றி நடந்து வரும் போது அந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கும் இடத்துக்கு அருகில் வந்ததும் அவர்கள் விளையாடுவதை உற்று பார்த்துக் கொண்டு இருந்தார்.சிறுவர்களும் தாங்கள் விளையாடுவதையும் ஒருவர் பார்க்கின்றாரே என்ற சந்தோசத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். கொஞ்ச நேரம் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு நின்ற அவர் அந்த சிறுவர்களிடம் கேட்கின்றார். "ஏன் தம்பி பேட்மிட்டன் மட்டை உங்களிடம் இல்லையா?" சிறுவர்களும் "இல்லை" என்று பதிலளிக்கின்றனர்.

அவர் சொல்கின்றார். உங்கள் விளையாட்டை நான் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன் இந்த வயதில் நன்றாக விளையாடுகின்றீர்கள். பட்மிட்டன் மட்டை இல்லாவிட்டாலும் பனை மட்டையை வைத்து விளையாடும் உங்கள் ஆர்வம் பாராட்டதக்கது. அதிலும் அந்த பச்சை டீ.சேர்ட் போட்டிருக்கும் தம்பி நன்றாக விளையாடுகின்றார்.நாளைக்கு நான் உங்களுக்கு பேட்மிட்டன் மட்டை கொண்டு வந்து தருகின்றேன் என்று சொன்னார் அந்த அண்ணர். சிறிது நேரம் எங்களிடம் பேசிக்கொண்டு இருந்தார்.எத்தனையாம் ஆண்டு படிக்கிறீங்க?எதில் ஆர்வம்?என்று ஓவ்வொறு கேள்விகளாக கேட்டுக்கொண்டு இருந்தார்.அந்த சிறுவர்களில் பச்சை டீ சேட் போட்டு இருந்த சிறுவனைப் பார்த்து; "தம்பி உன் விளையாட்டு நல்லாயிருக்கு பட்மிட்டனில் நன்றாக வருவாய்" என்று கூறினார்.

அப்புறம் எல்லா விடயத்திலும் நாங்கள் வளர்ச்சி பெற வேண்டும். விளையாட்டு என்றாலும் சரி, படிப்பு என்றாலும் சரி அனைத்திலும் நாங்கள் முன் மாதிரியான ஆரோக்கியமான சமூதாயத்தை கட்டி எழுப்பவேண்டும் என்று கூறினார். அப்போது மைதானத்தின் மற்ற புறம் கால்பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்த இளைஞர்களையும் அழைத்து; "உங்களுக்கு விளையாடுவதற்குரிய விளையாட்டுப் பொருட்கள் உட்பட அனைத்தையும் நான் கொண்டு வந்து தருகின்றேன். நீங்கள் அனைத்து துறைகளிலும் வளர்ந்து ஒரு சிறந்த சமூதாயமாக எமது தமிழ் சமூதாயம் கட்டி எழுப்படவேண்டும்" என்று கூறினார்.

அந்த இளைஞர்கள்.அவரிடம் மிகுந்த மரியாதையாக கதைத்துக் கொண்டு இருந்தார்கள்.அந்த சிறுவர்களுக்கு மிகுந்த ஆச்சரியம்.யார் இவர்?இவர் எப்படி விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் கொண்டு வந்து தருவார்? ஏன் இந்த அண்ணாக்கள்(கால் பந்து விளையாடிய இளைஞர்கள்)இவருக்கு மிகுந்த மரியாதை கொடுக்கின்றார்கள்? யார் இவர்? இப்படி பல கேள்விகள் அந்த சிறுவர்கள் மனதில். பிறகு "சரி தம்பிகள் நீங்கள் விளையாடுங்க. நான் உங்கள் அனைவருக்கும் தேவையான விளையாட்டுப் பொருட்களை இயலுமான வரை கொண்டு வந்து தருகின்றேன் என்று சொல்லிவிட்டு சென்றார்.
அப்போது அந்த சிறுவர்கள் கேட்டார்கள். "யார் அண்ணா நீங்க? உங்கள் பெயர் என்ன என்று?" அவரும் சிரித்துக் கொண்டே என் பெயர் முனுசாமி என்று சொல்லி விட்டு சென்று விட்டார். மறுநாள் அதே போல மாலை நேரம் மீண்டும் அந்த அண்ணா வந்தார். இம் முறை அவருடன் இரண்டு பேர் வந்தார்கள்.அவர்களிடம் ஒரு உரபாக் (உரப்பை)இருந்தது.வந்தவர் கால்பந்தாட்டம் விளையாடும் அண்ணாக்களுக்கு இரண்டு கால்பந்துகள் சில பூட்ஸ்கள்(கால்பந்தாட்டம் விளையாடும் சப்பாத்து);கைப்பந்தாட்டம் விளையாடுபவர்களுக்கு பந்து, போன்ற பொருட்களை அந்த உரப்பையில் இருந்து எடுத்துக்கொடுத்தார்.அந்த அண்ணாக்கள் அவரை பார்த்து சிரித்துக் கொண்டே நன்றி அண்ண என்று சொன்னார்கள். இவரும் அவர்களை முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு. அங்கிருந்த பட்மிட்டன் விளையாடும் சிறுவர்களிடம் வந்தார்.

