Saturday 28 January 2012

வாங்கைய்யா வாழைக்குலை பழுக்கப் போடுவம்!

இணையத்தினூடே இவ் இடம் வந்து ஈழவயலில் இளைப்பாற வந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள், 
செயற்கையான இராசயனப் பசளைகள் மூலம் உருவாக்கப்படும் காய் கறி வகைகளை விட; இயற்கைப் பசளை மூலம் உருவாக்கப்படும் காய் கறிகள் தான் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது நீண்ட காலம் வாழுகின்ற ஆயுளைக் கொடுக்கும் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் வெளிப்பாடு. இதனை நன்கு உணர்ந்த எம் முன்னோர்கள் தம் வீட்டில் சின்னதாக ஒரு வீட்டுத் தோட்டம் வைத்து,தமக்கு வேண்டிய காய் கறிகளை பெற்றுக் கொண்டார்கள். சந்தைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் வியாபார நோக்கில் இராசயனப் பதார்த்தங்களின் மூலம் பயிரிடப்பட்டவையாக இருக்கும். 
நம்மூர்களில் கிராமப் புறங்களில் வீட்டுக்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றிலிருந்து நாம் குளிக்கும் போதும், ஆடைகளைத் துவைக்கும் போதும் வெளியேறுகின்ற கழிவு நீரானது விரயமாகாத வண்ணம் கிணற்றடிக்கு அருகாக ஒரு சிறிய வீட்டுத் தோட்டத்தினை வைத்திருப்பார்கள் எம்மவர்கள். இது இலங்கை, இந்தியா மற்றும் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கிணறு உள்ள வீடுகளில் பொதுவான ஓர் விடயமாகவும் இருக்கும். இந்த வீட்டுத் தோட்டத்தில் வாழை, கத்தரி,வெண்டிக்காய்,பயற்றங்காய், பூசணிக்காய், மரவள்ளி, பச்சைமிளகாய், பசளிக் கீரை ஆகியவற்றினை அதிகளவில் பயிரிடுவார்கள். வாழை மரம் குலை தள்ளியவுடன் பறவைகள் கொத்திடாதவாறு அடிக்கடி பார்த்துப் பார்த்து வாழையினைப் பரமாரிப்பார்கள்.

வாழைக் குலையானது இயற்கையாகவே பழுக்கும் வரை காத்திருந்து வெட்டுவார்கள் அதிகளவானோர். ஆனால் இன்னும் சிலரோ, செயற்கையான உர வகைகளை இட்டு வாழைக் குலையினைப் பழுக்கச் செய்வார்கள். சுகாதாரப் பரிசோகர்களிடம் அகப்பட்டுக் கொள்ள நேரிடும் என்பதால் செயற்கையான முறையில் வாழைக் குலையினைப் பழுக்க வைக்க அதிகளவானோர் விரும்புவதில்லை. இயற்கையான முறையில் பழுக்க வைப்பது தொடர்பில் இரண்டு முறைகளைக் கையாள்வார்கள்.ஒன்று வாழைக் குலையானது முற்றி உண்பதற்கு ஏற்ற பருவத்தினை அடைந்ததும், உடனடியாக நிலத்தில் ஓர் கிடங்கினை வெட்டி, அந்தக் கிடங்கினுள் வாழைக் குலையினை போட்டு, வாழை மடல் போன்றவற்றால் சுற்றி மூடி விடுவார்கள்.பின்னர் கிடங்கின் ஓரத்தில் சாம்பிராணிக் குச்சிகள் சிலவற்றினை கொழுத்தி விடுவார்கள்.

இவ்வாறு சாம்பிராணிக் குச்சிகள் கொளுத்துவதற்கான காரணம், வாழைக் குலையானது பழுத்து வரும் வேளையில் வாழைப் பழத்துடன் சேர்ந்து கம கம என்ற சாம்பிராணித்துகள் வாசமும் மூக்கினைக் கவரும் வண்ணம் இருப்பதற்காகவே. ஊர்களில், கிராமங்களில் வீட்டு முற்றத்தில் பந்தல் அமைத்து கலியாண வீடுகள் நடை பெறுகின்றது என்றால்; கலியாணத்திற்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன்பதாக வாழைத் தோட்டத்திற்குச் சென்று உழவு இயந்திரத்திலோ அல்லது லாண்ட் மாஸ்டரிலோ வாழைக் குலையினை ஏற்றி வந்து இவ்வாறான முறையில் பழுக்க வைப்பார்கள். இதே போல இன்னோர் முறை பெரிய இரும்புத் தகரத்தினுள் அல்லது சுத்தம் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் பரலினுள் வாழைக் குலையினைப் போட்டு வாழை மடல் போன்றவற்றால் மூடி வைத்து சாம்பிராணித்துகள் இட்டுப் பழுக்க வைப்பார்கள்.
முன்பு எல்லாம் கலியாண வீடுகள் நிகழப் போகின்றது என்றால் நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பதாகவே கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். 2004ம் ஆண்டு வரை அதிகளவான திருமணங்கள் வட கிழக்கில் வீட்டுப் பந்தலில் தான் நடை பெற்றன. வீட்டு முற்றத்துப் பந்தலில் திருமணம் நிகழ்வதாயின்; பெண்கள் கூட்டத்தினர் திருமணப் பந்திக்குத் தேவையான பலகாரங்களை மும்முரமாகச் சுட்டுக் கொண்டிருப்பார்கள்.ஆண்கள் கூட்டத்தினர் கல கலப்புடன், சந்தோசக் களையில் வெளி அலங்கார வேலைகளைச் செய்யத் தொடங்கிடுவார்கள்.லான்ட் மாஸ்டர் இல்லையென்றால் உழவு இயந்திரத்தில் சென்று வாழைக் குலை, வாசலிலே நடுவதற்கு தேவையான வாழை மரம், மற்றும் சோடணைப் பொருட்களைப் பெற்று வருவதற்கு இளைஞர் கூட்டம் போட்டி போட்டுக் கொண்டு செல்லும். இன்றளவில் நகர மயமாக்கலின் விளைவினால் திருமண மண்டபங்களில் திருமண விழாக்கள் இடம் பெறுவதால் இந்தக் கல கலப்பெல்லாம் எம்மை விட்டுப் பறந்தோடிப் போய் விட்டது. 

வாழைக் குலையினை ஏன் மூடி வைத்து பழுக்க வைக்கிறார்கள் என்பதற்கான விஞ்ஞான ரீதியிலான விளக்கம் எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது பின்னூட்டங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
ஒரு வேளை வெய்யில் படாம மூடி வைத்தால் வாழைக் குலை பழுத்திடும் என்பதாலோ என நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை.

மீண்டும் மற்றுமோர் பதிவினூடாக ஈழவயலினூடே உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, 
உங்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்றுக் கொள்வது;
நேசமுடன்,
செ.நிரூபன்.

11 comments:

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!அருமையான பகிர்வு.நாங்களும் இப்படித்தான் அந்தக்காலத்தில்,உழவு இயந்திரத்தில் திருநெல்வேலி,கொக்குவில்,கோண்டாவில் போன்ற ஊர்களுக்கு சென்று கோவில் திருவிழா,கலியாண வீடு போன்ற விசேடங்களுக்கு மரத்துடன் வாழைக்குலை வாங்கி வருவோம்.கிடங்கு(குழி)வெட்டி வா.குலைகளை மூடி மேற்புறத்தில் புகை வெளியே வராதவாறு பார்த்துக் கொள்வோம்.ஒரு சிறிய துவாரமூடாக நாளுக்கு மூன்று,நான்கு தடவை புகையை உள்விடுவோம்.அதாவது காற்று உள்ளே புகாதவாறு பார்த்துக் கொள்வதால்,புகையால் சூழப்பட்டு வாழைக்காய்கள் அந்தப் புகையையே சுவாசிக்க உள்வாங்க வற்புறுத்த ப்படுகின்றன!இதுவும் ஓர் கொடுமையான செயலே!காய்கள் இயற்கைக் காற்றை அனுபவிக்காது,புகையால் வாடி பழுத்து விடுகின்றன!

மகேந்திரன் said... Best Blogger Tips

அன்புச் சகோதரர் நிரூபன்,
தொடர்ந்து ஈழவயலில் நம் கலாச்சார பதிவுகள்
வருவது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
வாழைக்குலைகள் பழுக்க வைக்கப்படுவது
பற்றிய பதிவு என்னை மிகவும் ஈர்த்தது.