அந்த சிறுவர்களை அழைத்து தம்பி இந்தாங்க பெட்மிட்டன் (பட்மிட்டன்)ரக்கெட். இனி பனை மட்டை தேவையில்லை. எனக் கூறி இரண்டு சோடி புதிய பட்மிட்டன் மட்டைகளை வழங்கினார். பின்பு "நேற்று அந்த பச்சை டீசேட் போட்ட தம்பி நல்லா விளையாடினானே. அவனைப் பார்க்கனும் என்று கூறி; அவனை அழைத்து மீண்டும் சொன்னார். "தம்பி நீ பட்மிட்டனின் கவனம் செலுத்தினால் நன்றாக வருவாய்" என்று கூறினார். அதன் பின் அந்த சிறுவர்களுடன் அவரும் பட்மிட்டன் விளையாடினார். "என்னால் ஓடி அடிக்க முடியாது தம்பிகளா பார்த்து விளையாடுங்கள்" என்று சொல்லிக் கொண்டே சிறிது நேரம் பட்மிட்டன் விளையாடினார். பின்பு சென்று விட்டார். அன்றைக்கு பிறகு அங்கே அவரை காணக் கிடைக்கவில்லை. அந்த இனிமையான தருணத்திற்குப் பின்னர் அவர் மைதானத்துக்கு வருவதில்லை. அதன் பிறகு மைதானத்தில் கால்பந்து விளையாடும் அண்ணாக்கள் சொல்லித்தான் அந்த சிறுவர்களுக்குத் தெரியும்.அந்த அண்ணன் யார் என்று. சிறுவர்களால் நம்பவே முடியவில்லை. அட இவரா தங்களுடன் பட்மிட்டன் விளையாடினார்!! என்று.

கால ஓட்டத்தில் அவர் பட்மிட்டன் விளையாட்டில் நன்றாக வருவாய் என்று சொன்ன சிறுவன் பாடசாலை மட்டத்தில் பிரகாசித்தான். அவனது வயதுப் பிரிவின் பாடசாலை பட்மிட்டன் அணிக்கு(குழுவுக்கு) தலைமை வகித்தான். ஆனால் கிரிக்கெட்டின் மீது ஏற்பட்ட தீராத ஆர்வத்தால் பட்மிட்டன் விளையாடுவதை கைவிட்டுவிட்டான். அந்த சிறுவன் வேறு யாரும் இல்லை. உங்கள் குட்டிப்பையன் தானுங்கோ. எங்களுக்கு விளையாட்டுப் பொருட்களை வழங்கி, எமது ஊரின் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க வேண்டும் என ஆவல் கொண்டு செயற்பட்ட அந்த அண்ணன் யார் தெரியுமா? விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தன்னையும் மிஞ்சிய போராளி என விதந்து பாராட்டிய விடுதலைப்புலிகளின் தளபதி, சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் தான்.
வன்னியில் யுத்தம் கடுமையாக நடந்த அந்தக் காலப்பகுதியிலும் விளையாட்டில் திறமையானவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று நினைத்து.அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் விளையாட்டுப் பொருட்களை உடனே ஏற்பாடு செய்து தந்தது அவரது எண்ணம் மிகவும் சிறப்பானது. யுத்தம் என்ற ஒன்று மட்டும் இல்லாது இருந்திருந்தால் பல துறைகளிலும் திறமையான விளையாட்டு வீரர்கள் பலர் எம் மண்ணில் இருந்து உருவாகியிருப்பார்கள்."எப்போதும் திறமையானவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என அன்றைய தினம் மைதானத்தில் வைத்து எமக்குப் போதித்த அவரது வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மீண்டும் மற்றுமோர் பதிவில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வது;
என்றும் உங்கள் அன்புடன்;
குட்டிப்பையன்
நன்றி,
வணக்கம்!!

2 comments:

ad said... Best Blogger Tips

குட்டிப்பையனோ/ பெரிய பையனோ..!!!
வணக்கம்.
அருமையாகவிருந்தது.பல இடங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்துதான் இருக்கின்றன.
சிலரது இழப்புகள் ஈடுசெய்ய முடியாதவைதான்.என்ன செய்வது?
சரி,இவ்வளவு கூறும் அந்த பையன் -நீங்கதான்- பற்மின்ரன்-ஐ ஏன் விட்டீர்கள்?

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் குட்டிப்பையா!
ம் நீங்கள் கொடுத்து வைத்தவர்!

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!