மகேந்திரன் said... Best Blogger Tips

இன்றளவில் யாருமே இயற்கையாக பழுக்க விக்கவில்லை
என்பது நிதர்சனமான உண்மை. முக்கிய காரணம்
யார்க்கும் பொறுத்திருந்து காத்திருக்கும் நேரம் இல்லை....
எதிலும் அவசரம்..
எதுவும் உடனே கிடைக்க வேண்டும்..

கடந்த வாரம் என் வீட்டில் கூட மூன்று வாழைக் குலைகள்
எடுத்து ஊத்தகுழிக்கு எடுத்து சென்றேன்...
காத்திருந்து உண்ணும் எண்ணம் எனக்கும் இல்லை...

மகேந்திரன் said... Best Blogger Tips

பொதுவாக தானாக பழுப்பது என்பது மரம் தானாக உள்வாங்கும்
கார்பன்-டை-ஆக்சைடு வாயுவின் மூலம் நடக்கிறது....

சகோ யோகா அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மை...

செயற்கை முறை பழுத்தலில் கொஞ்சம் கூட ஆக்சிஜன் உள்ளே
சென்று விடக் கூடாது என்பதற்காக மூடி வைத்து
கார்பன்-மோனாக்சைடு வாயுவை உள்ளே செலுத்துகிறார்கள்..
அதாவது முற்றிலும் எரியாத புகையில் இருப்பது
கார்பன்-மோனாக்சைடு வாயு...
இந்த வாயு எப்படிப் பட்ட காயையும் பழுக்க வைத்துவிடும்
அதே சமயம் ... அந்த வாழைக்குலையில் ஏதாவது
பழங்கள் சிதைந்து இருந்தால் அதன் ஊடாக இந்த வாயு சென்று
பழத்தில் உள்ள பொட்டாசியம் என்ற தனிமத்தை உறிஞ்சி விடுகிறது...

அதுமட்டுமன்று சுற்றுப்புறச் சூழலையும் மாசு படுத்துகிறது..

சகோ,
தொடர்ந்து இதுபோல செய்திகளை எழுதுங்கள்;
வாழ்த்துக்கள்....

KANA VARO said... Best Blogger Tips

யோவ், லண்டனிலையும் பிரேசிலில் இருந்து கொண்டு வந்து புகையடிச்ச வாழைப்பழம் தான் கிடைக்குது.

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் நிருபன்..!
எனக்கும் இன்றுதான் தெரிந்தது புகை அடிச்சால் ஏன் வாழைக்காய் பழுக்கின்றது என்று.. அன்ணனுக்கும் மாப்பிளைக்கும் நன்றி..!

ஹேமா said... Best Blogger Tips

வாழைக்காய்க்கு,மாங்காய்க்கு புகையடிச்சு பழுக்கவைக்கிறது எங்கட பழக்கமெண்டு தெரியும்.
அதுசரி....யோகா அப்பா கோண்டாவில் பற்றிக் கதைச்சுப்போட்டார்.பிரதேசவாதம் பேசிப்போட்டார் அப்பா.நிரூ கவனியுங்கோ !

Yoga.S. said... Best Blogger Tips

ஐயோ அசட்டுப் பெண்ணே!நான் பிரதேசவாதம் பேசுகிறேனா???இன்றைய நிரூபனின் நாற்று வலைப்பதிவு பார்க்கவில்லையோ?மேலும்,நான் குறிப்பிட்ட ஊர்கள் தான் எனது பிறந்து,வளர்ந்த ஊருக்கு அண்மித்தாக இருக்கின்றன!அந்த ஊர் எது என்று கண்டுபிடியுங்கள்,பார்க்கலாம்!ஒரு சிறு குறிப்பு:நல்லூர்த் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்வதில் பெரும்பங்கு இந்த ஊருக்கே உண்டு!மேலும்,அது யாழின் நுழைவாயிலில் இருக்கிறது!

காட்டான் said... Best Blogger Tips

@Yoga.S.FR
அரியாலையா அண்ண?

நிரூபன் said... Best Blogger Tips

எல்லோரும் மன்னிக்கனும்,
இன்று மாலை பதில் எழுதுகிறேன்.

Yoga.S. said... Best Blogger Tips

காட்டான் said...
அரியாலையா அண்ண?///இன்றுமுதல் காட்டான்,"யூரேக்கா"என்று அழைக்கப்படுவார்!!!!!!!!!!

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!